
கத்தோலிக்க கிறிஸ்தவருக்கு உயர்ந்த மதபீடமான ரோம்-வாடிகன் போப்பாண்டவர்களால் ஆளப்படுகிறது. இந்தப் போப்புகள் தான் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்களுக்கு வழிகாட்டுகின்ற குருமார்களாக உள்ளனர்.
இவர்களில் ’புனிதர் பட்டம்’ பெறுவதற்கு அனைவரும் விரும்பினாலும் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே புனிதர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர் என்பதைப் பற்றியும் போப்புகளின் உண்மையான முகத்திரையை கிழித்தெறிந்தும் 2000 ஆண்டில் புதிய கலாச்சாரம் இதழில் தோழர் சூரியன் எழுதியிருந்தார்.
உலகை ஆரிய இனம் ஆள வேண்டும் என்று வெறிபிடித்தலைந்த பாசிச கொடுங்கோலனான ஹிட்லருக்கும், அப்போதைய போப்பாக இருந்த 12 வது பயஸ் என்பவருக்கும் இருந்த உறவைப் பற்றி அம்பலப்படுத்தி எழுதப்பட்டிருந்தது அந்த கட்டுரை.
இன்றைய போப்பாக இருக்கும் பிரான்சிஸ்க்கு மூச்சுக் குழாய் பாதிப்பு ஏற்பட்டு பயலேட்டரல் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
சர்வ வல்லமை பொருந்திய இறைவனின் தூதரை, ’அல்ப பாக்டீரியாக்கள்’ தாக்கி மூச்சுக் குழாயை அடைக்க வைத்திருப்பது அறிவியல் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும், கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையில் நாங்கள் ’மிகச் சிறந்த புரோக்கர்கள்’ என்று கதையளக்கின்ற போப்புகளின் மீதுள்ள மூடத்தனத்தை அகற்றவும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
83 வயதான போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் பாதிப்பு காரணமாக ஒரு வாரத்திற்கு மேலாக அவதிப்பட்டு வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இத்தாலியில் உள்ள ரோமின் ஜெமெலி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
போப் பிரான்சிஸிற்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் அவருக்கு கூடுதல் சிகிச்சை தேவைப்படக் கூடிய, ஆரம்ப நிலை பைலேட்டரல் நிமோனியா அதாவது இரு நுரையீரல்களிலும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
இந்தப் போப் பிரான்சிஸ் காலத்தில் தான் சமகாலத்தில் மிக கொடூரமான யூத ஜியோனிச இன அழிப்பு பாலஸ்தீனியர்களின் மீது நடத்தப்பட்டது.
ஆனால் அன்றைய போப் 12 வது பயஸ் ஜெர்மனியின் நாஜிக்களான ஹிட்லருக்கு ஆதரவு கொடுத்ததைப் போல இந்த போப் இசுரேலின் நெதன்யாகு மற்றும் அமெரிக்காவின் டிரம்புக்கு முழுமையான தனது ஆதரவை அளிக்கவில்லை என்பதும், காசாவில் கொல்லப்பட்ட மக்களுக்காக அவ்வப்போது வருந்தினார் என்பதும், இசுரேலின் இனப்படுகொலை பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் முன் வைத்தார் என்பது சிறிது ஆறுதல் அளிக்கிறது என்றாலும் பாலஸ்தீனப் போருக்கு எதிராக பகிரங்கமாகவோ, உக்ரைன் மீதான போருக்கு எதிராகவோ அறிவிப்பு எதையும் செய்யவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
உலகில் அதிகமாக பின்பற்றப்படும் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைமைக் குருமார்கள் என்ற முறையில் உலக சமாதானத்திற்காகவும், நல்வாழ்வுக்காகவும் போப்புகள் குரல் கொடுக்கிறார்களா என்றால் ஒருபோதும் இல்லை.
இது இன்று நேற்று அல்ல காரல் மார்க்ஸ் காலத்திலிருந்து தொடர்கின்ற மறுக்க முடியாத உண்மையாகும். இதனையே காரல் மார்க்ஸ் தனது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்.
கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையின் முதல் வரியே கீழ்க்கண்டவாறுதான் துவங்குகிறது:
“ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம் – கம்யூனிசம் எனும் பூதம். போப்பாண்டவரும் ஜார் அரசனும்.. ஜெர்மன் உளவாளிகளுமாய் பழைய ஐரோப்பாவின் சக்திகளனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக்கூட்டு சேர்ந்திருக்கின்றன”
மார்க்சும் எங்கெல்சும் அன்றைய போப் ஒன்பதாம் பயஸ் கடைப்பிடித்த வெறிகொண்ட சோசலிச எதிர்ப்பை அறிக்கையில் இவ்வாறு பதிவு செய்தனர். ஆனால் அதன் பின்னர் வந்த போப்பாண்டவர்கள் அனைவருமே தமது நடத்தையின் மூலம் அறிக்கையின் முதல் வாக்கியத்தை தீர்க்கதரிசனமிக்க பிரகடனமாக்கிவிட்டனர்.
