
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடந்த மார்ச் 25 அன்று அவசரமாக புறப்பட்டு சென்று எடப்பாடி பழனிச்சாமி தமது பரிவாரங்களுடன் டெல்லியில் அமைச்சர் இல்லத்தில் இரவில் சந்தித்துள்ளனர். ஊடகவியலாளர்கள் எடப்பாடியிடம் டெல்லி அவசரப் பயணம் குறித்து வினா எழுப்பிய பொழுது டெல்லியில் கட்டப்படும் கட்சி கட்டிடத்தை பார்வையிட வந்ததாக கூறி முழுபூசணியை சோற்றில் மறைத்தார். ஆனால் அவசர டெல்லி பயணம் ஏன் என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது!
கடந்த 25-ம் தேதி பகலில் டெல்லியில் உள்ள கட்சி கட்டுமான பணிகளை பார்த்துவிட்டு, இரவு 8 மணிக்கு எல்லாம் தம்பிதுரை வீட்டுக்கு எடப்பாடி சென்றார். பின்பு அங்கிருந்து புறப்பட்டு அமித்ஷா இல்லத்திற்கு எடப்பாடி, வேலுமணி, கே.பி.முனுசாமி, சிவி. சண்முகம், தம்பிதுரை போன்ற பரிவாரங்களுடன் 8:45 மணிக்கு அமித்ஷாவை சந்தித்துள்ளனர். அனைவரையும் வைத்துக் கொண்டு சுமார் 25 நிமிடங்கள் மட்டுமே பேசிய அமித்ஷா, மற்ற அனைவரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு, அதன் பிறகு எடப்பாடியுடன் மட்டும் தனியே சுமார் ஒன்றரை மணி நேரம் அதாவது இரவு 10:15 வரை அமித்ஷா பேசியுள்ளதாகத் தெரிய வருகிறது. வெளியில் வந்த எடப்பாடியிடம் ஊடகவியலாளர்கள் இச்சந்திப்பு தொடர்பாக கேள்வி எழுப்பிய பொழுது ‘இரு மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாட்டுக்கான ஒன்றிய நிதி பகிர்வு உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சரிடம் மனு அளித்ததாகவும், அது பற்றியே தான் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ‘கெட்டிக்காரத்தனமாக’ புளுகித் தள்ளினார்.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எடப்பாடிக்கும் உறவு என்பது ஏழரை நாட்டுச் சனி என்ற நிலையில் நீடித்து வந்தது. ஒரு கட்டத்தில் அண்ணாமலை அண்ணாதுரை, ஜெயலலிதா முதலானவரைக் கூட இழிவுபடுத்திப் பேசினார். இதன் காரணமாகவே பாஜகவில் அண்ணாமலை தலைவராக நீடிக்கும் வரை எவ்வித ஒட்டுறவும் இல்லை என்றும், கூட்டணிப் பேச்சுக்கே இடம் இல்லை என்றும் எடப்பாடி அறிவித்திருந்தார். இந்நிலையில் அண்ணாமலையை தலைவராக நீடிக்க செய்வதில் கூட பாஜக சற்று தாமதம் செய்து வந்த நிலையில், மீண்டும் எடப்பாடி, அண்ணாமலை தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும், பாஜகவுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என சண்டப் பிரசன்டம் செய்தார். அவரது கை- பானங்களான முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சிவி சண்முகம் போன்றோரும் அதனையே ஆங்கோரமாக ஒலித்தனர்! பின்னர் தான் பாஜகவின் மோடி-அமித்ஷா வித்தைகள் தொடங்க ஆரம்பித்தன.
ஆம், ‘மாப்பிள்ளை எடப்பாடி, நீ இப்படியா படம் காட்டுகிறாய்; நாங்கள் யார் என்பதை காண்பிக்கிறோம்’ என வழக்கம்போல் பிற மாநிலங்களில் கையாளுகின்ற வழிமுறைகளைத் தொடங்கினர்.
அந்த வகையில் எடப்பாடியின் மகன் மிதுன் மாமனாரும் எடப்பாடிக்கு பினாமியாக செயல்பட்டவராக கூறப்படும் ஈரோடு ராமலிங்கம் இல்லத்தில் அமலாக்கத் துறையை பாஜக இறக்கிவிட்டு அவரது வீடு இன்ன பிற நிறுவனங்களை எல்லாம் சோதனையிட்டு சுமார் 650 கோடி ரூபாய் அளவு ஊழல் புரிந்ததற்கான ஆவணங்களை அள்ளிச் சென்றனர்.
