
வெகுஜன மக்களின் அதிகாரத்தைப் பற்றி பேசுபவர்கள் கட்சிக்குள் ஜனநாயகத்தை வழங்குவதில்லை என்பது மீண்டும், மீண்டும் தமிழக வரலாற்றில் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
கட்சிக்குள் தனிநபர் அதிகாரத்தையோ அல்லது ஒரு சிறு கும்பலின் அதிகாரத்தையோ நிலைநாட்டுவது இவர்களின் ‘முதிர்ந்த ஜனநாயகத்திற்கு’ அடையாளமாக உள்ளது.
தலைமை பொறுப்பிற்கு கீழிருந்து தேர்வு செய்வதற்கு பதில் அமைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் என்று நியமன பொறுப்புகளை போடும்போதே இப்படிப்பட்ட ஜனநாயக மறுப்பு தொடங்கி விடுகிறது.
தன்னை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மீது முத்திரை குத்தி ஓரங்கட்டுவது, படிப்படியாக ஒழித்துக் கட்டுவது என்ற ‘இழி தகைமை கொண்ட ஜனநாயகத்தை’ தமிழகம் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக திராவிட இயக்கங்களில் அரசியலின் வழியாக கண்டுள்ள உண்மையாகும்.
இந்த வரிசையில் தமிழ் தேசியத்தின் பெயரால் தமிழகத்தில் தோன்றிய புதிய வரவான நாம் தமிழர் கட்சி சமீப காலத்தில் இது போன்ற பல விலகல்களை சந்தித்து வருகிறது.
அந்த தொடர்ச்சியான நிகழ்ச்சிப் போக்கில் அதன் மகளிர் பாசறை தலைவியாக செயல்பட்ட காளியம்மாள் விலகியுள்ளார் என்பது மட்டுமின்றி விலகலுக்கான கீழ் வரும் காரணத்தையும் முன் வைத்துள்ளார்.
“நாம் தமிழர் கட்சியில் பயணித்த ஒவ்வொரு கணமும், உண்மையும், நேர்மையுமாய் இருந்திருக்கிறேன். உளப்பூர்வமாக என் குடும்பத்துக்கும் மேலாக கட்சியை நேசித்திருக்கிறேன். இந்த 6 ஆண்டுகால பயணம் எனக்கு அரசியல்ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளது. சமூக மாற்றத்துக்காக, ஒரு பெண்ணாக எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி இந்த களத்தில் நின்றிருக்கிறேன்.
எனக்கான நெருக்கடிகள் நிறைய வந்தபோதும் என்மீது ஆதரவாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையாலும், நான் அவர்கள் மீது கொண்ட அன்பாலும் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தேன். ஆனால் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை எண்ணி மனம் வருந்துகிறேன்.
அந்தவகையில் காலத்தின் சூழல், உயிராக எண்ணி வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்”. என்று நீள்கிறது அவரது விலகல் கடிதம்.
இது பற்றி தமிழ் பாசிச கும்பலின் தலைவனான சீமான் நாம் தமிழர் கட்சிக்கு இது களையுதிர்காலம் என்று வசனம் பேசியுள்ளார்.
மீனவர்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருந்த காளியம்மாளை மக்கள் அதிகாரம் துவங்கிய காலகட்டத்தில் சமூக மாற்றத்திற்கு உழைக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம்.
ஆனால் சீமான் பேசியது ‘தமிழ் தேசியம்’ என்று நம்பிக் கொண்டு அவரது பின்னால் காளியம்மாள் உட்பட பலரும் அணிவகுத்தனர். விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லி தமிழகத்தில் சீமான் விட்ட புருடாக்களையும், அலப்பறைகளையும் நம்பி மீனவர்கள் குறிப்பாக வெளிநாடுகளுக்கு பயணம் சென்று உழைத்து பொருள் ஈட்டிய மீனவர்கள் சிலரும் நம்பினர்.
ஆனால் குறுகிய காலத்திலேயே சீமானது சாயம் வெளுக்கவே மிகுந்த மனவேதனையுடன் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகினர். ஆனால் காளியம்மாள்கள் அதை புரிந்து கொண்டு வெளி வருவதற்கு நீண்ட காலம் ஆகியுள்ளது.