போப் பிரான்சிஸ்க்கு கிருமித் தொற்று என்று அறிவிக்கப்பட்டவுடன் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மன விசனத்தில் அமிழ்ந்துள்ளனர் என்று கிறிஸ்தவ நல்லுலகத்தின் செய்தி நமக்கு அறிவிக்கிறது. எனினும் அவர் அறிவியலை பெரிதாக நம்பவில்லை போலிருக்கிறது.
போப் பன்னிரண்டாவது பயஸ் பற்றி சொந்த வாழ்க்கையை எழுதுவதற்கு வாடிகனில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்த நூலாசிரியர் ஜார்ஜ் கார்ன்வெல் என்பவர் அவரது அந்தரங்கங்களையும், உலகப்போர் காலத்தில் அவர் காத்த அமைதியையும், ஹிட்லர் கொடூரமாக உலகம் முழுவதும் உள்ள யூதர்களை அழித்த போது அமைதி காத்ததையும் பற்றி அம்பலப்படுத்தி எழுதி இருந்தார்.
படிக்க:
🔰 பக்தர்களை பரலோகத்திற்கு அனுப்பும் கிறிஸ்துவ மதபோதகர்கள்!
🔰 கிறிஸ்தவர்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதலில் இறங்கியுள்ள ஆர்எஸ்எஸ் குண்டர் படை!
”போப் – 12-வது பயஸைத் தரிசித்து அவரது புறங்கையைப் பணிந்து முத்தமிட்டு அருளாசி பெற்ற ஒரு ஆங்கிலேயர், “போப்பின் கையில் அதிகாலைப் பனியின் தூய்மையான மணம் வீசியதாகவும், அது புனிதர்களின் உடலிலிருந்து மட்டுமே வீசக்கூடிய நறுமணமாக இருக்கக் கூடும்” என்றும் எழுதி வைத்துள்ளார்.
கையை முத்தமிடும் பக்தர்களிடமிருந்து கிருமிகள் தொற்றிக் கொள்ளாமலிருப்பதற்காக, மணம் வீசும் கிருமி நாசினி தைலத்தில் கையை முக்கி எடுத்துவிட்டுத் தான் பக்தர்களுக்கு அவர் தரிசனம் தந்திருக்கிறார்” என்று அந்த ரகசியத்தையும் போட்டு உடைக்கிறார் வாடிகன் ஆவணங்களைக் குடைந்த நூலாசிரியர்.
சமீபத்தில் அமெரிக்க அதிபரான டிரம்பை சந்திக்கும் போது அவரது கையை திட்டமிட்டு தவிர்த்தார் போப் பிரான்சிஸ். தூய கிறிஸ்தவரான அவர் தன்னை சந்திக்க வந்த பக்தர்களின் கையையும் அவ்வாறு தவிர்த்து இருக்கலாம். ஆனால் அவர் கிருமித் தொற்றால் பாதிக்கப்படுவார் என அவரது ’ஞானம்’ அவருக்கு உணர்த்தவில்லை போலும்.
ஒரு மதம் என்ற முறையில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் நின்று அவர்களின் விடுதலைக்காக பேசியது கிறிஸ்தவம் என்றும், அதனை முன்வைத்த இயேசு கிறிஸ்துவின் வசனங்கள் இதனை உறுதிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது..
ஆனால் சமகாலத்தில் நடக்கின்ற பயங்கரவாத தாக்குதல்களையும், கொடூரமான ஒடுக்கு முறைகளையும், மனிதப் பேரழிவுகளையும் கண்டும் காணாமல் உல்லாச ஊதாரி வாழ்க்கை வாழ்கின்ற போப்புகள் ஒரு காலத்திலும் எளிய கிறிஸ்தவர்களின், பளிச்சென்று சொல்லப் போனால் உழைக்கும் கிறிஸ்தவர்களின் பிரதிநிதியாக ஆகிவிட முடியாது. இதனையே கம்யூனிசம் வர்க்க நலன் என்று அறிவிக்கிறது.
கிறிஸ்துவுக்கும், கிறித்தவ திருச்சபைக்கும் உள்ள சிறிய வேறுபாட்டை ஒரே வரியில் விளக்கினார் தோழர் கார்ல் மார்க்ஸ்:
“கிறித்தவத்தின் மாபெரும் ஞானி (கிறிஸ்து), மக்களின் ஆன்மாக்களுக்கு விமோசனம் கோரி தமது உடம்பை தியாகம் செய்தார்; நவீனமான, கல்வியறிவு மிகுந்த ஞானியோ தமது சொந்த ஆன்மாவின் விமோசனத்திற்காக மக்களின் உடல்களை தியாகம் செய்கிறார்.”
அன்றைய போப் முதல் இன்றைய போப் வரை அவர்களின் வாழ்க்கையும் இதனை நிரூபிக்கின்றது.
- ஆல்பர்ட்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி