பத்திரிக்கைச் செய்தி

எளிய மக்களின் சிறு ஊதியத்தையும் வழிப்பறி செய்யும்
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வு !
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம்! மக்களைக் காப்போம்!

வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.50 ஏற்றப்பட்டு ரூபாய் 962.50 ஆக உயர்ந்துள்ளது. பெட்ரால் விலை தினசரி 75 பைசா என்ற வகையில் இரண்டாவது நாளும் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு ரூ.1.51 அதிகரித்துள்ளது. இந்த தினசரி விலை உயர்வு ரூ.22 வரை செல்லும் என தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கத் தலைவர் திரு.முரளி தெளிவு படுத்துகிறார். டீசலை மொத்தமாக கொள்முதல் செய்யும் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு லிட்டருக்கு 25 ரூபாய் உயர்த்தப்பட்டதால் மொத்த கொள்முதலை நிறுத்தி போக்குவரத்துக்கழகங்கள் சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல் போடும் நிலையை உருவாக்கியுள்ளது மோடி அரசு.

மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ள ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த விலையேற்றத்திற்குக் காரணமான கார்ப்பரேட் கொள்ளையையும், அதைத் தாங்கிப் பிடிக்கும் மோடியின் கார்ப்பரேட் – காவி பாசிச அரசையும் வீழ்த்த மக்களை அறை கூவி அழைக்கிறது மக்கள் அதிகாரம்.

கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தர்காண்ட், உத்திரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலை முன் வைத்து, கடந்த நான்கரை மாதங்களாக பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்படாத நிலையில், சட்டமன்ற தேர்தல் முடிவு வெளிவந்த பின் 137 நாட்களுக்குப் பிறகு, மக்கள் தங்களுக்கு அளித்த தேர்தல் வெற்றிக்கு பிரதிபலனாகவும் தேர்தல் வெற்றிப் பரிசாகவும் இந்த விலை உயர்வை மக்கள் மீது பேரிடியாக இறக்கியுள்ளது பாசிச பா.ஜ.க அரசு.

சென்ற 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் உயர்ந்து கொண்டே போன இரண்டு அம்சங்களில் ஒன்றான பெட்ரோல் விலை உயர்வு டெல்லி முதல் மும்பை ராஜஸ்தான், கொல்கத்தா, தமிழ்நாடு என பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ 100 ஐ தாண்டியது. இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவைதான் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இரு முறை தீர்மானித்து வந்தன. மோடி கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு 2017 ஜூன் முதல் தினசரி விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பு அம்பானி, அதானி, டாடா, எஸ்ஸார் போன்ற தனியார் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது. உலகிலேயே பெட்ரோல், டீசல் மீது அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இதற்கு முன்னரும் கூட 2021 ஆம் ஆண்டு மே மாதம் மட்டும் 19 முறை விலை ஏற்றப்பட்டது. சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களை ஒட்டி விலையேற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

பெட்ரோலிய பொருட்களின் விலை தினசரி உயரும் போதெல்லாம், தங்களுக்கும் விலை உயர்வுக்கும் சம்மந்தமில்லை; எண்ணெய் நிறுவனங்கள்தான் சர்வதேச சந்தை விலை நிலவரத்திற்கேற்ப பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்கின்றன என்று பொறுப்பைத் தட்டிக்கழித்த ஒன்றிய அரசு தேர்தலுக்காக விலையை ஏற்றாமல் நிறுத்தி வைத்திருந்ததன் மூலம், தாங்கள் பேசியது பித்தலாட்டப்பேச்சு என்பதை நிரூபித்துள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும் உலகிலேயே பெட்ரோல், டீசல் மீது அதிகம் வரி விதிக்கும் நாடான இந்தியாவில், விலையைக் குறைத்தோ, வரியைக் குறைத்தோ அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிக்கிறது.

கச்சா எண்ணெய் விலை குறையும் தருணங்களில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை உயர்த்தி ஈடு செய்து ஒன்றிய அரசே கொள்ளையடிப்பதும் நடந்து வருகிறது. அவ்வாறு 2021-ல் மட்டும் ஒன்றிய அரசுக்கு வந்த தொகை 4 லட்சம் கோடியைத்தாண்டியது. அப்படி ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடித்து சம்பாதித்த பணமும் முதலாளிகளுக்கு பல்வேறு வரிச்சலுகையாக படையல் வைக்கவே பயன்படுத்தப்படுகிறது.

ரசியாவிடமிருந்து தற்போது பல லட்சம் பேரல் கச்சா எண்ணெயை பெரும் தள்ளுபடி விலைக்கு மோடி அரசு வாங்கியுள்ளதாக காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர். உண்மையில் பேரல் 13 டாலருக்கு கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது மோடி அரசு. இவ்வளவு விலை குறைவாக வாங்கிய நிலையிலும், அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் எண்ணெய் நிறுவனங்களுக்குத் திருப்பி விட்டுள்ளது.

பெட்ரோலியப்பொருட்கள் மீதான இந்த விலை உயர்வுக்கு கார்ப்பரேட்டுக்களுக்குச் சாதகமான தனியார்மயக் கொள்கைகளே காரணம். கொரோனா, வறுமை, பசி, பட்டினியின் கோரப் பிடியில் மக்கள் செத்துக் கொண்டிருந்தாலும் அதைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாத பாசிச மோடி அரசு, குறைவான விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வரும் லாபத்தையும், எண்ணெய் நிறுவனங்களுக்குப் படையல் போடுகிறது.

தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை தனியார் முதலாளிகளிடம் தள்ளிவிட்டு கொழுத்த லாபம் பார்க்க வழி ஏற்படுத்தித் தருகிறது. மொத்தத்தில், தொழிலாளர்கள், விவசாயிகளிடம் வீராப்பு காட்டும் மோடி அரசு கார்ப்பரேட்டுக்களின் அடிவருடியாக வாலை ஆட்டுகிறது.
கார்ப்பரேட்டுக்களுக்கு சேவை செய்யும் மோடி அரசை வீழ்த்துவது மட்டுமல்ல, நமது நாட்டையே கவ்வியுள்ள கார்ப்பரேட் – காவி பாசிசத்தை மொத்தமாக வீழ்த்தும் போது மட்டுமே இது போன்ற விலையேற்றங்களை ஒழித்துக் கட்டி மக்களது வறுமை, பசி, பட்டினியை நிரந்தரமாக ஒழிக்க முடியும். மோடி அரசால் கடைபிடிக்கப்படும் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாற்றாக சுயசார்பு பொருளாதாரத்தை முன் வைக்கும் வகையில் மாற்று திட்டத்துடன் தீர்வுகளை தேட வேண்டும்.

பெட்ரோல் – கேஸ் விலை உயர்வுக்கெதிரான மக்களின் குமுறல் எரிமலையென வெடித்து இந்த கார்ப்பரேட் – காவி பாசிச கும்பலை கடலில் வீசியெறிய வேண்டும். அதுவரை இந்திய மக்களுக்கு விடிவில்லை!

தோழமையுடன்,
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுச்சேரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here