மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடுகிறோம். இதை நாங்கள் அரசியலாக்கவில்லை. அரசிடம் இருந்து நியாயம் கிடைக்காத போது, போராடுவதை தவிர வேறு வழி இல்லை” என ‘தர்ம போராளி’ அண்ணாமலை கடந்த 2022 ஆம் ஆண்டு தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட போது இந்துக்களுக்கு ஆபத்து என்று பேசி தமிழகத்தில் அமைதியின்மையை உருவாக்க முயன்றனர்.

தஞ்சாவூர் மைக்கேல் பட்டி பள்ளி மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் இல்லை என சிபிஐ உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

விடுதியில் தங்கி படித்த மாணவி லாவண்யா தனது 2022 ஆம் ஆண்டு விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டார். சித்தி கொடுமை, பள்ளியில் கொடுத்த பணிச்சுமை ஆகியவையே தற்கொலைக்கு காரணம் என்று உண்மையான தகவல் வெளியான போதும், மதமாற்றமே காரணம் என்று பாஜக மற்றும் சங்பரிவார அமைப்பான விஹெச்பி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

விஷம் அருந்தியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்த மாணவியை காப்பாற்றுவதற்கு எந்தவித முயற்சியும் செய்யாமல் அவரை பேச வைத்து வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பரப்பி மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் தான் காரணம் என்று தங்களது இந்துத்துவ அரசியலுக்காக கொளுத்திப் போட்டனர்.

ஆனால், மாணவி பேசிய வீடியோவில் மதமாற்றம் தொடர்பாக ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. விடுதிக்காப்பாளரான சகாயம் மேரி தன்னையும் பிற மாணவிகளையும் விடுதி சம்பந்தமான வேலைகளை கொடுத்து அழுத்தம் கொடுத்ததாகவே பேசினார். விடுதி காப்பாளரின் பெயர் சகாயமேரி என்பதற்காகவே மதமாற்றத்தால் ஏற்பட்ட மரணம் என தமிழக அளவில் பெரும் பிரச்சனையாக்கினர் பாஜகவும் அப்போதைய தலைவராக இருந்த அண்ணாமலையும்.

மதம் மாற துன்புறுத்தல் என இந்தியாவில் பேசச் செய்த சங்கி கும்பல்!

பிணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் கழுகுகள் பிணம் விழுந்ததும் என்ன செய்யுமோ அதைத்தான் தமிழ்நாட்டில் பாஜக எனும் பிணந்தின்னி செய்தது. மாணவியின் மரணம் தற்கொலை எனத் தெரிந்தும் உடனடியாக கர சேவகர்களை களத்தில் இறக்கி மாணவியை வீடியோ எடுத்து அவர் இறந்ததும் சமூக வலைதளங்களில் பரப்பி Narrative செட் செய்து முதலில் தமிழக பிரச்சினையாகவும் பின்பு சங்பரிவார் கும்பலின் மாணவர் அமைப்பான ஏபிவிபி மூலம் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆக்கியது.

தமிழ்நாட்டில் பாஜகவின் அறியப்பட்ட முகங்களான அண்ணாமலை, வானதி சீனிவாசன், எச்.ராஜா,எஸ்.ஜி.சூர்யா, காயத்ரி ரகுராம் மற்றும் பாஜகவின் ஐடி விங் என அனைவரும் களத்திலும் சமூக வலைதளத்திலும் தீவிரமாக வினையாற்றி கிறிஸ்தவ மதமாற்றம் தான் மாணவி லாவண்யா மரணத்திற்கு காரணம் என்று பொதுவெளியில் பரப்பினார்கள்.

சங்கி கும்பலால் பரப்பப்பட்ட செய்திகள் அவர்களது சமூக வலைதள கணக்குகளில் இன்னும் நீக்கப்படாமலே உள்ளது. அதனை பல லட்சம் பார்வையாளர்கள் பார்த்து இருக்கிறார்கள். பல்லாயிரம் பேருக்கு ஃபார்வேர்ட் செய்துள்ளார்கள்.

இப்பிரச்சினையை ஆளும் திமுகவிற்கு எதிராக திசைதிருப்ப மாவட்ட தலைநகரங்களில் “கட்டாய மதமாற்றம் லட்சியம் காக்க உயிர்விட்ட லாவண்யா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும்” என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். நடிகையும் முன்னாள் தெலுங்கானா பாஜக தலைவருமான விஜயசாந்தி தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரணை நாடகத்தையும் அரங்கேற்றியது பாஜக.

பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP மூலம் இந்தியாவில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஜஸ்டிஸ் பார் லாவண்யா #justiceforLavanya என்ற பதாகைகளோடு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை நடத்தினார்கள். அதில் மாணவி மரணத்திற்கு மதமாற்றம் தான் காரணம் என மாணவர்களிடம் பிரச்சாரம் செய்தார்கள். சில மாணவர்களை திரட்டி கொண்டு முதல்வரின் வீட்டையும் முற்றுகையிட முயன்றார்கள்.

இப்படியாக தமிழ்நாட்டில் மதப் பிரிவினையை உருவாக்கி கிறிஸ்தவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்கள். இதற்கு ஏதுவாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டார். இறுதியில் சிபிஐ விசாரணை முடிவில் மாணவி லாவண்யா மரணத்திற்கும் மதமாற்றத்திற்கும் தொடர்பு இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது.

