ஆந்திராவில் 10 மணி நேர வேலை தொழிலாளர் வர்க்கத்திற்கு விடப்பட்டுள்ள சவால்!

ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை என்ற என்ற அடிப்படை உரிமையை மாற்றி 10 மணி நேர வேலை செய்ய வேண்டும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது..

ஆந்திராவில் 10 மணி நேர வேலை தொழிலாளர் வர்க்கத்திற்கு விடப்பட்டுள்ள சவால்!

ந்திய ஒன்றிய அரசாங்கத்தை கைப்பற்றிய பாசிச பாஜக தொழிலாளர்களின் மீது கொடூரமான தாக்குதல்களை படிப்படியாக நடத்த துவங்கியது என்பதன் ஒரு அடையாளம் தான் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்ட தொகுப்பாக மாற்றிய நடவடிக்கை ஆகும்.

சம்பளம், பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிட வேலைச் சூழல், சமூக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாடு உள்ளிட்டவைகளை நேரடியாக பாதிக்கக் கூடியதாக இந்த சட்ட திருத்தம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் கடந்த கால் தசாப்த காலமாக இந்தியாவில் பல்வேறு அரசியல், பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களை உருவாக்கியது மட்டுமின்றி தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கையிலும் பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.

இந்த மறுகாலனியாக்கத்தின் தீவிரத் தன்மை தான் கார்ப்பரேட் காவி பாசிசமாக இந்திய உழைக்கும் மக்களின் மீது பயங்கரவாத தாக்குதல்களை தொடுத்து வருகிறது.

இந்தியாவின் பொருளாதரத்தை 5 ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற்றப் போகிறோம் என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் பாசிச மோடி முதல் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற்றப் போகிறோம் என்று பெருமைபீற்றிக் கொள்ளும் திமுகவின் ஸ்டாலின் வரை கார்ப்பரேட் பொருளாதாரக் கொள்கையை கடைபிடிக்காமல் ஒரு சதவீதம் கூட நாட்டையும் மாநிலங்களையும் வளர்த்துக் கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

இதன் ஒரு பகுதியாக மாநிலங்களில் உள்ள அரசாங்கங்களை வலுக்கட்டாயப்படுத்தி கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான தொழிற்கொள்கைகளை உருவாக்கவும், தொழிலாளர்களின் நலன் என்ற பெயரில் சுரண்டலை தடுக்கின்ற முயற்சிகள், சட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பதற்கு தடையாக உள்ள சட்டங்கள் அனைத்தையும் திருத்துவதற்கு பாசிச மோடி கும்பல் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

தமிழகத்தின் அண்டை மாநிலமாக உள்ள ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மற்றும் பாஜக கூட்டணி ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தை வென்றது. சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்தது முதல் ஆந்திராவில் விவசாயிகளின் வாழ்வுரிமை பறிக்கின்ற பல்வேறு நடவடிக்கைகள் முதல் தொழிலாளர்களின் கழுத்தை நெரிக்கின்ற சட்டத் திருத்தங்கள் வரை ஒவ்வொன்றாக அமல்படுத்தி வருகின்றார்.

இதன் மூலம் பாசிச மோடி கும்பலின் மனம் கவர்ந்த எடுபிடியாகவும், சொந்த முறையில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமை சேவகம் செய்கின்ற விசுவாசியாகவும் மாறியுள்ளார் என்பது தொடர்ந்து அம்பலமாகி வருகிறது.

கார்ப்பரேட் முதலாளிகளின் சேவையில் முன்னிலையில் உள்ள ஆந்திர மாநில சந்திரபாபு நாயுடுவின் அரசாங்கம் ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை என்ற அடிப்படை உரிமையை மாற்றி 10 மணி நேர வேலை செய்ய வேண்டும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது..

ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, கார்ப்பரேட் லாப வெறிக்கு ஏற்ப வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காகவும், அன்னிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவும் அதிகபட்ச வேலை நேரத்தை ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கு ஏற்ப தொழிலாளர் சட்டங்களை திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே. பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சரவை எடுத்த முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருவாளர் கே. பார்த்தசாரதி, “ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒன்பது மணிநேர வேலையை அனுமதிக்கும் பிரிவு 54 இப்போது ஒரு நாளைக்கு 10 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரிவு 55 இன் கீழ், ஐந்து மணிநேர வேலைக்கு ஒரு மணி நேரம் ஓய்வு என்று உள்ளது. அது இப்போது 6 மணிநேரமாக மாற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, overtime காலாண்டுக்கு 75 மணிநேரம் வரை என்று இருந்தது. இது இப்போது 144 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த திருத்தங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் அதிக அளவில் நமது மாநிலத்திற்கு வருவார்கள். இந்த தொழிலாளர் விதிகள் தொழிலாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் சாதகமாக இருக்கும். உலகமயமாக்கல் ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கிறது. உலகளாவிய விதிகளை செயல்படுத்த இந்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.” என்று நாக்கில் எச்சில் ஒழுக பேசியுள்ளார்.