இது ஒரு புறம் இருக்க; இந்தியா முழுமைக்கும் தாம் ஏக சக்கரவர்த்தி நிலைமையில் பாஜக ஆர்.எஸ்.எஸ் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எப்பொழுது பார்த்தாலும் ஒன்றிய அரசுக்கு தலைவலி கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, NEET எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு, பிற மாநில முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளை அழைத்து ஒன்றிணைந்து ஒன்றிய அரசை எதிர்க்கும் முடிவு, வக்ப் வாரிய சட்டத் திருத்த எதிர்ப்பு, இஸ்லாமியர்களை இல்லாது ஒழிக்கும் குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு, சமரீதியான நிதிப் பகிர்வு கோரல், நாடாளுமன்றத்தில் 40 தமிழ்நாட்டு எம்பிக்கள் இருந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு தலைவலி கொடுப்பது…
இச்சூழ்நிலையில், ஒருபுறம் சீமான் நடிகர் விஜய் முதலானோரை திமுகவை ஒழித்துக் கட்ட ஒருபுறம் விட்டேத்தியாகக் களம் இறக்கி விட்டிருந்தாலும், எடப்பாடியை தமது வலைக்குள் விழச் செய்ய சகலவற்றையும் கணக்கிலெடுத்துக் கொண்ட பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல் அமலாக்கத்துறை ராமலிங்கம் வீட்டில் கைப்பற்றிய ரூ.650 கோடி ஊழல் ஆவணங்கள் எடப்பாடியின் பினாமி வகைச் சொத்து என்ற முடிவுக்கு வந்து, 25-ம் தேதி அதிகாலை எடப்பாடியை படுக்கையிலிருந்து எழச்செய்து அவசர அவசரமாக அமித்ஷாவை சந்திக்க இன்றே வருமாறு தகவல் வந்து சேர, துண்டைக் காணோம்; துணியைக் காணோம்; என்று ரகசியமாக பறந்து ஓடினார் டெல்லியை நோக்கி எடப்பாடி.
அமித்ஷா கொடுத்த சாட்டையடியும் – எடப்பாடியின் சரண்டரும்!
அமித்ஷா, எடப்பாடியிடம் பேசுகின்ற பொழுது அமலாக்கத்துறை ஈரோட்டு இராமலிங்கம் இல்லத்தில் கைப்பற்றிய தொகை ரூ.650/- கோடி ஊழல் ஆவணங்கள் எடப்பாடியின் பினாமித் தொகைதான் என்பதற்கான ஆதாரங்களை- துருப்புச் சீட்டுக்களை எடுத்துப் போட்டு மிரட்டியவுடன் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்கும், அவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற பொழுது பாஜகவின் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுப்படுவதாகவும் வாக்குறுதி அளித்துவிட்டு வந்துள்ளார் என்பதே நம்பகரமானத் தகவலாகத் தெரிகிறது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் பிற மாநிலங்களைப் போல பாஜக கால் பதிக்க பாதையை அகலத் திறந்து விட்டு வந்துள்ளார் எடப்பாடி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அதிமுக-விற்கோ, எடப்பாடிக்கோ அவர்களது கொள்கை கோட்பாடுகளின் மீது எள்ளின் முனையளவு கூட பற்றுதலோ, நம்பிக்கையோ என்றும் இருந்ததில்லை.
வெற்று வாய்ச்சவடால் அடிப்பது; பதவி சுகங்களை அடைய ஆளாய்ப்பறப்பது; அதற்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுப்பது; துறப்பது… இவைதான் அவர்களது அரசியல் நடவடிக்கைகளாக இருந்து வருகின்றன. தொண்டர்களும் கூட அதே நிலையில் தான் அறுதிப் பெரும்பான்மையினர் நீடிக்கின்றனர்.
இந்த அவல நிலை ஜெயலலிதா அதிமுகவின் தலைமை பாத்திர வகிக்கும் பொழுதோ, முதலமைச்சராக இருந்த பொழுதோ (அவரிடம் எண்ணற்ற பாசிச தன்மையுடைய குறைபாடுகள் இருந்த பொழுதும்) இருந்ததில்லை.
பாஜகவை துணிச்சலுடன் எதிர் கொண்டார். எனவே எடப்பாடி தலைமையிலான அதிமுக, கட்சி சின்னமான இரட்டை இலைக்கு ஏதுவாக கட்சி கொடியிலும் கூட மோடி-அமித் ஷா இரட்டையர் படங்களைப் பதித்து தானும் தமது தொண்டர்களும் உயர்த்திப் பிடித்து வலம் வரலாம்! அந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களை சொரணை அற்றவர்களாக ஆக்குவதற்கு முன்னணிப் படையாக செயற்பட்டு, சீமான் -விஜய் வழியில் ஆர்எஸ்எஸ்- பாஜக- இந்துத்துவ- சங் பரிவார்- காவிக் கூட்டத்தில் கரைந்து தமிழ்நாட்டு மக்களுக்கு முற்றிலும் துரோகம் விளைவிக்கக் கிளம்பிவிட்டனர்.
