சட்டத்திற்கு கட்டுப்பட மாட்டார்கள், நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்க மாட்டார்கள், அராஜகம், அடாவடித்தனம் அவர்களின் இயல்பு! பணம், செல்வாக்குள்ளவர்களுக்கு தனி மரியாதை தந்து லட்சக்கணக்கில் தட்சணை பெறுவார்கள்! எளியோர்களை ஏறெடுத்தும் பார்க்காமல் மணிக்கணக்கில் காத்திருக்கச் செய்வார்கள்! யாரும் கேள்வி கேட்க முடியாது. கேட்பவர்களை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளுவார்கள்!

கடந்த டிசம்பர் 22 ல் ஆருத்திரா தரிசனத்திற்கு கோயிலில் லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். வழக்கமாக மதியம் 12 முதல் ஒரு மணிக்குள் ஆருத்திரா தரிசனம் பொது மக்களுக்கு கிடைக்கும். ஆனால், அன்றோ..இரவு ஏழு மணி வரை மக்கள் கோவிலில் பசியோடு  நகராமல் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டனர்! காரணம், லட்சக்கணக்கில் தட்சிணை தரும் செல்வந்தர்களை மாலை, மரியாதை போட்டு கவனித்து பெரும் தட்சிணை வாங்குவதில் மட்டுமே அவர்கள் தீவிரம் காட்டினார்கள். இறுதி வரை அவர்களை மிச்ச மீதி இல்லாமல் உபசரித்து அனுப்பிய பிறகே, கோவில் வளாகத்தில் காத்திருக்கும் மக்க்ள் நினைவே தீட்சிதர்களுக்கு வந்தது! இடைப்பட்ட நேரத்தில் குழந்தை குட்டிகளுடன் மற்றும் வயதான முதியோர்களுடன் காத்திருந்த மக்கள் தீட்சிதர்களை சபித்து தள்ளியது தான் மிச்சம்!

கிட்டதட்ட ஆறேழு மணி நேரம் பெரும் கூட்டம் நெருக்கியடித்து கோவில் வளாகத்தில் கொரானா காலத்தில் காக்கவைக்கப்பட்டது தொடர்பாக தீட்சிதர்கள் மீது மணிவண்ணன் என்பவர் புகார் தந்தார். அந்த புகாருக்கு எந்த மதிப்பும் இல்லை.

கடந்த பல ஆண்டுகளாக அதிமுக ஆட்சியாளர்கள் தீட்சிதர்களுக்கு அடிமை சேவகம் செய்தார்கள்! ஆட்சி மாற்றம் நடந்த பிறகும் இங்கே எந்த மாற்றமும் இல்லை என சிதம்பரம் மக்கள் சொல்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் இங்கே தொடர்ந்து அராஜகங்களை தீட்சிதர்கள் அரங்கேற்றி வரத்தான் செய்கின்றனர். அவர்கள் மீதுள்ள  மக்கள் கோபத்தை சரிகட்ட வழக்கு போட்டதாக கணக்கு காட்டுகிறார்கள் ஆட்சியாளர்கள். ஆனால், கைது நடப்பதில்லை.

”இப்போதும் கூட தலித் பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் பொத்தாம் பொதுவாக இருபது பேர் மீது எப்.ஐ.ஆர் போட்டுள்ளனர். அதில் இன்னின்னார் என்று பெயர் கூட  எழுதவில்லை! நடந்த சம்பவத்திற்கு வீடியோ ஆதாரங்கள், நேரடி சாட்சியங்கள் உள்ளன. ஆனால், திமுக அரசின் காவல்துறை இப்படி கண் துடைப்பு செய்யலாமா?” என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது!

இன்னும் எத்தனை காலம் தான் சிதம்பரம் கோவில் சிறுமைகள் தொடருமோ தெரியவில்லை. சிவன் கோயிலில் சிற்றம்பல மேடை ஏற முடியாது, தேவாரம் பாட முடியாது, மீறிச் சென்றால் அவமானங்கள் நடக்கும். அதற்கு வழக்குகள் பாயலாம். ஆனால், கைதுகள் நடக்காது! இது அதிமுக, திமுக எந்த ஆட்சியானலும் இது தான் நிலைமை!

சுமார் 12 நூற்றாண்டுகளுக்கும் மேலாக, சிதம்பரம் கோவிலில் தமிழ் மக்கள் தமிழில் பாடி வழிபட போராடி வருகின்றனர். தமிழ் மன்னர்கள் ஆட்சி, வெளி மாநில மன்னர்கள் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சி, பிறகு மக்களாட்சி ஏற்பட்டு இந்த 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஒரு சாதாரண விருப்பம் – சிவபெருமானை தமிழில் பாடி வழிபடும் விருப்பம் – தொடர்ந்து தடுக்கப்பட்டு வருகிறது! ”எத்தனை அரசாங்கங்கள் வந்தாலும் எங்கள் ஆதிக்கத்தை தடுக்க முடியாது.எங்களை மீறி எதுவும் நடக்காது” என்று தீட்சிதர்கள் தீண்டாமை மனோபாவத்தை கடைபிடிக்கிறார்கள்! உலகம் எவ்வளவு மாறினாலும் தங்கள் மனதை மாற்றிக் கொள்ளாமல் தீவிரம் காட்டும் தீட்சிதர்கள் உண்மையில் தீரர்களே!

எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவில் உருவாக்கத்தில் அக்கால தமிழ் மன்னர்களுக்கும், மக்களுக்கும் பெரும்பங்கு உள்ளது! எந்த காலகட்டத்தில் இந்த தீட்சிதர்கள் கேரளாவில் இருந்து வந்து சேர்ந்தார்கள் என சரிவர சொல்ல முடியவில்லை. அவர்கள் மெல்ல,மெல்ல கோவிலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர்.வேதவழிச் சடங்குகளையே வழிபாட்டுமுறைகளாக்கி கொண்டனர்.

தில்லை நடராஜர் கோவிலில் சிக்கிக் கொண்ட தேவார ஓலைச் சுவடிகளை மீட்டு வர மாமன்னர் ராஜராஜனே படாதபாடுபட வேண்டி இருந்தது! கரையானுக்கு தந்தாலும் தருவோம். தமிழர் கைகளுக்கு அதை தரமாட்டோம் என்றவர்கள் அன்று பிடிவாதம் செய்தனர்.

சேரியில் பிறந்த சிவபக்தன் நந்தனின் சிதம்பரம் கோவில் நுழைவை தடுத்து அவரை தீக்கிரையாக்கிவிட்டனர். மக்கள் கொந்தளிப்பை அடக்க, அவர் சிவனோடு ஜோதியில் கலந்துவிட்டார் எனக் கூறி அவரை 63 நாயன்மார்களில் ஒருவராக்கிவிட்டார்கள்!

சைவப் பெரியவர் ஆறுமுக நாவலரை கோர்ட்டுக்கு இழுத்து அவமதித்து அபராதம் கட்ட வைத்தனர்.

வள்ளலார் ராமலிங்கசாமிகளை வாட்டி வதைத்து வடலூருக்கு இடம் பெயர வைத்தனர். இந்த வைதீக தீட்சிதர்களின் வன்மங்களை கண்டு தெளிந்து வள்ளலார் நிறையவே பாடி வைத்தார்!

இந்தக் கோவிலை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னும்,பின்னுமாக அரசாங்கங்கள் தொடர்ந்து பெரு முயற்சி செய்தவண்ணம் உள்ளன.

ஓமந்தூர் ராமசாமி முதல்வாராக இருந்த காலகட்டத்தில் எடுத்த முயற்சிகளை ராஜாஜி முதல்வாராக வந்த போது பாழ்படுத்திவிட்டார்.பிறகு காமராஜர் காலத்தில் எடுத்த நடவடிக்கைகளை பக்தவச்சலம் முதல்வராக இருக்கும் போது சிதைத்துவிட்டார். எம்.ஜி.ஆர். காலத்தில் ஆர்.எம்.வீரப்பன்,வி.வி.சுவாமி நாதன் ஆகியோர் எடுத்த நடவடிக்கைகளை தீட்சிதர்கள் கோட்டுக்கு சென்று தடுத்துவிட்டனர். பிறகு கருணாநிதி காலத்தில் அறநிலையத் துறை செயல் அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுப்பிரமணியசுவாமி சுப்ரீம் கோர்ட்டில் லாபி செய்தும், ஜெயலலிதா அரசு விட்டுக் கொடுத்தும் தடுத்துவிட்டனர்.

கடந்த காலத்தில் ஆறுமுகசாமி என்ற பெரியவர் சிதம்பரம் கோவில் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் பாட பல ஆண்டு போராட்டங்கள் நடத்தி, இறுதியில் கோர்ட்டானது குறிப்பிட்ட நேரத்தில்  பல கட்டுபாடுகளுடன் அவர் அங்கு தேவாரம் பாடலாம் என தீர்ப்பளித்தது. தற்போது அதைக் கூட அனுமதிக்க மறுக்கின்றனர் தீட்சிதர்கள்!

கொரோனா பரவல் இருப்பதால் தடுக்கிறார்களாம். கோவில் திறக்கப்பட்டுவிட்டது. கோவிலில் வழக்கம் போல அனைத்து செயல்பாடுகளும் நடக்கலாம். ஆருத்திரா தரிசனத்திற்கு ஒரு லட்சம் மக்கல் கூடலாம். ஆனால், ஒரு ஒற்றை மனிதன் தேவாரம் மட்டும் பாடக் கூடாது. அப்படி பாடினால் கொரானா பரவிவிடும் என்று இன்னும் எவ்வளவு நாள் பூச்சாண்டி காட்டுவார்கள்! அங்கு தேவாரம் பாடச் சென்ற சக தீட்சிதரையே டிஸ்மிஸ் செய்கிறார்கள்!

இந்த நிலையில் சிவபக்தையான ஒரு தலித் பெண் தேவாரம் பாட வந்தால் தாங்குவார்களா, தீட்சிதர்கள்! அவர்கள் மனதின் வன்மம் வார்த்தையாக,செயலாக வெளிப்பட்டு வைரலாகிவிட்டது.

பெண் பக்தர் ஜெயஷீலா அளித்த புகாரில் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது கூட்டமாக சேர்ந்து தடுத்தல், தாக்குதல், மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.ஆனால் நாட்கள் எட்டு நகர்ந்தும் இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்து மதத்திற்கு ஒன்று என்றால் பொங்கி குரல் கொடுப்பது நாங்களே எனக் கூறிவரும் பாஜக தலைவர்களும், இந்துத்துவ போராளிகளும் குறிப்பிட்ட இந்த விவகாரத்தில் மட்டும் மெளனம் சாதிக்கிறார்கள். இதில் மட்டுமா மெளனம் சாதிக்கிறார்கள்? இதோ இந்த கோவில் தீட்சிதர்கள் தொடர்பாக பல்லாண்டுகளாக சொல்லப்பட்டு வரும் கீழ் கண்ட புகார்கள் குறித்தும் இவர்கள் வாய் திறப்பதில்லை;

# இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தீட்சிதர்கள் நச்சரித்து பணம் பிடுங்குகிறார்கள்.

# கணிக்கைகளுக்கும், திருப்பணி நன்கொடைகளுக்கும் முறையான கணக்குகள் காட்டுவதில்லை.

# கனக சபை, நிருத்தன சபை விமானங்களில் உள்ள தங்கத்தையும், புதிய கலசங்களில் உள்ள தங்கத்தையும் சுரண்டி விற்றுவிட்டார்கள்!

# கும்பாபிஷேகம் போன்றவற்றுக்கு பெரும் நன்கொடைகள் தரும் முக்கியஸ்தர்களுக்கு கூட  நிகழ்வுகளில் முக்கியத்துவம் தராமல் ஓரம் கட்டுகிறார்கள்!

# கோவில் பராமரிப்பில் பெரும் மெத்தனம் காட்டுகிறார்கள்.கோவிலை தூய்மையாக வைத்துக் கொள்வதில்லை.

# ஆலயத்தில் உள்ள சன்னிதிகளை 14 சன்னதிகளையும், திருவிழாக் காலங்களில் நடராஜர் சன்னதியையும் அதிகத் தொகைக்கு ஏலம்விட்டாலும், அதை கணக்கில் கொண்டு வருவதில்லை.

# தங்க கவசங்களில் உள்ள தங்கத்தின் அளவு அவ்வப்போது குறைந்து வருவது, வெள்ளிச் சொம்புகள் காணாமல் போவது ஆகியவை சர்வ சாதாரண நிகழ்வாக உள்ளன!

# தில்லை வளாகத்திற்குள் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு பலவிதங்களிலும் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திய வண்ணம் உள்ளனர்.

இந்த புகார்கள் இந்து பக்தர்களால் பல்லாண்டுகளாக எழுப்பப்பட்டு வருபவை! இதை தீர்த்து வைக்கவும் தீட்சிதர்களின் மனப்போக்கை மாற்றவும் பாஜக தலைவர்கள் யாரும் ஆர்வம் காட்டுவதே இல்லை.

இது குறித்து தில்லை கோவில் தொடர்பாக பல்லாண்டுகள் வழக்குகள் நடத்தியவரான வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன் தில்லை கோயிலும், தீர்ப்புகளும் என்ற நூலே எழுதியுள்ளார். அவரிடம் பேசிய போது, ’’சட்டமன்றத்தில் தனிசட்டம் ஒன்றை கொண்டு வந்து சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது தீட்சிதர்களின் நூற்றாண்டு கால தீண்டாமை மனோபாவம் மாறுவதற்கான துளியளவு அறிகுறி கூட தென்படவில்லை. ஆகவே நொந்து கிடக்கும் மக்கள் சார்பாக சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு தமிழக அரசு கொண்டு வரும் பட்சத்தில் அது மிகப் பெரிய வரவேற்பை பெறும்! ஆனால், அதற்கான ‘தில்’ இருக்கிறதா திமுக அரசுக்கு என்பதற்கு காலம் தான் விடை சொல்லும்.

  • சாவித்திரி கண்ணன்

நன்றி

அறம் இணைய இதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here