கிறிஸ்தவர்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதலில் இறங்கியுள்ள ஆர்எஸ்எஸ் குண்டர் படை!


ஆர்எஸ்எஸ்-பிஜேபி குண்டர்களின் சிறுபான்மை மதங்களுக்கு எதிரான தாக்குதல் அடுத்த சுற்று துவங்கியுள்ளது. இதுவரை இஸ்லாமியர்கள் மீது மட்டும் பிரதானமாக தாக்குதலை நடத்தி வந்த ஆர் எஸ் எஸ் சங்பரிவார குண்டர் படை தற்போது கிறிஸ்தவர்கள் மீதும் தாக்கத் தொடங்கியுள்ளது.

கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்து அடிப்படை ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதிக்கிறது. நாடெங்கிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கூட கூடிய இடங்கள் அனைத்திலும் வெறித் தாக்குதல் நடத்தியதன் மூலம் இது பார்ப்பன பேரரசு தான் இங்கு பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட அடிமைகளாக வாழ தயாராக இருந்தால் இருங்கள் இல்லையென்றால் உங்களை படுகொலை செய்வோம் அல்லது நாட்டை விட்டு ஓடுங்கள் என்று பட்டவர்த்தனமாக அறிவித்து வெறியாட்டம் போடுகின்றனர் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள்.

கார்ப்பரேட் – காவி பாசிஸ்டுகளுக்கு பெரும்பான்மை இன மக்களுக்கும் இடையில் நடுநிலை என்று ஒன்று கிடையாது. கார்ப்பரேட் – காவி பாசிசத்தை அடியோடு வீழ்த்தி ஜனநாயக கூட்டரசு நிறுவுவதற்கு பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி நாடு முழுவதும் கட்டியமைப்போம்.

கார்ப்பரேட் காவி பாசிசத்தின் தாக்குதலுக்கு உள்ளாகின்ற அனைத்து பிரிவு மக்களையும் ஒன்றிணைப்போம்.

♦♦♦

தேவாலயங்கள் சூறை; இயேசு சிலை உடைப்பு!

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி மூன்று நாட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் – பாஜக தலைமையிலான சங்பரிவாரக் கும்பல்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன. ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள புனித மீட்பர் தேவாலயத்தில் உள்ள ஏசு கிறிஸ்துவின் சிலையை இந்துத்துவா மத வெறிக் கும்பல் உடைத்து நொறுக்கியது. 2021ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 300 தாக்குதல்கள் கிறித்துவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களில் இத்தகைய தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இஸ்லாமியர்களை இனப் படுகொலை செய்ய வேண்டும் என பகிரங்கமாக அறைகூவல் விடப்பட்டது. கிறித்துவ மக்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
கிறிஸ்துமஸ் அன்று மட்டும் பல்வேறு தாக்குதல்கள் நடந்துள்ளன. அவற்றில் சில:

1. ஆக்ரா/உத்தரப்பிரதேசம்

கிறிஸ்துமஸ் அன்று உத்தரப்பிரதேச மாநிலமான ஆக்ராவில் ராஷ்ட்ரிய பஜ்ரங்தள் எனும் அமைப்பினர் கிறிஸ்துமஸ் தாத்தா என அழைக்கப்படும் “சாண்ட்டா கிளாஸ்” உருவ பொம்மையை எரித்தனர். “சாண்ட்டா கிளாஸ்” எந்த பரிசுப் பொருளையும் கொண்டு வருவதில்லை. மதமாற்றத்தைதான் கொண்டு வருகின்றனர்” என அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அஞ்சு சவுகான் கூச்சல் போட்டார். மதமாற்றத்தை நிறுத்தவில்லை எனில் அனைத்து மிஷனரி பள்ளிகள் முன்பும் கலகம் செய்வோம் எனவும் கொக்கரித்தார்.

முன்னாள் விஷ்வ இந்து பரிஷத் ஊழியரான இவர் 2015ஆம் ஆண்டு 1500 முஸ்லீம்களை இந்து மதத்துக்கு மாற்றும் “கர்வாபஸி” எனும் நிகழ்ச்சியை நடத்தியவர். “மகளைக் காப்பாற்றுங்கள்; மருமகளைக் கொண்டு வாருங்கள்” என பிற மதங்களை சேர்ந்த பெண்களை காதலித்து இந்து மதத்துக்கு கொண்டு வாருங்கள் எனக் கூறியவர்.