தமிழ்நாட்டின் திமுக கூட்டணி நிலை என்ன? நாம் எத்தகைய முறையைப் பின்பற்றுவது
இந்திய அளவில் தேர்தல் கட்சிகள் அனைத்தும் 1990களில் கொண்டுவரப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கையை ஏற்றுக் கொண்டு விட்டன. பெயரளவில் சிலர் விமர்சித்தாலும் நடைமுறையில் அதைதான் பின்பற்றுகின்றன. நாடாளுமன்ற விவாதங்களே கார்ப்பரேட் கொள்ளைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கும் ஒன்றாக மாறிப்போனது. இவை அனைவரும் அறிந்ததே! இதனால் தான் ஆசான் லெனின் ஒரு கட்டத்தில் முதலாளித்துவ நாடாளுமன்றத்தின் பல்வேறு அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்து ‘பாராளுமன்றம் என்பது பன்றிகளின் தொழுவம்’- என வரையறுத்துக் கூறினார். மற்றொரு கட்டத்தில், அப்போதைய அரசியல் பொருளாதார சூழல் காரணமாக அதனை பயன்படுத்தவும் வழிகாட்டினார்.
படிக்க:
♠ அமித் ஷா வின் ‘நல்ல’வாயும் -‘நாற’வாயும்!
♠ ஆப்பசைத்த குரங்காகும் அமித்ஷா!
ஆனாலும், இன்றைக்கு இந்திய அளவில் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே கலச்சாரம், ஒரே கல்விக் கொள்கை… என அனைத்தையும் ஒற்றை புள்ளியில் குவி மையப்படுத்தி ஒற்றை சர்வாதிகாரத்தை நோக்கி நாசிச ஹிட்லர் பாசிச முசோலினி பாணியில் RSS – பாஜக – இந்துத்துவ – சங் பரிவார் – காவிக் கூட்டம் கார்ப்பரேட் உடன் கூட்டணி அமைத்துக் கொண்டு இந்திய நாட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் பறித்து எடுத்து எதிரிகளை கொழுக்கச் செய்ய முனைந்து வேலை செய்வதோடு அதிகாரங்கள் அனைத்தையும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் குவி மையப்படுத்துவதையும், மாநிலங்களின் அனைத்து உரிமையையும் தட்டிப் பறிப்பதையும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மாநிலங்கள் நகராட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத அளவிற்கு இந்த பாசிஸ்டுகள் ஆட்சியில் அரங்கேற்ற மாகிக் கொண்டிருக்கின்றன.
எனவே இந்தியாவை சுடுகாடாக மாற்றிட முனைந்து நிற்கும் பாசிச சக்திகளான கார்ப்பரேட்டுகளின் பின்புலத்தில் இயங்கும் காவிக் கூட்டத்தை வீழ்த்திட புரட்சிகர இயக்கங்கள் அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் ஒன்றிணைத்து களம் காண வேண்டிய காலக்கட்டம் இதுவாக இருக்கிறது. எனவே, திமுகவின் செயற்பாடுகளில் நமக்கு எண்ணற்ற முரண்கள் தலைத்தோங்கி நின்றாலும் அந்தக் கூட்டணி பின்புலத்தையும் நாம் இணைத்துக் கொண்டு கார்ப்பரேட்- காவிப் பாசிசத்தையும் அவர்களுக்குத் துணை போகும் பிழைப்புவாதிகளாகக் கரைந்து போய்விட்ட துரோகக் கும்பலையும் முறியடிக்க ஐக்கிய முன்னணி கட்டி களம் கண்டு சமர் புரிய வேண்டும்!
கார்ப்பரேட்- காவிப் பாசிசத்தை வீழ்த்துவோம்!
ஒன்றிய அளவில் குவிமையப்படுத்தப்படும் அதிகாரக் குவியல்களை தடுத்து நிறுத்துவோம்!
மாநிலங்களின் தன்னாட்சி உரிமைகளுக்காக சமர் புரிவோம்!
- எழில்மாறன்

தமிழ்நாட்டில் பாசிச பிஜேபி யின் அடிமை கூட்டாளிகளான அதிமுக சினிமான் விஜய் போன்ற சங்கிகளின் கைக்கூலிகளை தமிழக மக்கள் விரட்டி அடிக்க வேண்டிய காலகட்டம் 2026 இல் தமிழகத்தில் பாசிச கூட்டணியை களத்தில் நின்று களம் காண்போம்