ரண்டு நூற்றாண்டுகள் பிரிட்டனிடம் அடிமைப்பட்டு கிடந்த எமது தேசம், 1947 இல் போலியான சுதந்திரம் ஒன்றைப் பெற்றது. அதுவரை தேசத்தை சுரண்டிக் கொழுத்து வந்த பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகள், சுரண்டும் வேலையை கைமாற்றி எமது தேசத்தின் தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களிடம் கொடுத்தார்கள்.

ஆனால் இந்தியா என்ற ஒரு நாடு உருவாகும் முன்பிருந்தே சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த நிலப்பரப்பு முழுவதும் பரந்து, விரிந்திரிந்த கோடிக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் அதிகாலை முதல் அந்தி சாயும் நேரம் வரை சுட்டெரிக்கும் சூரிய வெப்பம் எமது தோல்களை துளைத்து, எமது ரத்தத்தை வியர்வையாக வடிய வைத்தது.

காடுகளிலும், மலைகளிலும், சமவெளி பிரதேசங்களிலும் மின்சாரத்தை பெறுவதற்கும், சாலை போக்குவரத்தை பெறுவதற்கும், கொதிக்கும் வெப்பத்தின் நடுவில், முதுகுத் தண்டு விரிய பாரத்தை தோள்களில் சுமந்து படிப்படியாக நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக் கொடுத்தோம்.

சமவெளிப் பிரதேசங்களில், மலைகளில் சுரங்கங்களை தோண்டி அதில் கிடைக்கின்ற கனிம வளங்களை அகழ்ந்தெடுத்து கொடுத்தோம். அதனால் சுவாசப் பாதை கோளாறுகள் முதல் பல்வேறு உடல் பாதைகள், உயிரைக் குடிக்கும் நோய்கள் அனைத்தும் எம்மை தாக்கிய போதிலும் அற்ப கூலிக்காக சக்கையாக பிழிந்து எறியப்பட்டோம். அலைகளின் மேல் ஆபத்தான பயணம் செய்யும் மீன் பிடித் தொழில் மூலம் உங்கள் நாவுக்கு சுவையான மீன்களை பிடித்துக் கொடுத்தோம்.

நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது. போக்குவரத்து வசதிக்காக சாலைகள், ரயில் பாதைகள், குறுக்கு நெடுக்காக செல்வதற்கு கட்டப்பட்ட மேம்பாலங்கள், மலைகளுக்கு நடுவில் பாய்ந்து வரும் நீரை தேக்குவதற்கு உருவாக்கப்பட்ட அணைகள், அனைத்திலும் எமது உழைப்பு நாட்டின் செல்வங்களாய் பரிணமித்து நிற்கின்றது.

விவசாயிகள், தொழிலாளர்களாகிய எங்கள் குடும்பங்களில் இருந்து, எங்கள் உழைப்பின் மூலமாக கலை அறிவியல் கல்லூரி முதல் ஐடிஐ, ஐஐடி, சட்டம், மருத்துவம் வரை அனைத்திலும் படித்து ’அறிவாளிகள்’ என்ற பட்டத்தை பெற்றுக் கொண்டீர்கள். நாட்டு மக்களுக்கு போதனை செய்பவர்களாகிய உங்களில் பெரும்பான்மை அறிவுஜீவிகள் எங்களை ஒடுக்குகின்றவ்ர்களின், சுரண்டுபவர்களின் நலன்களுக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகவும், மருத்துவர்களாகவும், பேராசிரியர்களாகவும் வங்கி அதிகாரிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், தணிக்கை அதிகாரிகளாகவும், ஆடிட்டர்களாகவும், ஆசிரியர்களாகவும் வலம் வந்து கொண்டிருந்தீர்கள். அப்போது எங்களோடு இருந்த மிகச் சிறு பிரிவினரையும், ஊசலாட்டமாக இருந்து சிறு பிரிவினரையும் தவிர்த்து எங்களுக்கு எதிராக பெரும்பான்மையினரான நீங்கள் வேலை செய்வதை கண்டு, நாங்கள் உங்களை வெறுத்தோம். 

நீங்களும் உழைப்பாளிகளையும், அவ்ர்களுக்காக பேசும் கம்யூனிஸ்டுகளையும் கண்டால் எரிச்சல் அடைந்தீர்கள்; ஆத்திரம் அடைந்தீர்கள்; உங்கள் குறைகளை சுட்டிக் காட்டுவதை சகிக்காமல், உமது வெறுப்பை எம் மீது அடக்குமுறையாக மாற்றி ஒடுக்கி வந்தீர்கள். அப்போதும் உங்களின் உபதேசங்களை நாங்கள் ஏற்றுக் கொண்டு நாட்டின் ’தேவைக்காகவே’ பாடுபடுகிறோம் என்று பெருமிதத்துடன் உழைத்துக் கொடுத்தோம். இது புதிய தாராளவாதக் கொள்கை நமது நாட்டில் அமல்படுத்த துவங்கியதற்கு முன்பு இருந்த நிலைமை.

