பாட்டாளி வர்க்க கலாச்சாரப் படையின் முன்னணி
தோழர். ராஜ் கிஷோருக்கு வீரவணக்கம்!


கடந்த டிசம்பர் 22ஆம் தேதி தோழர் ராஜ் கிஷோர் பீகார் மாநிலத்தில் உள்ள சம்பரான் கிராமத்தில் மறைந்துவிட்டார். 2014 முதல் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் தொடர்ந்து இனம் காண முடியாத விசக் காய்ச்சலோடு போராடினார். வாழ்நாள் முழுவதும் ஊசலாட்டமில்லாத சிறந்த கம்யூனிஸ்டாக வாழ்ந்தார். கம்யூனிச இயக்கத்துடன் தொடர்பு கொள்ளத் துவங்கியது முதல் தலைமறைவு கட்சியான மாவோயிச கம்யூனிச மையத்திலும் (MCC) அந்த அமைப்பு மக்கள் யுத்தக் குழுவுடன் (PWG) இணைந்த பிறகு, ஒன்றுபட்ட அமைப்பான மாவோயிஸ்ட் கட்சியிலும் (CP-MAOIST) இறுதிவரை முழுநேரமாக பணிபுரிந்த தோழர் தனது 89-வது வயதில் மரணமடைந்தார்.

புரட்சி மட்டுமே நாட்டின் விடுதலைக்கான உண்மையான பாதை என்ற உறுதியுடன் பயணித்த தோழரது முயற்சிகளினால் பீகாரில் துவங்கப்பட்ட புரட்சிகரமான மக்கள் திரள் அமைப்புகளுக்கு அவர் தொடக்கநிலை அமைப்பாளராக இருந்தார். ஒவ்வொரு கணமும் எல்லா வயது ஊழியர்களுடனும் தோழமையோடு பழகும் உண்மையான வர்க்க பாசம் அவரிடம் வற்றாமல் கசிந்து கொண்டே இருந்தது. அவரது பரந்த முகத்தின் சிரிப்பு அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டது. தோழரது 7 அடி உயரம் போலவே அவரது மனதும் உயர்ந்தது.

அன்றாடம் காலை எழுந்ததும் பொட்டுக்கடலை சத்து மாவு கலந்த நீர் கரைசல் அருந்துவார். உடற்பயிற்சிக்கு பிறகு கிடைக்கின்ற அளவு எளிய உணவுகளை உட்கொண்டு, தனது அன்றாட பணிகளை துவக்குவார். தான் சந்திக்கும் அனைவரிடமும் தோழமையான விவாதங்கள் நடத்துவார்; தேவைப்பட்ட இடங்களில். தேவைப்பட்ட நேரங்களில் காரசாரமான சித்தாந்த மோதல்களையும் அவர் தவிர்த்ததில்லை.

பீகார் மற்றும் இந்திய புரட்சிப் பண்பாட்டு இயக்க வரலாற்றில்  தோழர்.ராஜ் கிஷோர் பெயரை பொறிக்காமல் ஒரு வரி கூட எழுத முடியாது.. 2005 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அகில இந்திய மக்கள் எதிர்ப்பு இயக்கம் (AIPRF) மற்றும் ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு எதிரான மேடை (FAIG) ஆகிய இரண்டு அமைப்புகளின் பீகார் மாநில பொறுப்பாளராக செயல்பட்டார். அதன் பிறகு உருவான புரட்சிகர ஜனநாயக முன்னணியின் (RDF) தலைமை உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். அதன் ஏடான ’ஜன் ஜ்வார்’ மற்றும் ’ஜன் பிரதிரோத்’ ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இந்த ஜன் பிரதிரோத் அனைத்து துறைகளிலும் நடந்த உண்மையான மக்கள் திரள் போராட்டங்களையும், பார்ப்பன பாசிசத்தை கண்டித்து கட்டுரைகளையும் வெளியிட்டது.

பீகார் புத்திஜீவிகள் சங்கத்தின் (கிராந்திகாரி புத்திஜீவி சங்க்) ஆரம்ப அமைப்பாளராகவும், அகில இந்திய புரட்சிப் பண்பாட்டு மையத்தின் (AILARC) தலைவராகவும் இயங்கினார்.  அதற்கடுத்து புரட்சிகர ஜனநாயக முன்னணியின் (RDF) தலைமை உறுப்பினராக இருந்து இந்தியாவில் நிலவும் அரை நிலப்பிரபுத்துவ கொடூர பண்பாட்டையும், உழைக்கும் மக்களை ஒடுக்கும் சாதிய அமைப்பு முறையையும் எதிர்த்து போராடினார்.

