இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை அதாவது எமர்ஜென்சி நிலவுவதாக காங்கிரஸ் கட்சி முன் வைத்துள்ளது.
“இந்தியா சுதந்திரம் பெற்றதில் மற்றும் அரசியலைப்பு உருவாக்கப்பட்டதில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் பங்கு ஏதும் இல்லை. அம்பேத்கரின் அரசியலமைப்பை நிராகரித்தன. அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறது அதை கையில் எடுத்து, அரசியலைப்பை பாதுகாப்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்பு அபாயத்தில் உள்ளது. மோடி அரசாங்கத்தின் கீழ் கருத்துச் சுதந்திரமோ, நடமாடும் சுதந்திரமோ இல்லை. அரசியலமைப்பு பாதுகாப்போம் எனப் பேசிக் கொண்டிருப்பவர்கள், தற்போது 50 வருடத்திற்குப் பிறகு எம்ர்ஜென்சியை கையில் எடுத்துள்ளனர். சிலர் இதை மறந்திருப்பார்கள். இவர்கள் தோண்டி எடுக்கிறார்கள். மனுஸ்மிருதியின் கூறுகள் போன்று நம்முடைய கலாசார அம்சங்கள் இல்லை என பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அரசியலமைப்பை நிராகரித்தன. இதை செய்தவர்கள் தற்போது ஞானமடைந்துள்ளனர்.இவர்கள் ஆட்சியில் தோல்வியடைந்துள்ளனர். பணவீக்கம், வேலைவாய்ப்பின்மைக்கு பதில் அளிக்காதது, ஊழல், பொருளாதார தோல்வி குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளனர். பொய்கள் மற்றும் தோல்வியை மறைக்க இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். பொருளாதார சமநிலை மிகப்பெரிய அளவில் இடைவெளி பெற்றுள்ளது. அறிவிக்கப்படாத எமர்ஜென்சி கொண்டு வந்துள்ளனர்.” என்று காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இத்தகைய சூழல் ஒன்று நிலவுவதை அவதானித்து கடந்த மே மாதம் புதிய ஜனநாயகம் இதழின் தலையங்கத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தோம்.
“இன்று நாட்டில் ஒரு அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. அவசர நிலையின் கீழ்(Emergency period) அனைத்து விதமான மனித உரிமைகளும், அரசியல் அமைப்புச் சட்டம் முன் வைக்கும் சொல்லிக் கொள்கின்ற கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, சங்கம் கட்டும் உரிமை, கூடிப் பேசும் உரிமை ஆகியவற்றை முற்றாக தடை செய்யப்பட்டுவிட்டு, அந்த அவசரநிலை காலம் முடிந்த பிறகு தான் அதை மீண்டும் அத்தகைய உரிமைகள் உயிர்த்தெழும் என்ற நிலைமை பகிரங்கமாக அறிவிக்காமலேயே நாடு முழுவதும் நீடிக்கிறது.
ஊக வணிகத்தின் மூலமாக ஊதிப் பெருக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் குமிழி வெடிப்பின் காரணமாக மிகப் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஏகாதிபத்திய முதலாளித்துவ கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பங்கு சந்தை சூதாடிகள், இந்திய நிறுவனங்களில் தாங்கள் போட்ட பங்குகளை திரும்ப பெற்றுக் கொள்வதன் மூலம் பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகின்றனர்.
அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையில் நடைபெறுகின்ற வர்த்தகப் போரை பயன்படுத்திக் கொண்டு உலக சந்தையை இந்தியா கைப்பற்றி விடும் என்றெல்லாம் முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களும்,, ஆர்எஸ்எஸ் பாஜகவின் கைக்கூலிகளும் ஆரவாரம் தெரிவித்துக் கொண்டிருக்கின்ற சூழலில், உண்மையான நிலைமை என்னவென்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதத்திற்கு கீழே சென்றுள்ளது என்பது மட்டுமின்றி மொத்தப் பொருளாதாரமும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது”. என்று எழுதி இருந்தோம். இதனையே தற்போது காங்கிரஸ் கட்சி தனது அறிக்கையாக வேறு வார்த்தைகளில் வெளியிட்டுள்ளது.
