8 வருடத்தில் மோடி உடைத்த பர்னிச்சர்கள்!

0

மோடி எட்டு ஆண்டுகளில் செய்த சாதனையை மக்கள் வரிப் பணத்திலேயே ஏகப்பட்ட பணத்தை செலவழித்து, பிரச்சாரம் செய்கிறார்கள். 2024 மக்களவை தேர்தலுக்கு தயாராக காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டார்கள். நாம் எப்படி சும்மா இருக்கமுடியும்.

நம்ம பங்குக்கு நாம் எட்டு ஆண்டு “சாதனையை” சொல்லவேண்டியது காலத்தின் அவசியமாகிறது.

இத்தனை ஆண்டுகளில் மோடி உடைத்த பர்னிச்சர்கள் அதிகம். மக்களின் வாழ்வை சிக்கலாக்கியதும் அதிகம். துறைவாரியாகவே எட்டு, எட்டா எடுத்துவிடலாம். பறவைப் பார்வையில் பார்த்தால்…. பரந்துப்பட்ட மக்களைப் பாதித்த சில முக்கிய விசயங்களை சொல்வோம்.

1. கொரானா கொன்றது கொஞ்சம். மோடி கொன்றது அதிகம் :

உலக நாடுகள் கொரானாவை எதிர்கொள்ள தயாரான பொழுது, எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் ஊரடங்கு அறிவித்தார். அன்றாடம் உழைத்து, வீட்டில் உலை பொங்கியவர்கள் எல்லாம் தவித்துப் போனார்கள். மற்ற புயல், வெள்ள காலங்களில் சிவில் சமூகம் களத்தில் இறங்கி தன்னால் சாத்தியமானதை செய்யும். கொரானா ஆட்கொல்லி நோய் என்பதால் அவர்களாலும் உதவ முடியவில்லை. விளைவு. தற்கொலைகள். ஆயிரக்கணக்கான மைல்கள் தகிக்கும் வெயிலில் கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் நடந்தார்கள். நடந்தே சொந்த ஊரை அடைந்தார்கள். இரண்டாம் அலையில், தன் சொந்தங்களுக்கு ஆக்சிசன் கிடைக்காமல், மருந்து கிடைக்காமல், பெட் கிடைக்காமல், பிறகு இடுகாட்டில் எரிக்க இடம் கிடைக்காமல் பதைபதைப்புடன் அலைந்துகொண்டே இருந்தார்கள். இந்த அரசு நமக்கானது இல்லை என்பது பளிச்சென உணர்ந்த தருணம்.

2. பணமதிப்பிழப்பு கொடுத்த அலைச்சலும் மன உளைச்சலும் அதிகம்.

ஒரு ”சுபயோக சுப” தினத்தில், மோடி திடீரென தொலைக்காட்சியில் தோன்றி, 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்றார். ”கருப்பு பணத்தை வெளியே கொண்டுவர மக்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்” என்றார். மக்கள் ஏற்கனவே கடுஞ்சிரமத்தில் இருந்தவர்கள், இன்னும் அல்லாடினார்கள். வங்கிகளின் நீண்ட வரிசையில் தங்கள் நாட்களை செலவழித்தார்கள். வங்கிகளில் பணம் இருந்தும், திட்டமிட்ட நல்ல காரியங்களை செய்ய முடியாமல் திணறினார்கள். பணம் இல்லாமல் பிணத்தை அடக்கம் செய்ய முடியாது அலைந்தார்கள். “கருப்பு பணம்” உட்பட அத்தனைப் பணமும் பாதுகாப்பாக வங்கிக்கு வந்து சேர்ந்தது. உலகமே காறித்துப்பினாலும், மோடி எதுவும் நடைபெறாதது போல தன் துப்பட்டாவால் துடைத்துக்கொண்டார்.

3. விலைவாசி உயர்வு தரும் மன உளைச்சல்.

கடந்த எட்டு ஆண்டுகளில் மோடியின் நண்பர்கள் மில்லியனர்கள் எல்லாம் பில்லியனர்களாகி இருக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் ஏறிக்கொண்டே இருக்கும் விலைவாசி உயர்வால் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்களின் மாதாந்திர குடும்ப பட்ஜெட்டை இந்திய பட்ஜெட் போலவே பற்றாக்குறை பட்ஜெட்டாக மாற்றியிருக்கிறார். காரணம் மோடி நேரடி வரியை குறைத்து, மறைமுகவரியை அதிகப்படுத்திக்கொண்டே செல்கிறார். கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை. பொதுமக்கள் மீது வரிச்சுமையை ஏற்றிக்கொண்டே போகிறார். கடந்த எட்டு ஆண்டுகளில் மோடி பெட்ரோல், டீசல், எரிவாயு என பொருட்களில் விலை ஏற்றி கொள்ளையடித்தது மட்டும் 26 லட்சம் கோடி. சராசரியாக கணக்கிட்டால், ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்சம் என்கிறார்கள். எல்லா குடும்பத்துக்கும் கேஸ் அடுப்பு, சிலிண்டர் என புகை அடுப்பிலிருந்து பெண்களை விடுதலை செய்கிறோம் என்றார்கள். இப்பொழுது ஏறிவரும் கேசு சிலிண்டர் விலையால், மீண்டும் பழைய புகை அடுப்புக்கு பெண்கள் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ‘பெருமை’ எல்லாம் மோடிக்கே போய்ச்சேரும்.

