விடுதலை படத்தின் மூலக்கதை துணைவன் என்கிறார் வெற்றிமாறன். துணைவனின் மூலக்கதை ‘நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி’ எனும் நூல் என்றார் நண்பர் அசோக்.

‘நூல் இப்போது விற்பனையில் இருக்கிறதா? ‘ கேட்டேன். ‘டிஸ்கவரியில் கிடைக்கிறது!’ என்றார்.

சகோதரர் லார்க் பாஸ்கரனிடம் வாங்கி அனுப்புமாறு கேட்டேன். இப்போது அந்நூல் ‘நான் நிகழ்த்திய மோதல் கொலை’ எனும் தலைப்பில் களம் வெளியீடாக வந்துள்ளது.

ராமச்சந்திரன் நாயர் எழுபதுகளில் கேரளாவில் போலீஸ்காரராக பணியாற்றியவர். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தான் நிகழ்த்திய மோதல் கொலை குறித்து,
அவர் அளித்த வாக்குமூலம்தான் இந்நூல்.

ராமச்சந்திரன் நாயர் சி.ஆர்.பியில் காவலராக பணியாற்றிய காலம்.
கேரள நக்சல் இயக்கத்தின் வீரம்மிக்க இளம் தோழர் வர்கீஸ். நக்சல் இயக்கத்தின் தோழமை சக்தி ஒருவரால் அவர் தங்கியிருக்கும் இடம் போலீசுக்கு காட்டிக் கொடுக்கப்படுகிறது.

நாயர் டீம் வர்கீஸை கைது செய்து அழைத்துச் செல்கிறது. ‘என்னை எப்படி இருந்தாலும் உங்களில் ஒருவர்தான் சுடப்போகிறீர்கள். அதற்குமுன் சில முழக்கங்களை இட நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்!’ என்கிறார்.

நாயரும் வர்கீஸின் வயதொத்த இளைஞர். ‘உன்னை நாங்கள் ஏன் கொல்லப் போகிறோம்? நீதி மன்றத்தில் ஒப்படைப்போம். அங்கு என்ன தண்டனை தருகிறார்களோ, அதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்!’ என்கிறார் அப்பாவி காவலாரன நாயர்.

உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு வருகிறார்கள். வர்கீஸ் கண்ணைக் கட்டி ஒரு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

உணவு வருகிறது. வர்கீஸை விட்டுவிட்டு சாப்பிடப் பிடிக்கவில்லை நாயருக்கு. கண் கட்டப்பட்ட நிலையில்,( உயர் அதிகாரிகளுக்குத் தெரியாமல்) வர்கீஸுக்கு உணவை ஊட்டிவிடுகிறார் நாயர். வர்கீசின் உதட்டில் பீடியைப் பொறுத்தி புகைக்கவும் உதவுகிறார்.

உணவு முடிந்த பிறகு உயர் அதிகாரி நாயர் டீமிடம் , ‘ உங்களில் யார் வர்கீஸை சுடத் தயாராக இருக்கிறீர்கள்?’ கேட்கிறார். அனைவரும் கையுயர்த்துகிறார்கள். ராமச்சந்திரன் நாயர் தவிர்த்து. ‘நீ சுடமாட்டாயா? ஏன்? ‘ உயர் அதிகாரி நாயரிடம் கேட்கிறார். ‘சார், கைது செய்யும்போது அவன் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நமக்கு ஒத்துழைத்தான். அவனை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதுதானே முறை!’ என்கிறார்.

‘நக்சல்லோடு நடந்த மோதலில், ஒரு போலீஸ்காரரும் மரணமடைந்தார்! செய்தி வரும் பரவாயில்லையா?’ உயர் அதிகாரி சொல்ல மௌனமாகிறார் நாயர்.

அவர் கையில் துப்பாக்கி திணிக்கப்படுகிறது.

‘டுமீர்’ ரவைச் சத்தம்
காட்டில் எதிரொலிக்கிறது.

‘மாவோ ஐக்கியம் சிந்தாபாத்;
புரட்சி வெல்லட்டும்.’
முழங்கி வீழ்கிறார் வர்கீஸ்.

யாருக்கு உணவூட்டினோமோ, யார் அடித்தட்டு மக்களுக்கு வீரத்தோடு போராடினாரோ, அவரைக் கொன்றுவிட்டுமே!’ என்கிற குற்ற உணர்வு வாழ்நாளெலாம் ராமச்சந்திரன் ஆளுமையைச் சிதைக்கிறது.

தனது இளகிய குணத்தின் காரணமாக பணிக்காலம் முழுவதும் சஸ்பெண்ட், தண்டனை, பதவிக்குறைப்பு, போன்ற இன்னல்களை அனுபவித்தார் நாயர்.

குற்ற உணர்வு தந்த மன அழுத்தம். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்ளமுடியவில்லை. பிள்ளைகளைக் கொஞ்ச முடியவில்லை.
உறவுகளிடம் மூர்கமாக நடந்து கொண்டார். வளர்ந்த பிள்ளைகள் இவரிடம் அன்பு காட்டத் தயாராக இல்லை.

இதையும் படியுங்கள்: அயோத்தி – திரைப்பார்வை

மனக்குழப்பம், நோய், மூப்பு, இருந்தாலும் வர்கீஸ் எனும் நக்சல் இயக்க வீரத் தோழரை கேரளா போலீஸ் அநீதியான முறையில் சுட்டுக் கொன்றதை வாக்குமூலமாக நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் அளித்தார் ராமச்சந்திரன் நாயர்.

இந்த வாக்குமூலத்தின் தாக்கத்தில் எழுதப்பட்ட கதைதான் துணைவன். ஆனால் அக்கதையில் நக்சல் இயக்கத்தை கொச்சைப்படுத்தி எழுதியிருப்பார் ஜெயமோகன். ஆர்எஸ்எஸ்காரர். நக்சல்களென்றால் அவருக்கு அலர்ஜி.

நக்சல்களுக்கு எதிராக இப்படி வேறு சிலகதைகளையும் ஜெ.மோ எழுதியிருக்கிறார். அவரது ‘கைதி’ கதை ‘ரத்தசாட்சி’என்ற பெயரில் படமாக வந்திருக்கிறது. இதுவும் நக்சல்களுக்கு எதிரான கதைதான்.

அரசபயங்கரவாதம் நக்சல்களை சுட்டு வீழ்த்தியதை ஆதரித்தவர் மட்டுமல்லர், ரசித்தவர் ஜெ.மோ.

ராஜன் எனும் புரட்சிகர இளைஞரை கேரள போலீஸ் சுட்டுக்கொன்றது. ராஜன் கேரள மக்களின் மனம் வென்ற இளைஞன். அந்தக் கொலையையும் ஆதரித்து எழுதியவரே ஜெ.மொ.

நக்சல்பாரிகள்மீது வன்மும் குரோத மனநிலையும் கொண்டவர் ஜெ.மோ.

இவரது கதையால் எழுந்த மனவெழுச்சியால்தான், விடுதலை எடுத்தாராம் வெ.மாறன்.

விடுதலை படம் குறித்த முழுமையான உரையாடலை நிகழ்த்த, தோழர்கள் ‘நான் நிகழ்த்திய மோதல் கொலைகள்’ நூலையும் அவசியம் படிக்க வேண்டும்

  • கரிகாலன்

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here