கடந்த சில நாட்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்ட சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தால் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் புரட்சி பாரதம் கட்சியின் பூவை. ஜெகன்மூர்த்தி கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில், ஜெகன்மூர்த்தி மீதான இந்த வழக்கிற்கு திமுக அரசின் தலித் தலைவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சிதான் காரணம் எனப் பேசி வருகிறது திமுக எதிர்ப்பு தலித் அறிவுஜீவி வட்டம். ஆனால், இந்த வழக்கிற்கு அடித்தளமான சம்பவங்கள் அதற்கு மாறானதாகவே தெரிகிறது.
காதல் திருமணம்- சிறுவன் கடத்தல்!
திருவள்ளூர் மாவட்டம் திருவாளங்காடு அருகில் உள்ள களாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 23- வயது இளைஞர் தனுஷ். தேனி மாவட்டம் தேனியைச் சேர்ந்தவர் விஜயாஸ்ரீ (21 வயது). இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி காதலித்து வந்துள்ளனர்.
இவ்விவரம் பெண்ணின் தந்தை வன ராஜாவுக்குத் தெரிய வரவே வேகவேகமாக வேறொரு மாப்பிள்ளைக்கு தன் மகளை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். இதனை அறிந்த விஜயாஸ்ரீ தனது காதலன் இருப்பிடத்திற்கு வந்து சேருகிறார். பின்பு நண்பர்கள் உதவியுடன் கடந்த 15-05-2025 அன்று சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்கின்றனர். அத்துடன் அவர்கள் வேறு இடத்தில் தனுஷின் நண்பர் வீட்டில் தங்கி கொள்கின்றனர்.
விஜயாஸ்ரீயின் தந்தை வனராஜா முன்னாள் அமைச்சர் ஓபிஎஸ் – ன் பினாமி என்று கூறப்படுகிறது.
அந்த அடிப்படையில் வனராஜா தனது மகள் விஜயாஸ்ரீ பெயரில் நூற்றுக்கணக்கான கோடி சொத்துக்களை பதிவிட்டு உடைமையாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.
காதல் மணம் காரணமாக தமது பெரும் பணத்திற்கு ஆபத்து வந்து விடுமோ என ஆத்திரமடைந்த ஓபிஎஸ் தனது பினாமி வனராஜாவிற்கு நெருக்கடி கொடுத்துள்ளார் எனத் தெரிய வருகிறது .
உடனே வனராஜா, முன்பு காவல்துறையில் போலி சான்றிதழை கொடுத்து காவலராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றி உண்மை தெரிந்த பின் டிஸ்மிஸ் செய்யப்பட்ட மகேஸ்வரியின் உதவி பெற்றிட அணுகியுள்ளார்.
முன்பிருந்தே மகேஸ்வரிக்கும் ஏடிஜிபி ஜெயராம்க்கும் ‘நல்லுறவு’ இருந்து வந்துள்ளதை பயன்படுத்தி அப்பெண் ஏடிஜிபி உதவியை நாடியுள்ளார்.
ஏடிஜிபி ஜெயராமுக்கும் புரட்சி பாரதம் தலைவர் இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கும் நீண்ட காலமாக ‘நல்லுறவு’ இருந்து வந்துள்ளது.
உடனே ஏடிஜிபி, ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ உதவியை நாட, ஜெகன்மூர்த்தியோ எப்பொழுதும் ரெடிமேடாக வைத்துள்ள தனது அடியாள் பட்டாளம் வக்கீல் சரத் உட்பட பலரை அனுப்பி அந்த இளம் காதல் தம்பதியரை கடத்தி வர உத்தரவிட்டுள்ளார். இவை அனைத்திற்கும் மகேஸ்வரி மூலமாக மிகப் பெருந்தொகை மேற்கண்ட இரு புள்ளிகளுக்கும் கைமாற்றப்பட்டுள்ளதாக உறுதிப்படத் தெரிகிறது.
இந்தக் கடத்தலுக்கு மிகவும் பெருந்தன்மையாக ஏடிஜிபி தனது சைரன் வாகனத்தை ஜெகன் எம்.எல்.ஏ வகையறாவிற்கு ஒப்படைத்துள்ளார். உடனே ஜெகனின் கையாளான வக்கீல் சரத் தலைமையிலான கும்பல் களாம்பாக்கம் விரைந்து தனுஷ் வீட்டின் கதவைத் தட்டி உள்ளனர். தம்பதிகள் வீட்டில் இல்லாததை அறிந்த அந்த ஆள் கடத்தல் கும்பல் தனுஷின் தம்பி இந்திரசந்த் என்ற சிறுவனை கடத்திச் செல்கின்றனர்.
