இந்தியாவின் சொத்துக்களை சூறையாடி கொழுத்துக்கொண்டு திரியும் தேசங்கடந்த தரகு முதலாளிகளில் ஒருவரான திருவாளர் அம்பானியின் குடும்ப திருமணம் மும்பையில் நடந்து முடிந்துள்ளது.
தனது பிறந்தநாளின் போது போயஸ் கார்டன் வீட்டுக்கு வெளியில் ரசிகர்கள் குத்தாட்டம் போடுவதை கண்டு ரசித்து வந்த சினிமா கதாநாயகனான ரஜினி இந்தியாவின் நிழல் பிரதமரின் மகனின் திருமணத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார்.
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வு கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் குஜராத் ஜாம் நகரில், ’பிரி வெட்டிங் நிகழ்வு’ மூலமாக துவங்கியது. அதிலிருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் துவங்கிய திருமண நிகழ்ச்சிகள் 14-ம் தேதி மும்பையில் ஒரு வழியாக முடிந்துள்ளது. மூன்று நாள் திருமண நிகழ்ச்சியை ஒட்டி மும்பை மாநகரம் விழாக்கோலம் பூண்டது. இந்தநிலையில், அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபல தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கலந்து கொண்ட அனைவருக்கும் தாம்பூலமாக 2 கோடி மதிப்புள்ள வாட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.
அம்பானியின் திருமண நிகழ்வில், ஜஸ்டின் பீபர், ரிஹானா உள்ளிட்ட பல உலக புகழ்பெற்ற பாடகர்கள் வந்து இசை நிகழ்ச்சி நடத்தினர். அதேபோல உலக நிறுவன தலைவர்களான மார்க் ஜூகன்பெர்க், பில்கேட்ஸ், முன்னாள் அமெரிக்க தலைவர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிரிக்கெட் வீரர்கள் தோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் உள்ளிட்டோரிலிருந்து பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் குடும்பம், கபூர் குடும்பம் என பலர் கலந்து கொண்டனர். தமிழ் மற்றும் தென்னிந்திய பிரபலங்களான ரஜினிகாந்த், நயன்தாரா, அட்லீ, சூர்யா ஜோதிகா, ராம் சரண், பிரித்விராஜ், ராணா டகுபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த நான்கு மாதங்களாக நடந்து வந்த நட்சத்திரங்கள் நிறைந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்குப் பிறகு. 29 வயதான ஆனந்த் அம்பானி, மருந்து அதிபர்களான வீரேன் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை மணந்துள்ளார்.
நாட்டின் சொத்துக்களை சூறையாடிய திருடன் அம்பானி தனது குலக் கொழுந்தான, அதாவது சொத்துக்கு வாரிசான ஆனந்த் அம்பானியின் மொத்த கல்யாண செலவுக்கு எவ்வளவு கோடிகளை வாரி இறைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கணக்கின் படி ஏறக்குறைய ரூ.4000 முதல் ரூ.5000 கோடி வரை அம்பானி தனது மகனின் திருமணத்துக்காக செலவிட்டுள்ளார்.
இந்த கேடுகெட்ட ஊதாரித்தனமான திருமணத்தை காரி துப்புவதற்கு பதிலாக சிவந்தி ஆதித்தனார் குழுமத்தில் இருந்து வெளி வருகின்ற தினத்தந்தி கீழ்கண்டவாறு வியந்து எழுதுகிறது.
”முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.10.25 லட்சம் கோடியாகும். அதில் மகனின் திருமணத்துக்காக அம்பானி செலவு செய்துள்ள தொகை அவரின் மொத்த சொத்துமதிப்பில் வெறும் 0.5 சதவீதம் மட்டுமே ஆகும். ஆனால் இந்தியாவில் சராசரி குடும்பம் திருமணத்துக்கு செலவு செய்வதை விட அம்பானி குறைவாகவே செலவு செய்துள்ளார். சராசரி இந்திய குடும்பம் ஒன்று தங்களது சொத்துமதிப்பில் 10 முதல் 15 சதவீதம் வரை திருமணத்துக்கு செலவு செய்வது குறிப்பிடத்தக்கது.” என்று எழுதுகிறது. அதாவது, ’பணக்காரன் வீட்டு கழிப்பறையில் பீ நாத்தத்திற்கு பதிலாக சந்தன வாடை மட்டும்தான் வீசும்’ என்பதுதான் இது போன்ற ஊடக மாமாக்களின் கண்டுபிடிப்பு.
படிக்க: 5ஜி ஏலம் அம்பானியின் ஜியோ ஏகபோகம்!
ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரனான முகேஷ் அம்பானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருக்கிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 12.36 லட்சம் கோடியாகும். இந்நிலையில் இவர் ஒரு நாளைக்கு ரூ.3 கோடி என செலவழித்தால் அவருடைய சொத்தை எத்தனை ஆண்டுகளில் காலியாகும் என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதாவது முகேஷ் அம்பானி தினமும் ரூ.3 கோடியை செலவு செய்தால், 3,40,379 நாட்களில் முகேஷ் அம்பானியின் சொத்துக்கள் தீர்ந்துவிடும். இந்த கணக்கை ஆண்டுகளாக மாற்றினால், முகேஷ் அம்பானி ஒரு வேலையும் செய்யாமல் தினமும் ரூ.3 கோடியை செலவு செய்தால், அவரது சொத்துக்கள் தீர 932 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் ஆகும். இன்னும் சரியாக சொல்லப்போனால் முகேஷ் அம்பானியின் 12 தலைமுறைகள் ஒரு வேலையும் செய்யாமல் தினமும் ரூ.3 கோடிசெலவு செய்யலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த திருமணத்தில் கலந்துக் கொண்டவர்கள் தான் உண்மையில் ’இந்திய தேசத்தின் குடிமகன்கள்’. அவர்களுக்கான தேசத்தின் மீது அவர்கள் பற்று கொள்ளலாம். திருமணத்தை வியந்தும் ஆதரித்தும் பேசலாம். ஆனால் நாம் வாழும் இந்தியாவோ வேறானது என்பதால் இந்த திருமணம் பற்றி கேட்கவும், படிக்கவுமே ரத்தம் கொதிக்கிறது.
ஆனால் கெட்டதிலும் ஒரு நன்மையாக நமக்கு தெளிவான பட்டியலை தயாரித்து கொடுத்துள்ளது இந்தத் திருமணம். நாட்டின் சொத்துக்களை சூறையாடி வைத்துள்ள 1 சதவீதமேயுள்ள அதி உயர் பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் சொத்துக்களை ஏன் உழைக்கும் மக்களாகிய நாம் பறிமுதல் செய்ய போராடக்கூடாது என்ற விவாதத்தை துவக்குவோம். அதானி, அம்பானியின் சொத்துக்களை பறிமுதல் செய்வது என்பதெல்லாம் முடியாது என்பது அதற்கு உழைப்பதற்கு தயங்குகின்ற குட்டி முதலாளித்துவ அறிஞர்களின் வாதமாகும்.
நாம் கொடுக்கும் பெட்ரோல் காசு, நாம் ரீசார்ஜ் செய்யும் ஜியோ நெட்வொர்க், சாதாரண குண்டு ஊசி முதல் விமான பயணம் வரை அனைத்திலும் நமது உழைப்பிலிருந்து திருடப்படும் பணம்தான் அம்பானி, அதானிகளிடம் குவிந்து கிடக்கிறது. அது அவர்களது உழைப்பினால் உருவானது அல்ல. நமது உழைப்பில் உருவான தொகையை கொள்ளையடித்ததால் உருவானது என்று எமதருமை உழைக்கும் மக்களுக்கு போதித்து விட்டால், அவர்கள் அதை புரிந்து கொண்டு விட்டால் கோடிக்கால் பூதம் போல கிளம்பி அதானி, அம்பானிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வார்கள்.
கார்ப்பரேட் காவி பாசிசத்தை நாட்டின் மக்கள் மீது திணிக்கின்ற அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுக்கு பதிலடி கொடுக்கின்ற வகையில், ”தேசங்கடந்த தரகு முதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வோம்! அதனை நாட்டு மக்கள் அனைவருக்கும் விநியோகிப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து போராடுவோம்.
அம்பானியின் வீட்டுத் திருமணம் பற்றி வியந்து பேசுவதற்கோ, அண்ணாந்து பார்ப்பதற்கோ இடமில்லை. ஏனென்றால் இதனைப் பற்றி கருத்துருவாக்கம் செய்கின்ற ஊடகங்கள், குட்டி முதலாளித்துவ அறிவுஜீவிகள், திரைப்பட நடிகர்கள் போன்றவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சதவீதம் மக்கள்தான் நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் அனுபவித்து வருகிறார்கள். மீதமுள்ள 99 சதவீத மக்களாகிய நாம் அவர்களது நிஜ வாழ்க்கையை கண்டு ஏங்கி தவிக்கின்றோம்.
படிக்க: அனில் அம்பானியின் 1400 கோடி வரி பாக்கியை தள்ளுபடி செய்த பிரான்ஸ் அரசு – பின்னணியில் மோடி!
நம்முடைய நிஜ வாழ்க்கை ரேசன் அரிசிக்கும், சாலையோரத்தில் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்ற உணவுப் பொருள்களுக்கும், மளிகை கடைகளில் மூன்றாவது தரத்தில் விற்கப்படுகின்ற மளிகைப் பொருட்களுக்கும், அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்படுகின்ற மருந்துகளுக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளதே தவிர அவர்களின் வாழ்க்கையை அண்ணாந்து பார்ப்பதில் எந்த பயனும் இல்லை.
சக மனிதர்களின் வாழ்க்கை அவலங்களிலிருந்து உண்மையை தேடுவோம்! நமது வாழ்க்கையை சூறையாடிய அம்பானி போன்ற எதிரிகளின் நிம்மதியை குலைக்கின்ற வகையில் கலகத்தில் இறங்குவோம்.
- கனக சபை.






