நாகாலாந்து படுகொலைகள்!
பாசிச பயங்கரவாதமே இந்திய ஜனநாயகம்’!


கடந்த 40 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலம் நாகாலாந்தில், நாகர்களுக்கு எதிராக இந்திய அரசு இராணுவத்தின் மூலம் தாழ்நிலை போரை நடத்தி வருகிறது. இந்த மாநிலத்தில் செயல்படும் இடதுசாரி அமைப்பான NSCN-IM, NSCN(K) போன்ற அமைப்புகளின் மீது தேடுதல் வேட்டையை நடத்துவது என்ற பெயரில் கேள்விக்கிடமற்ற பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி வருகிறது இந்திய ராணுவ கொலைகார படை.

சனிக்கிழமை இரவு (04- 12- 2021) நாகாலாந்து மாநிலத்தில் மோன் மாவட்டத்தில் ஓடிங் என்ற பகுதியில் சுரங்க வேலைக்கு இரண்டாவது பணிக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் மீது இராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை ’தீவிரவாதிகள்’ என்று நினைத்து தவறுதலாக செய்துவிட்டதாக இராணுவத்திலிருந்து செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் 13 தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நாகாலாந்து மக்கள் முன்னணி அமைப்பின் முன்னாள் தலைவர் டி.ஆர்.ஜெலியாங் கண்டனம் தெரிவித்துள்ளார். டிசம்பர்-4 ஐ ’நாகாலாந்தின் கருப்பு தினம்’ என்று நாகாலாந்து மக்கள் அறிவித்துள்ளனர்.

பாசிச மோடி ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து ’அர்பன் நக்சல்கள்’ என்ற பெயரில் அறிவு துறையினரை எந்த விசாரணையுமின்றி பொய்யான ஆதாரங்களை உருவாக்கி சிறையில் அடைக்கின்றனர். மாவோயிஸ்டுகள், காஷ்மீரில் போராடுகின்ற அமைப்புகள், வடகிழக்கு மாநிலங்களில் போராடுகின்ற பல்வேறு போராளி அமைப்புகள் அனைத்தையும் விசாரணையின்றி சுட்டுத் தள்ளுவதற்கான உரிமை தமக்கு இருப்பதாக கருதிக்கொண்டு வெறியாட்டம் போடுகிறது.

இராணுவத்தின் அதிக்கிரமங்களை கேள்வி கேட்டாலும், விமர்சனம் செய்து பத்திரிக்கையில் எழுதினாலும் NIA என்கிற கடிவாளமற்ற உளவுப் படையைக் கொண்டு தேடுதல் வேட்டை நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அவர்களை UAPA சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதும் அல்லது தீவிரவாதிகள் என்று பெயர் சூட்டி சுட்டுத் தள்ளுவதும் அன்றாட நிகழ்வுகளாக மாறி வருகிறது.

அன்றாடம் நடக்கும் இதுபோன்ற செயல்களில் ஒன்றிரண்டு தான் செய்தியாக வெளி வருகிறது. மற்றவை அனைத்தையும் ‘தேசபக்த ஊடகங்கள்’ இருட்டடிப்பு செய்து விடுகின்றன.

இந்தியாவில் சொல்லிக் கொள்ளப்படும் ’பெயரளவிலான ஜனநாயக உரிமைகள்’ அப்பட்டமான பாசிச சர்வாதிகாரத்தை அறிவிப்பதற்கு தடையாக இருக்கிறது. அதனால் சட்டப்படியே தீவிரவாதிகள் என்றும், பிரிவினைவாதிகள் என்றும் ஆளும் வர்க்கம் முடிவு செய்துவிட்டால் விசாரணையின்றி உயிரை கொல்வதற்கு உரிமை இருக்கிறது என்பதை போல காவி பாசிஸ்டுகள் தனது அதிகாரத்தை கொண்டு பயங்கரவாத செயல்களில் துணிச்சலுடன் ஈடுபடுகின்றனர்.

படிக்க:

நாகலாந்தில் அரச படுகொலை – மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி 

000

இந்திய ஒன்றியமானது 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதாக கூறிய பின்னர், இந்தியாவில் இருந்த பல்வேறு தேசிய இனங்களை பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், துப்பாக்கி முனையிலும் ஒன்றிணைத்து ’ஏக இந்தியா’ என்ற கட்டமைப்பை சர்தார் பட்டேல் தலைமையிலான இந்திய ஆளும் வர்க்கம் உருவாக்கியது. காஷ்மீரிலும் சரி! வடகிழக்கு மாநிலங்களிலும் சரி! இந்திய அரசாங்கத்துடன் தாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் அல்லது தமது நிலத்தை இந்தியாவுடன் இணைக்கும் போது இந்திய அரசு கொடுத்த வாக்குறுதிகள் ஆகியவற்றை நேர்மையாக இந்திய ஆளும் வர்க்கம் அமுல்படுத்தும் என்ற கண்ணோட்டத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் அமைதியாக காத்திருந்தனர்.

ஆனால் இந்திய ஒன்றிய அரசு தனது வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு துப்பாக்கி முனையில் இந்தியாவை கட்டமைக்க முயன்றது. இதனால் பல்வேறு தேசிய இனங்கள் இந்திய ஒன்றிய அரசின் மீது நம்பிக்கை இழந்தனர். தேசிய இனங்களின் சிறைக் கூடமாக திகழ்கின்ற இந்தியாவிலிருந்து நமக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து போராடத் துவங்கினர்.

அதில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நாகாலாந்து முன்னிலையில் நிற்கிறது. பிரிட்டனின் காலனியாதிக்கத்தின் போது அவர்களுக்கு அடிபணியாத தேசிய இனமாக நாகர்கள் முன் நின்றனர். அப்படிப்பட்ட போர்க்குணமிக்க மக்களை ஏமாற்ற முயன்ற இந்திய தேசிய அரசு அதற்கான விலையை இன்று வரை கொடுத்து வருகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து பூகோள ரீதியில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. இதன் காரணமாகவே 1883 பிரிட்டிஷ் அரசாங்கம் நாகாலாந்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அசாம் மாநிலத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வ வளங்களை, கனிம வளங்களை கொண்டு செல்வதற்கு எல்லைப்பகுதியாக இருந்த நாகாலாந்தை ஆக்கிரமிக்க வேண்டியிருந்தது. ஆக்கிரமிப்பை எதிர்த்த போராடிய பழங்குடி மக்களை அடக்கி ஒடுக்க வேண்டியிருந்தது.

1946-ஆம் ஆண்டு நாகாலாந்து பிரதிநிதிகள் அடங்கிய நாகா தேசிய கவுன்சில் என்ற அமைப்பும், இந்திய பிரதிநிதியான கவர்னர் சர் அக்பர் என்பவருக்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் துவங்கியது. இதன் விளைவாக 1947 ஆம் ஆண்டு, ஜூன் 22 அன்று ஒன்பது அம்ச திட்டத்தை ஏற்று இரு தரப்புகளும் கையெழுத்திட்டனர் அந்த ஒன்பது அம்ச திட்டம் இன்று வரை நடைமுறைப்படுத்தப்பட வில்லை ஆனால் இந்த 9 அம்ச திட்டத்தையும் நாகா விடுதலையில் முன் நின்ற சில அமைப்புகள் ஏற்கவில்லை.

சுதந்திரம் பெற்றதாக கூறப்பட்ட இந்தியாவில் 1951 மே மாதம் நடந்த பொது வாக்கெடுப்பில் 99 சதவீதத்தினர் சுதந்திர நாகாலாந்து இருக்க வேண்டும் என்றே வாக்களித்தனர். நாகா தேசிய கவுன்சிலின் தலைமையை கைப்பற்றிய அங்காமி சபு பிசோ போன்றவர்களால் 1954 ஆம் ஆண்டு நாகாலாந்து சுதந்திர இராணுவமும் உருவாக்கப்பட்டது. 1954, மார்ச் 22ஆம் தேதி சுதந்திர ஐக்கிய அரசாங்கம் உருவாக்கப்பட்டு சுதந்திர நாகாலாந்து கொடி ஏற்றப்பட்டது. இதனை முறியடிக்கவும், நாகாலாந்தை இந்திய ஒன்றிய அரசுக்குள் கொண்டுவரவும் தொடர்ந்து இந்திய ஆளும் வர்க்கம் பல வழிகளில் தொடர்ந்து முயற்சி செய்தது.

1975 ஆம் ஆண்டு நாகா தேசிய கவுன்சில் கையெழுத்திட்ட ’ஷில்லாங் ஒப்பந்தத்திற்கு’ எதிராகவும், தனி நாகாலாந்து கோரிக்கையின் தொடர்ச்சியாகவும் நாகா தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் என்ற அமைப்பானது ஜனவரி 31, 1980 ஆம் ஆண்டு இசக் சிஷி ஸ்வு, துயிங்கலெங் முய்வா மற்றும் கப்லாங் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு இவர்களுடன் இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி பணிய வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

நாகாலாந்தில் செயல்படுகின்ற ஏழு போராளி அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய இந்திய ஒன்றிய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. மோடி அரசு நாகாலாந்து போராளிகளுடன் போட்டுக் கொண்ட இந்த ஒப்பந்தமானது நாகாலாந்தின் பாரம்பரியம் மற்றும் மக்களின் தேவைகளைப் பற்றி புரிதல் இல்லாத ஒரு தரப்பு கருத்துக்களை மட்டும் முன்வைக்கின்ற ஒப்பந்தமாக உள்ளது என்று NSCN அமைப்புகளில் ஒரு பிரிவு விமர்சித்துள்ளது.

நாகாலாந்து மாநிலத்துக்கு என்றே தனியாக ஒரு கொடியையும், தனியாக ஒரு அரசியல் சட்டத்தையும் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நாகாலாந்தில் போராடுகின்ற பல்வேறு போராளிக் குழுக்கள் முன்வைக்கிறது. இதற்கு மாற்றாக இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு பகுதியாகவே நாகாலாந்தை கருத முடியும். அதற்கு தனியாக அரசியல் சட்டம் இயற்ற இயலாது என்று இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்து தனது பேச்சுவார்த்தைகளின் மூலம் நிர்பந்தித்து வருகிறது.

தற்போது தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி உளவுத்துறை உயரதிகாரி (ஓய்வு) மோடி அரசினால் 2014 ஆம் ஆண்டு  சமாதான பேச்சுவார்த்தை இடைத் தரகராக நியமிக்கப்பட்டார். இவர்களின் மூலம் ஒருபுறம் இந்த குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே அவர்களுக்குள் பதவி, பணம் ஆசைகளைக்  காட்டியும் ஒடுக்குமுறைகளை ஏவியும், போராளிக் குழுக்களை பிளவு படுத்துவதற்கு இந்திய உளவுத்துறை ஐபி தொடர்ந்து முயற்சி செய்து வந்தது.

சமீபத்தில் ஆர்.என் ரவியை அங்கிருந்து மாற்றி விட்டு ஆர்.கே.மிஸ்ரா என்ற புதிய பேச்சு வார்த்தையாளர் ஒருவரை நியமித்துள்ளது. இவரது நியமனத்தை அங்குள்ள போராளிக் குழுக்கள் ஏற்கவில்லை தொடர்ந்து நாகாலாந்துக்கென்று தனி கொடியையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் கோரி வருகின்றனர். இந்த சூழலில் தற்போதைய படுகொலை ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக கருதுவதற்கு அதிக வாய்ப்புள்ளது இனிமேல் போராடுபவர்களுடன் பேச்சுவார்த்தை கிடையாது. சுட்டுத் தள்ளுவது தான் ஒரே தீர்வு என்பதை உணர்த்துவதற்காவே, எச்சரிக்கும் வகையில் இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.

காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் போராடுகின்ற அமைப்புகளை தீவிரவாத குழுக்கள் பிரிவினைவாத குழுக்கள் என்று முத்திரை குத்தி அவர்களை ஒடுக்க முயற்சிக்கிறது இந்திய ஆளும் வர்க்கம். அவர்கள் முன்வைக்கின்ற அரசியல், பொருளாதார காரணங்களை பரிசீலிப்பது கிடையாது. நிபந்தனையற்ற முறையில் இந்திய ஒன்றிய அரசின் அதிகாரத்துக்கு அடிபணிய வேண்டும் என்பதே இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கமாக உள்ளது.

அதிலும் குறிப்பாக பாசிச பாஜக அதிகாரத்திற்கு வந்தவுடன், ’ இந்து,இந்தி,இந்தியா’ என்ற கொள்கையை முன்வைத்து ஒரே நாடு-ஒரே சட்டம் என்பதை முன் நிறுத்துவதற்கு தேசிய இனங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்களின் அதிகாரங்களை வெட்டி சுருக்குவது, எதிர்த்து போராடுகின்ற மாநிலங்களில் இராணுவத்தையும் துணை ராணுவப் படையை அனுப்பி உள்நாட்டு மக்களுக்கு எதிராக போரை நடத்துவது மேற்கு பகுதியில் நடக்கும் போராட்டங்களுக்கு பாகிஸ்தானையும், வடக்குப் பகுதியில் நடக்கின்ற போராட்டங்களுக்கு சீனாவையும் காரணம் காட்டி இந்திய தேசிய வெறியை தூண்டுவது இதன் மூலம் இந்தியாவை கட்டமைப்பது என்ற நோக்கத்தில் பாசிஸ்டுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

நாகாலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் இராணுவத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற வானளாவிய அதிகாரத்தை பறிக்கப்பட வேண்டும். சிறப்பு ஆயுத பாதுகாப்பு சட்டத்தை நீக்க வேண்டும்.  எல்லை பாதுகாப்பு என்ற பெயரில் தினவெடுத்து திரியும் இராணுவ குழுக்களை கலைக்க வேண்டும். இந்தப் படுகொலையில் ஈடுபட்ட அனைவரையும் கொலை வழக்கில் பதிவு செய்து தண்டிக்க வேண்டும்.

பல தேசிய இனங்களின் சிறைக் கூடமான இந்திய ஒன்றியம் போராடும் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதற்கு முதற்படியாக கார்ப்பரேட்-காவி பாசிச கும்பலை வீழ்த்த வேண்டும் என்பதே உடனடி தீர்வாக உள்ளது.

06-12-2021.                                                                                பா.மதிவதனி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here