பத்திரிக்கைச் செய்தி
நாள் 24-5-2022
பக்தர்களே!
கடவுளும் தீட்சிதர்களும் ஒன்றல்ல!
தில்லை சிற்றம்பல மேடையில் தமிழ்பாடி வழிபடுங்கள் !
தீட்சிதர்கள் தீபாரதனை காட்ட மறுத்தால்
நீங்களே சூடம் ஏற்றி வழிபடுங்கள்!
சிதம்பரம் நடராசர் கோவில் சிற்றம்பல மேடையில் பக்தர்கள் ஏறி வழிபடலாம் ஆனால் தமிழ்திருமுறைகளான தேவாரம், திருவாசம் பாடக்கூடாது என தீட்சிதர்களும் தடுக்கின்றனர். போலீசு அதிகாரிகளும் பாடக்கூடாது என சொல்கின்றனர்.
மக்கள் அதிகாரம் இதை வன்மையாக கண்டிக்கிறது.
தற்போது தமிழக அரசு பிறப்பித்த 17-5-2022 அரசாணையில் சிதம்பரம் நடராசர் கோவில் கனகசபையில் பக்தர்கள் ஏறி வழிபடலாம் என்று மட்டுமே குறிப்பிட்டு உள்ளது பாடி வழிபடலாம் என குறிப்பிடவில்லை என டெக்னிக்கலாக காரணம் சொல்கிறார்கள். தீட்சிதர்கள் பித்தலாட்டமாக எதையும் சொல்வார்கள் செய்வார்கள். ஆனால் தமிழக போலீசார் சொல்வதை எப்படி அனுமதிக்க முடியும்.?
அரசாணையில் குறிப்பிட்டுள்ள உரிமையை புரிந்து கொள்வதற்கு வசதியாக அரசாணையின் நகலை ஏட்டு முதல் எஸ்.பி வரை தமிழ்பாடுவதற்கான (எண் 53 நாள் 29-2-2008 ) எடுத்து கொடுத்திருக்கிறோம்.
சிற்றம்பல மேடையில் அனைவரும் தமிழ்பாடி வழிபட வேண்டும் என்ற உரிமைக்காக பல ஆண்டுகள் நடத்திய மக்கள் போராட்டம், சட்டப் போராட்டத்திற்கு பிறகு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதுவும் அரசு தானாக செய்யவில்லை. சிவனடியார் ஆறுமுகசாமி மூலம் தீட்சிதர்களுக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி இணைஆணையர், ஆணையர், அரசு செயலாளர், பிறகு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அதன் மீது இரு நீதிபதிகளிடம் மேல்முறையீடு என வழக்கு நடத்தி பல தடைகளை தாண்டி சிவனடியார் ஆறுமுகசாமி மட்டுமல்ல அனைவரும் சிற்றம்பல மேடையில் தேவார திருமுறைகள்பாடி வழிபடலாம் என அரசாணையாக பெற்றுள்ளோம்.
தமிழக போலீசார், தீட்சிதர்களின் கையை முறுக்காமல் எதையும் செய்யமுடியாது. தவணைமுறையில் உரிமைகளை அமல்படுத்துவதை ஏற்க தேவையில்லை. அனைவரும் தமிழ் பாடி வழிபடுவதை தமிழக அரசு உத்திரவாதம் செய்ய வேண்டும்.
தேவாராம் பாடி வழிபடுபவர்களுக்கு தீட்சிதர்கள் தீபாராதனை காட்ட மறுப்பது தொடருமானால் பக்தர்களே பூசை செய்யும் நிலை ஏற்படும் என தீட்சிதர்களை எச்சரிக்க விரும்புகிறோம்.
தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வுகான வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன்,
வழக்கறிஞர் சி.ராஜு
மாநிலப் பொதுச்செயலாளர்
மக்கள் அதிகாரம்