நாட்டின் வளர்ச்சி அல்லது மாநிலத்தின் வளர்ச்சி என்பது அந்த மாநிலத்தில் கார்ப்பரேட் முதலாளிகள் எத்தனை இலட்சம் கோடி முதலீடு செய்கிறார்கள் என்பதில் இல்லை அந்த மாநிலத்தின் பெரும்பான்மை மக்களான விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்க்கையில் என்ன முன்னேற்றம் உருவாகியுள்ளது என்பதும், மக்களின் வாங்கும் சக்தி எந்த நிலையில் உள்ளது.

என்பதும், அவர்களின் கல்வி, மருத்துவம், சுகாதாரம், உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் உள்ளிட்ட பொருளாயத வாழ்க்கை எந்த அளவிற்கு முன்னேறியுள்ளது என்பதை வைத்துக் கொண்டுதான் வளர்ச்சியை அவதானிக்க முடியும்.

ஆனால் இந்தியாவில் மறு காலனியாக்கத்தை ஆதரிக்கின்ற தேசியக் கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் காங்கிரஸ், பாஜக முதல் மாநில கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் திமுக, தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதையே நாட்டின் வளர்ச்சி என்று சாதிக்கின்றனர்.

படிக்க:

🔰 90 மணி நேரம் உழையுங்கள்! தொழிலாளிகளைச் சுரண்டிக்கொழுக்கும் மற்றுமொரு கார்ப்பரேட் கொடுங்கோலனின் குரல்!

🔰 8 மணிநேர வேலையை ஒழித்து கட்ட ஒன்றுகூடும் கார்ப்பரேட்டு முதலாளிகள்!

நாட்டில் சாலை போக்குவரத்து முதல் விமான போக்குவரத்து வரை அதிகரிப்பது, உள்கட்டமைப்பு வசதிகள் பெருகுவது, நகரமயமாவது ஆகியவை அனைத்தையும் மக்களின் நலனில் இருந்து திட்டமிடுவதற்கு பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கும், அவர்களின் நிறுவனங்களில் பணி புரிவதற்கு விரைவாக சென்று சேர்வதற்கும், அவர்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்கள் விரைவாக சந்தைப்படுத்துவதற்கு கொண்டு சேர்ப்பதற்கு பொருத்தமான கட்டமைப்பு வசதிகளாகவே உருவாக்கப்படுகிறது.

தமிழகத்தில் இதேபோல வேலை நேரத்தை திமுக அரசு 10 மணி நேரம் என்று அறிவித்தவுடன் தமிழகத்தில் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள், தொழிற்சங்கங்கள் அதனை எதிர்த்து கடுமையாக போராடினர். ஆனால் திமுகவின் வர்க்கத் தன்மையை புரிந்து கொள்ளாத அறிவு ஜீவிகளோ இதுவும் நாட்டின் வளர்ச்சியில் ஒரு அங்கம் தான் என்று சதிராடினர்.

இறுதியில் மக்கள் போராட்டம் வெற்றியடைந்து திமுக அரசாங்கம் பின்வாங்கியது. ஆனால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தனது நடவடிக்கைகளில் பின்வாங்கவில்லை என்பதும், அங்குள்ள இடதுசாரி அமைப்புகள் குறிப்பாக சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) சிபிஐ (எம்எல்) நியூ டெமாக்ரசி போன்ற அமைப்புகள் தொடர்ச்சியாக சந்திரபாபு நாயுடுவின் தொழிலாளர் விரோதக் கொள்கையை எதிர்த்து போராடி வருகிறார்கள். அவற்றின் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராடுகின்றன.

தமிழகத்தில் நடக்கின்ற மாற்றங்களையும் அரசியல் நிலைமைகளை மட்டும் புரிந்து கொள்வது மட்டுமே பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் மேலாண்மையை நிலை நிறுத்துவதற்கு உதவாது. இந்திய ஒன்றியத்தின் கீழ் உள்ள பல்வேறு மாநிலங்களில் நடக்கின்ற அரசியல், பொருளாதார, பண்பாட்டு மாற்றங்கள்; விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற நடவடிக்கைகள் ஆகியவை அனைத்தையும் மார்க்சிய-லெனினிய சித்தாந்த கண்ணோட்டத்தில் புரிந்துக் கொண்டு எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டும்.

நாட்டின் பொது எதிரியாக மாறியுள்ள கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்து ஊசலாடுகின்ற, சமரச சக்திகளை அதாவது அவற்றின் தலைமையை அம்பலப்படுத்தி பாட்டாளி வர்க்கத்தின் கீழ் பெரும்திரளான மக்களை திரட்டுவோம். பாசிசத்தை வீழ்த்துகின்ற மகத்தான போரில் முன்னேறுவோம்.

பார்த்தசாரதி.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here