2. வாரணாசி/ உத்தரப்பிரதேசம்

வாரணாசியில் உள்ள மட்ரிதம் ஆசிரமத்துக்கு வெளியே கிறிஸ்துமஸ் இரவு அன்று சுமார் 30 பேர் ஜெய் ஸ்ரீ ராம், மதமாற்றத்தை நிறுத்து, தேவாலயங்கள் ஒழியட்டும், மிஷனரிகள் ஒழியட்டும் என கூச்சல் போட்டனர். கிறித்துவ மக்களிடையே அச்சத்தை உருவாக்கும் இத்தகைய கலகங்கள் 2020ஆம் ஆண்டு மத மாற்ற தடைச்சட்டத்துக்கு பின்னர் அதிகமாகிவிட்டன என தலித் உரிமைகள் செயற்பாட்டாளர் முனைவர் அனூப் ஷிரமிக் கூறினார். இந்த ஆசிரமத்தை நடத்தும் பாதிரியார் ஆனந்த் “இது தேவாலயமே அல்ல; இது ஆசிரமம். இங்கு அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் வந்து மன அமைதிக்காக பிரார்த்திக்கின்றனர். மதமாற்றம் என்பது அறவே இல்லை. எனினும் இத்தகைய கலகங்கள் நடக்கின்றன” எனக் கூறுகிறார். நாங்கள் காவல் துறையிடம் பாதுகாப்பு கேட்டும் எவரும் வரவில்லை எனவும், சங்பரிவார அமைப்பினர் கூச்சல் போட துவங்கிய உடனே காவல்துறைக்கு தெரிவித்தோம்; ஆனால் அவர்கள் கலைந்து சென்ற பின்னர்தான் காவலர்கள் வந்தனர் எனவும் ஆனந்த் கூறினார். “உத்தரப்பிரதேசத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பயத்துடன்தான் நாங்கள் பிரார்த்தனை நடத்துகிறோம். குறிப்பாக சிறிய தேவாலயங்கள்தான் கடும் தாக்குதல்களுக்கு இலக்காகின்றன” எனவும் அவர் கூறினார்.

3. ஹரியானா
ஹரியானாவில் பஜ்ரங்தள் அமைப்பின் ஹரீஷ் ராம்கலி என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாகவே டிசம்பர் 23 அன்று முகநூலில் எந்த ஒரு பள்ளிக்கூடமும் குழந்தைகளை சாண்ட்டா கிளாஸ் உடையை அணிய அனுமதிக்கக் கூடாது எனவும் தமது அமைப்பினர் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் குறிப்பாக கிறிஸ்துவ பள்ளிகளுக்கு சென்று கண்காணிப்போம் எனவும் பதிவு போட்டார். அதே போல பல பள்ளிகளுக்கு பஜ்ரங் தள் அமைப்பினர் சென்று, குழந்தைகள் சாண்ட்டா கிளாஸ் உடை அணிவதை தடுத்தனர்.

4. குருஷேத்ரா/ஹரியானா
குருஷேத்ராவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த கிறித்துவர்களின் மேடையை சில சங் பரிவார அமைப்பினர் திடீரென ஆக்கிரமித்தனர். அனுமார் கீர்த்தனைகளைப் பாட ஆரம்பித்தனர். வேறு வழியில்லாமல் கிறித்துவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.

5. அம்பாலா/ஹரியானா
அம்பாலாவில் 143 ஆண்டுகள் பழமையான புனித ரெடிமீர் தேவாலயம் அடித்து நொறுக்கப்பட்டது. தேவாலயத்தில் இருந்த இயேசுநாதர் சிலை உடைக்கப்பட்டது. இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

6. குருகிராம்/ஹரியானா
பட்டோடி எனும் இடத்தில் ஒரு பள்ளியில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த பொழுது சங்பரிவார அமைப்பினர் திடீரென புகுந்து மேடையை ஆக்கிரமித்தனர். ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிடுமாறு அங்கிருந்தவர்களை நிர்பந்தப்படுத்தினர். இந்து மதம் நீடூழி வாழ்க எனவும் அதர்மம் கூறும் ஏனைய மதங்கள் ஒழிக எனவும் கூச்சல் போட்டனர். இந்துக்கள் யாரும் வேறு மதத்துக்கு செல்லக்கூடாது எனவும் வேறு மதங்களை ஆதரிக்கக் கூடாது எனவும் மிரட்டினர். குருகிராமில்தான் முஸ்லீம்களின் தொழுகைகள் தடுக்கப்பட்டன என்பது நினைவுகூரத்தக்கது.

7. சில்சார்/அசாம்
அசாமின் சில்சார் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு தேவாலயத்தில் புகுந்த பஜ்ரங் தள் அமைப்பினர் அனைத்து இந்துக்களும் வெளியேற வேண்டும் எனக் கத்தினர். எந்த இந்துவும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடக் கூடாது எனவும் தேவாலயத்துக்கு வரக்கூடாது எனவும் மிரட்டினர். துளசி தினமான இன்று எவரும் அந்த தினத்தை கொண்டாடாமல் “கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி பொங்கட்டும்” என கூறுவது தங்களை புண்படுத்துகிறது எனவும் அவர்கள் கூறினர்.

