
“சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள தம்னார் தாலுகாவில் உள்ள முடகான் மற்றும் சரைடோலா கிராமங்களில் ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கரே பால்மா செக்டார் II நிலக்கரித் தொகுதியில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மர வெட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக குறைந்தது 5,000 மரங்கள் வெட்டப்பட்டதாக தெரிகிறது.
இந்த சுரங்கம் மகாராஷ்டிரா மாநில மின் உற்பத்தி நிறுவன லிமிடெட் (MAHAGENCO) நிறுவனத்திற்காக அதானி குழுமத்தால் இயக்கப்படுகிறது. இந்த சுரங்கம் குறைந்தது 655 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியை உற்பத்தி செய்யும் என்று மதிப்பிடப்பட்டாலும், 14 கிராமங்கள் இந்த திட்டத்தால் நேரடியாக பாதிக்கப்படும். மேலும் இதற்காக சுமார் 2,584 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதில், கிட்டத்தட்ட 215 ஹெக்டேர் வனத்திற்கு சொந்தமான நிலமாகும், இந்த நிலத்தில் உள்ள மரங்கள் மற்றும் பிற தாவரங்களை அழித்து தான் நிலக்கரி சுரங்கத்தை உருவாக்கப் போகிறார்கள்.
இந்தப் பகுதியில் ஏற்கனவே ஆறு நிலக்கரிச் சுரங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் நான்கு சுரங்கங்கள் வனப் பகுதியில் செயல்பாட்டிற்கு வர உள்ளன.”என்று தி வயர் இணையதளத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது.
இதே சத்தீஸ்கர் மாநிலத்தில் தான் அடர்ந்த வனக்காடுகளின் கீழ் கனிம வளங்களை பாதுகாப்பதற்கு போராடுகின்ற மாவோயிஸ்டுகள் மீது கொடூரமான தாக்குதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள் என்ற காரணத்திற்காகவே பழங்குடி மக்களின் மீது பாலியல் வன்கொடுமைகள் முதல் வீடுகளை இடிப்பது, வசிப்பிடங்களில் இருந்து விரட்டியடிப்பது, மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்ற முத்திரை குத்தி சுட்டு பொசுக்குவது என்று மோடி- அமித்ஷாவின் ராணுவம் பச்சை படுகொலைகளை நிகழ்த்தி வருகிறது.
ஆனால் மகாராஷ்டிரா மின்வாரியத்துடன் அதானி குழுமம் அதாவது அதானி பவர் கார்ப்பரேஷன் போட்டுக் கொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின் உற்பத்தி செய்து கொடுப்பதற்கு தடையில்லாமல் காடுகளை அழித்து, பழங்குடி மக்களை விரட்டியடித்து, நிலக்கரி சுரங்கங்கள் உருவாக்கப்படுகின்றன. பூமிக்கடியில் இருந்து நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கு தடையாக உள்ள வனக்காடுகளை அழிக்கின்ற கொடூரமான முயற்சியில் இறங்கியுள்ளது அதானி குழுமம்.
“ஆமாம், இது கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி தான் உங்களால் என்ன செய்து விட முடியும்” என்று திமிர்த்தனமாகவும், அகம்பாவமாகவும் பேசுவதற்கு பாசிச ஆர்எஸ்எஸ் மோடி கும்பலுக்கு வக்கிரத்தனமான உணர்வு இருக்கிறது.
இஸ்ரேலில் அதானி குழுமத்திற்கு சொந்தமான ஹைப்பா துறைமுகத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டதை ஈடு செய்வதற்காக கங்கா எக்ஸ்பிரஸ் ஹைவேஸ் என்ற 594 கிலோ மீட்டர் நீளமுள்ள விரைவு சாலையை அதானி கன்ஸ்ட்ரக்ஷனுக்கு தூக்கி கொடுத்துள்ளார் பாசிச மோடி.
இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்காக இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியில் இருந்து 12,000 கோடி ரூபாய் கொட்டி அளக்கப்படுகிறது.
