சிதம்பரம் நடராசர் கோவில் மக்களுக்கே சொந்தம்!
தீட்சிதர் பார்ப்பனர்களை வெளியேற்றுவோம்!


காவி பாசிச அதிகாரம் மையங்களாகும் கோவில்கள் என்று மக்கள் அதிகாரம் மூன்று மாதங்களுக்கு முன்பு பிரச்சார இயக்கத்தை நடத்தியது. தற்போது கோவில்கள் மட்டுமின்றி ஆதீனங்கள், மடங்கள் ஆகியவையும் காவி பாசிசத்தின் அதிகார மையங்களாக மாறியுள்ளது.

அதற்கு துலக்கமான உதாரணமாக நடராசர் கோவிலில் தீட்சிதர் பார்ப்பனர்களின் கொட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் ராஜு சிதம்பரத்திற்கு வரக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு போடுகிறார்கள்.

சிதம்பரம் கோவிலை சுற்றி நான்கு வீதிகளில் உள்ள பார்ப்பனரல்லாத, பிற சாதிகளின் பிரமுகர்கள் சிலர் மக்கள் அதிகாரம் இந்த பிரச்சனையில் தலையிட கூடாது. குறிப்பாக மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் ராஜு சிதம்பரத்திற்கு வரக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு போடுகிறார்கள்.

“சிதம்பரம் கோவிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரும் திட்டம் தற்போதைக்கு இல்லை. ஆனால் அங்கு பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அரசுக்கு வந்திருக்கும் புகார்கள் தொடர்பாக நாங்கள் கண்காணிக்க வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும்.” என்று வெளிப்படையாக கூறிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நியமித்த ஐந்து நபர் கொண்ட அரசு அதிகாரிகள் குழுவை தீட்சிதர்கள் கோவிலுக்குள் நுழைந்து சோதிக்கும் உரிமை இல்லை என்று தடுத்து நிறுத்தி விட்டனர்.

 

சிற்றம்பல மேடையில் அதாவது கனகசபையில் ஏறி நடராசரை  தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ் பக்தி இலக்கியங்களை  பாடி வழிபடலாம் என்று தமிழக அரசு ஆணையிட்டு அதனை நிறைவேற்றியுள்ளது.

இது சிதம்பரம் நடராசர் கோவிலில் உள்ள பல்வேறு பிரச்சினைகளில் ஒரு சிறிய அம்சம் மட்டுமே.

படிக்க:

♦  பக்தர்களே! கடவுளும் தீட்சிதர்களும் ஒன்றல்ல!
♦  தீட்சிதர் சொத்தல்ல தில்லைக் கோவில்

1890 ஆம் ஆண்டு பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நீதித் துறையைச் சார்ந்த இரண்டு நீதிபதிகள் சிதம்பரம் நடராசர் கோவில் யாருக்கு சொந்தமானது என்பதை தீவிர விசாரணை செய்து ஷெப்பர்டுட் என்ற ஆங்கில நீதிபதியும், முத்துசாமி அய்யர் என்ற நீதிபதியும் இணைந்து, “சிதம்பரம் நடராசர் கோவில் பன்னெடுங்காலமாக பொதுமக்களுக்குச் சொந்தமான கோவில் இந்த கோவிலில் தீட்சிதர்களுக்கு தனிப்பட்ட பாத்தியதை எதுவும் இல்லை. அது மக்களுக்குச் சொந்தமான பொதுக்கோவில்” என்று தீர்ப்பு வழங்கிவிட்டனர்.

1947 சுதந்திரம் அடைந்ததாக கூறிக் கொண்ட பிறகு ‘பெரியவாள்’ என்றழைக்கப்பட்ட சந்திரசேகரேந்திரன் மூலமாக, 1952 ஆம் ஆண்டு எங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லை, எங்களுக்கு போக்கிடமும் இல்லை என்று ஜனாதிபதி முதல் அப்போதைய பிரதமர் மற்றும் நீதிமன்றங்கள் வரை வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு பிழைப்புக்காக எங்களுக்கு கோவிலை தாருங்கள் என்று கெஞ்சிக் கேட்ட தீட்சிதர்கள், அதன்பிறகு சிதம்பரம் நடராசர் கோவிலை தனது வகையறா கோவிலாக அறிவித்துக் கொண்டு இன்றளவும் அதை வைத்துக்கொண்டு கொட்ட மடிகின்றனர்.

உருவ வழிபாட்டை மறுத்து வேள்வி வழிபாட்டை அடிப்படையாகக்கொண்ட ஸ்மர்த்தா பார்ப்பனர்களான தீட்சிதர்கள், சைவ ஆகமங்களின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள நடராசரை  பூஜை செய்வதற்கு செய்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை. ஆனால் தனது சூழ்ச்சிகளின் காரணமாகவும், பித்தலாட்டமான பல்வேறு தல புராணம் உள்ளிட்ட பல்வேறு புராண புளுகு மூட்டைகளின் காரணமாகவும் சிதம்பரம் நடராஜருக்கு பூஜை செய்யும் உரிமையை பெற்றுள்ளனர்.

பார்ப்பனர்களும், ஆர்எஸ்எஸ் பாஜகவினரும் உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பன இந்து மதத்தின் ஆகம விதிகளை தீட்சிதர்கள் ‘ஹைகோர்ட்’ அளவிற்கும் (உபயம்: எச்.ராஜா) மதிப்பதில்லை.

