இனப்படுகொலையை நோக்கி நகரும் இந்தியா!

“நினைவில் கொள்ளுங்கள், அது (இனப்படுகொலை) கேஸ் சாம்பருடன் தொடங்கவில்லை. அது “அவர்கள் Vs நாம்” என்று அரசியல்வாதிகள் பிரித்ததில் இருந்து தொடங்கியது. அது சகிப்பின்மை மற்றும் வெறுப்பு பேச்சிலிருந்து தொடங்கியது.  மக்கள் பிறர்மீது அக்கறை செலுத்தாத போது, அவர்களின் நேச உணர்வு குன்றிய போது, கண்கள் குருடான போது அது இனப்படுகொலை நோக்கி வழுக்கி சென்றது.” –

இனப்படுகொலை குறித்து இந்த வாசகத்தை நினைவில் வைத்திருங்கள். ‌இப்போது நாம்‌ எங்கிருக்கிறோம் என பரிசீலிக்கலாம்.

  1. உணவு

பசு புனிதம் என்ற கருத்தாக்கமும் மாட்டுக்கறி தடைச் சட்டமும் வெகுகாலமாக இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்தாலும் அது பெரும்பாலும் நடைமுறையில் இல்லாமல் இருந்தது. 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டுக்கறி தடைச் சட்டம் கறாராக அமல்படுத்தப்பட்டது.

இன்னொரு புறம், ஆர்.எஸ்.எஸ், சங் பரிவாரின் பசு பாதுகாப்பு படை மாட்டுக்கறி தடைச் சட்டத்தை அமல்படுத்தும் உரிமையை  தங்கள் கையில் எடுத்துக் கொண்டன.  உ.பியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாகக்கூறி அக்லக் என்பவர் கொல்லப்பட்டது தொடங்கி  பலர் மாட்டுக்கறி உணவு காரணமாக கொல்லப்பட்டுள்ளனர். 2016 முதல் 2020 ஆம் ஆண்டுக்குள் மாட்டுக்கறி தொடர்பான பிரச்சினைகளுக்காக 50 க்கும் மேற்பட்டோர் கும்பல் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பல இடங்களில்  மாட்டுக்கறி வைத்திருந்ததற்காக காவி குண்டர்களால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குகள் பதியப்பட்டுள்ளன.  அதில் 84 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள்.

மாட்டுக்கறி ஏற்றுமதியில் இருக்கும்  நாட்டில் மாட்டுக்கறி வைத்திருப்பதே குற்றமாக மாற்றப்பட்டு விட்டது. இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் சாதாரண ஏழை, எளிய உழைக்கும் மக்களின் உணவாக இருந்த மாட்டுக்கறி பல மாநிலங்களில் சட்டவிரோதமாகி விட்டது.


இதையும் படியுங்கள்: கும்பல் படுகொலை என்றால் என்ன?| சிந்தன் EP


 

செப்டம்பர் 21, 2021 அன்று பசுபாதுகாப்பு குண்டர் படையை சேர்ந்த ஒரு கும்பல் இஸ்லாமியர்கள் சிலர் மாட்டை வெட்டினர் எனக்கூறி அவர்களை அடித்து உதைத்தது. அதனை ஃபேஸ்புக் நேரலையில் வெளியிட்டு மற்றவர்களையும் பகிரக் கோரியது. அதன் பிறகு காவல்துறை அந்த‌ இஸ்லாமியர்களைக் கைது செய்து மாட்டுக்கறி தடைச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. (The Caravan )

இது போல பல இடங்களில் மாடுகளை வணிகத்திற்காக ஏற்றிச் செல்பவர்களை பசு பாதுகாப்பு குண்டர்கள் வழிமறிப்பதும் தாக்குவதும் நடக்கிறது‌.  போலிசும் இந்த சட்டவிரோத கும்பலும் சேர்ந்து சட்டத்தை அமல் படுத்துகின்றனர். நாடு முழுவதும் பசுவை வணங்குபவர்கள் எதிர் மாட்டுக்கறி உண்பவர்கள் என்று பாசிச கண்ணோட்டத்தை புகுத்தி விட்டனர். அது வட இந்தியாவில் இயல்பானதாகவும் மாற்றப்பட்டு விட்டது. இது நம் கண்ணெதிரேதான் நடக்கிறது.

  1. உடை

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்ததன்‌ மூலம் இஸ்லாமிய மாணவிகளின்‌ கல்வி பெறும் உரிமையைத் தடுத்தனர். இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக சக மாணவர்களையே இந்துத்துவ வெறியூட்டி ரவுடித்தனத்தில் ஈடுபடுத்தியதை நாம் பார்த்தோம்‌. ஹிஜாப்புக்கு எதிராக காவித் துண்டு அணிந்து அராஜகத்தில் ஈடுபட்டனர். இவற்றை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டிய நீதிமன்றங்கள்  சங்கி கும்பலுக்கு ஆதரவாக நின்று ஹிஜாப் அணிவதைத் தடை செய்து உத்தரவிட்டது. கர்நாடகத்தில் தொடங்கிய ஹிஜாப் தடை மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் வரை சென்றது. இன்னொருபுறம், மோடி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில், “என்னை எதிர்ப்பவர்கள் யார் என அவர்கள் உடையை வைத்தே தெரிந்தே கொள்ளலாம்” என இஸ்லாமியர்களின் உடையை சுட்டிக் காட்டி பேசினார். குல்லா முதல் ஹிஜாப் வரை இசுலாமியர்களது அடையாளமான உடை மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.


இதையும் படியுங்கள்: ஹிஜாப் தடை: முஸ்லிம் மாணவிகளின் கல்வி உரிமை பறிப்பு!


  1. உறைவிடம்

இஸ்லாமியர்களின் வீடுகளை இடிக்க காவிகள் புல்டோசர்கள் கடந்த சில மாதங்களாக பார்த்து வருகிறோம். குறிப்பாக, காவி பாசிஸ்டுகளை எதிர்த்து போராடும் இஸ்லாமியர்கள் வீடுகளை குறிவைத்து இடிக்கின்றனர். சமீபத்தில் நுபுர் ஷர்மா நபிகள் பற்றி அவதூறாக பேசியதை எதிர்த்து போராடிய வெல்ஃபேர் கட்சி மாநில தலைவர்  ஜாவித் வீட்டை திட்டமிட்டு இடித்து தள்ளியது உ.பி பாஜக அரசு. குறிப்பாக, அவர் மனைவி பெயரில் இருக்கும் வீட்டுக்கு ஜாவித் பெயரில் ஆக்கிரமிப்பு அகற்றல் நோட்டீஸ் கொடுத்து இடித்துத் தள்ளியுள்ளனர். கான்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பலரது வீடுகளையும் இதுபோல் இடித்துத் தள்ளியுள்ளது பாசிச யோகி அரசு. அதற்கும் முன்பு, மத்திய பிரதேசம் கார்கோனிலும் டெல்லி ஜஹாங்கிர்பூரிலும் ராம் நவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலங்களில் காவி குண்டர்கள் செய்த அடாவடித்தனத்தை எதிர்த்த இஸ்லாமியர்கள் வீடுகள் இடிக்கப்பட்டது.  இந்த வீடு இடிப்பு எதையும் நீதிமன்றங்கள் வாய்ப்பு இருந்தும் உரிய நேரத்தில் தடுக்கவில்லை. அவர்கள் அருகே வாழ்ந்து வந்த மக்கள் யாரும் தடுக்க முன்வரவில்லை.

  1. குடியுரிமை

2019 ஆம் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்ததன் மூலம் இந்த நாட்டில் வாழும்‌ 20 கோடிக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அனைவரும் தனது‌ குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய அபாயம் வந்தது. அதற்கு முன்னதாக, தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாம் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தியதன் மூலம் 19 லட்சம் இஸ்லாமியர்களை குடியுரிமையற்ற அகதிகளாக மாற்றி முகாம்களில் அடைத்தனர். இந்த  குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா‌ உள்ளிட்ட கல்லூரி மாணவர்களின்‌ தீரமிக்க போராட்டமும், டெல்லியில் தொடங்கி நாடு ‌முழுவதும் இஸ்லாமிய பெண்கள் அதிகம் பங்கேற்ற  ஷாஹின்பாஹ் போராட்டங்களும்தான்‌ அது அமலுக்கு வருவதை தடுத்து நிறுத்தியது.

  1. வழிபாட்டு தலங்கள்

1992 பாபர் மசூதியை இடித்து நாட்டிற்கே களங்கத்தைக் கொண்டு வந்த காவி கும்பல் இன்று நாட்டில் உள்ள அனைத்து மசூதிகளையும் குறிவைத்துள்ளது. தாஜ் மஹால், குதுப்மினார் போன்ற‌ வரலாற்று சின்னங்களைக் கூட விட்டு வைக்கவில்லை. அவை அனைத்தும் இந்து கோயில்களை இடித்துக் கட்டப்பட்டவை என்ற வாதத்துடன்‌ நீதிமன்றங்களுக்கு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. வழிபாட்டு தலங்கள் சட்டம் (1991) அடிப்படையில் முதல் பார்வையிலே நிராகரித்து இருக்க வேண்டிய அந்த மனுக்களை அனுமதித்து ஆய்வுகள் நடத்துவது, விவாதம் நடத்துவது என காவி பாசிஸ்டுகளின் பிரச்சார மேடையாக நீதிமன்றங்கள் மாற்றப்பட்டுள்ளன. பாபர் மசூதியை இடித்தவனுக்கே அதன் இடத்தை தூக்கிக் கொடுத்த இந்திய நீதித்துறையிடம் நாம்‌ வேறு‌ என்ன எதிர்பார்க்க முடியும்?


இதையும் படியுங்கள்: பாப்ரி மசூதியிலிருந்து கியான்வாபி  இந்திய நீதிமன்றங்கள்!


 

இது மட்டுமல்ல, கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் ஹரியானா மாநிலம் குர்கானில் இஸ்லாமியர்கள் தொழுகைக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு கும்பலாக சென்று “ஜெய் ஸ்ரீராம்” என ஊளையிட்டனர்‌ காவி பாசிச குண்டர்கள். இதனை அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆதரித்தார். உ.பி, ம.பி போன்ற மாநிலங்களில் மசூதிகளில் பொருத்தப்பட்டிருந்த நூற்றாண்டு வழக்கம் கொண்ட ஒலி பெருக்கிகள் தடை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

  1. வெறுப்புப் பேச்சு

“இந்துக்களைக் காப்பாற்ற இஸ்லாமியர்களை படுகொலை செய்ய வேண்டும். 100 இளைஞர்கள் கிடைத்தால் அதை நிறைவேற்றி விடுவேன்” என ஹரித்துவாரில் பேசிய காவி சாமியார் வெளியில்தான் இருக்கிறான். இந்த பேச்சுக்கள் மூன்றாம் தர சங்கிகளிடம் இருந்து மட்டும் வரவில்லை. நாட்டின் பிரதமர் மோடி அவுரங்கசீப்பையும், முகலாயர்களையும் வரலாற்று எதிரிகளாக சித்தரிப்பதன் மூலம் இஸ்லாமியர்களை அவர்களின் வாரிசுகளாகக் காட்டி அந்நியப்படுத்த முயற்சிப்பது நடக்கிறது. மேலும், தொலைக்காட்சி விவாதங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் அன்றாடம் நடைபெறுகிறது. இந்த பேச்சுக்களின் “நாம் வேறு, அவர்கள் வேறு” என கட்டமைக்கும் பணி வெகுவேகமாக நடந்தேறி வருகிறது.

  1. தொழில்

மாட்டுக்கறி தடைச்சட்டம் கொண்டு வந்ததன் மூலம், அதில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளானது. குஜராத், அகமதாபாத் நகரத்துக்குள் இனி இறைச்சி விற்கும் தள்ளுவண்டிகள் இருக்கக் கூடாது என உத்தரவிட்டதன் மூலமும் கர்நாடகாவில், கோவில் இடத்தில் இஸ்லாமியர்கள் கடை போடக் கூடாது என உத்தரவிட்டதன் மூலமும் அதில் ஈடுபட்டு இருந்த ஏழை இஸ்லாமியர்களை நிர்கதியாக்கினர்.  இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு முறை தாக்குதல் நடத்தும் போதும் இஸ்லாமியர்கள் கடைகளை குறிவைத்து சூறையாடுவது நிகழ்கிறது.

மேலே விவரிக்கப்பட்டுள்ள அனைத்தும் “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்ற அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளவையே. இன்னும் பல வகைகளிலும் இஸ்லாமியர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் எண்ணிக்கையில் அடங்காதவை.

“இனப்படுகொலையை நோக்கிய பயணத்தில் நாம் தொடங்கும் இடத்தில் இல்லை, பாதி வழியில் இருக்கிறோம்” என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அவற்றையெல்லாம் தாண்டி மேலே கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட அந்த சொற்றொடருடன் பொருத்திப் பாருங்கள். “இனப்படுகொலையை நோக்கிய பயணத்தில் நாம் தொடங்கும் இடத்தில் இல்லை, பாதி வழியில் இருக்கிறோம்” என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.  இனப்படுகொலைகள் குறித்து ஆய்வு செய்யும் “இனப்படுகொலை கண்காணிப்பு” என்ற நிறுவனம் “இந்தியா இனப்படுகொலையை நோக்கி செல்கிறது” என எச்சரித்துள்ளது.

நாம், நாட்டின் பெரும்பான்மை மக்கள், அமைதியாக வேடிக்கை பார்க்கும் தற்போதைய நிலையில் நீடித்தால் இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்படும் அபாயத்தை யாராலும் தடுக்க முடியாது. மொத்த அரசுக் கட்டமைப்பும், கார்ப்பரேட் ஊடகங்களும் காவி பாசிசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு துணையாக நிற்கின்றன. ஆர்.எஸ்.எஸ் -ன் ‘இந்துராஷ்டிர கனவு’ தற்போது நிறைவேற்றுவதற்கு வாய்ப்புள்ள நெருக்கமான ஒரு திட்டமாக மாறிவிட்டது. அது இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்வது, இரண்டாந்தர குடிமக்களாக்குவதன் மூலம் மேலும் நெருக்கமாகும். அப்படி எதுவும் நடக்காது என்பவர்கள். பிப்ரவரி 27, 28-2002 குஜராத்தில் நடந்ததை நினைவு கூறுங்கள். காவி பாசிஸ்டுகள் குஜராத் சோதனைக்கூடத்தில் பரிசோதித்ததை நாடு முழுவதும் நடத்தும் அபாயம் முகத்திற்கு நேரே வந்துவிட்டது. முகத்தை திருப்பிக் கொள்ளாதீர்கள்,  எதிர்த்து நில்லுங்கள்;

புதிய ஜனநாயகம்   
ஜூலை 2022

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here