டாலருக்கு நிகரான பணமதிப்பு வீழ்ச்சியும்! அதல பாதாளத்தில் தள்ளிய அன்னிய பொருளாதாரமும்!

மோடி அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 10 ஆண்டுகளாக மறுகாலனியாக்க கொள்கை அமுலாக்கத்தின் தீவிரம் காரணமாக, ரூபாயின் வீழ்ச்சியின் வேகம் அதிகரிக்கச் செய்து விட்டது

டாலருக்கு நிகரான பணமதிப்பு வீழ்ச்சியும்!

அதல பாதாளத்தில் தள்ளிய அன்னிய பொருளாதாரமும்!


ரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது இந்திய ரூபாயின் மதிப்பு. இந்த ஆண்டு ஜனவரி முதலே சுமார் 6% சதவீதம் அளவிற்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. கடந்த இரு மாதங்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 78 முதல் 80 வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.

தனது 56 இஞ்ச் மார்பை நிமிர்த்திக் கொண்டு வளர்ச்சி- வல்லரசு – ஊழல் ஒழிப்பு என தனது வாய்ச்சவடால் மூலம் பாசிச மோடி அரசு கையாண்ட அத்தனை பொருளாதார நடவடிக்கைகளும் அம்பானி, அதானி சொத்துக்களை உயர்த்தியும் நாட்டின் ரூபாயின் மதிப்பை குறைத்தும் வருகிறது.

தேவை மற்றும் வழங்கலின் அடிப்படையில் ரூபாயின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியிலும் இதன் தாக்கம் இருக்கும். ஒவ்வொரு நாட்டிடமும் இருக்கும் அந்நிய செலாவணி இருப்பைக் கொண்டுதான் வர்த்தகமும், பணப்பரிமாற்றமும் நடைபெறும். அந்நிய செலாவணி வரத்தைப் பொறுத்தே ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்படும். அமெரிக்க டாலரைப் பொதுவாக எல்லா நாடுகளும் ஏற்றுக் கொள்கின்றன. பெரும்பாலான நாடுகள் ஏற்றுமதிக்கான விலையை அமெரிக்க டாலர்களிலேயே குறிப்பிடுகின்றன என சொல்கிறார் செலாவணி நிபுணர் எஸ்.சுப்ரமணியம்.

மேலோட்டமாக பார்த்தால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவது மக்களை நேரடியாக பாதிக்காத பிரச்சினையாகத் தோன்றலாம். ஆனால், இதை ஆழமாக யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு இந்தியருக்கும் இது பல வகைகளில் மறைமுக பாதிப்பை ஏற்படுத்தும்.

மறுபுறம், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால் அந்நிய செலவாணியின் மதிப்பு குறைந்து கையிருப்பின் அளவும் குறைந்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த சந்தையில் டாலர்களை விற்றது. மார்ச் 2022 இல், மத்திய வங்கி ஸ்பாட் சந்தையில் 20 பில்லியன் டாலர்களை விற்றது. இது அந்நிய செலாவணி கையிருப்பில் சரிவுக்கு வழிவகுத்தது. 2022 ஆம் ஆண்டில் ஜுன் வரை மட்டும், அந்நிய செலாவணி கையிருப்பு 50 பில்லியன் டாலர்கள் குறைந்து 593.3 பில்லியனாக உள்ளது.

இதனால் மாற்று திட்டமாக, வெளிநாட்டு ரொக்கம் அல்லாத குடியுரிமை வங்கி அல்லது [FOREIGN CURRENCY NON RESIDENT (BANK) – FCNR(B)] கணக்குகளில் பண இருப்பு விகிதம் (CASH RESERVES RATION – CRR) மற்றும் சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் (STATUTORY LIQUIDITY RATIO – SLR) வரம்புகளை நீக்கியுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NON RESIDENTIAL INDIANS – NRI) டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி விகிதத்தையும் அனுமதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி (RBI).


இதையும் படியுங்கள்: வங்கிகளை திவாலாக்கும் மோசடி கும்பல்! ரிசர்வ் வங்கியின் கையாலாகாத்தனம்!


ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க மேற்கண்ட பல்வேறு வழிகளில் முயற்சித்தும் பலனில்லாமல் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் இறக்குமதி குறைந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இது, இறக்குமதி பொருட்களின் மீதான வரியை உயர்த்தும் நடவடிக்கையை நோக்கி ஒன்றிய அரசை தள்ளும். அது அந்தப் பொருட்களின் விலையின் அளவை உயர்த்தும், அது மக்களுக்கு பாதிப்பாய்த் தான் போய் முடியும்.

இந்நிலையில் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்ததை ஜூன் மாதத்தில் ஒப்புக்கொண்ட ஒன்றிய அரசு, “ரஷ்யா – உக்ரைன் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய நிதி நிலைமைகள் இறுக்கம் போன்ற உலகளாவிய காரணிகள் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள்” என்றும் கூறியது. ஆனால், இந்திய ஒன்றிய அரசு கூறுவது போல் இவை மட்டும் காரணம் அல்ல.

“இந்தியா கடந்த 75 ஆண்டுகளாக சுயசார்பு பொருளாதாரத்தை பற்றிய சிந்தனையோ, திட்டமோ இல்லாமல் கார்ப்பரேட் நலன் சார்ந்த பொருளாதார கொள்கையை கடைப்பிடிப்பதால் பொருட்கள் ஏற்றுமதி செய்வதை விட இறக்குமதியே அதிகம் செய்யப்படுகிறது. இதனால், தொழில் நுட்பம், கம்யூட்டர் கருவிகள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கான கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற அனைத்துக்கும் டாலர் அதிகம் தேவைப்படுகிறது.”

குறிப்பாக, 1970 -களில் எண்ணெய்த் தேவையில் 30% மட்டுமே இறக்குமதி செய்த இந்தியா இன்று 70% இறக்குமதி செய்கிறது. காரணம் ஆட்டோமொபைல் துறை முதலாளிகளின் லாபத்திற்காக, மக்களுக்கான பொதுப் போக்குவரத்தை அழித்து தனிநபர் உபயோகிப்பிற்கான நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகன விற்பனையை அதிகரிக்கும் கொள்கை மறுகாலனியாக்க வளர்ச்சியின் அங்கமாக திணிக்கப்பட்டது. இதனால் வாகன உற்பத்தியும் அதன் காரணமாக பெட்ரோலிய எரிபொருட்களின் தேவையை அதிகரித்தது.

அதே நேரம் இந்தியாவில் பண வீக்கம் அதிகரித்து வருவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறி வருவதும் இந்த வீழ்ச்சிக்குக் காரணமாக உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 28.4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். இது கடந்த 2008 – ஆம் ஆண்டு நடந்த பொருளாதார வீழ்ச்சியைக் காட்டிலும் அதிகமாகும். 2008 – ஆம் ஆண்டில் 11.8 பில்லியன் டாலர்கள் வெளியேறியிருந்த நிலையில் இந்த ஆண்டு அன்னிய முதலீடு வெளியேறியது 41.5% அதிகமாகும்.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம் டாலர் குறியீட்டு எண் உயர்ந்து வருவது. குறியீடு உயர்ந்தால், மற்ற நாணயங்களின் மதிப்பு குறையும். பிப்ரவரி 21 அன்று, அதன் குறியீடு 96.12 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக உயர்ந்து ஜுலை 8 அன்று 11 சதவீதம் அதிகரித்து 107.08 ஆக உயர்ந்ததும் ரூபாய் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது.

1947-ல் இந்திய நாணயமான ரூபாய் அமெரிக்க நாணயமான டாலருடன் நிகராகவே இருந்தது. அப்போது இந்தியாவிற்கு கடன் ஏதும் இல்லை. டாலரும், ரூபாயும் சமமாக இருந்தன. ஆனால்,1951-ல் நாட்டில் முதல் ஐந்தாண்டு திட்டம் தொடங்கப்பட்ட போது, இந்திய அரசு வெளிநாடுகளிடம் இருந்து கடன் வாங்கத் தொடங்கியது. அதன்பிறகு ரூபாயின் பயணம் சரிவை நோக்கித் தொடங்கியது.

1975 ஆம் ஆண்டு வரை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 ரூபாயாக இருந்தது, பிறகு 1985-ல் அது 12 ரூபாயாக சரிந்தது. 1991-ல் புகுத்தப்பட்ட மறுகாலனியாக்க கொள்கையால் தொடர்ச்சியாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. அடுத்த 10 (2001 ஆம் ஆண்டில்) ஆண்டுகளில் 47 – 48 ரூபாயாக சரிந்தது. பாசிச மோடி அரசு பிரதமராக பொறுப்பேற்ற 2014 ஆம் ஆண்டில் 62.33 ரூபாயாக இருந்தது. மோடி அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 10 ஆண்டுகளாக மறுகாலனியாக்க கொள்கை அமுலாக்கத்தின் தீவிரம் காரணமாக, ரூபாயின் வீழ்ச்சியின் வேகம் அதிகரிக்கச் செய்து விட்டது.


