சாதிகளையும் வட்டாரப் பாரபட்சங்களையும் ஒழித்துவிட்டால் உலகில் உள்ள எந்தச் சக்தியாலும் இந்திய முன்னேற்றத்தைத் தடுத்துவிட முடியாது ” என்று உ.பி முதல்வர், சாமியார் வேசம்போட்டு, மதவெறி மாஃபியா கும்பலை இயக்கும் யோகி ஆதித்யநாத் 30.1.2023 – ல் மகாராஷ்டிராவில் நடத்தப்பட்ட
” பஞ்சாரா கும்பமேளா விழா( 2023 ) “–வில் தன் நாறவாயைத் திறந்து அருள்வாக்கு அளித்துள்ளார். சாதிவெறி பிணைந்ததே ஹிந்துமதவெறி என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் சொல்லும் “சாதி ஒழிப்பு ” என்பதெல்லாம் ஏமாற்று நாடக மோசடி என்பது உலகுக்கே தெரியும். உ.பி. 2019 – ல் உன்னாவில் நடுரோட்டில்தலித் இளைஞர்களைச் சவுக்கால் ரத்தவிளாறாக அடித்துக் கொடுமைப் படுத்தியதும், அதே உ.பி. 2020 – ல் ஹத்ரஸ் கிராமத்தில் தலித் பெண்களை வதைசெய்து கற்பழித்த கொடுமைகளும் ரண சாட்சிகள் ; ஒடுக்கப்பட்ட மக்கள் மறக்கவில்லை.

நாடோடிஇன பஞ்சாரா சமூகவிழா என்ற அந்தக் கும்பமேளாவில் சாதித் தலைவர்களும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் சங்கமமானார்கள். மேளாவின் நோக்கம்
17 – ஆம் நூற்றாண்டிலிருந்து பாரம்பரியமாக இருந்துவரும் போராதேவி பழங்குடி வழிபாட்டைக்கொண்ட பஞ்சாரா குழுவை ஹிந்துமயமாக்குவதே. இதுபற்றி அதேகுழுவின் பல முக்கியஸ்தர்கள் சந்தேகப்படுகிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அந்த விழா உரையில் ஆதித்யநாத் ஓர் அறிவிப்பைச் செய்து அதிர்ச்சிகொடுக்க மறக்கவில்லை. அதாவது, — ” நவம்பர் 2020 – ல் உ.பியில் மதமாற்றத்தடைச் சட்டம் கொண்டுவந்தோம். யாரேனும் மதமாற்றம் செய்தால் அவர்மீது சட்டம் பாயும். 10 ஆண்டு சிறைத்தண்டனை நிச்சயம். மாநிலத்துக்கே செல்வச் செழிப்பைக் கொண்டுவருவதற்காகத்தான் இதைச் செய்தேன். இது என் லட்சியம் ”

அதே உரையில் அவர் தொடர்ந்து பேசும்போது — ” ஏற்கெனவே வேறுமதத்துக்கு மாறியவர்கள் சொந்தக் குடும்ப/ வீட்டு மதமான ஹிந்துமதத்துக்குத் ( ‘ கர்வாப்ஸி ‘ ) திரும்பிவருவதற்கு எந்தத் தடையும் இல்லை. மறுபடி அவர்கள் ஹிந்து ஆகிவிடலாம் ” தன் மாநில அரசின் மதவெறிநோக்கம் கொண்ட சட்டத்தை, சட்டப்புறம்பாக வெளிமேடையில் விளம்பரப்படுத்த அவர் மறக்கவில்லை.

ஒருநாட்டின் குடிமக்கள் எந்த மதத்தைப் பின்பற்றவும் , மதம் மாறவும், மதநம்பிக்கை அற்று வாழவும் உள்ள உரிமையே மதச்சார்பின்மை ஆகும். மதவிவகாரங்கள் அனைத்துமே அரசிலிருந்து வெட்டிப் பிரிக்கப்படவேண்டும். தற்போதுள்ள இந்திய அரசியல் சாசனத்தின் ‘ முகப்புரை ‘ யில் உள்ள இப்படிப்பட்டதான விளக்கத்தை உறுதிசெய்வதாக சாசனத்திற்கு உள்ளே சம்பத்தப் படுத்திய சட்டங்கள் எதுவும் இல்லை; இருக்குமானால், ஏற்கெனவே தமிழகத்தில் ஜெ. ‘ மதமாற்றத் தடைச்சட்டம் ‘ கொண்டுவந்தபோதும், 2020 – ல் உ.பி மாநிலம் இதேபோல ஒரு சட்டம் இயற்றியபோதும் நாட்டின் உச்சபட்ச சட்டபீடம் ” தானாகவே முன்வந்து ” இந்த ஆட்கள்மீது நடவடிக்கை எடுத்து உள்ளே தள்ளியிருக்கவேண்டும் — ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. உடைந்து போன, வக்கற்ற குப்பையை ‘ அரசியல் சாசனம் ‘ என்பதா ? அடிப்படை உரிமைகளையே மறுக்கும் உ.பி – யில் நடப்பது போன்ற பிற்போக்குப் பாசிச ஆட்சிகளை ஜனநாயகம் என்பதா ?


இதையும் படியுங்கள்: உத்திரப் பிரதேசம் விவசாயிகளின் மீது பாஜக குண்டர்களின் தாக்குதல்!!


வெளிப்படையாக ‘ சனாதன தர்ம ‘ ஆதரவைப் பரப்பும் ஹிந்துமத வெறியை, இன்று ஆளுமையில் இருக்கும்
‘ கார்ப்பரேட் – காவிப் பாசிசத்தை எதிர்த்து வீழ்த்தாமல் ஜனநாயகம் என்பது பலிக்காது , தொடராது, நீடிக்காது !

 

ஆதாரம் : பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ( PTI ) மற்றும் ” த ஒயர் ” , 26.1.2023.

ஆக்கம் : இராசவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here