“விநாயக் தாமோதர் சாவர்க்கர் சிறையில் இருந்து வெளியே வந்து புல்புல் பறவையின் மீது அமர்ந்து தாய்நாட்டிற்கு பயணம் செய்தார்” என்று சாவர்க்கரின் சிறை அனுபவங்கள் குறித்து கர்நாடகாபள்ளி பாடப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

‘இந்தியா டுடே’ செய்தியின் படி, ‘அந்தமான் நிக்கோபர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர் தினமும் வெளியே வருவார் என்றும், இதற்காக அவர் பறவைகளின் உதவியை பெறுவார்’ என்றும் கதையின் ,அத்தியாயத்தில் ஒரு பகுதி கூறுகிறது.

அத்தியாயத்தில் மற்றொரு பகுதி ஆச்சிரியமான கூற்றுடன் இருக்கிறது.

சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு சிறு ஓட்டை கூட இல்லை. இருப்பினும் எங்கிருந்தோ புல்புல் பறவை அங்கு வந்ததும், அதன் மீது அமர்ந்து சாவர்க்கர் பறந்து வந்து தாய்நாட்டைப் பார்க்க தினமும் வருவார்.”

இந்த அத்தியாயம் கன்னட மொழியில் எழுதப்பட்டு 8ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் ‘களவண்ணு கெடவரு’. எழுதியவர் கேட்டி கதி.

இந்த பாடநூல் இரண்டாம் மொழி புத்தகம். இது இன்னும் பொதுமக்களின் பார்வைக்கு வரவில்லை. ஆனால் இது குறித்து செய்தி வெளியில் பரவியதும் ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார்கள். இது குறித்து கர்நாடகா பாடநூல் சங்கத்திற்கு புகார்கள் வந்துள்ளது. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, கர்நாடக பாடநூல் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் மாதே கவுடா, உள்ளடக்கம் குறித்து தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: சாவர்க்கரை தியாகி எனக்கூறுவது உண்மையான தியாகிகளை மீண்டுமொரு முறை‌ கொல்வதற்கு சமம்!

பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் பத்திரிக்கையாளரிடம் கூறுகையில், “ஆசிரியர் சாவர்க்கரை உருவகப்படுத்தி கூறியிருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் இதெல்லாம் உண்மையாக நடந்தது போல குறிப்பிட்டிருக்கிறார்கள். மாணவர்களிடம் இதை விளக்குவது கடினம். மாணவர்கள் ஆதாரங்கள் கேட்டால் நாங்கள் என்னசெய்வது? என்றார்.

மறுபுறம் கர்நாடகா பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் பி.சி நாகேஷிடம் கேட்ட பொழுது  “ சாவர்க்கர் மிகச் சிறந்த விடுதலை போராட்ட வீரர். அவர்கள் எவ்வளவு புகழ்ந்தாழும் பரவாயில்லை. இது அவரின் தியாகத்துக்கு ஈடாகாது” என்றார்.

பி.ஷி.நாகேஷை பொறுத்தவரையில் பாடபுத்தகத்தில் ஆசிரியர் எழுதியது சரி தான் என்கிறார்.

கர்நாடகா அமைச்சர் பி.சி.நாகேஷ்

கர்நாடகா மாநிலத்தை பொறுத்த வரையில் அனைத்து பள்ளி மாணவர்கள் மனதிலும் பதிந்த நபர் என்றால் அது “மாவீரன் திப்பு சுல்தான்” தான். அவர் மீது களங்கத்தை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார்கும்பல் எவ்வளவு தான் முயன்றாலும் அது மக்களிடமும் மாணவர்களிடம் எடுபடுவதில்லை. எப்படியாவது சாவர்க்கருக்கு பட்டி, டிங்கரிங் பார்த்து மக்களிடம் கொண்டு சேர்க்க முயல்கிறார்கள். இதனால் தான் கர்நாடகா மாநிலத்தில் சுதந்திர தினத்தையொட்டி வைக்கப்பட்ட திப்புசுல்தான் பேனரை கிழித்து வெறுப்பை உமி்ழ்ந்தார்கள்.

சங்பரிவார் கும்பலை பொறுத்தவரையில் அவர்கள் சாவர்க்கரை விடுவதாயில்லை. ஆனாலும் வரலாற்றை மறைக்க முடியாது அல்லவா! சாவர்க்கருக்கு ஆங்கிலேயனிடம் மண்டியிட்ட வரலாறும் , மன்னிப்பு கடிதம் எழுதிய வரலாறும் தான் உள்ளது. ஆனால் திப்பு சுல்தான் வரலாறு அப்படியல்ல. அது ஆங்கிலேயர்களை மிரள வைத்த வரலாறு. ஆங்கிலேயனை மண்டியிட வைத்த வரலாறு. தன் மண்ணுக்காக வீர மரணம் அடைந்த வரலாறு. இது எல்லாம் எட்டிக்காயாக கசக்க தானே செய்யும் எட்டப்பன் பரம்பரைகளுக்கு!.

இன்று மக்கள் மத்தியில் “பொய்யும் புரட்டும் கலந்த சாவர்க்கரின் கதைகளை” பாடப்புத்தகத்தில் வைத்து அம்பலப்பட்டுபோயுள்ளது, சங்பரிவார் கும்பல்.! இது இந்துராஷ்டிரத்தை நோக்கிய அவர்களின் பயணத்தில் ஒரு பகுதி தான். ஆனால் நாம் இதை அனுமதிக்கக் கூடாது. கல்வித் துறையை காவிமயமாக்கும் பாசிச கும்பலை திப்பு சுல்தானின் வாரிசுகளாகிய நாம் விரட்டியடிப்போம்!.

  • மாரிமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here