
பொருளாதார அறிஞர் ரதின் ராய் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் (The United States of inequality, 17.02.2025) முக்கியமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். வட இந்தியாவுக்கும் தென் இந்திய மாநிலங்களுக்கும் இடையே நிலவும் பொருளாதார மற்றும் வளர்ச்சி சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை அதில் அவர் விவரித்திருந்தார்.
தனிநபர் வருமானம் என்ற அளவில், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய வட இந்திய மாநிலங்களைவிட பலமடங்கு உயர்ந்த நிலையில் உள்ளன என்பதை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். வட இந்திய மாநிலங்களுக்கும் தென் இந்திய மாநிலங்களுக்கும் உள்ள வேறுபாடு, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வேறுபாட்டை ஒத்தது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
வட இந்திய மாநிலங்களில் மக்கள் தொகை அதிகமாக இருந்தாலும், பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவை சந்திக்கின்றன. ஆனால், இந்திய ஒன்றிய அரசில் ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் பெரும்பாலும் வட இந்தியாவைச் சார்ந்தவர்களாக உள்ளனர். பதினைந்தாவது நிதி ஆணையத்தை எடுத்துக்கொண்டால், அதில் ஒரு உறுப்பினர்கூடத் தென் இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர் இல்லை. இந்த பாரபட்சமான அணுகுமுறையின் காரணமாக, தென் இந்திய மாநிலங்களுக்கு எதிராக அவர்கள் நடந்து கொள்கின்றனர். இந்தியைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களின் மீது திணிக்க முயல்கின்றனர். நிதி ஒதுக்கும்போது, வட இந்திய மாநிலங்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்கின்றனர். இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்கள், வட இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் கடுமையாக விமர்சிக்கின்றன” என்று இந்தியாவில் வடக்குக்கும் தெற்குக்கும் இடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை விரிவாக எடுத்துரைத்திருந்தார் ரதின் ராய்.
அதே நேரத்தில், ‘ வட இந்தியாவின் பின் தங்கிய நிலை எதிர் தென் இந்தியாவின் வளர்ச்சி’ எனப் பார்ப்பவர்கள், தென் இந்தியாவின் பலவீனங்களையும் அது வட இந்தியாவைப் போலவே பின்னடைந்து இருக்கும் சில அம்சங்களையும் கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது’ என்றும் ரதின் ராய் வலியுறுத்தியிருந்தார்.
வட இந்திய மாநிலங்களைப் போலவே, பல கேடுகள் தென் இந்திய மாநிலங்களிலும் உள்ளன எனக் குறிப்பிடும் அவர் :
“வட இந்தியாவில் இருப்பது போலவே, தென்னிந்தியாவிலும் ஆணாதிக்கமும் பெண் வெறுப்பும் மிகுந்துள்ளன. ஒரு தெலுங்கு திரைப்படத்தைப் பாருங்கள், பிரஜ்வால் ரேவண்ணா விவகாரத்தை கவனியுங்கள் அல்லது கேரளாவில் ஒரு பெண் சுற்றுலாப் பயணியைக் கேளுங்கள். இது உங்களுக்குப் புரியும். ‘கேட்டட் கம்யூனிட்டி’ அபார்ட்மெண்ட்களை தவிர, ஹைதராபாத்தும் பாட்னாவைப் போலவே அசுத்தமாகத்தான் உள்ளது. தென் இந்தியாவிலும் மூடநம்பிக்கை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. டெல்லி, ஜெய்ப்பூர் அல்லது கொல்கத்தாவைப் போலவே, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத்திலும் போக்குவரத்து விதிகள், கட்டிட விதிமுறைகள், மாசு கட்டுப்பாட்டு சட்டங்கள் தண்டனை ஏதுமின்றி மீறப்படுகின்றன.” என சுட்டிக் காட்டியிருந்தார்.
“ தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் பீகாரை விட மூன்று மடங்கு அதிகமாகும், ஆனால் விவசாயத்துறையில் ஆண்களின் சராசரி கூலி உ.பி. மற்றும் பீகாரில் இருப்பதைப்போல் இரண்டு மடங்கு கூட இல்லை. இது ‘ பிழிந்தெடுக்கும் பொருளாதாரம் ( extractive economy)’. பெருகும் வளங்கள் ஏற்கனவே பணக்காரர்களாக இருப்பவர்களால் பெருமளவில் பிழிந்து எடுத்துக் கொள்ளப்படுகின்றன ”
படிக்க
♦ இந்தியப் பொருளாதாரத்தை துதிபாடும் ஐஎம்எப் தலைவர்! உண்மை என்ன?
