வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திர மாநிலத்தில் கடலோர ஆந்திரா, என்டிஆர், குண்டூர், நந்தியால், கோதாவரி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக, என்டிஆர் மாவட்டத்தில் கன மழை பெய்ததால், விஜயவாடா நகரமே வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. விஜயவாடாவில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காணப் படுகிறது.
3-வது நாளாக நேற்றும் விஜயவாடா, குண்டூர், நந்தியால் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடர்ந்தது. திருப்பதி, சித்தூர், நெல்லூர் மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல தெலுங்கானா மாநிலத்தின் கம்மம், பத்ராத்திரி கொத்தக்கூடம், சூர்யபேட்டை மற்றும் நல்கொண்டா ஆகிய மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
ஆகஸ்ட் 30-ஆம் தேதி புயல் சின்னம் மையம் கொள்ள ஆரம்பித்து அதன் பிறகான மூன்று தினங்களில் படிப்படியாக மழை அதிகரித்து பெய்துக் கொண்டே இருக்கின்றது என்று அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு மாநிலங்களிலும் ஆண்டு சராசரியை விட கடந்த 48 மணி நேரத்தில் 27% அதிகமாக மழை பொழிந்து உள்ளது அதாவது 429.10 மில்லி மீட்டர் மழை அளவானது 548.40 மில்லி மீட்டர் அளவிற்கு பெய்துள்ளதால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஆறுகள், அணைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக முன்னேறு நதி அதன் கரைகளை உடைத்துக் கொண்டு கிராமங்களை கடுமையாக பாதித்துள்ளது.
இதன் காரணமாக ஏறக்குறைய 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் சுமார் 1.72 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளைக்காடாக மிதக்கின்றது, தெலுங்கானாவில் சுமார் 15,000 ஹெக்டேர் விவசாய நிலம் பாதிப்படைந்துள்ளது. 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். பலரைக் காணவில்லை. ஆந்திர பிரதேசத்தில் 18 துணை மின் நிலையங்கள், சுமார் 2417 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் இரு மாநிலத்திலும் குறிப்பிட்ட பகுதிகளில் தொலைத் தொடர்பு, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் மட்டும் 1810 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்கள் அரிப்பு மற்றும் தண்டவாளங்களை அடித்து சென்றிருப்பது போன்றவை காரணமாக தென்னிந்திய ரயில்வே 438 ரயில்களை ரத்து செய்துள்ளது.
இதனால் தரைவழிப் போக்குவரத்தும் இல்லாமல், ரயில்வே போக்குவரத்தும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை கொண்டு செல்வது கூட கடும் தடையாக மாறியுள்ளது.
இந்திய ஒன்றிய அரசு பேரிடர் மேலாண்மை குழுக்களையும் (NDRF), வேறு சில உதவிகளையும் செய்வதாக கூறியுள்ளது என்று ஆந்திர பிரதேசத்தின் முதல்வரான சந்திரபாபு நாயுடு, தெலுங்கானாவின் முதல்வரான ரேவந்த் ரெட்டியும் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆறுகள், ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்து தனது கட்டுமானங்களை அதிகரித்துக் கொண்டே செல்வது, ஆறுகளின் போக்குகளை திசை மாற்றி கிராமங்களையும், நகரங்களையும் அழித்து வருகிறது என்ற உண்மை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் விதிவிலக்காக இல்லை.
ஒரு எடுத்துக்காட்டாக தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் மையமான துர்கம் செருவு ஏரி இருந்த 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் 90-களில் துவங்கி படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது சிறிய குட்டையாக மாறியுள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமிப்பதில் தற்போது தெலுங்கானாவை ஆண்டு வரும் ரேவந்த் ரெட்டியின் சகோதரரான திருப்பதி ரெட்டி முதல் காங்கிரசின் முன்னாள் ஒன்றிய அமைச்சரான பல்லம் ராஜுவின் தம்பி ஆனந்த் ராஜு, பாஜகவின் சுனில் ரெட்டி, பிஆர்எஸ் கட்சியின் பிரமுகர்கள், சினிமா நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்ட அனைவரும் அடங்குவார்கள்.
