அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு: இதுவே ஆர்எஸ்எஸ் – பாஜக உருவாக்கியுள்ள இந்திய சமூக அமைப்பு.
இந்திய ஒன்றியத்தின் பிரதமராக திருவாளர் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு – குறு தொழில் முனைவர்கள் மற்றும் பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தி வருகிறார் என்பது மீண்டும் ஒரு முறை ஆதாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
கார்ப்பரேட்டுகளின் இந்திய அலுவலக அதிகாரி போல் செயல்படுகின்ற மோடி மற்றும் அவரது அலுவலகத்தைச் சார்ந்த சிறிய கும்பல் ஒட்டுமொத்த இந்தியாவின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த ஆதிக்கத்தை கையடக்கமே உள்ள சிறிய கும்பலான தேசங்கடந்த தரகு முதலாளிகளின் நலனில் இருந்து நடத்துகிறார்கள்.
பார்ப்பன பாசிச பயங்கரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் அது துவங்கிய காலம் முதல் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராகவும், அந்நிய ஏகபோகங்கள், அவர்களின் நிதி மூலதன ஆதிக்க சக்திகள் ஆகியோர்களின் எடுபிடியாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பதுதான் ஆர்எஸ்எஸின் நூற்றாண்டு கால வரலாறு.
பிரிட்டன் ஆட்சி காலத்தில் இந்தியாவில் செயல்பட துவங்கிய ஆர்எஸ்எஸ், காலனி ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய எந்த வரலாற்றுச் சான்றுகளும் இல்லை. ஆனால் காலனியாதிக்கத்தை ஆதரித்து தனது மேலாதிக்க நலனை நிலைநாட்டிக் கொண்ட ஆர் எஸ் எஸ் முன்னோடிகளான பார்ப்பனக் கும்பல் அனைத்து துறைகளையும் கைப்பற்றி பிரிட்டன் எஜமானர்களுக்கு நம்பகமான, விசுவாசமான கையாட்களாக செயல்பட்டு வந்தனர்.
இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடப் போவதாக பெருமையடித்துக் கொள்கிறது.. ஆனால் உண்மையிலேயே அவர்கள் எஜமான விசுவாசத்திற்காக காவடி தூக்கியதற்காகவும் தற்போது வரை ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகள் மற்றும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு ஆகியவற்றின் நம்பகமான, விசுவாசமான அடியாள் கும்பலாக செயல்படுவதை கண்டு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
இதனை நாம் தனிப்பட்ட வெறுப்பு என்ற முறையில் சொல்லவில்லை. சமீபத்தில் வெளியிடப்பட்ட உலக சமத்துவமின்மை பற்றிய அறிக்கை “பொருளாதார வல்லுநர்களான லூகாஸ் சான்செல், ரிக்கார்டோ கோமஸ்-கரெரா, ரோவைடா மோஷரிஃப் மற்றும் தாமஸ் பிக்கெட்டி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ‘உலக சமத்துவமின்மை அறிக்கை 2026’ (World Inequality Report 2026) இல் வருமானம் மற்றும் சொத்து குறித்த தரவுகள் இடம் பெற்றுள்ளன.
இந்திய மக்கள்தொகையில் 10 சதவீதத்தினர் மட்டுமே இந்தியாவின் மொத்த வருமானத்தில் தோராயமாக 58 சதவீதத்தை ஈட்டுகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

மக்கள் தொகையில் கீழ் அடுக்கில் உள்ள 50 சதவீதத்தினர் இந்தியாவின் வருமானத்தில் 15 சதவீதத்தை மட்டுமே ஈட்டுகிறார்கள் என்கிறது அந்த அறிக்கை. இந்தியாவில் சமத்துவமின்மை, வருமானத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை.
செல்வத்தில் உள்ள இடைவெளியும் இன்னும் ஆழமாகி இருப்பதாக அறிக்கை கூறுகிறது. இந்தியப் பணக்காரர்களில் 10 சதவீதம் பேர் நாட்டின் செல்வத்தில் தோராயமாக 65 சதவீதத்தை சொந்தமாகக் கொண்டுள்ளனர்.
இந்த 10 சதவிகிதத்துக்குள், முதல் ஒரு சதவிகிதம் பேர் நாட்டின் மொத்தச் சொத்தில் 40 சதவிகிதத்தைக் கொண்டுள்ளனர்.” என்று இந்த அறிக்கையின் சாராம்சம் முன் வைக்கிறது.
கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகவே ஆட்சி நடத்துகின்ற இந்திய ஒன்றியத்தின் பிரதமரான பாசிச மோடி மற்றும் அவரது அமைச்சர் அவர்களுக்கு வழிகாட்டுகின்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகள் மற்றும் அதனை அமல்படுத்துகின்ற பிரதமரின் அலுவலகம் ஆகியவை ஒன்று சேர்த்து நாட்டு மக்களுக்கு கொடுத்துள்ள மிகப்பெரிய தண்டனை இதுதான்.
படிக்க:
♦ தேசிய வெறி-ராணுவ மயமாக்கப்படும் பொருளாதாரம்! தேசபக்தி பஜனையில் ஒன்று கூடும் அனைத்து கட்சிகள்.
♦ நெருக்கடியை நோக்கி இந்தியப் பொருளாதாரம்!
அயோத்தியில் ராமனுக்கு கோவில் கட்டினால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று சங் பரிவார் கும்பலை ஒன்று திரட்டி பாபர் மசூதியை இடித்து தள்ளினர். அதன் பிறகு அயோத்தியில் ராமன் கோவில் கட்டப்பட்ட பிறகும் நாட்டில் வறுமையோ, ஏற்றத்தாழ்வோ பஞ்சமோ ஒழியவில்லை. மாறாக, கையடக்கமே உள்ள சிறிய கும்பலிடம் அனைத்து சொத்துக்களும் குவிந்து வருகிறது.
இந்த வர்க்க ரீதியிலான இரு துருவ முரண்பாடுகளை நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள கூடாது என்பதற்காகவே பார்ப்பன மத பண்டாரங்கள், பரதேசிகளைக் கொண்ட பல்வேறு வானார, குண்டர் படை அமைப்புகள் மூலம் இந்து மதக் கொள்கையை தீவிரமாக பிரச்சாரம் செய்கின்றனர்.
பிரச்சாரத்தின் மூலம் பார்ப்பன (இந்து) மதத்தை ஒருபோதும் வளர்க்கவே முடியாது என்பதற்காக செயற்கையாக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகியவர்களை எதிரிகளாக காட்டி தன்னை வளர்த்துக் கொள்வதும் இந்து என்ற அடையாளத்தின் கீழ் நிறுவனமயமாக்கிக் கொள்வதும் நடைப்பெறுகிறது.
இரு துருவ ஏற்றத்தாழ்வுகளின் மூலம் உருவாகியுள்ள இந்த வர்க்க முரண்பாடுகளை எதிர்த்து முறியடிப்பதற்கு ஒரே தீர்வான கம்யூனிச சித்தாந்தத்தின் கீழ் மக்களை ஒன்றுபடுத்துவதற்கு போராட வேண்டிய சூழ்நிலை முன் எப்போதையும் விட தற்போது அதிகரித்துள்ளது.
கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதத்தின் ஒவ்வொரு அடக்குமுறையும் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையை சூறையாடி வருகிறது என்பதைத்தான் மேற்கண்ட உலக சமத்துவமின்மை அறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது.
பார்ப்பனக் கும்பலின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு நிரந்தரமாக சூத்திர, பஞ்சம அடிமைகளாக வாழப் போகிறோமா அல்லது கார்ப்பரேட் காவி பாசத்தை வீழ்த்தி ஜனநாயகக் கூட்டரசு ஒன்றை நிறுவுவதன் மூலம் ஏற்றத்தாழ்வுகளுக்கு முடிவு கட்டப் போகிறோமா என்பதுதான் நமது முன்னே உள்ள கேள்வி?
இந்தக் கேள்விக்கு பதிலை தேடுவதன் மூலம் தான் புதிய ஜனநாயக சமூகத்தை நோக்கி முன்னேற முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.
◾கணேசன்
புதிய ஜனநாயகம் தினசரி