90 களில் புதிய தாராளவாதக் கொள்கை அமுல்படுத்த துவங்கியது முதல் பெரும்பான்மையினரான நீங்கள் உங்களுக்குள்ளேயே இரண்டு பிரிவாக பிரிந்து நின்றீர்கள். நாட்டை சூறையாட, கொள்ளையடிக்க, செல்வங்களை சுரண்டிக் கொண்டு போக, உழைப்பு சக்தியை மலிவான விலையில் பிழிந்து எடுக்க வெறி நாயாய் வேட்டையாடிய அந்நிய ஏகபோக ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு சேவை செய்ய ஒரு பிரிவினர் நாட்டிற்குள்ளும், நாட்டுக்கு வெளியிலும் பறந்து பறந்து சென்றீர்கள். மற்ற பிரிவினரோ இங்கேயே தனது ’சேவையை’ தொடர்ந்து வந்தீர்கள்.

அப்போதும் உங்களின் உபதேசங்களை நாங்கள் ஏற்றுக் கொண்டு நாட்டின் ’வளர்ச்சிக்காகவே’ பாடுபடுகிறோம் என்று பெருமிதத்துடன் உழைத்துக் கொடுத்தோம்.

அந்நிய ஏகபோகங்களுடன் இணைந்து படிப்படியாக எமது உழைப்பில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தீர்கள்; நாடு முழுவதும் பரவி விரைவில் கிடந்த வயல்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு குத்தகை மற்றும் ஒப்பந்த விவசாயத்திற்கு மாற்றி கொடுத்தீர்கள்; கனிம வளத்தையும், காட்டு வளத்தையும், கடல் வளத்தையும், கையடக்கமே உள்ள கார்ப்பரேட்டுகள் சுரண்டுவதற்கு கங்காணி வேலையை செய்தீர்கள்.

எங்கள் வ்ர்க்கத்தின் உழைப்பை சுரண்டி உங்கள் அறிவை வளர்த்துக் கொண்ட நீங்கள் எமக்கு எதிரான எம்மை ஒடுக்குகின்ற சக்திகளுக்கே, தொடர்ந்து சேவை செய்து வந்தீர்கள். அப்போதும் எங்களுக்கு எதிராக பெரும்பான்மையினரான நீங்கள் வேலை செய்வதை கண்டு, நாங்கள் உங்களை வெறுத்தோம்.

2014 ஆம் ஆண்டு பாசிச மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் அரசியல், பொருளாதார நிலைமைகள் மாறியுள்ளது. நேற்று வரை அவர்களுக்கு அதாவது நாட்டை ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்து வந்த பெரும்பான்மையினரான உங்களில் சிலர் ஊசலாட துவங்கியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றியும், பாசிச ஒடுக்கு முறையைப் பற்றியும் பேச துவங்கியுள்ளீர்கள்.

ஆனால் கனவான்களே! பாசிச மோடி ஆட்சியிலிருந்து, ஏற்கனவே உள்ள ’ஜனநாயகத்தை’ காப்பாற்ற போகிறோம் என்று நீங்கள் மூச்சுக்கு முன்னூறு தரம் பேசி வருவதும், இதுதான் இன்றைக்கு சாத்தியம், மற்றவை எல்லாம் முன் கூட்டியே பேசப்படும் அரை அறிவு நடவடிக்கைகள் என்று அலட்சியப்படுத்துகிறீர்கள்.

இப்போது எங்களோடு இருந்த மிகச் சிறு பிரிவினர், ஊசலாட்டமாக இருந்து சிறு பிரிவினருடன் இணைந்து கொள்ள எங்களுக்கு எதிராக வேலை செய்த பெரும்பான்மையினரான உங்களில் சிலர்  எங்களுடன் வருவதை ஏற்று  நாங்கள் உங்களை வரவேற்கிறோம். 

அன்றும் சரி இன்றும் சரி! நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களாகிய நாங்கள் எங்களை விடுவிப்பதற்கு சரியான கொள்கையை தீர்மானித்து களத்தில் நின்று சர்வபரி தியாகங்களையும் செய்து வரும் நக்சல்பாரி கம்யூனிஸ்டுகள் பின்னால் ஒன்று திரளாமல், உங்கள் உபதேசங்களை ஏற்று, நீங்கள் விரித்த வலையில் விழுந்து கொண்டே  எங்களை நாங்கள் ஏமாற்றிக் கொண்டே இருந்தோம். இருக்கிறோம்.

ஆனால் இன்று நாட்டின் சூழ்நிலை மாறிவிட்டதை உணர்ந்த நீங்கள், அந்த சூழ்நிலைக்கு பொருத்தமான இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதைப் பற்றி சிந்திக்காமல் இந்த அரசியலுக்குள்ளேயே மாற்று ஒன்றை முன்வைத்து இதுதான் சாத்தியம் என்று பேசுகிறீர்கள். இதை ஏற்காத எங்களை ’அறிவில்லாத மூடர்கள்’ என்றும் தூற்றுகிறீர்கள்.

