
ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த 16.68 லட்சம் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் கணக்குகள், 180.10 கோடி ரூபாய் செலவில் சோஹோ (Zoho) நிறுவனத்தின் கிளவுட் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. தேசிய தகவல் மையம் (NIC) ஏற்கனவே இந்தச் சேவைகளை வழங்கி வரும் நிலையில், அதை மேம்படுத்துவதற்குப் பதிலாகத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
ஆதாரங்களின்படி, 1991-ல் தொடங்கப்பட்ட தனியார்மயச் சீர்திருத்தங்கள் என்பது ஏகாதிபத்திய தனியார் தரகு முதலாளிகள் நாட்டின் வளங்களைச் சூறையாடுவதை நியாயப்படுத்தும் ஒரு நடவடிக்கையே. NIC போன்ற அரசு நிறுவனங்களை நவீனப்படுத்தாமல், கார்ப்பரேட்டுகளுக்கு லாபம் ஈட்டித் தரும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அரசு நிர்வாகத்தையே தனியார் பிடிக்குள் கொண்டு செல்லும் “மறுகாலனியாக்க” நடவடிக்கையாகும். பொதுத்துறை நிறுவனங்களைப் பலவீனப்படுத்தும் பாசிசப் போக்காகும்.
அரசு மின்னஞ்சல் தரவுகள் மிகவும் உணர்திறன் (Sensitive) வாய்ந்தவை. அவற்றை ஒரு தனியார் நிறுவனத்தின் வசம் ஒப்படைப்பது தேசப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது. “தரவுகளின் உரிமை அரசிடமே இருக்கும்” என்று அரசு கூறினாலும், தனியார் நிறுவனங்களின் தலையீடு என்பது எப்போதும் ஆபத்தானது. ஸ்ரீதர் வேம்புவே கூகுள் போன்ற நிறுவனங்களை “நவீன கிழக்கிந்திய கம்பெனிகள்” என்று விமர்சிக்கிறார். ஆனால், அதே பாணியில் இந்திய அரசின் தரவுகள் உள்நாட்டுத் தனியார் நிறுவனத்திடம் செல்வது மட்டும் எப்படிப் பாதுகாப்பாக இருக்கும்?
படிக்க:
♦ ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு வாழ்க்கை: சனாதனத்தின் பல்வேறு பரிமாணங்கள்!
♦ ஸ்ரீதர் வேம்பு: கிராமத்தில் பிறந்து இந்தியாவின் 39 ஆவது பணக்காரனாக உயர்ந்த கதை!
அவர் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களை நவீன கிழந்திய கம்பெனிகள் என விமர்சிக்க காரணம் நாட்டுப்பற்றெல்லாம் இல்லை. இந்தியாவில் தான் ஒரு தரகு முதலாளியாக வளர்ந்த பின்னர் தனக்கான வாய்ப்புகள் இல்லாமல் போகவே இப்படி பேசியிருகிறார். நம்மை பொறுத்தவரை, கூகுள் நிறுவனம் பன்னாட்டு சுரண்டல் கும்பல். ஸ்ரீதர் வேம்பு உள்நாட்டு சுரண்டல் கும்பல். வெளிநாட்டுக் காரன் சுரண்டுவதற்கு என்னிடமே விட்டு விடுங்கள் என்கிறார். தன்னை நாட்டுப்பற்றாளனாக அறிவித்துக் கொள்ளும் ஸ்ரீதர் வேம்பு சோஹோ நிறுவனத்தை கலைத்துவிட்டு அரசுக்கு சேவை செய்யலாமே. தனது திறமையை அவர் விரும்பும் ‘பாரத’ நாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாமே?
ஸ்ரீதர் வேம்பு: கார்ப்பரேட் – காவிப் பாசிசத்தின் முகம்
சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் பாஜகவின் சித்தாந்தங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பது வெளிப்படையானது. பல நேரங்களில் சமூக வலைதள விவாதங்களின் போது சங்கிக்கு நிகராக கருத்துப் பதியக் கூடியவர்.