♦ தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு! உழைக்கும் மக்களுக்கோ கை விரிப்பு!
“ தென் இந்திய சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் சாதி பாகுபாடு பரவலாக உள்ளது. தனிநபர் வருமானம் மற்றும் மனித வள வளர்ச்சிக் குறியீடுகள் உயர்வாக இருந்தாலும், அடுத்த கட்ட சமூக மாற்றங்களைக் கொண்டு வருவதில் தென் இந்திய மாநிலங்கள் பின்தங்கியுள்ளன. உண்மையில், இந்த சமூக ரீதியானப் பின்தங்கிய நிலை, பணக்கார தென்னிந்தியாவையும் ஏழை வட இந்தியாவையும் ஒன்றிணைக்கும் ஒரு முக்கியக் காரணியாக உள்ளது” என்று ரதின் ராய் தனது கட்டுரையில் கூறியிருந்தார்.
“இதன் விளைவாக, தென் இந்திய மாநிலங்கள் தங்களது தனிநபர் வருமானத்தில் மிகப்பெரிய வளர்ச்சி இருந்தபோதிலும், வட இந்திய மாநிலங்களைப் போலவே, பொருளாதார வளர்ச்சி அனைவரையும் தழுவியதாக இல்லாததால், அதை ஈடுசெய்ய தங்கள் வளங்களில் பெரும் பகுதியைச் செலவிடுகின்றன.” என்கிறார் ரதின் ராய்.
“சகோதரத்துவம் இல்லாதது, சாதி அரசியலுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் தருவது, பலவீனமான நிறுவனங்கள், விதிகளை மதிக்காதது ஆகியவற்றின் விளைவாக, தனிநபர் வருமானம் உயர்ந்தாலும், அதற்கேற்றச் செழிப்பு தென் இந்திய மாநிலங்களில் குறைவாகவே உள்ளது.”
“சுமார் 3,000 டாலர் தனிநபர் வருமானம் கொண்ட சமூகங்களில், வழக்கமாகவே உயர் உற்பத்தித் திறன், அதிக முதலீடு, அதிக ஊதியம் ஆகிய நலன்பயக்கும் சுழற்சி நிலவ வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக, வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் ஊக்குவிக்கப்படும் முறைசாரா துறையின் வளர்ச்சியே தென்னிந்தியாவில் தொடர்கிறது. அது, பணக்காரர்கள் தமது நிலப்பிரபுத்துவ வாழ்க்கை முறையைத் தொடர்ந்து அனுபவிக்கவும், குறைந்த உற்பத்தித் திறன் நடவடிக்கைகள் தொடரவும் காரணமாகிறது” என்கிறார் அவர்.

வட இந்தியாவைவிட தென் இந்தியா பல வகைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது உண்மைதான். ஆனால், “அடுத்த கட்ட பொருளாதார மாற்றத்திற்குத் தேவையான சமூக ஒற்றுமை ( social cohesion) , அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கும் தன்மை ( inclusiveness) ஆகியவற்றைப் புறக்கணிப்பதற்குப் பொருளாதார வளர்ச்சி ஒரு சாக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது” என்று ரதின் ராய் எச்சரிக்கிறார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் சமூகநீதி ஆட்சி நடப்பதாகக் கூறப்பட்டாலும், தலித் மக்கள் தமக்குரிய உரிமைகளைப் பெற முடியாததற்குக் காரணம் ரதின் ராய் சுட்டிக்காட்டும் “சாதி அரசியலும், சகோதரத்துவம் இன்மையும் தான்.”
‘ ஏற்றத் தாழ்வுகளின் அருங்காட்சியகம்’ என்பது (வட) இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் பொருந்துகிறது’ என்பதை ஆதாரங்களோடு ரதின் ராய் அந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சி தலித்துகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோள். இந்த வேண்டுகோளின் முக்கியத்துவத்தை ஆட்சியாளர்கள் கவனிக்காது போனாலும் திட்டக் குழுவில் இருக்கும் திரு ஜெயரஞ்சன் உள்ளிட்ட பொருளாதார அறிஞர்கள் கவனிப்பார்கள் என நம்புகிறேன்.
நன்றி: ரவிக்குமார்
விடுதலை சிறுத்தைகள் கட்சி