பொதுக்கூட்ட மேடைகளிலும், கருத்தரங்குகளிலும், youtube சேனல்களிலும் வண்டி வண்டியாக எமக்கு உபதேசிக்கின்றீர்கள்; எல்லாம் சரிதான்! உங்கள் உபதேசங்களை சற்று நேரம் நிறுத்திவிட்டு, இந்த நாட்டின் பெரும்பான்மையினரான எங்களின் அடிப்படைத் தேவைகள் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இந்தியாவில் பல்வேறு ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பரந்து விரிந்த நிலப்பரப்புகளில் வேலை செய்கின்ற எங்களுக்கு ஒரு துண்டு துக்காணி நிலமும் இல்லை. ஆனால் ’உழுபவனுக்கே நில்ம்’ என்ற முழக்கம் உயிருடன் தான் இருக்கிறது.

நாடு முழுவதும் பிரம்மாண்டமான தொழிற்சாலைகளையும், பொதுத்துறை நிறுவனங்களையும், போக்குவரத்து வசதிகளையும், அணைகளையும் உருவாக்கிக் கொடுத்த எங்களுக்கு நிரந்தரமான வேலை வாய்ப்பு இல்லை. ஆனால் ’அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை’ என்ற முழக்கம் உயிருடன் தான் இருக்கிறது.

எங்கள் வர்க்கத்திலிருந்து உங்களைப் போன்றவர்கள் படித்து எங்களை ஒடுக்குபவர்களுக்கு சேவை செய்தாலும், எங்கள் வர்க்கத்தின் பெரும்பான்மை மக்களின் வயிற்றைக் கழுவுவதற்கும், குடும்பத்தின் பாரத்தை சுமப்பதற்கும் பொருத்தமான வேலை தேடி வேலையற்றவர்களாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கின்றார்கள் எமது இளைஞர்கள்.

படித்ததற்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை என்பதால் சுவிக்கி, சொமோடோக்களில், அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களில், ஓலா, ஊபேர்களில் தினக்கூலி தொழிலாளர்களாக நாளைக்கு 16 மணி நேரம் உழைக்கின்றார்கள் எமது குழந்தைகள். ’ஆலைக்கு ஒரு ச்ங்கம், அனைத்து அதிகாரமும் விவசாயிகள்- தொழிலாளர் கமிட்டிகே’ என்ற முழக்கம் உயிருடன் தான் இருக்கிறது.

நீங்களும் எங்கள் குழந்தைகள் தான்; சுதந்திரம் வாங்கியது முதல் நேற்று வரை எமது தேசத்தை ஆண்டு வந்த கட்சிகளுக்கு சேவை செய்து வந்த பெரும்பான்மை அறிவுஜீவிகளாகிய நீங்கள், இப்போது உங்களையும் உள்ளிட்டு எங்களை கொடூரமாக ஒடுக்குகின்ற கார்ப்பரேட் காவி பாசிஸ்டுகளுக்கு எதிராக எங்களோடு இணைந்து செயல்பட வாருங்கள்.

அரசியல், பொருளாதாரம், பண்பாடு குறித்த அறிவுஜீவிகளாகிய உங்களது கண்ணோட்டம் வேறு; நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய எங்களது வர்க்க கண்ணோட்டம் வேறு; உங்களது அறிவு திறனை பாட்டாளி வர்க்கத்தின் கண்ணோட்டத்தில் சிந்திப்பதற்கு தயாராகுங்கள்; பாசிச பாஜகவை தேர்தலில் தோற்கடிப்பது மட்டுமல்ல! கார்ப்பரேட் காவி பாசிசத்தை நிரந்தரமாக வீழ்த்தும் மகத்தான போரில் ஒன்றிணைந்து போராடுவோம்.

பாசிசத்தை வீழ்த்திய பிறகு தற்காலிக இடைக்கால அரசாங்கமான ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவோம். அதன் மூலம் காவி பாசிஸ்டுகளும், கார்ப்பரேட் பாசிஸ்டுகளும் மீண்டும் தலை தூக்காத வண்ணம் புதிய அரசியல் சாசனம் ஒன்றை வரைவோம். அதற்கான அரசியல் நிர்ணய சபையை கட்டியமைக்க வேண்டும் என்பதை முன் வைத்து செயல்பட்டு வரும் எம்முடன் இணைந்து கொண்டு போராட முன் வாருங்கள் என்று அழைக்கின்றோம். 

பாசிசம் குறித்த உங்கள் உபதேசங்களை நிறுத்துங்கள்; எங்களுக்கு உபதேசிப்பதற்கு முன்பு நாட்டின் பெரும்பான்மை மக்களை வாழவைக்கும் பாட்டாளி வர்க்க சித்தாந்தக் கண்ணோட்டத்தில் போதனை பெறுங்கள், பெரும்பான்மை மக்களுக்கு தேவை அரசியல் மாற்றம் மட்டுமல்ல, நிலம், வேலை, அரசியல் அதிகாரம்  என்ற பொருள்மிக்க வாழ்க்கை என்பதை பேசத் துவங்குங்கள் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

  • மணிமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here