Also read

விலைவாசி உயர்வு: மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி!
மக்களிடம் பிடுங்கி கார்ப்பரேட்டுகளுக்கு படையல்!

4. கலவரங்கள் மேலும் கலவரங்கள் :

1925ல் சித்பவன பார்ப்பனர்களால் துவங்கப்பட்டது ஆஎஸ்.எஸ். இயக்கம் அவர்களுடைய கனவு இந்து ராஷ்டிரம். வர்ணாசிரம தர்மத்தை மக்கள் கடைப்பிடிப்பது மூலம் இந்த மண்ணிலேயே அவர்களுக்கான சொர்க்க பூமியை உருவாக்குவது தான் அவர்களின் நோக்கம். நமக்கெல்லாம் செத்ததுக்கு பிறகு தான் ”சொர்க்கம்”. இந்து மதத்தின் ”பெருமைகள்” சொல்லி இந்துக்களை ஒன்றுப்படுத்த முடியாது என்பதை அறிந்துகொண்ட அவர்கள் முசுலீம்களையும், கிறிஸ்துவர்களையும் எதிரிகளாக பிரச்சாரம் செய்தார்கள். அதற்காக அவர்கள் உருவாக்குவது கலவரங்கள். அதற்காக அவர்களின் குண்டர்படைகள் கடுமையான பயிற்சி எடுக்கிறார்கள். இந்த எட்டு ஆண்டுகளில், ஆட்சி அதிகாரத்தில் அவர்கள் வந்ததும், கள் குடித்த குரங்காகி போனார்கள். மக்கள் அன்றாட வாழ்க்கையை தள்ளுவதற்கே சிரமப்படும் வேளையில் தான் இவர்கள் கலவரங்களைத் தூண்டி, மக்களை பலிகொடுத்து அதில் குளிர்காய்கிறார்கள். இந்தியா முழுவதும் மெல்ல மெல்ல காவிமயப்படுத்தி வருகிறார்கள்.

5. மோடி உடைத்த பர்னிச்சர்களின் எண்ணிக்கை அதிகம்.

சிபிஐ, ரிசர்வ் வங்கி, வங்கிகள், நீதிமன்றம், நாடாளுமன்ற ஜனநாயகம், பிரதமர் தேசிய நிவாரண நிதி என பல அமைப்புகளையும் சல்லி சல்லியாக உடைத்தது மோடியின் சாதனை. ஏற்கனவே அதன் சமூக மதிப்பு மலையின் விளம்பில் நின்று கொண்டிருந்ததை, மோடி உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டார் எனலாம். ஆர்.எஸ். எஸ்காரர்களை எல்லா அமைப்புகளுக்குள்ளும் மெல்ல மெல்ல புகுத்திவிட்டார்கள். இப்பொழுது அவர்களின் வானரப்படைகளை கொண்டு கஷ்டப்பட்டு கலவரம் செய்யவேண்டியதில்லை. ஒரு நீதிமன்ற தீர்ப்பை ‘பெறுவதின்’ மூலம் தன் அரசுப் படைகளைக் கொண்டே அமுல்படுத்திவிடமுடியும். அமுல்படுத்துகிறார்கள்.

6. பொதுச் சொத்துக்களை ஒழி; மலிவு விலையில் ”நண்பர்களுக்கு” படையல் வை

1947ல் அதிகாரம் கைமாறிய பிறகு, நேரு ரசிய சார்பாளராக இருந்தார். தரகு முதலாளிகள் அப்பொழுது இந்தியாவில் வளர்ந்திருக்கவில்லை. ரசியாவில் வெற்றிகரமாக அமுல்படுத்திய ஐந்து ஆண்டு திட்டங்களை இந்தியாவிலும் அமுல்படுத்த துவங்கினார். தொழில்துறை, பொதுப்பணித்துறை, ரயில்வே, மருத்துவதுறை, தகவல் தொடர்பு துறை, வங்கித்துறை அடிப்படை கட்டுமானங்கள் எல்லாவற்றையும் மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கினார். இப்பொழுது ஏகாதிப்பத்தியங்களின் நெருக்கடியால் தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகளை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அமுல்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதில் நாலுகால் பாய்ச்சலில் பொருளாதார திட்டங்களை அமுல்படுத்துகிறார். பொதுத்துறைகளை தன் நண்பர்களுக்கு மலிவு விலையில் விற்றுத் தீர்க்கிறார். எதிர்காலத்தில் மிஞ்சப்போவது அமெரிக்காவைப் போல, அரசு மரத்தை வெட்டி வெட்டி நோட்டடிக்கும். வரி வசூலிக்கும். வெளி விவகாரத்துறைகளை பார்த்துக்கொள்ளும். பெரும்பாலான மக்கள் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து போராடும் பொழுது, போலீசு, இராணுவத்தை வைத்து கடுமையாக ஒடுக்கும்.

கார்ப்பரேட்டுகளையும், காவி பாசிஸ்டுகளையும் ஒழித்துக்கட்டுவதில் தான் நமக்கு விடிவு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here