சிபிஐ உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள அறிக்கையில் விடுதி காப்பாளராக இருந்த சகாயம் மேரி என்பவர் தனிப்பட்ட முறையில் கொடுத்த தொல்லைகளால் தான் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். லாவண்யா தற்கொலை செய்து இறந்ததற்கு பிறகு அவரது உடலை கூட அவரது பெற்றோர்கள் வாங்கவிடாமல் பாஜக மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் போன்ற தீவிர வலதுசாரி அமைப்புகள் முயற்சி எடுத்தார்கள் என்றும் சிபிஐயின் அறிக்கை கூறுகிறது. மேலும், மாணவி இறக்கும் தருவாயிலும் கூட அவரை பேச வைத்து வீடியோ பதிவு செய்து அதில் மதமாற்றம் என்ற விஷயத்தை குறித்து மாணவி லாவண்யா கூறவில்லை என்றாலும் கூட அப்படி ஒரு பொய் பிம்பத்தை கட்டமைத்து பெரும் பிரச்சனையை உருவாக்கியுள்ளார் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த முத்துவேல். இதையும் சிபிஐ தனது அறிக்கையில் கூறியுள்ளதாக பத்திரிக்கையாளர் நிரஞ்சன்குமார் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

படிக்க:

 மாணவி லாவண்யா மரணம் | பாஜக சங்கிகள் பொய் பிரச்சாரம்

 காவிமயமாகிய நீதித்துறை: – ஜி.ஆர்.சுவாமிநாதன்-லெட்சுமி நாராயணன்களே சாட்சி!

சிபிஐ ஏற்கனவே மோடி அரசின் கைப்பவையாக மாறி அவர்களின் நலனுக்காகவே சேவை செய்து வரும் நிலையில், அவர்களுடைய அறிக்கையே பாஜகவுக்கு எதிராக உள்ளது. அண்ணாமலை போன்ற அடிமைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாசிச பாஜகவின் மத வெறுப்பு அரசியலுக்கு இதைவிட சான்று தேவையில்லை.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

இப்போது பிரச்சனை என்னவென்றால் மாணவி லாவண்யாவின் மரணத்தின் மூலம் கிறிஸ்தவர்களின் மீது பரப்பப்பட்ட அவதூறு பிரச்சாரங்கள் இந்த தீர்ப்பின் மூலம் உடைக்கப்பட்டாலும் இப்பிரச்சனையை பயன்படுத்தி இந்து மதவெறி பாஜக கும்பலால் எத்தனை பேர் மூளை சலவை செய்யப்பட்டு இருக்கிறார்கள். கிறிஸ்தவர்களை எதிரியாக பார்க்கும் மனநிலையை மாணவியின் மரணத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ளார்கள்.

சமய நல்லிணக்கத்தை பேணும் தமிழ்நாட்டைக் கலவர பூமியாக்க முனைந்து கொண்டிருக்கும் அண்ணாமலை உள்ளிட்ட சங்கிகளை சிறையில் அடைக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சுடுகாடாக்க முயலும் விஹெச்பி, இந்து மக்கள் கட்சி, பஜ்ரங்தள் உள்ளிட்ட மதவெறி அமைப்புகள் தமிழக அரசால் தடை செய்யப்பட வேண்டும். அதற்கு முன்பு பாஜக எனும் மக்கள் விரோத கட்சி இம்மண்ணிலிருந்து அகற்றப்பட வேண்டும்.

  • சுவாதி

1 COMMENT

  1. லாவண்யா தற்கொலை !
    வதந்தி பரப்பியவர்களுக்கு என்ன தண்டனை ?

    தமிழகத்தில் பாஜகவை சேர்ந்த வி எஸ் பி ஏ பி வி பி போன்ற பயங்கரவாத அமைப்பு மாணவி லாவண்யா மதமாற்றம் செய்யப்பட்டு தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார் என வதந்தியை பரப்பி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி தமிழக முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு கிறிஸ்தவ மக்களை தனிமைப்படுத்தும் வேலையில் கேடுகெட்ட இழிவான செயலில் இறங்கியது.
    இந்த வழக்கை ஆர் எஸ் எஸ் சேர்ந்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டு தங்களுடைய மதம் மாற்றம் என்ற பித்தலாட்டத்தை அரங்கேற்றினார்.
    உச்ச நீதிமன்றம் அண்ணாமலை வானதி சீனிவாசன் எச் ராஜா தமிழிசை சௌந்தர்ராஜன் இவர்கள் முகத்தில் உச்சநீதிமன்றம் காரி துப்பியுள்ளது.

    பாசிச சங்கீ கூட்டத்திற்கு இதை விட ஒரு இழிவான போக்கு வேற ஏதாவது இருக்க முடியுமா? மாணவி லாவண்யா பிணத்தை வைத்து அரசியல் செய்து சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவது ஒரு ஈன செயல் என்பதே நிரூபணம் ஆகி உள்ளது.

    பாசிச பாஜகவை தமிழகத்தில் இருந்து அடித்து விரட்டுவோம். கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here