இதையும் படியுங்கள் : பணமதிப்பிழப்பும் பரிதாபமான பத்து ரூபாய் காயினும்!


ரூபாய் விநியோகத்தை அதிகரிக்க மத்திய வங்கி சந்தையில் இருந்து பத்திரங்களை திரும்ப வாங்கலாம். இது டாலரின் மதிப்பைக் குறைக்க உதவும். மேலும், சந்தையில் இருந்து பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதும் மற்ற வழிகளில் ஒன்றாகும். வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம் இதைச் செய்யலாம். வங்கி வட்டி விகிதங்கள் அதிகமாக இருந்தால், மக்கள் தங்கள் வங்கிகளில் அதிக டெபாசிட் செய்ய முனைகிறார்கள், பணப்புழக்கத்தை குறைக்கிறார்கள். எனவே வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேற்கண்ட சீர்திருத்த வழிமுறைகள் பெரிய அளவில் தாக்கத்தை உருவாக்காது என்ற போதிலும் அது ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமே அமையும்.

ஆளும் பாசிச மோடி அரசோ எதைச் செய்தாவது அந்நிய மூலதனத்தை ஈர்த்தாக வேண்டும் என்று வெறித்தனத்தின் விளிம்பில் இருக்கிறது அந்நிய கடன்கள் முதலீடுகள் பெருகப் பெருக அவற்றுக்கான வட்டியும் லாப ஈவுத்தொகையும் அதிகரித்த அளவில் டாலராக வெளியேறுகின்றன. வெளியே செல்லும் இந்த டாலர்கள் மீண்டும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்கின்றன இந்த நச்சு சூழல் நாட்டை திவால் நிலையை நோக்கிக் கொண்டு செல்கிறது.

ஆளும் வர்க்கமும், அவர்களால் இழுத்துச் செல்லப்படும் மறுகாலனியாக்க ‘வளர்ச்சி’ பாதைதான் இந்த நாடு என்று சந்தித்து வரும் நெருக்கடிக்கு காரணம். எனவே மறுகாலனியாக்க பொருளாதார கொள்கை தூக்கி எறிந்து விட்டு மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை கடைப்பிடிப்பது நிரந்தர தீர்வு.

மறுபுறம், இந்திய ரூபாய் மதிப்பு மட்டும் அல்லாமல் ஜப்பான் யென் முதல் சீனா யுவான் வரையில் அனைத்து முக்கிய வர்த்தக நாணயங்களின் சரிவுக்கும் மேல் நிலை வல்லரசான அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலைகள் உயர்ந்து வந்த நிலையில் அந்நாட்டின் பணவீக்கம்  40 வருடம் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதும் ஓர் காரணம்.

உலகப் பொருளாதரத்தின் சங்கிலி இணைப்பின் காரணமாக, அமெரிக்கப் பணவீக்க அதிகரிப்பு சர்வதேச முதலீட்டு சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது. 1981 டிசம்பருக்கு பின் அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்கம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மே 2022-ல் எரிபொருள் விலை சுமார் 34.6% உயர்ந்துள்ளது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அது தோல்வியே தழுவிக் கொண்டிருக்கிறது. இதனால், இந்தாண்டு இறுதிக்குள் மிகப்பெரிய பொருளாதார மந்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

2012-ல் நெருக்கடி ஏற்பட்டபோது அமெரிக்க பெடரல் வங்கி 200 டிரில்லியன் டாலர் நோட்டுகளை அச்சடித்து நெருக்கடியை தீர்க்க முயற்சித்தது. இதன் விளைவாக இந்தியா உள்ளிட்ட இரண்டாம் முகாமில் உள்ள உலக நாடுகள் பெரும் சிக்கலை சந்தித்தன. தற்போதும் அமெரிக்க வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்து வருவதால் இரண்டாம் முகாமில் உள்ள உலக நாடுகளில் உள்ள அந்நிய முதலீட்டாளர்கள் அமெரிக்கா நோக்கி நகர்கின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒவ்வொரு முறையும் தனது நெருக்கடியை  தீர்ப்பதற்கு காலனிய நாடுகளை பலியிட்டே வருகிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டும் எனில் ஏகாதிபத்திய முகாமிற்கு எதிராக பாட்டாளி வர்க்க முகாமை பலப்படுத்துவதே தேவை. உடனடி சாத்தியம் இல்லாத போதிலும் அதுதான் தீர்வாக அமையும்.

  • முனியாண்டி

புதிய ஜனநாயகம்.
 ஆகஸ்ட் மாத இதழ்.

படியுங்கள்!
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here