ஆதீனங்கள் எவ்வாறு திரண்ட சொத்துக்களை தனி சாம்ராஜ்யத்தை போல கட்டியாண்டு சைவத்திற்கு தங்கள் சொந்த தொண்டு செய்வதாக புளுகித் திரிகின்றனரோ, அதுபோலவே தீட்சிதர் பார்ப்பனர்களும் நடராசருக்கு தொண்டு செய்வதாக புளுகித் திரிகின்றனர்.

தனக்கு நடராசர் கோவிலின் மீது எந்த விதமான பாத்தியதை இல்லாத போதிலும், வகையறா கோவில் என்று கூறிக்கொண்டு இன்றளவும் தின்று கொழுத்து திரிந்து கொண்டிருப்பதை உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சிக்குடுமி மன்றம் வரை அனுமதித்து வருவதுதான் இவ்வளவு பிரச்சினைக்கும் அடிப்படை.

பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் பிற்போக்குத்த்தனங்கள் அனைத்தும் மரபு, பழக்கவழக்கம் என்ற பெயரில் மீண்டும் மீண்டும் திணிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க கூடாது.

“கணக்கு காட்ட முடியாது, அரசுக்கு கட்டுப்பட முடியாது, கோவிலுக்குள் நாங்கள் செய்யும் எந்த மாற்றத்தையும் (புராதன சின்னமான சிதம்பரம் நடராசர் கோவிலில் உள்கட்டமைப்பை மாற்றுவது உள்ளிட்டு) யாரும் எப்போதும் கேள்வி கேட்க முடியாது, கூடாது”

இது நாத்திகர்களின் பிரச்சனை கிடையாது. ஆன்மீகத்தை முழுமையாக நம்பி “தென்னாடுடைய சிவனே போற்றி” என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கும் ஆன்மீக அன்பர்களுக்கும், பக்தர்களுக்கும் உள்ள மானப் பிரச்சனை. “கணக்கு காட்ட முடியாது, அரசுக்கு கட்டுப்பட முடியாது, கோவிலுக்குள் நாங்கள் செய்யும் எந்த மாற்றத்தையும் (புராதன சின்னமான சிதம்பரம் நடராசர் கோவிலில் உள்கட்டமைப்பை மாற்றுவது உள்ளிட்டு) யாரும் எப்போதும் கேள்வி கேட்க முடியாது, கூடாது” என்று தினவெடுத்து திரியும் தீட்சிதர்களை வெறும் சட்டம் ஒழுங்கு என்ற முறையில் மட்டும் கையாண்டு விட முடியாது.

“திரிசடை கொண்ட திருநீலகண்டர் பார்த்துக் கொள்வார்” என்று அமைதி காக்கவும் கூடாது.

சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி சுதந்திரமாக ஆய்வு செய்தால் இன்னும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும், கோவிலுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான வேலி நிலங்களை எந்தக் கணக்கும் இல்லாமல் தின்று செரிக்கும் தீட்சிதர்கள் மற்றும் நான்கு வீதிகளில் குடியிருக்கும் வேளாளர், செட்டியார் போன்ற சாதிகளைச் சார்ந்தவர்களும் கூட்டு சேர்ந்து செய்யும் களவாணித்தனங்கள் அனைத்தும் வெளிவரும்.

தமிழக அரசின் ஆணைக்கு கட்டுப்படாத  தீட்சிதர்களை நான்கு வீதிகளுக்குள் அனுமதிக்காத அளவிற்கு சமூகப் புறக்கணிப்பு செய்ய வேண்டும். தீட்சிதர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களின் வெறும் இரண்டாயிரம், மூவாயிரம் ஓட்டுக்காக சமரசம் செய்து கொண்டு காலில் விழுந்து கிடக்கும் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் பார்ப்பன அடிமை புத்தியிலிருந்து விடுபட வேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். சிதம்பரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நடராசர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்து செய்து அதில் நீண்ட காலமாக  உழைத்து உருக்குலைந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும்.

படிக்க:

♦  தீட்சிதர்களை கைது செய்யும் திரானி உண்டா திமுக அரசுக்கு?
♦  சிதம்பரம் நகர அறிவார்ந்த பொது மக்களே சிந்திப்பீர் ! பெரிய மனிதர்களின் சின்ன புத்தி!

நந்தனார் நுழைந்தார் என்ற ஒரே காரணத்திற்காக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தெற்கு வாயில் தீண்டாமைச் சுவரை உடனடியாக அகற்ற வேண்டும்.

சட்டமன்றத்தில் சிறப்பு சட்டமியற்றி நடராசர் கோவிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் பொய்களையும், பித்தலாட்டங்களையும், பார்ப்பனர், வேளாளர் எழுதிய புராணங்கள் மற்றும் ஆகமங்களையும் முன்வைத்து வாதாடுகின்ற அறிவியலற்ற நடைமுறையை முற்றாக நீக்க வேண்டும்.

தற்போதைய தகவல் தொழில்நுட்ப புரட்சி நடக்கின்ற காலகட்டத்தில் விஞ்ஞானபூர்வமான வகையில் கோவிலை ஆய்வு செய்து பொது கோவிலாக, தொடர்ந்து அனைத்து பக்தர்களும் வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டும்.

“பண்டுபறை சேந்தன் கொடுத்த களியும் திருவாமிர்தமானதே” என்று பாடிய சேர்ந்த நாயனாரின் வழியில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கி தென்னாடுடைய சிவனின் மனம் குளிர வைக்கப் பட வேண்டும்.

  • திருச்செங்கோடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here