இதனை அறிந்த தனுஷ் மற்றும் இந்தரசந்த் தாயான லட்சுமி அம்மாள் பதறி அடித்து காவல்துறையில் தமது மகன் கடத்தப்பட்ட விவரத்தை கூறி புகார் அளிக்கிறார்.
காவல்துறை உடனடியாக விசாரணை மேற்கொண்டதில் உண்மை வெளிப்பட்டு விட்டது. இதை அறிந்த ஏடிஜிபி ஜெயராம் மற்றும் ஜெகன்மூர்த்தி முதலானோர் பதறிப் போய் கடத்தப்பட்ட சிறுவனை உரிய இடத்திலேயே விடுவிக்கச் செய்கின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் கொடுத்த செருப்படி இடைக்கால உத்தரவு:
ஆள் கடத்தல் வழக்கு தீவிரமான சூழ்நிலையில் ஏற்கனவே வனராஜா (55),மணிகண்டன்(49), கணேசன் (47), ஜெகன் மூர்த்தியின் கையாள் வக்கீல் சரத் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்த காவலர் மகேஸ்வரி கைது செய்யப்பட்டிருந்தார். வழக்கில் சம்பந்தப்பட்ட ஏடிஜிபி, ஜெகன் மூர்த்தி கைது செய்யப்பட வேண்டிய சூழல் உருவானது.
படிக்க:
♦ புதுக்கோட்டை சாதிய மோதல்களுக்கு காரணமானவர்களை உடனடியாக கைதுசெய்!
♦ சாதிவெறி கொலைகாரனை கொண்டாடுவதற்கு வெட்கமாக இல்லையா?
திருமிழிசை பகுதியில் உள்ள ஜெகன்மூர்த்தி வீட்டிற்கு டிஎஸ்பி தலைமையில் கைது செய்ய சென்ற பொழுது முன்கூட்டியே தன்னுடைய கட்சிகாரர்களுக்கு தகவல் கொடுத்து ஜெகன் வீட்டு முன் ஆயிரக் கணக்கில் கூடச்செய்து வீட்டுக்குள் காவல்துறையினரை நுழையவிடாமல் தடுத்தனர். சாதி மறுப்பு திருமண தம்பதியரை பிரிப்பதில் தமது ‘தலைவர்‘சம்பந்தப்பட்டு அசிங்கப்பட்டிருப்பதைப்பற்றி எல்லாம் அவர்களுக்குக் கடுகளவும் வெட்கமில்லை.
இறுதியில் மூன்று காவலர்கள் மட்டும் வீட்டுக்குள் நுழைந்து தேடியதில் வீட்டில் ஜெகன் இல்லை. தலைமறைவாகியுள்ளார் என்பதை உணர்ந்தது போலீஸ்.
இந்நிலையில் ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு வந்த பொழுது நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் புடைசூழ ஆஜரானார்.
பிரச்சினையின் உண்மையை முழுமையாக புரிந்து கொண்ட நீதிபதி வேல்முருகன் உடனடியாக கூடுதல் டிஜிபி ஜெயராமை கைது செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
அடுத்து, ஜெகனைப் பார்த்து ‘நீங்கள் ஒரு எம்எல்ஏ; பல்லாயிரம் பேர் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் நீங்கள். இப்படி ஆள் கடத்தல் வேலை செய்வதற்குத் தான் உங்களுக்கு மக்கள் வாக்களித்தார்களா? உங்கள் பணி எல்லாம் சட்டமன்றத்திலும் மக்கள் நலன் சார்ந்தும் இருக்க வேண்டும் ; இப்படிப்பட்ட இழிவான செயல்களில் ஈடுபடக்கூடாது.
இவ்வளவு தவறையும் செய்துவிட்டு எப்படி நீங்கள் உங்கள் வீட்டு முன்னால் ஆயிரக்கணக்கில் உங்கள் கட்சியினரைக் கொண்டு போலீஸை தடுப்பீர்கள்? இங்கே எதற்கு இவ்வளவு கூட்டம்? என் வீட்டிற்கு எதற்கு அவ்வளவு பேர் கூட்டமாக வந்தீர்கள்? இப்படி கூட்டத்தை காண்பித்து எல்லாம் என்னை பயமுறுத்த முடியாது.
கூடுதல் டிஜிபி கைது செய்யப்பட்டிருப்பது போல் உங்களையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட முடியும். மக்கள் பிரதிநிதி என்பதனால் இத்தோடு விடுகிறேன். உடனடியாக காவல்துறையினர் முன் ஆஜர் ஆகி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். இல்லையேல் என்ன நடக்கும் என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள் என்று கருதுகிறேன்… ‘
என்ற பாணியில் ஜெகனை செருப்பால் அடித்த மாதிரி உடைத்துப் போட்டார் நீதிபதி வேல்முருகன். இவ்விடயத்தில் அவரை பாராட்டுவோமாக.