பாசிச மோடியும், அவரது சகபாடியான அமித்ஷாவும் நாட்டுப்பற்றுடன் போராடுபவர்களுக்கு எதிராக பல்வேறு அவதூறுகளை பரப்புகின்றனர., அவர்கள் மீது பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், அர்பன் நக்சல்கள் என்று முத்திரை குத்தி அரசியலமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதித்துக் கொண்டு பச்சை படுகொலைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
படிக்க:
♦ காடு : குறுக்குவழியில் பறிக்கப்படும் காடுகள்!
♦ காடுகளை அழிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுக
பாலஸ்தீனத்தில் காசாவில் உள்ள மக்களின் மீது கொடூரமான கொலைவெறித் தாக்குதல் நடத்துகின்ற நெதன்யாகுவுக்கும், சொந்த நாட்டு மக்களின் மீது கொடூரமான உள்நாட்டுப் போரை நடத்துகின்ற அமித்ஷா-மோடி கும்பலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
இருவருமே அமெரிக்கா அடிமைகள் என்பது மட்டுமின்றி, தனது பிராந்தியத்தில் தன்னை வல்லரசுகளாக உருவாக்கிக் கொள்வதற்கு வெறித்தனமாக அலைந்து கொண்டிருக்கின்ற கொடிய பாசிச பயங்கரவாதிகள்.
பல நூற்றாண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டுள்ள வனக்காடுகளின் அரிய வகை மரங்கள் முதல் பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கின்ற கனிம வளங்கள் வரை அனைத்தும் கடந்த பத்து ஆண்டுகளுக்குள்ளாக தேசங்கடந்த தரகு முதலாளிகளான அதானி, அம்பானி, அகர்வால் வகையறாக்களிடம் வாரிக் கொடுக்கப்படுகிறது.
“ஆமாம், இது கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி தான் உங்களால் என்ன செய்து விட முடியும்” என்று திமிர்த்தனமாகவும், அகம்பாவமாகவும் பேசுவதற்கு பாசிச ஆர்எஸ்எஸ் மோடி கும்பலுக்கு வக்கிரத்தனமான உணர்வு இருக்கிறது.

“நீங்கள் அனைவரும் இந்துக்கள்; ராமர் ஜெயந்தி, கிருஷ்ணர் ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, ஜெகநாதன் ஜெயந்தி என்று கொண்டாடுங்கள்; இந்துக்களுக்கு ஆபத்து; இஸ்லாமியர்கள் பெருகி வருகிறார்கள்; கிறிஸ்தவர்கள் நாட்டை விழுங்க பார்க்கிறார்கள்” என்று அன்றாடம் பல நூற்றுக்கணக்கான பொய்ச் செய்திகளை பரப்புவதன் மூலம் பெரும்பான்மை மக்களின் மூளையை சலவை செய்து வருகிறார்கள்.
அவர்களின் மூளையை பார்ப்பன (இந்து) மதத்தின் கீழ் அடிமைத்தனமாக வாழ்வதற்கு பயிற்றுவித்துக் கொண்டே, மறுபுறம் கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை முழுமையாக விற்று தள்ளுவதற்கு துடித்துக் கொண்டிருக்கின்ற இந்த தேச விரோதிகள் துடைத்தெறியப்படும் வரை இந்திய மக்களுக்கு விடிவு இல்லை.
2025 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் பாஜக சங்பரிவார கும்பலின் நூற்றாண்டு என்று பெருமை பீத்திக் கொள்வதை அனுமதிக்க கூடாது. 2025-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் மற்றும் கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு கல்லறை கட்டுகின்ற ஆண்டு என்று நாள் குறித்து நாடு முழுவதும் உள்ள பாசிச எதிர்ப்பாளர்கள் அனைவரையும் ஒரு அணியின் கீழ் கொண்டு வருவோம்.
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்தி நாட்டின் பொதுச் சொத்துக்களையும், வனக்காடுகளையும் பாதுகாக்கின்ற ஜனநாயகக் கூட்டரசு ஒன்றை உருவாக்குவோம். நமது வரிப்பணத்திலிருந்தும், நமது பொதுத்துறை வங்கிகளிலிருந்தும் பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்து வளர்ந்து நிற்கின்ற தேசங்கடந்த கார்ப்பரேட்டுகளான அதானி உள்ளிட்ட அனைவரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து நாட்டுடைமையாக்குவோம்.
◾பார்த்தசாரதி.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி






