அமித் ஷா வின் ‘நல்ல’வாயும் -‘நாற’வாயும்!

இந்தியாவில் இருந்து மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனங்கள் இஸ்லாமிய பெயருடன் இந்துக்களால் நடத்தப்படுபவை தான்.

0
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா

பாசிஸ்டுகள்  புளுகுவதில், பேசியதை திரித்து பேசுவதில், அவதூறு செய்வதில் வல்லவர்கள் என்பதை உலகமே அறியும். அதைத்தான் தற்போது அமித்ஷா மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறார்.

நல்ல வாய்!

கடந்த திங்கட்கிழமையில் பால்வளத் துறையில் நிலைத்தன்மை மற்றும் சுழற்சி குறித்த பட்டறையை புதுதில்லியில் தொடங்கி வைத்துப் பேசுகையில் “நல்ல” வாயாக கருத்துக்களை உதிர்த்துள்ளார்.

பால்வளத் துறை நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், கிராமப்புற மேம்பாட்டிற்கும் சிறு விவசாயிகளின் செழிப்பிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது என்று மத்திய கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

பால்வளத் துறை நாட்டின் ஊட்டச்சத்தையும் கவனித்துக்கொள்கிறது. 62 சதவீத பெண்கள் இந்தத் துறையுடன் தொடர்புடையவர்கள் என்பதால், பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் பால்வளத் துறையும் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கூட அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் பேசிய மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் பால் உற்பத்தி 63 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றார். பால்வளத் துறையில் நிலைத்தன்மை மற்றும் சுற்றறிக்கை குறித்த இந்தப் பயிலரங்கின் முக்கிய நோக்கம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதாகும் என்றார்.

சங்கி அமைச்சர்களே இப்படி பால் உற்பத்தி தொழிலில் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள எளிய கிராம மக்களின் நலன் குறித்து விவசாயிகளின் நலன் குறித்து பேசுவதும் அதற்கு ‘புரட்சிகரமான’ திட்டத்தையும், ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார் என்பது தான் இதில் முக்கிய செய்தி. வாய்ச்சவடாலில் ‘கோயபல்ஸ்’ வாரிசுகளை அடித்துக் கொள்ள முடியாது அல்லவா?

எது நல்ல வாய்? எது நாறவாய்?

சிக்கலான விஷயத்தை சொல்வதால், நாம் விகடனின் கட்டுரையையே ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

அமித் ஷா, ‘தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம்’ மாட்டின் தோல் மற்றும் எலும்பை விற்பனைப் பொருளாக்குவதற்கான சிறிய கூட்டுறவுகளை ஒழுங்கமைக்கும் சாத்தியக்கூறுகளைத் ஆய்வு செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தினார் என்கிறது விகடன்.

“கோமாதாவின் தோலை உரித்து, எலும்பை எடுத்து விற்று காசாக்க வேண்டுமா?” என சங்கிகள் கொதித்தெழக்கூடும்.

“பசுமாட்டை லோடு வண்டியில் எடுத்துச் செல்வதை பார்த்தாலே பாய்ந்து சென்று பிடித்து ‘பசு காவலர்களாக’ எத்தனை பேரை ரோட்டில் வைத்து அடித்து கொன்றுள்ளோம். ஆட்டுக்கறி வைத்திருந்தால் கூட அது மாட்டுக்கறி தான்  என்று தீர்ப்பு எழுதி பலரையும் நரபலி தந்திருக்கிறோம். எவன்டா அவன், பசுமாட்டுத் தோலை உரி, எலும்பு எடு என்பவன். உன் தோலை முதலில் உரித்து எலும்பை எண்ண வேண்டும்” இப்படி எல்லாம் காவி குண்டர்கள் யாரும் குதித்தெழக்கூடாது.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

ஏனென்றால் சொன்னவர் உங்களின் அமித்ஷாவாயிற்றே. இதை எழுதி இருப்பது விகடன் இணையப் பக்கமாயிற்றே. திருடனுக்கு தேள் கொட்டியது போன்று பொத்திக்கொண்டுதான்  இருந்தாக வேண்டும்.

தலை சுற்ற வைக்கும் ஐடியாக்கள்!

அமித்ஷா பேசியது இதோடு முடியவில்லை. அடுத்த குண்டையும் எடுத்து வீசி உள்ளார்.

