கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்காகவே காவி பாசிசம்!

அந்த நிமிடம் வரை பாஜகவிலிருந்து நுபுர்ஷர்மாவின் கருத்தை யாரும் கண்டிக்கவில்லை. வழக்கமானதுதான் என அவர்களும் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கலாம்.

0
24

கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்காகவே காவி பாசிசம்!


ம்பானிக்கும் அதானிக்கும் ஒரு பிரச்சினை என்றால் மோடி எந்த லெவலுக்கும் போவார் என்பதை சமீபத்திய நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அதே பிரச்சினையில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

2014-ல் மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதானியின் சொத்து மதிப்பு பல நூறு மடங்கு எகிறியுள்ளது. இப்பொழுது இந்தியாவின் முதல் பணக்காரன் அம்பானியா? அதானியா என்பதே ஹாட் டாப்பிக்.

மொத்த நாட்டையும் அம்பானி அதானிகளுக்கு எழுதி வைக்காமல் இருப்பது தான் பாக்கி. அதானி போன்ற தரகு முதலாளிகள் தேசம் கடந்து தொழில் செய்துவருகிறார்கள். அவர்களுக்கு நமது சேமிப்பு பணத்திலிருந்துதான் வங்கிகள் மூலம் கடன் அளிக்கிறது ஒன்றிய அரசு. அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அவர்களுடைய தொழிலுக்கான மூலப்பொருட்கள் இறக்குமதியும் செய்யப்படுகிறது.

படிக்க:

♦  மோடியின் அரபிக் குத்து!
♦  ஒட்டாண்டி நிலையினை நோக்கி இந்தியாவினை உந்தித் தள்ளும் இந்துத்துவா!

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுடைய தொழிலுக்கு யாராவது பாதிப்பை ஏற்படுத்தினால்!? அப்படியான ஒரு நிலைதான் மோடி அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. அரசின் கொள்கையான இந்துராஷ்டிராவை நிறுவ ஆளும் பாஜக அரசு தீவிரமாக வேலை செய்து வருகிறது. அதற்கான நிதியை தாராளமாகக் கொடுத்து உதவுகிறார்கள் இந்தியாவிலுள்ள கார்ப்பரேட் முதலாளிகள். இன்றைய நிலையில் பாஜக கட்சியின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடி. இந்தியாவில் உள்ள இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு பாஜக தான் சரியான தீர்வு என கார்ப்பரேட்டுகள் முடிவு செய்தே 2014-இல் ஆட்சியில் அமர்த்தினர். அதற்கேற்றார்போல் கார்ப்பரேட்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் மாற்றப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் விற்கப்படுகின்றன. பல லட்சம் கோடிகள் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டன. வங்கிகள் தனியார்மயம், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம், ரயில்வே தனியார் மயம் என கார்ப்பரேட்டுகள் காலால் இட்ட வேலையை தலையால் செய்து வருகிறார் பாசிஸ்ட் மோடி.

இப்படி கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படும் மோடி அரசை கண்டித்தும், கார்ப்பரேட்டுகளின் சுரண்டலை கண்டித்தும் போராடும் மக்களை திசைதிருப்ப இந்து-முஸ்லிம் பிரச்சனைகளை உருவாக்குவது மோடி அரசின் சாணக்கியத்தனம்.

தன்னுடைய இந்துராஷ்டிர கனவை நனவாக்குவதற்கு இதனை பயன்படுத்திக்கொள்கிறது  பாஜக. ஆனால் அவர்களின் வேலைத்திட்டத்தில் இப்படி சிக்கல் ஏற்படும் என பாஜக எதிர்பார்த்திருக்காது.

பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கடந்த மே 26 அன்று தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதனை ஆமோதிக்கும் விதமாக பாஜக டெல்லி ஊடகப் பிரிவு தலைவர் நவீன் ஜிந்தால் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். நூபுர் சர்மாவின் கருத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. கான்பூரில் நடந்த போராட்டம் வகுப்புவாத மோதலாக மாறியது. 1000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 55 பேர் இஸ்லாமியர்கள்.

கான்பூரில் நடந்த போராட்டத்தை சமாளிக்க வந்த காவல்துறை

இதில் என்ன பிரச்சனை! பாஜகவும் சங்பரிவார கும்பலும் தினம் தினம் இஸ்லாமியர்கள் குறித்தும் மசூதிகள் குறித்தும் பிரச்சினைகளை கிளப்பி கொண்டேதான் உள்ளது. இங்கே உள்ள தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் போராட்டம் நடத்துவதும் இந்தியாவில் இயல்புதானே! ஆனால் நுபுர்ஷர்மாவின் கருத்துக்கு பிரச்சனை வேறு வடிவத்தில் தோன்றியது

அந்த நிமிடம் வரை பாஜகவிலிருந்து நுபுர்ஷர்மாவின் கருத்தை யாரும் கண்டிக்கவில்லை. வழக்கமானதுதான் என அவர்களும் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கலாம். மாட்டுக்காக மனிதன் கொலை செய்யப்படும்போது வாய் திறக்காத பிரதமர் மோடி இதையா கண்டித்து பேசப் போகிறார்.

பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா

நுபுர்ஷர்மாவின் நபிகள் குறித்து சர்ச்சை பேச்சு அதிர்வலையை உண்டாக்கிய இடம் வளைகுடா நாடுகள். அதாவது குவைத், கத்தார், பஹ்ரைன், ஓமன், இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மாலத்தீவு, லிபியா, எகிப்து, துருக்கி, மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பை, கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். அந்த நாட்டிலுள்ள இந்திய தூதரை அழைத்து விளக்கம் கேட்டுள்ளார்கள். கத்தார் இந்திய அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரியது.

வளைகுடா நாடுகளில் இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என போர்க்குரல் கிளம்பியுள்ளது. சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத் போன்ற நாடுகளில் கடைகளிலிருந்து இந்திய பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்திய பொருட்கள் மீது தடை செய்யப்பட்ட பொருட்கள் என ஸ்டிக்கர் ஒட்டி ஓரம்கட்டி வைக்கப்பட்டுள்ளன.

நுபுர் ஷர்மா பேசி 10 நாட்கள் வரை கண்டுகொள்ளாத மோடி, அம்பானி அதானி உள்ளிட்ட முதலாளிகளுக்கு பிரச்சனை என்றதும் நுபுர் ஷர்மாவை கட்சியிலிருந்து நீக்கியது. அரேபிய நாடுகளின் கண்டிப்புக்கு பிறகு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னரே வளைகுடா நாடுகளின் ஆத்திரம் அடங்கியது. இவ்வளவு பிரச்சினைகளுக்குப் பிறகும், அவர்கள் இருவரும் கைது செய்யப்படவில்லை என்பதுதான் காவி பாசிஸ்டுகளுக்கு கிடைக்கும் தனிச் சலுகை. ஆனால், நுபுர் ஷர்மாவின் பேச்சைக் கண்டித்து கான்பூரில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தது மட்டுமல்லாமல் அவர்கள் படங்களை போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது உ.பி யோகி அரசு.

பாஜக நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து அதிரடி ஆக்சன் காட்டக் காரணம்கூட வளைகுடா நாடுகளில் வேலைப்பார்க்கும் லட்சக் கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அல்ல. அம்பானி, அதானியின் கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதால் தான்.

படிக்க:

மக்களிடம் பிடுங்கி கார்ப்பரேட்டுகளுக்கு படையல்!
♦ அகண்ட பாரத கட்சிக்கு வந்த ‘சத்திய சோதனை’!

கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்காகவே காவி பாசிசம். கார்ப்பரேட்டுகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் சாவர்க்கர் வழியில் அரேபிய நாடுகளின் காலை நக்கவும் தயங்காது காவி பாசிசம்.

  • மாரிமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here