சுதந்திரத்தின் போது, இந்தியாவின் தனியார் துறை ஒரு சில விரல்விட்டு எண்ணக்கூடிய வணிகக் குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்தது. அவர்களின் ஆதிக்கம் “லைசென்ஸ் ராஜ்” (எதைச் செய்வதாக இருந்தாலும் அரசின் அனுமதி வேண்டும் என்று பொருள்படும் சொல்லாடல்) ஆண்டுகளில் தொடர்ந்தது. பின்னர் திருபாய் அம்பானி போன்ற புதியவர்களால் இந்நடைமுறை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. 1990-களில், நாடு புதிய தலைமுறை நிறுவனங்களின் மலர்ச்சியைக் கண்டது. தாராளமயமாக்கலுக்குப் பிறகு சுகாதாரம், தொலைத்தொடர்பு, மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பழைய துறைகளுடன் ஐடி, ஐடிஇஎஸ் (IT, ITes) போன்ற இரண்டு புதிய துறைகளிலும் இம்மாற்றம் நிகழ்ந்தது.
இம்முதலாளிகளுக்கும் இந்தியாவின் அரசியல் தலைமைக்கும் இடையேயான உறவுகள் பரந்த அளவிலானவை. ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலான அரசாங்க தலையீட்டைக் கொண்டிருந்த துறைகளில் இயங்கும் நிறுவனங்கள் (IT, ITes) மிகக்குறைந்த அளவே அரசியல் தொடர்பு கொண்டவை. அரசு சார்ந்த கனரகத் துறைகளில் உள்ள நிறுவனங்கள் ( உள்கட்டமைப்பு நிறுவனங்கள்) இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்திற்கு பெரியளவு பங்களித்தன. ஒருசில நிறுவனங்கள் அரசியல் கட்சிகளிடம் இருந்து சமமாக விலகி அனைவருக்கும் நன்கொடை அளித்தன. மற்றவர்கள் ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் சந்தர்ப்பவாத கூட்டணியை உருவாக்கின. இன்னும் சில நிறுவனங்களோ மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக இருந்தது.
முதலாளிகளுக்கான அரசியல் ஆதரவு சந்தர்ப்பவாதமாகவே இருந்தது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் நீர்மின் திட்ட ஊழல் ஆகிய இரண்டிலும் லஞ்சம் கொடுக்கத் தயாராக உள்ள நிறுவனங்கள் அத்துறையில் நிபுணத்துவம் உள்ள போட்டியாளர்களை வீழ்த்தி நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் நீர்மின் திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பெற்றன. இதுதான் பரந்துபட்ட தரகு முதலாளித்துவம். நிருபர் இதைக் குறிப்பிடும்போது “அரசியல் தொடர்புகளைக் கொண்ட நிறுவனங்கள் அவர்கள் விரும்பியதைப் பெற்றன. மற்றவர்களும் அப்படித்தான். அவர்கள் லஞ்சம் கொடுக்கத் தயாராக இருப்பதுதான் முக்கியம்” என்று எழுதினார்.
இந்த அமைப்பில், ஆளும்வர்க்கமான முதலாளிகளும், அவர்களுக்கு சேவை செய்யும் அதிகார வர்க்கமும் கூட்டுகளவாணிகளே. முதலாளிகள் லஞ்சம் மூலம் நாட்டைக் கொள்ளையிடுவதில் தங்கள் பங்கைப் பெறமுடியும், யாருக்கு எவ்வளவு என்று அரசியல்வாதிகள் தீர்மானிக்க முடியும்.
கௌதம் அதானியின் வருகையுடன், இந்தியா புதிதாக ஒன்றைப் பார்க்கிறது. பொருளாதார விமர்சகர்களின் கூற்றுப்படி, மோடியின் அரசாங்கம் அவரது குழுமத்தை ஒரு ‘தேசிய சாம்பியன்’ ஆக தேர்ந்தெடுத்துள்ளது. இந்தியாவிற்கு முக்கியமான துறைகளில் அதன் விரிவாக்கத்தை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில், எந்தவிதமான நிலையான நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் அதானி குழுமத்தின் விரைவான வளர்ச்சி வேகத்தைப் போன்றே அதன் நிழல் முதலீட்டாளர்கள், பங்கு-விலை கையாளுதலுக்கான கட்டணங்கள், மற்றும் அது தொடர்பான பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்களும் மர்மமாகவே உள்ளன.
இதையும் படியுங்கள்: அரசியல் – பொருளாதாரக் குறிப்புகள் : அதானி ஆழ அகலங்களைப் புரிந்துகொள்வோம் !