மேற்கண்டவர்களுக்கு சொந்தமான பெரும் ஷாப்பிங் மால்கள், கல்லூரிகள், ஐந்து நட்சத்திர விடுதிகள் போன்றவை ஐடி கிளஸ்டர் என்று அழைக்கப்படும் தொழில்நுட்ப பூங்காவுக்கு அருகிலேயே மையப்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகளும், புகார்களும் ஆந்திராவில் உள்ள பத்திரிகைகளில் சந்தி சிரிக்கின்றன.
இதனால்தான் மழை பொழிந்தாலும் அதனை உடனடியாக கடலுக்கு திருப்பி விடுவதற்கோ அல்லது தேக்கி வைப்பதற்கோ பொருத்தமான கட்டுமானங்கள் இல்லாமல் விவசாய நிலங்களையும், நகரில் உள்ள குடியிருப்புகளையும், ஆலை வளாகங்களையும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
பருவநிலை மாறியுள்ள சூழலில் ஒரு ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை இரண்டு நாளில் பொழிகின்ற கொடூரமான பேய் மழை சூழல் சமீப பத்தாண்டுகளாக நாடு முழுவதும் பல்வேறு பாதிப்புகளை உருவாக்கியுள்ளது.
படிக்க:
♦ டெல்லி, மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களை நாசமாக்கிவரும் பேய் மழை!
♦ Cop 27 – பருவநிலை மாநாடு; ஏகாதிபத்தியங்களின் தொடர் நாடகம்!
அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு திறன், விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது, ட்ரோன்களின் பயன்பாடு போன்று பல்வேறு அம்சங்களில் நாடு முன்னேறி இருப்பதாக கூறிக்கொள்ளப்பட்டாலும் மேற்கண்ட வளர்ச்சிகள் ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரம் மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகளை மட்டுமே முன்னேற்றிக் கொண்டுள்ளது.
கிழக்குக் கடற்கரை ஓரத்தில் உள்ள மாநிலங்களில் இது போன்று அடிக்கடி வெள்ள சேதாரம் ஏற்படுவதும், மேற்கு கடற்கரை ஓரத்தில் உள்ள கேரளா போன்ற மாநிலங்களில் பேரழிவு ஏற்படுவதும் பருவநிலை மாற்றத்தின் முக்கிய எச்சரிக்கையாக நமக்கு விடப்பட்டு இருக்கிறது.
ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடிக்கின்ற இந்திய ஒன்றிய பாசிச பாஜக அரசானது, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது என்ற பெயரில் பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கினாலும், அவை கார்ப்பரேட்டுகளின் போக்குவரத்து, கார்ப்பரேட்டுகள் உற்பத்தி செய்த பொருட்களை உடனுக்குடன் நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பது என்ற கண்ணோட்டத்திலேயே அணுகப்படுகிறது.
நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தை பாதுகாக்கின்ற வகையிலோ அல்லது நாட்டின் பெரும்பான்மை மக்கள் வசிக்கின்ற கிராமப்புறங்களில் பாதுகாப்பு வசதியை உத்திரவாதப்படுத்துகின்ற வகையிலோ உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வளர்ச்சி மேற்கொள்ளப்படுவதில்லை.
இதனால் இயல்பிலேயே கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடையிலான முரண்பாடு அதிகரிப்பதும், நகரங்களிலேயே மாநில தலைநகரம் மற்றும் பிற நகரங்களுக்கு இடையிலான முரண்பாடு அதிகரிக்கின்ற சூழலும் அதில் வசிக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை ஒரு நாட்களில் அடியோடு தலைகீழாக புரட்டிப் போடுகின்ற பேரபாயத்தையே நாடு எதிர்கொண்டுள்ளது.
இத்தகைய சூழலில் இயற்கை சீற்றங்களை எதிர் கொள்ளும் அறிவியல் பூர்வமான அணுகுமுறையும், கிராமத்தையும் × நகரத்தையும் ஏற்றத்தாழ்வாக கையாளாமல் சமமாக கையாள்கின்ற கண்ணோட்டமும் கொண்ட ஜனநாயக கூட்டரசின் கையில் அரசியல் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதன் மூலமே இது போன்ற கடுமையான நெருக்கடிகளை சமாளிக்க முடியும். மக்களையும் பாதிப்பிலிருந்து காப்பாற்ற முடியும்.
ஆல்பர்ட்.