உச்சநீதி மன்றம் சென்ற கூடுதல் டிஜிபி.
உடனடியாக கூடுதல் டிஜிபி ஜெய்ராம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, தான் இவ்வழக்கில் சம்பந்தப்படவில்லை என்றும், தான் ஐபிஎஸ் அதிகாரி என்றும், தனது பணிக்காலத்தில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஒருமுறை கூட ஆளானது இல்லை என்றும், எனவே தன்னை இவ்வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும், அரசு தரப்பில் தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் டிஜிபி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்றும், தற்காலிக பணி நீக்க உத்தரவை வாபஸ் பெற முடியாது என்றும், வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் எனவே இவருக்கு எந்த சலுகையும் காட்டலாகாது என்று வாதிட்டது.
ஆனால் உச்ச நீதிமன்றத்தில் அவர் டி ஜி பி அந்தஸ்தில் இருப்பதை கணக்கில் கொண்டோ என்னவோ ‘அவர்தான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகின்றாரே; சிறையில் அடைக்க வேண்டுமா ‘ என்று பிணை மட்டும் வழங்கியுள்ளது.
இந்நிலையில் மேற்கண்ட இருவர்மீதும் சிபிசிஐடி போலீசார் மூலமாக வழக்கு விசாரணை தொடர்கிறது.
ஆனால் இவ்விடயத்தை எப்படி பரிசீலிப்பது?
தமிழ்நாட்டின் தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் இன்னும் சில மாதங்களிலேயே ஓய்வு பெறப் போகிறார். கூடுதல் டிஜிபி ஜெய்ராம் அடுத்தாண்டு தான் ஓய்வு பெற இருக்கிறார்.
இப்படிப்பட்ட வழக்கில் இவர் மாட்டப்படாமல் இருந்தால் இவரது பெயரும் கூட டிஜிபி பணியிடத்திற்கு உரிய பட்டியலுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம். நிலைமை என்னவாகி இருக்கும் என்று சற்று சிந்தித்துப் பாருங்களேன்.
இவர் ஜெயலலிதா காலத்தில் இருந்து எடப்பாடி காலம் வரை அண்ணா திமுகவின் தீவிர பற்றாளர். ஏன், கையில் பச்சை குத்தி கொள்ளாத அண்ணா திமுக காரர் தான் இந்த ஜெய்ராம் என்ன பலரும் கூறுகின்றனர்.
ஜெகன்மூர்த்தியோ அண்ணா திமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நின்று கே.வி.குப்பம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.
இவர் எக்காலத்திலும் அண்ணா திமுக சார்பாளரே. குறிப்பாக ஓபிஎஸ்க்கு மிக நெருக்கமானவர். புரோக்கர் வேலை செய்வதில் முன்னணியாளர். இருந்தாலும் ஜெகன்மூர்த்தி மீது வழக்கு பதிந்த திமுக அரசைக் கண்டித்து முந்திக்கொண்டு அறிக்கை விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
பண மோசடி பணப்பரிவர்த்தனைகளில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி கொள்ளையடிப்பதில் கூடுதல் டிஜிபி ஜெயராமுக்கும் ஜெகன்மூர்த்திக்கும் நீண்ட கால உறவு இருந்து வந்திருக்கிறது என்பது ஊர்ஜிதம் ஆகிறது.
இதற்கு தோதாக தனது ’சாதி’ ஆட்களை திரட்டி வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட அயோக்கியத்தனங்களை கூச்சநாச்சம் இன்றி செய்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட கேடிகள் எப்படிப்பட்ட யோகியதாம்சத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்து பணியாற்றுவார்கள் என்பதனை நாம் தான் ஆழமாக பரிசீலிக்க வேண்டும்.
எனவே ஜெகன் போன்றவர்கள் பின் நிற்பவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் விடுதலையில் அக்கறையுள்ளவர்கள் சரியான இயக்கங்களை நோக்கி நகர வேண்டும். பாலியல் பொறுக்கி ஆமையன் சீமானை விட்டு
எப்படி பல அவரது ‘தம்பிகள்’ வெளியேறுகின்றனரோ அப்படி வெளியேறி சமூக மாற்றத்திற்கான புரட்சிகர இயக்கங்களில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொள்ள வேண்டும்.
- எழில்மாறன்
தலைப்பு, ‘அம்பேத்கர் படத்தை வைத்துக் கொண்டு செய்யும் வேலை பாரீர்’! என்பதில்
‘வேலை பாரீர்’என்பதற்குப் பதிலாக ‘அட்டூழியம் பாரீர்’! என அமைத்திருந்தால
கூடுதல் சிறப்பு பெற்றிருக்கும் என்பதை ஏற்கிறேன்.