மதுரை காமரசர் பல்கலைக் கழகப் பாதுகாப்பு கூட்டமைப்பு
Save MKU Coalition
அறிக்கை
17-06-25
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி நெருக்கடி ஏற்பட்டு, அதன் விளைவாக 130 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டதும் நிகழ்ந்தது. அப்போதே கல்வியாளர்கள், கல்வி சார் இயக்கங்கள் நிதி உதவியை பல்கலைக் கழகத்திற்கு வழங்க அரசிடம் கோரிக்கைகள் வைத்தன. ஆனால் பிரச்சினை நீண்டு தற்போது ஓய்வு பெற்றவர்களுக்கும் தற்போது பணி புரிபவர்களுக்கும் ஊதியம் வழங்குவதையே நிறுத்தி வைக்கும் அளவிற்கு சென்றுவிட்டது.
டிசம்பர் 24, ஜனவரி 25, பிப்ரவரி 25க்கான மாத ஓய்வூதியங்கள் வழங்கப்படாமல் மிகவும் தாமதமாகத்தான் வழங்கப்பட்ட்து. இப்போது மீண்டும் மே மாத ஊதியம் வழங்கப்படவில்லை.
இப்பொழுதுள்ள மொத்தம் ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களில் குடும்ப ஓய்வூதியர்கள் 438 பேர். ஓய்வூதியத்தை நம்பியே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர். இதில் கடைநிலை ஓய்வூதியர்களின் நிலை மிகவும் மோசம். தற்போது பணியில் உள்ளவர்கள் பேராசிரியர்கள், ஊழியர்கள் உட்பட பல நூறு பேர் ஊதியம் கிட்டாமல் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.
அரசுக்குப் பலமுறை வேண்டுகோள் விடப்பட்டும் இப்பிரச்சினையை தீர்ப்பதில் அது அக்கறை காட்டவில்லை.
தணிக்கை துறைத் தடைகளை (Audit Objections) அரசு காரணமாகக் காட்டி நிதி ஊதியத்திற்கான நிதியை வழங்க மறுத்து வருகின்றது. தணிக்கைப் பிரச்சினைகளை சரி செய்திருக்க வேண்டிய பொறுப்பு நிதி அலுவலர் (Finance Officer) மற்றும் தணிக்கைத்துறை அதிகாரி (Deputy Director)யைச் சார்ந்தது. பல்கலைக்கழகத்தை நெறிப்படுத்திச் செல்ல அரசுச் செயலர்கள் ஆட்சிக்குழுவில் இருந்திருக்கிறார்கள். இருக்கின்றர்கள். பல்கலைக்கழகத்தின் நிதி மேலாண்மைக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிச் சரி செய்ய வேண்டியது அரசின் கடமை. தவறு செய்தவர்களைத் தண்டிப்பதை விட்டு விட்டு ஓய்வூதியர்களையும் , பணி புரிபவர்களையும் பலிகடாவாக்குவது அறமல்ல.
அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் பல முறை முறையீடு செய்தும் பாரா முகமாக அரசு இருப்பதை மதுரை காமராசர் பல்கலைக் கழக பாதுகாப்புக்குழு கண்டிக்கின்றது. வருடத்திற்கு சுமார் 100 கோடி ருபாயைக் கூட அரசு பல்கலைக் கழங்களுக்கு ஊதியத்திற்காக வழங்கமுடியவில்லை என்றால் அது மிகவும் அவலமானது.
பல்கலைக் கழகங்களே தங்கள் நிதி ஆதாரத்தை உண்டாக்க வேண்டும் என்றால் அதில் அரசின் பங்கு என்ன?
படிக்க:
🔰 பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய வரைவு விதிகளைத் திரும்ப பெறு! புமாஇமு
- பல்கலைக் கழகங்கள் நிதியை உருவாக்கவேண்டுமெனில் அவைகளும் சுயநிதி நிறுவனங்கள் போல மாணவர்களிடம் வசூல் வேட்டையை நடத்த வேண்டி வரும்.
- உயர்கல்வியில் தமிழகம் முன்னிற்கின்றது என்று கூறிவரும் அரசு உடனடியாக மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் ஊதியப் பிரச்சினையை தீர்க்க நிதி வழங்க வேண்டுகின்றோம். நிலைமை இப்படியே நீடித்தால் அடிப்படை வசதிகளுக்கன செலவுகள் கூட செய்ய இயலாத நிலை பல்கலைக் கழகத்திற்கு உண்டாகும். தனியார் நிதி உதவியை நாடும் ஆபத்தும் உண்டாகி வருகின்றது.
- ஒவ்வொரு வருடமும் ஊதியத்திற்காகா குறைந்த பட்சம் 100 கோடி ரூபாயை அரசு மான்யமாக வழங்க வேண்டுகின்றோம். அதை நிர்வாகப் பிரச்சினைகளை காரணம் காட்டி நிறுத்துவது கூடாது.
- கருவூலங்கள், சார்புநிலைக் கருவூலங்களில் அரசு மற்றும் அரசுநிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள், அலுவலர்கள் ஓய்வூதியம் பெறுவது போன்று பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு வழிவகை செய்ய கோருகின்றோம்.
- பல்கலைக் கழக வளங்களை, சொத்துக்களை தனியார் பயன் பாட்டிற்கு வாடகைக்கு விடும் யோசனைகளையும் கைவிடக் கோருகின்றோம்.
அரசு உடனடியாக இதில் தீர்வு காணவில்லை எனில் பல்கலைக் கழகத்தைப் பாதுகாக்க மக்கள் இயக்கங்கள் இணைந்து நாங்கள் பல் வகை கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை உருவாகும் என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இவண்,
பேரா.அ.சிநிவாசன் , தலைவர்
பேரா. இரா.முரளி – பொதுச் செயலர்