படிக்க:
♦ அவசர காலம் – 50ஆம் ஆண்டு! ஜனநாயகத்துக்காக போலி கண்ணீர் வடிக்கும் மோடி அரசு!
♦ ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும்
“நெருக்கடிக் காலத்தில் பத்திரிகை தணிக்கை வரைமுறையே இல்லாமல் இருந்தது என்கிறார் விடுதலை ராஜேந்திரன், 1975-ல் நான் விடுதலையில் (திராவிடர் கழகத்தின் செய்தித்தாள்) வேலை செய்து வந்தேன். ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு தணிக்கை அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். சாஸ்திரி பவனில் தான் தணிக்கை அலுவலகம் செயல்பட்டது. இரவு 10 மணிக்கு தணிக்கை அதிகாரி அடுத்த நாள் பிரசுரத்தின் நகலை தணிக்கை செய்வார். பாதிக்கும் மேற்பட்ட செய்திகள் தணிக்கை செய்யப்பட்டுவிடும். அந்த இடங்களை காலி பக்கங்களாகவே வெளியிட்டோம்.
அதன் பிறகு காலி பக்கங்கள் வரக்கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தார்கள். விடுதலை பத்திரிகையில் பெரியார் பெயருக்கு முன்பாக தந்தை எனக் குறிப்பிடக்கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தார்கள். முரசொலியில் அண்ணா, கலைஞர் பெயர் தாங்கி எந்த செய்தியும் வர முடியாது. தீக்கதிர் போன்ற பத்திரிகைகளும் கடுமையான கட்டுப்பாடுகளைச் சந்தித்தன. அப்போது அரசுக்கு ஆதரவான பத்திரிகைகள் என்ன வேண்டுமானாலும் பிரசுரிக்கலாம் என்ற நிலை இருந்தது” என்கிறார்.
இன்று நாடு முழுவதும் இத்தகைய சூழல்தான் நிலவுகிறது. ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் மோடி கும்பலை ஆதரித்து வெளி வருகின்ற செய்திகள் மட்டும்தான் மைய நீரோட்ட டிஜிட்டல் ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் வெளியாகிறதே ஒழிய பாசிச மோடிக்கு எதிரான கருத்துகள் அனைத்தும் மட்டறுக்கப்படுகின்றன அல்லது தடுத்து நிறுத்தப்படுகின்றன.
கருத்து சுதந்திரம் எதுமற்ற, ‘பாசிச சுடுகாட்டில்’, அமர்ந்துக் கொண்டு ஜனநாயகத்தை பற்றி கதைக்கிறார்கள். இந்த பாசிச அபாயத்தை முறியடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆக்கபூர்வமாகவோ, கொள்கை பூர்வமாகவோ திட்டங்கள் எதுவும் இல்லை.
மாறாக தங்கள் ஆதரவு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மோடிக்கு எதிர்ப்புணர்வு உள்ளது போலவும், எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் என்பதைப் போலவும் கருத்துகளை வெளியிட்டு திருப்திப்பட்டுக் கொள்கின்றனர்.
கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கையை கைவிடாமல் பாசிசத்தை ஒருக்காலும் வீழ்த்த முடியாது. இந்தியாவின் பிற்போக்குத் தன்மைக்கு பொருத்தமாக பார்ப்பன (இந்து) மதத்தின், ‘அருமை-பெருமைகளை’ எடுத்துக் கூறுகின்ற காவி பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பது மட்டுமே பாசிச எதிர்ப்பு என்று பொருளாகாது.
நாட்டின் பிரதான அபாயமாக மாறியுள்ள கார்ப்பரேட் – காவி பாசிசத்தை எதிர்த்து புரட்சிகர, ஜனநாயக சக்திகள், இயக்கங்கள், தனி நபர்கள் உள்ளிட்ட அனைத்து சக்திகளையும் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைப்போம்.
அறிவிக்கப்படாத அல்லது அறிவிக்கப்படப் போகின்ற எமர்ஜென்சியை எதிர்த்து முறியடிக்கின்ற போரில் பாட்டாளி வர்க்கம் முன்னணி படை வரிசையில் நின்று களம் காண்போம்.
◾கணேசன்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி