துரை ஆதீனம் என்று அழைக்கப்படுகின்ற திருநெல்வேலி பகவதி லட்சுமணன் மதுரை ஆதீனத்தின் 293வது தம்பிரான் ஆக அறிவிக்கப்பட்டு தற்போது ஆர்.எஸ்.எஸ் பிரச்சார பீரங்கியாக மாறியுள்ளார்.

தமிழகத்திலுள்ள கோவில்களின் பராமரிப்பு பணியில் இருந்து இந்து அறநிலையத்துறை வெளியேறவேண்டும், இந்து அறநிலையத்துறை என்பதே கலைக்கப்பட வேண்டும்.

கோவில்களுக்கு சென்றால் உண்டியலில் காசு போடாதீர்கள் அது எங்கெங்கோ செல்கிறது.

திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் ஆன்மீக பூமியை சீரழித்து விட்டனர். கோவில்கள் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் சென்றுள்ளதால் அது கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டது.

பகுத்தறிவு, திராவிடம் என்று பேசிக்கொண்டு திருநீறு பூச மறுக்கிறார்கள்.

சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கலாம் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கக்கூடாதா?

விஜய் படத்தில் இந்து மதத்திற்கு விரோதமாக பேசி நடிப்பதால் விஜய் படத்தை பார்க்காதீர்கள்.

என்றெல்லாம் திருவாய் மலர்ந்துள்ளார்.

மதுரை ஆதீனம் பகவதி லட்சுமணன்

“நண்டு கொழுத்தால் வளையில் தங்காது” என்று கிராமப்புறத்தில் ஒரு பழமொழி உள்ளது. மதுரை ஆதீனத்தில் 293 வது தம்பிரானாக தேர்வுசெய்யப்பட்ட நித்யானந்தாவுடன் போட்டியில் தேர்வாகி மடத்தின் இளைய தம்பிரானாக உருவெடுத்த திருநெல்வேலி பகவதி லட்சுமணன் வாய்க்கொழுப்பெடுத்து கண்டபடி உளறி வருகிறார்.

தமிழகத்தின் பாரம்பரியமான பகுத்தறிவு, நாத்திகம், பார்ப்பன எதிர்ப்பு மரபு போன்றவை மெல்ல மெல்ல நீர்த்துப் போய் வருவதால் இதுபோன்ற ஆதீனங்கள் வாய்க்கொழுப்புடன் பேசிவருகிறார்கள்.

“கோவில்கள் கூடாது என்று சொல்லவில்லை! அது கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது என்றுதான் சொல்கிறேன்” என பராசக்தி திரைப்படத்தின் மூலமாக முழங்கிய கலைஞர் கருணாநிதியின் வழித்தோன்றல்கள் ஆட்சி புரிகின்ற தமிழகத்தில் “திராவிட அரசியலால் கோவில் கொடியவர்களின் கூடாரமாகி விட்டது” என்று துணிச்சலுடன் பிளேட்டை திருப்பி போடுகிறார் மதுரை ஆதீனம்.

இவரை தேர்வு செய்தது செல்லாது என்று நித்தியானந்தா போட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. இவரது பீடம் டப்பா டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும்போது இவர் தமிழகத்தில் உள்ள கோவில்களை இந்து அறநிலையத் துறையிடம் இருந்து விடுவித்து தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூச்சல் போடுகிறார்.

மதுரை ஆதீனத்தில் 292 ஆவது தம்பிரான் ஆக இறந்த அருணகிரி 1980 முதல் 2019 வரை ஏறக்குறைய 39 ஆண்டுகள் தம்பிரானாக இருந்தது வரை பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது.

கடைசி பத்தாண்டுகளில் கோவிலில் பணியாற்ற வந்த கமலா என்பவரை நினைத்துக்கொண்டு அவரது இரு மகள்கள் படிப்பதற்கு கல்லூரிக்கு தேவையான கட்டணங்களையும் கட்டி அனுசரணையாக நடந்து கொண்டார் என்று அவர்மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளது. இந்த அருணகிரி தான் நித்தியானந்தாவை 293வது மடாதிபதியாக நியமனம் செய்தார்.

நித்தியானந்தாவுடன் முன்னாள் ஆதீனம் அருணகிரிநாதர்

இதற்கு இடையில் சுவாமிநாதன் என்பவர் மடத்தின் பொறுப்பில் இருந்துகொண்டு அருணகிரியை போட்டுத் தள்ளுவதற்கு சதி செய்தார் என்று அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

படிக்க:

♦  தருமபுரம் ஆதீனம் இறைவனுக்குச் சமமானவரா?

♦  சைவ மடங்களும் பட்டினப்பிரவேசமும்: நிலவுடமைச் சமூக ஒடுக்குமுறையின்சொச்சமிச்சங்கள்!

ஏறக்குறைய 1300 கோடி ரூபாய் சொத்து, 50க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், நகைக்கடைகள், ஹோட்டல்கள் ஆகியவற்றின் மூலம் பல கோடி ரூபாய் பணம் புழங்குகிறது. இவை எதையும்அரசாங்கத்திற்கும் அல்லது வேறு யாருக்கும் கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இந்து அறநிலையத்துறையின் கீழ் ஆதீனங்கள் வருவதில்லை என்பதால் இவர்களின் கொட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

தமிழகத்தில் ஆளுநராக ஆர்என் ரவி பொறுப்பேற்ற பிறகு ஆதீனங்கள் அனைத்தும் ஆர்எஸ்எஸின் பிரச்சார பீரங்கிகளாக மாறி திராவிட அரசியலுக்கு எதிராக அவதூறுகளையும், அரை உண்மைகளையும் கிளப்பி புழுதி அரசியலை பரப்பிக் கொண்டு வருகின்றனர்.

தற்போது மடாதிபதியாக உள்ள திருநெல்வேலி பகவதி லட்சுமணன் திரண்ட சொத்துக்களை தடையின்றி அனுபவிப்பதற்கும், அரசியலில் குதித்து யோகி ஆதித்யநாத் வழியில் ஏதாவது ஒரு பதவிக்கு வரலாம் என்றும் ஆசைப்படுகிறார் ! போலிருக்கிறது.

அந்த மனக் கிளர்ச்சியில் “ஆதீனங்கள் அரசியல் பேசக் கூடாதா !”என்றெல்லாம் அபத்தமாக பேசிக் கொண்டும் உள்ளார்.

பேசாத வாய்கள் பேசட்டும்! கேட்காத செவிகள் கேட்கட்டும்! ஆதீனங்களின் மடங்களுக்குக் கீழே புதைந்து கிடக்கும் உழைப்பாளிகளான நமது முன்னோர்களின் கல்லறைகள் பிளக்கட்டும்!.அதைக்கண்டு ஆதீனங்களின் நாற்காலிகள் நடுங்கட்டும்!!

  • பா. மதிவதனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here