
இந்தியாவில் கோடைக் காலம் என்பது கடுமையான வெப்பத்தின் காலம் மட்டுமல்ல; இது இந்திய துணைக் கண்டத்தின் காலநிலை மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கட்டமாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கோடைக் காலம் என்று பொதுவாக பருவ கால நிலைமை பற்றிய குறிப்புகள் தெரிவிக்கின்றது.
இந்த ஆண்டு கோடைக்கால வெப்பநிலை நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் 45°C ஐ விட அதிகமாக இருப்பதால், கோடை விவசாயம், மனித ஆரோக்கியம், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழலை ஆழமாக பாதிக்கிறது.
கோடைக்காலத்தில் அளவுக்கு அதிகமான வெப்பத்தின் தாக்கமானது பல மாதங்கள் நீடிக்கும் மற்றும் அன்றாட வாழ்க்கையை பல வழிகளில் பாதிக்கும். இது இந்தியாவின் பருவகால தாளத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உலக சராசரி வெப்பநிலை உயர்வு குறித்த அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகளை உலக வானிலை அமைப்பு 28.5.2025 அன்று அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அறிக்கையின் முக்கிய அம்சங்கள், 2025-2029 ஆகிய ஐந்தாண்டு காலகட்டத்தில் உலகளாவிய சராசரி வெப்பநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும், 2025 முதல் 2029 வரையிலான ஒவ்வொரு ஆண்டின் வருடாந்திர சராசரி வெப்பநிலை, 150 வருடங்களுக்குக் முன் இருந்த (1850-1900) ஆண்டுகளின் சராசரியை விட 1.2°C முதல் 1.9°C வரை அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
2025 முதல் 2029 வரையிலான காலத்தில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டில் உலகின் சராசரி வெப்பநிலை 150 ஆண்டுகளுக்கு முன் (1850-1900ல்) நிலவிய சராசரி வெப்பநிலையை விட 1.5°Cஐ மீறும் வாய்ப்பு 86% உள்ளது. மேலும், 2025-2029 ஆகிய ஐந்தாண்டுகளின் சராசரி 150 ஆண்டுகளுக்கு முன் (1850-1900) இருந்த சராசரியை விட 1.5°Cஐ மீறும் வாய்ப்பு 70% உள்ளது.
2025 முதல் 2029 வரையிலான காலத்தில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது 2024ஐ விட வெப்பமாக இருக்கும் வாய்ப்பு 80% உள்ளது. மிகவும் அரிதாக இருந்தாலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு 2°C வெப்ப உயர்வைச் சந்திக்க 1% வாய்ப்பு இருக்கிறது” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவியில் 1850 – 1900ஆம் ஆண்டுகளுக்கு இடையே நிலவிய சராசரி வெப்பநிலையை விட 2025-2029ஆம் ஆண்டின் சராசரி வெப்பநிலை 1.5°C அளவிற்கு உயர்வதற்கு 70% வாய்ப்புள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது. உலகின் சராசரி வெப்பநிலை உயர்வைவிட இரண்டு மடங்கு வேகமாக ஆசிய கண்டம் வெப்பமடைந்து வருவதாகவும் WMO தெரிவித்துள்ளது. இந்த தகவல்களை பூவுலகின் நண்பர்கள் தெரியப்படுத்துகின்றனர்.
புவி வெப்பமயமாதல் என்ற பருவநிலை மாற்றம் என்ற அபாயத்தை இயற்கைக்கு எதிராக பல லட்சக்கணக்கான ஆண்டுகள் போராடி முன்னேறி வருகின்ற மனித குலம் எதிர் கொண்டுள்ளது. கடந்த சில நூற்றாண்டுகளில் பருவநிலை மாற்றங்களினால் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
படிக்க:
♦ அதிகரிக்கும் வெப்ப அலைத்தாக்குதலும் கூரையை கொளுத்தும் ’வளர்ச்சியும்’!
♦ 2024 மிகவும் வெப்பமான ஆண்டு என்ன செய்யப் போகிறோம்?
மனித குலத்தில் பெரும்பான்மை மக்கள் உழைப்பாளிகளாகவும் ஒரு சிறு கும்பல் பெரும்பான்மை மக்களின் உழைப்பு சக்தியை சுரண்டி பெரும் பணக்காரர்களாகவும் பல மடங்கு சொத்து படைத்தவர்களாகவும் மாறியுள்ளனர். இதனையே மார்க்சியம் வர்க்க முரண்பாடு என்கிறது.
மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டே செல்கிறது; உலகம் முழுவதையும் ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகள் கட்டுப்படுத்துகிறார்கள் என்று Credit suisse என்ற முதலீட்டு வங்கி வெளியிடும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் ஆய்வு செய்யும் ஆக்ஸ்ஃபாம் உள்ளிட்ட தன்னார்வ குழுக்கள் மற்றும் போர்ப்ஸ் போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகின்ற முதலாளித்துவ பொருளாதாரம் பற்றிய ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
”சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம்” என்ற முழக்கத்துடன் உலகில் தோன்றிய முதலாளித்துவ சமூக அமைப்பு முற்றாக தோல்வியடைந்து விட்டது என்பதைத்தான் இந்த இரு துருவ ஏற்றத்தாழ்வுகள் நமக்கு அறிவிக்கின்றது.
புவி வெப்பமயமாதல் போன்ற பருவநிலை மாற்றங்கள், பெரும்பான்மை மக்களின் மீது கொடூரமான தாக்குதல்களையும் அவர்களது வசிப்பிடங்களில் இருந்து புலம் பெயர்ந்து வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தையும் அவர்களின் மீது திணிக்கின்றது.
தனது லாபவெறிக்காக சிறுகும்பல் நடத்துகின்ற சூழலியல் தாக்குதல்கள், உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ இராணுவ கார்ப்பரேட் நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்ற போர்கள் ஆகியவை மேலும் சூழலியலை கொடூரமாக மாற்றி வருகிறது.
கடந்த கால் நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்ற போர் குறிப்பாக அமெரிக்க மேல்நிலை வல்லரசு தன்னை நிலைநாட்டிக் கொள்வதற்கு திட்டமிட்டு பல்வேறு நாடுகளின் மீது நடத்துகின்ற போரானது புவியின் வெப்பத்தை அதிகரிப்பதற்கும், பூமியின் மீது பல டன் எடையுள்ள வெடிகுண்டுகள் போடப்படுவதன் மூலமாக அதன் தகவமைப்பு மாற்றங்களையும் உருவாக்குகின்றது.
பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கின்ற எண்ணெய் வளத்தை உறிஞ்சி எடுத்து கொள்ளையடிக்கின்ற ஷெல், செவ்ரான், அராம்கோ, சினோபெக், பெட்ரோ சைனா, எக்சான் மோபில் போன்ற எண்ணெய் கார்ப்பரேட்டுகள் எதிர்காலத்தைப் பற்றி எவ்விதமான அக்கறையும் இன்றி நிகழ்காலத்தில் பல கோடி டாலர்களை வருவாய் ஈட்டுவதற்கு சூழலியல் மீது தாக்குதலை தொடுக்கின்றார்கள்.
புவி வெப்பமயமாதல் என்பது திட்டமிட்டு நடத்தப்படுகின்ற ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கொடூரமான தாக்குதல் என்ற கோணத்தில் புரிந்து கொண்டால் மட்டும் தான் அதற்கு எதிராக இந்த புவிக்கோளத்தை பாதுகாப்பதற்கு பொருத்தமான சித்தாந்தத்தை அதாவது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வதும், அதன் மூலமாக மட்டுமே உலகை போர்களற்ற சமாதானமிக்கதாகவும், சூழலியல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க கூடியதாகவும் உருவாக்க முடியும் என்பது தான் நிதர்சனமான உண்மை.
- முகம்மது அலி.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி
புவி வெப்பமயமாதல் அதிகரித்துக் கொண்டே போவது குறித்தும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த 45 டிகிரி செல்சியஸ் மேலும் கூடுதலாகும் என்பது குறித்தும், இப்படிப்பட்ட வெப்பமயமாதல் இயற்கையாக அன்றி முதலாளித்துவவாதிகளால் சூழல் இயல் கெடுக்கப்படுவதும், அழிவுகரமான குண்டுகளை பூமியில் செலுத்தி அதன் மூலமாக வெப்பமயமாதல் கூடுதலாகுதல் பற்றியும், மேலாதிக்கவாதிகளுக்கு இடையிலான போரும் லாப வெறியும் கூட வெப்பமயமாதல் அதிகரிப்பதற்கு காரணம் என்பதாகவும் புதிய கண்ணோட்டத்தில் நுணுக்கமாக இக்கட்டுரையாளர் படைத்திருக்கிறார். வெப்பமயமாதலை சீராக தொடர்ந்து வைத்திருக்க சமூக நலனை பெரிதும் விரும்பும் உலக கம்யூனிஸ்டுகள் மட்டுமே போராடி பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளனர் என்பதையும் தோழர் சிறப்பாக முடித்திருக்கிறார். அவருக்கு எமது பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!