மாட்டின் தோலை சிறிய கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பதப்படுத்தி, ஷூ தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம் எனவும், இது, பண்ணை வைத்திருப்பவர்களுக்கு லாபகரமானதாக இருக்கும் எனவும் பேசியுள்ளார். மேலும் மாடு வளர்ப்பில் 100% பொருளாதார சுழற்சியை கூட்டுறவு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார் அமித்ஷா.

படிக்க:

🔰  உணவு பாசிசம்: அசாமில் மாட்டிறைச்சிக்குத் தடை!
🔰  பீப் கடை போடாதே மிரட்டி அம்பலமான கோவை சங்கி!

ஷூ தயாரிப்புத் தொழிலில் கணிசமாக இருப்பவர்கள் இஸ்லாமிய முதலாளிகளாயிற்றே. ஆம்பூரைச் சுற்றியுள்ள ஷூ தொழிற்சாலைகளை கணிசமாக அவர்கள் தானே நடத்தி வருகிறார்கள்.

அதனால் தானே ஆம்பூரில் மாட்டுக்கறி மலிவாகவும், பிரியாணி சுவைக்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது. நாம் இதைச் சொல்லித்தானே திருப்பத்தூர் மாவட்டத்தில் அஸ்திவாரத்தை போட ஆரம்பித்துள்ளோம் என சங்கிகள் கொதிக்க கூடாது.

நாளை இதையும் எதிர்பார்க்கலாம்!

மாட்டுக் கறியில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. வெளிநாடுகளில் மாட்டுக் கறிக்கு மிகப்பெரிய சந்தை உள்ளது. வத்தக்கரவையாகிவிட்ட கிழடு தட்டிய பசுக்களை கசாப்பு போட்டு கறி ஏற்றுமதி செய்தும் காசு பார்க்கலாம் என்று கூட சொல்லக்கூடும். ஏனென்றால் இந்தியாவில் இருந்து மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனங்கள் இஸ்லாமிய பெயருடன் இந்துக்களால் நடத்தப்படுபவை தான்.

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம், ருத்ரம் கிராமத்தில் தான் நம் நாட்டின் மிகப்பெரிய இறைச்சிக் கூடம் அமைந்திருக்கிறது. சுமார் 400 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் இந்த மிகப்பெரிய இறைச்சிக் கூடத்தின் உரிமையாளர் சதீஷ் சபர்வால். அல் கபீர் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவெட் லிமிடெட் இந்த இறைச்சிக் கூடத்தை இயக்குகிறது என்கிறது பிபிசியின் (28 மார்ச் 2017) இணைய பக்கம்.

இந்தியா தற்போது மாட்டுக்கறி ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நாடுதான்.

“அமெரிக்க வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உலகின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளராக இந்தியா தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது, மேலும் அடுத்த அதிக ஏற்றுமதியாளரான பிரேசிலை விட அதன் முன்னிலையை நீட்டித்துள்ளது” என்கிறது  தி ஹிந்து இணைய பக்கம்.

எனவே “ஹிந்துக்களே மாட்டு இறைச்சியையும் ஏற்றுமதி செய்யுங்கள்” என அமைச்சர் கூடிய விரைவில் வெளிப்படையாக அறிவிக்கவும் வாய்ப்புள்ளது.

அமித்ஷா ஆர்எஸ்எஸ் குண்டர்களிடையே பேசும் பொழுது ஒரு வாயுடனும், அமைச்சராக மீடியாக்கள் முன், மக்கள் முன் பேசும் பொழுது வேறு ஒரு வாயுமாக இருக்கிறார். இன்னும் எத்தனை நாளுக்கு தான் இந்த பாசிஸ்ட்டுகளை அதிகாரத்தில் நீடிக்க அனுமதிப்பது?

நாட்டையும் தொழிலையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு பால் உற்பத்தி, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை சிறுகுறு விவசாயிகளையும், விவசாய கூலிகளையும்  மக்கள் முன்னணியில்  ஒன்றிணைப்போம் . அனைத்து துறைகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்து வரும் பாசிச கும்பலுக்கு எதிராக அணி திரள்வோம். பாசிசத்தை அதிகாரத்திலிருந்து இறக்கி ஜனநாயக கூட்டரசமைப்போம்.

  • இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here