ன்றிய அரசின் 2023-24 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் வெளிவந்துவிட்டது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி; கடை கோடி மக்களையும் சென்றடைதல்;
அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் முதலீடு …. போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதாக கூறியுள்ளார்.

அதாவது தொழிலாளர்கள், விவசாயிகள், குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் என அனைவரையும் நன்றாக பராமரித்து முன்னேற்றப் போகிறார்களாம். இது உண்மையா?

100 நாள் வேலை திட்டமும் கிராமப்புற வளர்ச்சியும்

இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் கிராமப்புறங்களில் தான் உள்ளனர். கிராமப்புற மக்களுக்கு குறைந்தபட்ச வேலை உத்தரவாதத்தை கொடுத்துக் கொண்டிருப்பது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்புத்திட்டம். இந்த திட்டத்திற்கு ரூ.60,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.(இத்திட்டத்திற்கு சென்ற ஆண்டில் ரூ.73,000 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது.)

தற்போதைய நிலவரப்படி திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ. 2,72,000 கோடி ஒதுக்கி இருக்க வேண்டும். தற்போது ஒதுக்கியுள்ள தொகையில் ஆண்டுக்கு 25 நாட்கள் கூட வேலை தர முடியாது என்பதுதான் உண்மை. இந்த நிலையில் கிராமப்புறத்தில் வளர்ச்சி ஏற்படுமா?

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம்

பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை உள்ளடக்கிய பி.எம்.போசன் திட்டத்திற்கு சென்ற ஆண்டு (திருத்தப்பட்ட மதிப்பீடு) ரூ.12,800 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ரூ.11000 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக குழந்தைகளின் ஊட்டச்சத்து ஆரோக்கியம் மேம்படுகிறது. அது மட்டுமா? இந்த உணவுக்காகவே பள்ளிக்கு வந்து கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் கனிசமாக உள்ளது. இந்த நிதி குறைக்கப்பட்டால் என்ன ஆகும் என்று அனைவருக்கும் தெரிந்ததுதான்.

மக்கள் வயிற்றில் விழும் இடி

உணவு மானியங்களுக்காக கடந்த ஆண்டு (திருத்தப்பட்ட மதிப்பீடு)ரூ. 2,87,194 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு ரூ. 1,97,350 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மானிய குறைப்பு என்பது ஏழை மக்களின் வயிற்றில் இடியாக இறங்கப் போகிறது.

உர மானியம் ரூ.50,000கோடியும் பெட்ரோலிய மானியம் ரூ 6900 கோடியும் பிரதமர் கிஷான் நிதி ஒதுக்கீடு 68 ஆயிரம் கோடியில் இருந்து அறுபதாயிரம் கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல கடந்த ஆண்டு சுகாதாரத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ 9,255கோடி செலவிடப்படாமல் உள்ளது. மேலும் கல்வி பட்ஜெட்டிலும் ரூ.4,297 கோடி செலவிடப்படாமல் உள்ளது. இப்படியெல்லாம் மக்கள் நலனுக்கான செலவினங்களை ஏன் குறைக்கிறது பாஜக அரசு?

கோடீஸ்வரர்களின் வளர்ச்சியும் மக்களின் வீழ்ச்சியும்

21 பணக்கார இந்தியர்கள் அடிமட்டத்தில் உள்ள 70 கோடி இந்தியர்கள் வைத்துள்ள சொத்துக்களுக்கு இணையான சொத்தை வைத்துள்ளனர் என்றும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ஒவ்வொரு நாளும் ரூ.3000 கோடி அதிகரித்துள்ளது என்றும் ஆக்ஸ்பாம் என்ற அமைப்பின் அறிக்கை கூறுகிறது. இதன் விளைவாக நைஜீரியாவை விட ஏழைகள் உள்ள நாடாக இந்தியா மாறி உள்ளது.

 இதையும் படியுங்கள்: மோடி அரசின் பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்களுக்கு கறி விருந்து! உழைக்கும் மக்களின் கோவணத்துக்கும் ஆப்பு!

இந்தியாவில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதற்கு, ஏழை மக்கள் மீது அதிகமாக வரியை போடுவதும் சமூக செலவினங்களுக்கான தொகை குறைக்கப்படுவதும் தான் முக்கியமான காரணங்களாக உள்ளன.

இந்திய அரசு வசூலிக்கும் வரியில் 65%தை இந்திய மக்கள் தொகையில் அடிமட்டத்தில் உள்ள 50% மக்கள்தான் செலுத்துகிறார்கள். இப்படி ஏழை மக்களிடம் பிழிந்து எடுக்கப்படும் வரித் தொகை சமூக நலத்திட்டங்களுக்காகவா செலவிடப்படுகிறது. இல்லை அந்தத் தொகை கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கப்படுகிறது அல்லது அவர்கள் லாபம் சம்பாதிப்பதற்கான திட்டங்களில் செலவிடப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் ஜி.எஸ்.டி . வரி வசூல் அதிகமாக செய்யப்படுவதை ஒன்றிய அரசு கொண்டாடி வருவது எதற்காக என்று இப்பொழுது தெரிகிறதா? ஏழை மக்களிடம் அதிகமாக பிடுங்கினால் தான் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்க முடியும் என்பதற்காகத்தான்.

பாசிச பாஜக அரசின் பட்ஜெட்டை சுருக்கமாக எப்படி சொல்லலாம்?
பாஜகவின் பட்ஜெட் என்பது ஏழை மக்களின் மீது இறங்கிய மிகப் பெரிய ஆப்பு என்றுதானே சொல்ல முடியும்.

  • பாலன்

செய்தி ஆதாரம்: The wire

https://m.thewire.in/article/economy/the-union-budget-must-aim-to-tackle-inequality

https://m.thewire.in/article/economy/budget-2023-has-chilling-implications-for-indias-people

https://m.thewire.in/article/government/union-budget-2023-camouflage-populism

https://m.thewire.in/article/economy/eight-charts-to-make-sense-of-budget-2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here