இந்த சேர்க்கையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதானியின் நிறுவனம் எப்படி தேசிய சாம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டது? அது இந்தியாவுக்கு உகந்ததுதானா அல்லது ஒரு சிலருக்காக மட்டும் சேவை செய்யக்கூடிய பிரித்தாளும் அரசியல் நிறுவனத்திற்கும், பிரித்தாளும் பொருளாதார நிறுவனத்திற்கும் இடையேயான ஒரு கூட்டணியா?
இது வெறுமனே ஒரு கற்பனையான பயம் அல்ல. தேர்தலில் வெற்றிபெறத் தேவையான பணபலத்திற்கு இந்தியாவின் அரசியல் கட்சிகள் பரந்துபட்ட மக்களை பல்வேறு வகைகளில் சுரண்டிவருகின்றன. அதானியைப் பொறுத்தவரை, தனது அதிகாரபலத்தை துஷ்பிரயோகம் செய்ததற்குப் பல உதாரணங்கள் உள்ளன. மொத்தத்தில், இந்திய முதலாளித்துவத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை அதானி பிரதிநிதித்துவப்படுத்துகிறார். “தேசிய சாம்பியன்” ஆவதை நோக்கிய அவரது பயணத்தைக் குறிக்கும் பத்திரிக்கை செய்திகளை “தி வயர்” இணையதளம் ஒவ்வொன்றாக இணைத்துள்ளது.
- பின்கதை: 2013-இல், எகனாமிக் டைம்ஸ் (Economic Times) அதானியின் ஆரம்ப நாட்களை பற்றிய விவரத்தை வெளியிட்டது. காந்திதாமிலிருந்து பிளாஸ்டிக் மூலப்பொருட்களை இறக்குமதி செய்தது, அதனை பரந்த வர்த்தகத்திற்கு மேம்படுத்தியது, பின்னர் முந்த்ரா துறைமுகத்தோடு ஒருங்கிணைத்தது – அதன் விளைவாக அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியோடு கூட்டாளி ஆனது. குஜராத்தின் முதல்வராக மோடி 2001-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். ஆனால் அப்போது பாஜக-வின் நிதியை நிர்வகித்து வரும் பிரமோத் மகாஜனைச் சார்ந்திருக்க மோடி விரும்பவில்லை என்று அந்த செய்தித்தாள் கூறுகிறது. அதானியைப் பொறுத்தவரை ஏற்கனவே அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் கோலோச்சிக்கொண்டிருந்த ஒரு மாநிலத்தில் பெரிதாக வளர விரும்பினார்.
- குஜராத்தில் அதானி: மோடியின் ஆட்சியில் அதானியின் நிறுவனம் குஜராத்தில் அசுரவளர்ச்சி கண்டது. ஒருபுறம், முந்த்ராவில் உலகத் தரம் வாய்ந்த துறைமுக வளாகத்தை அந்நிறுவனம் உருவாக்கியது. மறுபுறம், அதன் வளர்ச்சியானது முற்றுமுழுதாக மாநில அரசின் ஆதரவின் கீழ் என்று அதானியின் சாதனை இரண்டின் கலவையாக இருந்தது. பல CAG அறிக்கைகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி அதானியின் நிறுவனம் அரசாங்கத்தின் பெரிய ஒப்பந்தங்களைப் பெற்றது. முந்த்ராவில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் வந்தது; அரசுக்கு சொந்தமான காண்ட்லா போன்ற போட்டித் துறைமுகங்கள் அதானியின் முந்த்ரா துறைமுகத்துக்கு பயனளிக்கும் முடிவுகளை தொடர்ச்சியாக எடுத்தன. அந்த நேரத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசும் முந்த்ரா துறைமுகத்தில் நடந்த சுற்றுச்சூழல் மீறல்களை ஒரு தந்திரமாக எடுத்துக்கொண்டு விளையாடியது.
- மோடியின் முதல் பதவிக்காலம்: மோடி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததும், அதானி ஒரு தேசிய முதலாளியாக பரிணமித்தார். ஸ்க்ரோல் இணையதளம் (Scroll.com) 2014 மற்றும் 2019-க்கு இடையில் திவாலான,நீதிமன்றங்களால் கைவிடப்பட்ட சொத்துக்களை வாங்கியது முதல், ஏற்கனவே உள்ள வணிகங்களின் வளர்ச்சி மற்றும் புதிய துறைகளில் நுழைதல் போன்ற அதானியின் செயற்கையான வளர்ச்சியை வெளிக்கொண்டுவந்தது.
