
“சாத்தான் வேதம் ஓதுகிறது” என்ற சொற்றொடரை நினைவுப்படுத்தும் விதமாக பாசிச பாஜக இப்பொழுது ஒரு வேலையில் ஈடுபட்டு இருக்கிறது.
இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று அறிவிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்ட அவசரநிலையை நாட்டு மக்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக ஜூன் 25 அன்று “அரசியல் அமைப்பு கொலை நாள்” என்ற பெயரில் இந்தியா முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
“அவசரநிலை காலத்தில் பொது மக்களின் சுதந்திரம் தடுக்கப்பட்டதுடன் சட்டப் பூர்வ பாதுகாப்பு துடைத்தெறியப்பட்டது. அதுவரை இல்லாத வகையில் அதிகாரங்கள் அனைத்தும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டன. (பேச்சுரிமை எழுத்துரிமை சங்கம் சேரும் உரிமை போன்ற) மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. கடுமையான தணிக்கை முறையின் மூலமாக ஊடகங்கள் மௌனமாக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான அரசியல் தலைவர்களும் பத்திரிக்கையாளர்களும் பொதுமக்களும் சிறைகளில் அடைக்கப்பட்டனர்” என்று அவசரநிலை காலத்துக் கொடுமைகளை அந்த கடிதம் விவரிக்கிறது.
இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொடுமைகளைவிட பல மடங்கு பிஜேபியின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் தற்போது நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன என்பதை நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் நன்கு அறிவர். இதனால் விழிப்புணர்வு பெற்றுள்ள இந்திய மக்கள் தங்கள் மனங்களில் ஆர் எஸ் எஸ் – பி ஜே பி பாசிஸ்டுகள் மீது வெறுப்புற்று உள்ளனர்.
பாசிச பிஜேபி ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு எதிரான இந்த வெறுப்பானது, விழிப்புணர்வு குறைவாக உள்ள பெரும்பான்மை இந்திய மக்களிடமும் பரவி விடக்கூடாது என்பதில் பிஜேபி கண்ணும் கருத்துமாக இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி தான் ஜனநாயகத்திற்கு எதிரான கட்சி என்றும் பிஜேபி ஜனநாயகத்திற்கு ஆதரவான கட்சி என்றும் மக்களிடையே காட்டிக் கொள்வதற்காகவும் பாஜகவின் பாசிச ஆட்சியில் ஜனநாயகம் சல்லி சல்லியாக நொறுக்கப்பட்டு வருவதை அப்பாவி மக்களின் கண்களில் இருந்து மறைப்பதற்காகவும் இப்பொழுது இப்படி ஒரு நாடகத்தை துவக்கியுள்ளது.
அவசரநிலை காலத்தின் 50ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி (ஜூன் 25, 2025 முதல் ஜூன் 25 2026 வரை) ஒரு வருடத்திற்கு நாடு முழுவதும் என்னென்ன மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பதையும் ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சகம் தனது கடிதத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளது.
ஜூன் 25 அன்று ஜனநாயகத்தின் ஆன்மாவை குறிக்கும் வகையில் சுடர் பிடித்துக் கொண்டு செல்லும் ஊர்வலம் நடத்த வேண்டும் என்றும் டெல்லியில் ஜூன் 25ல் தொடங்கும் இந்த ஊர்வலம் மார்ச் 21, 2026 அன்று புது தில்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் (Kartavya Path) முடிவடையும் என்றும் இந்த விளக்கு பிடிக்கும் ஊர்வலத்தின் நிறைவு தினத்தில் பிரதமர் மோடியே கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க:
🔰 ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும்!
🔰 “இந்த செவுரு இன்னும் எத்தனை பேரை காவு வாங்கப் போகுதோ?”
நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக கல்லூரிகள், பள்ளிகள், ஷாப்பிங் மால்கள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் கண்காட்சிகளும் கருத்தரங்குகளும் நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் மக்கள் மனங்களில் நாட்டு பற்றை தூண்டும் விதமாக குறும்படங்கள் திரையிடுவது பாடல்கள் பாடுவது நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் கடிதம் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த நிகழ்வுகளின் போது முன் அனுமதி கொடுக்கப்பட்ட
“ஜனநாயகம் நீடூடி வாழ்க!”
“ஜனநாயகத்திற்கு அதிக வலிமை!”
“செங்கோலுக்கு வணக்கம்!”
“இந்தியா ஜனநாயகத்தின் தாய்!”
என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்து வரலாம் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனநாயகம் தொடர்பான முழக்கங்களை மக்களே தீர்மானித்து கைகளில் ஏந்தி வரலாம் என்று அனுமதித்தால் என்ன நடக்கும் என்று பாசிச கும்பலுக்கு நன்றாக தெரியும்.
இந்திய நாடாளுமன்றத்திற்கு உள்ளே கூட எதிர்க்கட்சிகளுக்கு பேச்சுரிமையை வழங்காத, கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகளில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு நியாயமான ஆதாரங்களுடன் கூடிய பதில்களை வழங்காத, ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் ஊடகத் துறையில் இருந்து வரும் கேள்விகளை எதிர்கொண்டு பதிலளிக்காமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் மோடியை பிரதமராக கொண்டு நடத்தப்பட்டு வரும் பிஜேபியின் பாசிச ஆட்சி குறித்தும் பிஜேபியின் பாசிச ஆட்சியில் எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் சுட்டுக் கொல்லப்படுவது விசாரணை ஏதுமின்றி சிறையில் அடைக்கப்படுவது குறித்தும் அம்பலப்படுத்தும் பதாகைகளை மக்கள் தங்கள் கைகளில் ஏந்தி வந்து விடுவார்கள் என்று பயந்து தான், அனுமதிக்கப்பட்ட வாசகங்கள் மட்டும் தான் பதாகைகளில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று பாசிச பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.
தங்களின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான மக்களின் வெறுப்புணர்வு வளர்ந்து கொண்டு வருகிறது என்பதையும் தங்களின் பாசிச செயல்பாடுகளைப் பற்றிய உண்மையான பிம்பம் அப்பாவி மக்கள் மத்தியில் பரவினால் தாங்கள் ஆட்சியில் இருந்து துடைத்தெறியப்படுவோம் என்பதையும் பாசிஸ்டுகள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
எனவே தங்களுக்கு ஆதரவாக உள்ள அல்லது தங்களின் பாசிச ஆட்சி குறித்தான விழிப்புணர்வற்ற அப்பாவி மக்களை தங்களுக்கு எதிராக போகவிடாமல், தொடர்ந்து தங்களுக்கு ஆதரவாக இருக்கும்படியாக வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இப்படிப்பட்ட நிகழ்வுகளை பாசிச பாஜக நடத்துகிறது
இந்த உண்மையை நாட்டு மக்களிடையே பரப்பி பாசிஸ்டுகளை முறியடிக்கும் பணியில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட வேண்டும். இதுதான் ஜனநாயகத்தைக் காப்பதற்கான உண்மையான செயல்முறை.
— குமரன்