பழிவாங்கும் சட்டம்

இந்த தாக்குதல்கள் குறித்து கருத்து கூறிய முன்னாள் அகில இந்திய கத்தோலிக்க அமைப்பு தலைவர் ஜான் தயாள் “வாடிகனில் போப் ஆண்டவருடன் பிரதமர் மோடி இருக்கும் படம் வெளியிடப்படுகிறது. பிரதமர் மோடி இந்தியா திரும்பிய அதே நாளில் கர்நாடகாவில் மதமாற்ற தடைச் சட்டத்துக்கான கிளர்ச்சிகள் நடக்கின்றன. இப்பொழுது அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 10 மாநிலங்களில் அத்தகைய சட்டங்கள் உள்ளன. எங்கேயும் நிர்ப்பந்தப்படுத்தி மதமாற்றம் நிகழ்வது இல்லை. கர்நாடகாவில் இயற்றப்பட்டுள்ள சட்டம் மிகமிக மோசமானது; பழிவாங்கும் தன்மை கொண்டது” என்றார். முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களும் கிறித்துவர்கள் மீதான தாக்குதலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை! இவை அங்கும் இங்கும் எதேச்சையாக நடப்பவை அல்ல; நன்கு திட்டமிட்டுதான் இவை நடத்தப்படுகின்றன எனவும் ஜான் தயாள் கூறினார். பல சமயங்களில் பாதிக்கப்பட்ட பாதிரியார்கள் மற்றும் ஏனைய கிறித்துவர்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகின்றன. உயர் காவல்துறை அதிகாரிகள் இவற்றை ஆதரிப்பதோ அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பதோ நடக்கும் பொழுது சாதாரண காவலர்கள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் ஜான் தயாள் கேள்வி எழுப்புகிறார்.

படிக்க:

இன அழிப்புக்கு வெளிப்படையாகவே ஓர் அழைப்பு

பாஜக மாநிலங்களில்தான்…

இந்த தாக்குதல்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்தான் நடக்கின்றன. சிறுபான்மை மக்களை அனைத்து விதத்திலும் முடக்குவது என்பது ஆர்எஸ்எஸ்-சின் வழிகாட்டுதல். அதனை பா.ஜ.க. மாநில அரசாங்கங்கள் சிரமேற்கொண்டு அமலாக்குகின்றன. பா.ஜ.க. முதல்வர்களும் அமைச்சர்களும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நஞ்சு கக்கும் பொழுது தம்மை எவரும் எதுவும் செய்யமாட்டார்கள் என்பதை சங் பரிவார குண்டர்கள் தெளிவாக உணர்கின்றனர். இது அவர்களுக்கு ஆணவத்தையும் தைரியத்தையும் தருகிறது. எதையும் செய்யத் துணிகின்றனர். ஹரித்துவார் கூட்டத்தில், முஸ்லீம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் எனக் கொக்கரித்த எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. கிறித்துவர்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதல் தொடுத்தவர்களும் கைது செய்யப்படுவார்களா என்பது மிகப்பெரிய கேள்விதான்! இவற்றைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ கூறவில்லை. சங் பரிவாரத்தினர் தக்குதல்கள் நடத்தும் அதே சமயத்தில் மத ஒற்றுமை நிகழ்வுகளும் நடக்கவே செய்தன. விவேகானந்தர் நிறுவிய இராமகிருஷ்ணா மடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகைகள் வழக்கம் போல கொண்டாடப்பட்டன. தமிழகத்தில் பல கோவில்களில் கிறிஸ்துமஸ் கோலங்கள் போடப்பட்டன.

உண்மையான இந்தியா

கொல்கத்தாவில் ஒரு கேக் கடை முன்பு நின்ற நீண்ட மக்கள் வரிசை சமூக ஊடகங்களில் வைரலானது. காரணம் அந்த கடை யூதர்களுக்கு சொந்தமானது. அங்கு கிறிஸ்துமஸ் கேக் செய்வது இஸ்லாமியர்கள். வரிசையில் நிற்கும் மக்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். இந்த பன்முகத்தன்மையை சீர்குலைக்க சங் பரிவாரத்தினர் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளனர். அதற்கு எதிர்வினையும் உள்ளது. எனினும் இந்த எதிர்வினை மேலும் வலுப்பெற வேண்டும் குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்!

தி வயர் மின் இதழ் அளித்த விபரங்களுடன்

செய்தித் தொகுப்பு: அ.அன்வர் உசேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here