பத்திரிக்கைச் செய்தி


அன்புடையீர் வணக்கம்!
மக்கள் அதிகார அமைப்பின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 01-10-2023 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரின் பங்கேற்புடன் விழுப்புரத்தில் நடைபெற்றது.

இன்று நாட்டு மக்களின் பொது எதிரியாக மாறியுள்ள ஆர் எஸ் எஸ்- பாஜகவை வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையாக தோற்கடித்து ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும். அதற்கு நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள I.N.D.I.A. கூட்டணியை ஆதரிப்பது அனைத்து தரப்பு இந்திய மக்களின் முதன்மையான கடமையாகும் என நாட்டு மக்களுக்கு இப்பொதுக்குழு அறைகூவல் விடுக்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆர் எஸ் எஸ் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கு முதன்மையான காரணம் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பிற அரசியல் கட்சிகளைப் போல மற்றொரு அரசியல் கட்சி அல்ல. அதேபோல் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வழக்கமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்ற தேர்தலும் அல்ல.
ஆர் எஸ் எஸ் பாஜக தனது அனைத்து நாசகார செயல்களுக்கும், தேசவிரோத அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் தேர்தலில் அங்கீகாரம் பெற்று பாராளுமன்ற வழியாக சட்டபூர்வமாகவே பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது.மூன்றாவது முறையாக ஆர் எஸ் எஸ் பாஜக அதிகாரத்திற்கு வருவது நாட்டிற்கும், சொல்லிக் கொள்ளப்படும் அரைகுறை ஜனநாயகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும். எனவே,பாசிச பாஜக 2024 நாடாளுமன்றத் தேர்தலை பயன்படுத்திக் கொண்டு மீண்டும் அதிகாரத்திற்கு வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
மதச் சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள், கொலைவெறித் தாக்குதல்கள், கிறித்தவ மக்கள் மீதான தாக்குதல்கள், நாடு முழுவதும் உள்ள பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடிகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள், குறிப்பாக மணிப்பூர் பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதல் என நடத்தும் ஆர் எஸ் எஸ் இன் சங்பரிவார் அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் துணை போகிறது.

அரசியலமைப்பு சட்டத்தை சாதகமாக்கிக் கொண்டு, கேடான முறையில் அவர்களுடன் ஒன்றிணைந்து ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. இதற்கு ஏற்றார் போல் நீதித்துறை முதல் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள், போலீஸ் ராணுவம் உள்ளிட்ட அரசு கட்டமைப்பை ஆர்.எஸ்.எஸ் காவிமயமாக்கி வருகிறது.
அதுமட்டுமல்ல கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத, வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ள வேலையின்மை, அன்றாடம் ஏறுகின்ற விலைவாசி உயர்வு, சிறு குறு தொழில்களை, வர்த்தகர்களை ஒழிக்கின்ற ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, பணமதிப்பு நீக்கத்தால் அழிந்த சிறு குறு தொழில் நிறுவனங்கள் இவற்றை சரி செய்யாத ஒன்றிய பா.ஜ.க அரசு நாட்டின் அனைத்து பிரிவு மக்களுக்கும் எதிராக ஆட்சி செய்கிறது.
கடந்த 75 ஆண்டுகளாக பல்வேறு அர்ப்பணிப்புகளுடன் நமது நாடு உருவாக்கிய தேசத்தின் சொத்துக்களான அரசு பொதுத்துறை நிறுவனங்களான துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலை, சுரங்கங்கள், வங்கி மூலதனங்கள் என அனைத்து பொதுத்துறைகளையும் தனது புரவலர்களான அதானி, அம்பானிகளுக்கு வாரி வழங்கி வருகிறது.

அதானி, அம்பானி போன்ற தேசங்கடந்த தரகு முதலாளிகள் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட கருப்பு பணம் மீண்டும் இந்தியாவில் சட்டவிரோதமாக முதலீடு செய்யபட்டதை ஹிண்டன்பர்க் அறிக்கை அம்பலபடுத்தியதை பற்றி மோடி அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சி.ஏ.ஜி அறிக்கை அம்பலபடுத்திய சுமார் 7.5 லட்சம் கோடி ஊழலை பற்றியும் மோடி அரசு பதில் சொல்ல மறுக்கிறது.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி, என மொழிவழி தேசிய இனங்களின் மாநில உரிமைகளை அழித்து, தனது கொடுங்கனவான இந்து ராஷ்டிராவை, ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவத் துடிக்கிறது. இதற்காக அரசு கட்டமைப்பு முழுவதையும் பாசிசமயமாக்கி வருகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசாங்கம் மட்டுமின்றி,மக்களை நிரந்தரமாக ஆண்டுவரும் அரசு கட்டமைப்பும் கார்ப்பரேட்- காவி பாசிச சக்திகளின் மூலம் நிரப்பப்பட்டுள்ளது. இத்தகைய கொடூரமான, ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் எதிரான கார்ப்பரேட் காவி பாசிசத்தை, பாசிச பாஜகவை தேர்தல் மூலம் அதிகாரத்திற்கு வருவதை தடுக்கும் அதே நேரத்தில் தேர்தல் அரசியலுக்கு வெளியில் மக்களை திரட்டி கார்ப்பரேட் காவி பாசிசத்தை விழ்த்துவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதும், பாசிச எதிர்ப்பு தன்மை கொண்ட கட்சிகள், தனி நபர்களை ஒன்றிணைத்து ஐக்கிய முன்னணி – மக்கள் முன்னணி கட்டப்பட வேண்டும்.
அதன் மூலம் அரசின் பல்வேறு துறைகளில் தலைமை பொறுப்புகளையும் சட்டபூர்வமாகவே கைப்பற்றி வெறியாட்டம் போடும் கார்ப்பரேட்- காவி பாசிஸ்ட்களுக்கு துணை செய்யும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மாற்றப்பட வேண்டும்.

ஜனநாயக விரோத அடக்குமுறை நிறுவனமான NIA உள்ளிட்டவவை கலைக்கப்பட வேண்டும்.நீதி, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு மட்டங்களிலும் அதிகாரத்தில் உள்ள காவி கிரிமினல்கள் களையெடுக்கப்பட வேண்டும், அதானி, அம்பானிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும், ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும் போன்றவற்றை செயல்படுத்தும், பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும்,பாசிசத்தை முற்றாக வீழ்த்தும் வகையிலான ஜனநாயக கூட்டரசை அமைக்க வேண்டும்.இதற்காக அனைவரும் போராட வேண்டும்.

இத்தகைய கண்ணோட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பா.ஜ.கவை ஆட்சியதிகாரத்திலிருந்து தூக்கி எறிவதுதான் இன்றைக்கு இந்திய நாட்டு மக்களின் முதன்மையான கடமை என்று அறைகூவல் விடுக்கின்றோம். அதற்கு தமிழகம் முன்னோடியாக பா.ஜ.கவை தோற்கடித்து காட்ட வேண்டும் என இப்பொதுக்குழு ஏக மனதாக கேட்டு கொள்கிறது.

2024 நாடாளுமன்ற தேர்தல் – பாசிச பா.ஜ.கவை தோற்கடிப்போம்! I.N.D.I.A. வை ஆதரிப்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகத்தில் ஜனவரி மாதம் மாபெரும் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கு முன்னதாக அக்டோபரில் ஒத்த கருத்துடைய கட்சிகள், இயக்கங்களின் பங்கேற்புடன் அரங்கு கூட்டம் நடத்துவது என தீர்மானித்துள்ளோம்.

தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு
பொதுச் செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here