அவர் 2020-ல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். பாஜகவின் “ஆத்மநிர்பர் பாரத்” கொள்கைகளையும், அக்கட்சியின் தலைவர்களையும் அவர் தொடர்ந்து ஆதரித்து வருகிறார். அரசின் இந்த 180 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம், இந்த சித்தாந்த நெருக்கத்தின் காரணமாக வழங்கப்பட்ட ஒரு சலுகையாகவே பார்க்கப்படுகிறது.
இதே சேவையை NIC மூலம் வழங்கியிருந்தால், பல ஆயிரம் இளைஞர்களுக்கு நிலையான அரசு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். தனியார்மயம் என்பது தொழிலாளர்களைப் பாதுகாப்பற்ற “அமைப்பு சாரா தொழிலாளர்களாக” மாற்றுகிறது. 1% பணக்காரர்களிடம் நாட்டின் 49% சொத்துக்கள் குவியும் சூழலில், இதுபோன்ற ஒப்பந்தங்கள் உழைக்கும் மக்களை மேலும் வறுமைக்குள்ளேயே தள்ளும். சமூக ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும்.
மோடி ஆட்சியில் வேகமெடுக்கும் தனியார் மய நடவடிக்கைகள்!
இந்தியாவில் தனியார்மயம், தாரளமயம் என்ற மறுகாலனியாக்க புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப் பட்ட 90 களுக்கு பிறகு பன்ணாட்டு முதலாளிகளும், உள்நாட்டு தரகு முதலாளிகளும் இந்திய நாட்டின் வளங்களை எவ்வித கட்டுப்பாடுமின்றி சுரண்டிக் கொள்ள இந்திய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது.
2014-ல் மோடி பதவியேற்றப் பின் தனியார்மயத்தின் வேகத்தை அதிகரித்தது. வங்கிகள் தொடங்கி பல பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதன் சொத்துகள் தனியாரிடம் விற்கப்பட்டன. இந்தியாவின் மிகப்பெரிய ரயில்வேத் துறையில் சில் ரயில்கள் அதானிக்கு விற்கப்பட்டது. விமான நிலையங்கள் அதானிக்கு குத்தகைக்கு விடப்பட்டன.
அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவிற்காக இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒன்றுமில்லாமல் செய்யப்பட்டது. அதன் சொத்துக்கள் ஒன்றிய மோடி அரசால் விற்கப்பட்டன.
படிக்க:
♦ பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம்! முதல் பலி தொழிலாளிதான்! சமீபத்திய உதாரணம்- Air India!
♦ வங்கிகள் தனியார்மயம்: காத்திருக்கும் பேராபத்து!
இப்படியான பாசிச மோடி அராசின் தனியார் மய நடவடிக்கைகள் கடந்த 11 ஆண்டுகளில் கடுமையாக அதிகரித்து இந்தியாவின் தேச்சங்கடந்த தரகு முதலாளிகளின் சொத்துக்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சி தான் ஸ்ரீதர் வேம்புவின் சோஹோ நிறுவனத்திற்கு அரசின் மின்னஞ்சல் சேவைகளை மாற்றியதையும் பார்க்க வேண்டும்.
அரசு மின்னஞ்சல் சேவைகளை சோஹோ (Zoho) போன்ற ஒரு தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்ப்பது என்பது, மோடி அரசின் தீவிரமான தனியார்மயக் கொள்கையின் மற்றுமொரு அங்கமாகும்.
வங்கி, பாதுகாப்புத் துறை என அனைத்தையும் தனியார்மயமாக்கும் மோடி அரசு, தற்போது டிஜிட்டல் தளத்தையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்துள்ளது. இது வெறும் தொழில் நுட்ப மாற்றம் அல்ல; இது “கார்ப்பரேட் – காவி பாசிச” கூட்டணியின் லாப வேட்டை. அரசின் தரவுகளைப் பாதுகாக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவும், சேவைகள் பொதுத்துறையிடமே நீடிக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய அவசியமாகும்.
- நலன்