இவர்களைப் பற்றி சீமான் பிசிறு என்று பேசியதும் சமூக வலைதளங்களில் ஆடியோவாக பரவலாகி நாறிக் கொண்டிருந்தது.
படிக்க:
🔰 சீமானின் லும்பன் தம்பிகளின் பொறுக்கித்தனமும், பாசிச எதிர்ப்பில் ’நாம் தமிழர்’ ஒழிப்பின் அவசியமும்!
🔰 சீமான் முன் வைப்பது தமிழ் தேசியமா?
இது போலவே 2020 ஆண்டு எமது அமைப்புகளில் இருந்து சீமானை போன்ற சில அரைவேக்காடுகள் முன்வைத்த பித்தலாட்டங்களையும் கலைப்புவாதம் பற்றி எழுதப்பட்ட திரைக்கதை வசனங்களையும், எமது அமைப்பு மற்றும் தோழர்கள் கம்யூனிசத்தை கைவிட்டு விட்டார்கள் என்ற சவடாலான, அலப்பறை பேச்சுகளை கேட்டு காளியம்மாளை போலவே சிலரும் ‘இடதுசாரி’சீமானிடம் சிக்கிக்கொண்டனர். சமீபத்தில் அவர்களும் காளியம்மாளை போன்று ஒரு அறிக்கையை வெளியிட்டு அதைவிட பெட்டரான ஒரு இடத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்..
மார்க்சியமாகட்டும், தமிழ்த் தேசியமாகட்டும் பருண்மையான சூழலில் பருண்மையாக முடிவெடுக்கின்ற கண்ணோட்டத்தில் அரசியல் ரீதியிலான வேறுபாடுகளை புரிந்து கொள்ள முடியாத இவர்கள் பிரபலமான நபர்களின் பின்னால் திரள்வதும் அதன் பிறகு அவர்களையே தூற்றிவிட்டு வேறு ஒரு இடத்திற்கு சென்று ஒட்டிக் கொள்வதும் தொடர்ச்சியான நிகழ்ச்சிப் போக்காக மாறியுள்ளது.
சமூக மாற்றத்திற்காக உழைக்க முன்வருவது என்பது மிகவும் அரிதாக மாறியுள்ள சூழலில், தான் செயல்படும் இயக்கத்தின் அரசியலை தெளிவாக புரிந்துக் கொள்வதும் அதனை முன் வைக்கின்றவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் நடைமுறை பற்றிய அம்சங்களை பரிசீலித்து அந்த இயக்கத்தில் செயல்படுவது என்பது மட்டுமே இது போன்ற பிரச்சனைகளை தீர்க்கும்.
ஆனால் சமூக மாற்றத்திற்கு உழைக்க வேண்டும், அதே சமயத்தில் தன்னையும் அதனை பயன்படுத்திக் கொண்டு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற குட்டி முதலாளித்துவ, பிழைப்புவாத கண்ணோட்டத்தில் செயல்படுகின்ற சமூக செயல்பாட்டாளர்கள் இவ்வாறு அம்பலமாவது உறுதி..
உலகம் முழுவதும் வலதுசாரிகள் என்று சொல்லிக் கொள்ளப்படும் பாசிச சக்திகள் தலை விரித்தாடுகின்ற இந்த காலகட்டத்தில், ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் நிதி மூலதனம் கொடூரமாக சுரண்டுகின்ற இந்த காலகட்டத்தில் அதற்கு எதிராக பெரும்பான்மை மக்கள் ஒன்று திரண்டு போராடி விடக் கூடாது என்பதற்காகவே உருவாக்கப்படுகின்ற மேற்கண்ட போக்குகளை முறியடிப்பது மிக மிக அவசியமாகிறது.
இப்படிப்பட்ட போக்குகள் உருவாகின்ற போது முகஸ்துதி பார்க்காமல் கடுமையாக Congratulation போராடுவது ஒன்றுதான் மீண்டும் பல காளியம்மாள்கள் ஏமாறாமல் தடுப்பதற்கு உதவும்.
- தமிழ்ச்செல்வன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி