90 மணி நேரம் உழையுங்கள்! தொழிலாளிகளைச் சுரண்டிக்கொழுக்கும் மற்றுமொரு கார்ப்பரேட் கொடுங்கோலனின் குரல்!

நாராயணமூர்த்தி, சுப்பிரமணியன் கூறுவதை விட கடுமையாக உழைக்கிறார்கள் தொழிலாளர்கள். அதற்கு சமீபத்தில் சாம்சங் தொழிலாளியின் மனைவி பேசிய ஆடியோவே  ஆகச் சிறந்த உதாரணம்.

0
எல்&டி நிறுவனர் சுப்பிரமணியன்

ன்போசிஸ் நாராயணமூர்த்தி கடந்த ஒரு வருடமாக இந்தியாவின் முன்னேற்றத்திற்காக 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என பேசி வருகிறார். அந்த லிஸ்டில் தற்போது இணைந்திருப்பவர் தான் எல்&டி நிறுவனர் சுப்பிரமணியன்.

எல்&டி நிறுவனர் சுப்பிரமணியன் ஒரு படி மேலே போய் 90 மணி நேரம் உழைக்க வேண்டும் என பேசி இருக்கிறார்.

அவர் பேசிய முத்தான வார்த்தைகள் இதோ, “ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் நான் உங்களை வேலை செய்ய வைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

“வீட்டில் உட்கார்ந்து என்ன செய்வீர்கள் எவ்வளவு நேரம்  உங்கள் மனைவியை பார்த்துக் கொண்டிருப்பீர்கள். வாருங்கள், அலுவலகத்திற்கு சென்று வேலை செய்ய வேலையை தொடங்குங்கள்”

மேலும் பேசிய சுப்பிரமணியன் “வீட்டில் உட்கார்ந்து என்ன செய்வீர்கள் எவ்வளவு நேரம்  உங்கள் மனைவியை பார்த்துக் கொண்டிருப்பீர்கள். வாருங்கள், அலுவலகத்திற்கு சென்று வேலை செய்ய வேலையை தொடங்குங்கள்” என்றும் பேசி உள்ளார்.

இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் கருத்திற்க்கும் எல்&டி சுப்பிரமணியன் கருத்திருக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இருவருமே தொழிலாளர்களை நவீன அடிமைகளாக்கி சக்கையாகப் பிழிந்து தூக்கி எறியவே முற்படுகிறார்கள்.

உழைப்பின் வலியை அறியாத முதலாளிகள் தான், நான் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்கிறேன் என்று பேசுகிறார்கள். இவர்கள் ஐந்து கிலோ அளவிற்கு கூட எடையை சுமக்காதவர்கள். தன்னுடைய உண்டு கொழுத்த உடலையே சுமக்க விரும்பாதவர்கள். இவர்களுக்கு உழைப்பைப் பற்றி என்ன தெரியும்?

பண்ணையார் கால பாணியில் நாள் முழுவதும் நேரம் பார்க்காமல் வேலை செய்யுங்கள். குடும்பம், குழந்தையை மறந்து விடுங்கள் என விடுமுறை இல்லாத கூலி அடிமை முறை வேலையை அமல்படுத்த எண்ணுகிறார்கள்.

படிக்க: ♦ சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான போராட்டமும்! ஆளும் வர்க்கத்தின் கார்ப்பரேட் விசுவாசமும்!

இதில் பண்ணையாரின் வேலை என்னவாக இருக்கும். உழைப்பாளர்களின் உழைப்பை மேற்பார்வையிட்டு விட்டு ஊர் மேய்ந்து இரவு திரும்புவது. அந்த பண்ணையாரிடம் கேட்டால் நானும் உழைக்கிறேன் என்பான். இதே வேலையை தான் நவீன காலத்தில் வேறுவடிவத்தில் செய்கிறார்கள் கொழுப்பெடுத்த முதலாளிகள்.

பல்லாயிரம் கோடி சொத்துக்கள்; ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல கோடிக்கணக்கான ரூபாயில் விலை உயர்ந்த சொகுசு கார்கள்; நாலு பேர் ஐந்து பேர் வசிக்க சில ஆயிரம் கோடியில் பங்களாக்கள்; தனி விமானம் என முதலாளிகளின் ஊதாரி வாழ்க்கையை பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.

படிக்க: இந்திய தொழிலாளர்கள் விற்பனைக்கு!

இவையெல்லாம் இவர்களின் உழைப்பில் சேர்த்த பணம் அல்ல. தொழிலாளர்கள் ரத்தத்தை வியர்வையாய் சிந்தி உழைத்ததின் பலனை சுப்பிரமணியன், நாராயணமூர்த்தி போன்ற முதலாளிகள் அனுபவிக்கிறார்கள். இந்த ஆடம்பரமும் சொத்தும் போதாது என்று தான் நம்மை 90 மணி நேரம் உழைக்கச் சொல்கிறார்கள்.

கடந்த ஜூன் காலாண்டில் மட்டும் உள்கட்டமைப்பு நிறுவனமான எல்&டி-யின்  லாபம் 15.5 சதவீதம் உயர்ந்து 2948 கோடியாக உள்ளது. ஒரு ஆண்டுக்கு 4 லட்சம் கோடி அளவுக்கு ஆர்டர் எடுக்கிறார்கள். 3 வாரங்களுக்கு முன்பு தான் இந்திய பாதுகாப்பு துறையுடன் துப்பாக்கி(155mm/52 calibre K9 vajra T self  propelled tracked artillery guns) தயாரிப்பதற்காக 7628 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இப்படியாக தனது நிறுவனத்தின் லாபத்தை பனமடங்கு உயர்த்த திட்டமிடுகிறார் சுப்பிரமணியன்.

எதார்த்தத்தில் தொழிலாளர்களின் நிலை என்னவாக உள்ளது?

நாராயணமூர்த்தி, சுப்பிரமணியன் கூறுவதை விட கடுமையாக உழைக்கிறார்கள் தொழிலாளர்கள். அதற்கு சமீபத்தில் சாம்சங் தொழிலாளியின் மனைவி பேசிய ஆடியோவே  ஆகச் சிறந்த உதாரணம். தாயின் இறப்பிற்கு விடுமுறை இல்லை. நிறுவனம் விடுப்பு அளிக்காததால் குழந்தையை கவனிக்க முடியாமல் இறந்து போனது என பன்னாட்டு நிறுவனமே தொழிலாளியை அடிமையாக நடத்துகிறது என்றால், உள்நாட்டில் பண்ணையார்களிடத்திலிருந்து உருவான முதலாளிகள் தொழிலாளர்களை எப்படி நடத்துவார்கள்?

உதாரணமாக திருத்தணியில் இருந்து வேலைக்குச் சென்னை நகரத்தை நோக்கி பயணிக்கும் தொழிலாளி காலை 8 மணிக்கு வேலைக்கு அதிகாலை 5 மணிக்கு எழுந்து புறப்பட்டால்தான் சரியான நேரத்திற்கு செல்ல முடியும். போவதற்கு மூன்று மணி நேரம், வருவதற்கு மூன்று மணி நேரம், வேலையில் எட்டு மணி நேரம் என மொத்தமாக கணக்கிட்டால் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் உழைக்கிறான். ஒரு வாரத்திற்கு என பார்த்தால்  6×14 மணி நேரம், மொத்தம்  84 மணி நேரம் நிறுவனத்திற்காக செலவிடுகிறான். இதில் எங்கே அவன் குடும்பத்தை கவனிப்பது.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனல்

நாராயணமூர்த்தி சொல்வதைவிட 14 மணிநேரம் அதிகமாகத்தான் வெளியூரிலிருந்து வரும் தொழிலாளர் உழைக்கிறார்கள். பெரும்பாலான நிறுவனங்கள் உள்ளூர் மக்களுக்கு வேலை அளிப்பதில்லை. நிறுவனம் இருக்கும் ஊரில் தங்கி வேலை செய்வதென்றால் வீடு வாடகைக்கு என பெரும் தொகை ஒதுக்க வேண்டும்.

அவையெல்லாம் இவர்கள் கொடுக்கும் சம்பளத்தில் போதாது. சரி 14 மணி நேரம் உழைத்தாலும் அந்த தொழிலாளிக்கு கிடைக்கின்ற வருமானமும் சொற்பம் தான். 10 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக 15,000 சம்பளம் தருகிறார்கள். (இந்தியாவில் இருக்கும் மொத்த தொழிலாளர்களில் 7 சதவீதமே நிரந்தர தொழிலாளர்கள் என்பதால் இதிலிருந்து விதிவிலக்கானவர்கள்) இதில் வாடகை, போக்குவரத்து என கணக்குப் பார்த்தால் ஒருவேளை உணவிற்கு கூட மிஞ்சாது. இதுதான் இந்திய தொழிலாளர்களின் தற்போதைய நிலைமை.

இப்படி சக்கையாக பிழியப்படும் தொழிலாளர்கள், வார இறுதி நாட்களில் ஓய்வெடுக்கவே விரும்புவார்கள். அந்த நேரத்தில் குடும்பத்துடன் கூட நேரம் செலவழிக்க முடியாது. இதனால் பல குடும்பங்களில் உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக தான் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் வேலை நேரத்தை குறைக்க வலியுறுத்துகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

இதுபோன்ற தொழிலாளர்களின் வலியை எல்லாம் உணராத கார்ப்பரேட் கொடுங்கோலர்கள் தான், தொழிலாளர்களை பணியிடங்களிலேயே கிடந்து சாகச் சொல்கிறார்கள்.  லட்சம் கோடிகள் சம்பாதிப்பதற்கு நம்மை ஓய்வின்றி உழைத்துச் மடியச் சொல்கிறார்கள்.

8 மணி நேர வேலை எனும் போராடி பெற்ற உரிமையை பறிக்க பாசிச மோடி கும்பல் சட்டங்களைக் கொண்டு வருகிறது. அதனை நியாயப்படுத்த ‘அதிக நேரம் உழைப்பதன் அருமையை’  பிரச்சாரம் செய்கிறார்கள் இந்த கார்ப்பரேட் முதலாளிகள். தொழிலாளர்களைக் காவு கொடுக்கும் இந்த இரண்டு எதிரிகளுமே ஒழிக்கப்படாமல் தொழிலாளர்களுக்கான நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here