பீகாரில் செயல்படும் நிலப்பிரபுத்துவ-ரஜபுத்திர, யாதவ, குர்மிக்களின் ’சேனா’, போன்ற ஆதிக்க சாதி குண்டர் படைகளின் தக்குதல்களுக்கு எதிரான விவசாயிகளின் ஆயுதப்படை தாக்குதல்களை ஆதரித்து பல புரட்சிகர இலக்கியங்களை படைத்தார். இன்று நாம் எதிர் கொள்ளும் “இந்திய வகை பாசிசத்தின்” முன் தயாரிப்பு கட்டங்களில் அதற்கு எதிரான புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்களை ஆதரித்து பண்பாட்டு தளத்தில் பணியாற்றினார்.

தோழர்கள் வரவர ராவ், அருண் சண்யாமத் போன்ற புரட்சி எழுத்தாளர்களின் தோளோடு தோள் நின்று பண்பாட்டு தளத்தில் போராடினார். மேற்கண்ட இயக்கங்களின் போது சந்தால் பழங்குடிகளுடன் நெருக்கமான தோழமை உறவு கொண்டு கலைக்குழுவைக் கட்டவும், இயக்கவும் பாடுபட்டார். மக்கள் உரிமை போராளியாக பல முறை சிறை சென்றார். மாவோயிஸ்ட் தோழர்கள் ஆசாத், கிஷன்ஜி ஆகியோர் அரசினால் படுகொலை செய்யப்பட்ட போது நாடெங்கும் பல கண்டனக் கூட்டங்களை நடத்தினார்.

பார்ப்பன (இந்து) மதவெறி பாசிசத்தை எதிர்த்து பீகாரின் இசுலாமிய மக்களோடு அவர் கண்ட போராட்டக்களங்கள் ஏராளமானவை. நாடு தழுவிய அளவில் சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்ட கம்யூனிச புரட்சியாளர்கள், இசுலாமியர்கள், ஜனநாயக சக்திகளின் விடுதலைக்காக பல போராட்டங்களை கட்டியமைத்தார்.  காங்கிரசு அரசின் ’ஆப்ரேசன் கீரீன் ஹண்ட்’ என்ற கொடூரமான பசுமை வேட்டையின் போது துணிச்சலுடன் RDF அமைப்பின் துவக்க மாநாட்டை ஹைதராபாத் நகரில் நடத்தினார். இந்த அமைப்பு மூலம் கனிம வள கொள்ளைக்காக நடத்தப்பட்ட பழங்குடி மக்கள் மீதான காட்டு வேட்டைக்கு எதிராக நாடு தழுவிய போராட்ட உணர்வை தூண்டினார்.

மேற்கு வங்கம், ஜார்கண்ட், தெலங்கானா, ஆந்திரா, ஒரிசா, பஞ்சாப், மகாராட்டிரம், கேரளா, தமிழ்நாடு என்று புரட்சிகர அமைப்புகளின் மத்தியிலும், மக்களிடையேயும் நன்கு அறியப்பட்ட பாட்டாளி வர்க்க பண்பாட்டு படையின் தலைவராக விளங்கினார்.

கலாச்சார அமைப்பானாலும் சரி! மக்கள் உரிமை அமைப்பானாலும் சரி! அனைத்து பணிகளிலும் மார்க்சிய-லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடிப்பவராகத் திகழ்ந்தார். புரட்சியாளனாக வாழ்நாள் முழுவதும் வாழ்வதுதான் சிறந்த கம்யூனிஸ்டின் இலக்கணம் என்பதை நடைமுறையில் நிரூபித்த தோழரின் நீண்ட பயண அடிச்சுவடுகள் நீடித்து நிலைத்து நிற்க கூடியவையாகும்.

கலை, இலக்கியத்தை மக்களின் விடுதலைக்கான ஆயுதமாக ஏந்தி சுழற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்படும் புரட்சிகர கலை இலக்கிய அமைப்பான, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர்களோடு அவர் பகிர்ந்துக் கொண்ட அனுபவங்கள் மற்றும் உரையாடல்கள் அனைத்தும் ஆழமானவை. இந்தியாவின் புதிய ஜனநாயக புரட்சியின் மூலம் உருவாக்க இருக்கும் புதிய ஜனநாயக பண்பாட்டிற்கு வழிகாட்டும் பொருள் செறிந்தவை.

தோழர் ராஜ் கிஷோருக்கு வீரவணக்கம்!

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here