- விரிவாக்கத்திற்கு எவ்வாறு அதானிக்கு நிதி கிடைத்தது என்பது ஒரு புதிர். உதாரணமாக, 2018-ல் நிகர லாபம் ரூ. 3,455.34 கோடியாக இருந்தாலும், எதிர்காலச் செலவு ரூ.1,67,000 கோடி என்று அதானி குழுமம் அறிவித்தது. புதிய நிறுவனங்களை உருவாக்கி அதன் பங்குகளை அடகு வைத்ததன் மூலம் தேவையான மூலதனத்தை ஏற்பாடு செய்ததாக அதானி குழுமம் புளுகியது. பின்னர் அந்த நிதியை தள்ளாடும் நிறுவனங்களுக்கு முட்டுக்கொடுத்து நிறுத்தவும், புதிய நிறுவனங்களை தொடங்கவும் பயன்படுத்தியது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் அதானியின் இதைப்போன்ற நடவடிக்கைகள் குறித்து எச்சரித்தனர். ஆனால் இந்திய அரசு அதானிக்கு ஆதரவாக நின்றது. அதானி பவர் (Adani Power) திவால் நடவடிக்கைகுள்ளாகாமல் இருக்க ஒரு குழுவை அமைத்தது.
மோடி அரசாங்கத்தின் மற்ற முடிவுகளாலும் அதானி குழுமம் பயனடைந்தது. இலங்கையின் கோடாவில் மின் திட்டம் ஒரு உதாரணம். அதானிக்கு இத்திட்டத்தை வழங்குமாறு கோத்தபய ராஜபக்சவிடம் மோடி கேட்டதாக இலங்கை மின்துறை அதிகாரி ஒருவர் அம்பலப்படுத்தியது நினைவிருக்கும். மற்றொரு உதாரணம் நாட்டிலுள்ள விமான நிலையங்களை அதானிக்கு தாரைவார்க்க விதிகள் மாற்றப்பட்டது. அதானி குழுமத்தின் மீதான அடுத்தடுத்த விசாரணைகள் நிலக்கரி இறக்குமதி தொடர்பான வருவாய் புலனாய்வு துறையின் (Directorate Of Revenue Intelligence) விசாரணை போல முட்டுச்சந்தில் நின்றுவிட்டன.
- மோடி அரசாங்கத்தின் விருப்பமான ‘தேசிய சாம்பியன்’: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முதன்முதலில் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தில் அம்பானியின் அதீத ஆதிக்கத்தைக் குறைக்க ஐந்து அல்லது ஆறு பெரிய வணிக நிறுவனங்களை மோடி உருவாக்குவார் என்று வணிக வட்டாரங்கள் ஊகித்தன. மோடியின் ஆட்சிக்காலத்தில் இந்திய முதலாளித்துவத்துக்கும்அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து மாறிக்கொண்டிருந்தன.
மோடியின் முதல் பதவிக்காலத்தில் ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் பரிச்சியமாகத் தொடங்கின. சுரங்கத்துறையில் வேதாந்தா, கட்டுமானத்துறையில் திலீப் பில்ட்கான், இரும்பு மற்றும் எஃகில் JSW, உள்கட்டமைப்பில் அதானி. ஆனால் 2019-ஆம் ஆண்டுவாக்கில் அதானி குழுமத்தின் அபரிதமான வளர்ச்சி மற்ற நிறுவனங்கள் அனைத்தையும் மறைத்து விட்டது. மோடி அதானியை அதிகம் நம்பத்தொடங்கினார். கரியமிலவாயு வெளியேற்றம் குறித்தான இந்தியாவின் உலகளாவிய கடமைகளைப் பூர்த்தி செய்ய அதானியையே முன்னிறுத்தினார். பின்னர் பாதுகாப்பு, ட்ரோன்கள், பாலிசிலிகான் போன்ற துறைகளில் அதானி குழுமம் நுழைந்தது. ஒரு அறிக்கையில், பைனான்சியல் டைம்ஸ் (Financial Times)அதானியை “மோடியின் ராக்பெல்லர்” என்று அழைத்தது. எவ்வாறாயினும், அதானி சாம்ராஜ்யத்தின் விரிவாக்கத்தின் அடித்தளம் தெளிவாக இல்லை என்பதே உண்மை.
- முதலீட்டு நிதி மர்மம்: தி மார்னிங் காண்டெக்ஸ்ட் (The Morning Context) ஊடகம் தனது அறிக்கையில் “ஒரு சில முதலீட்டு நிதிகள் அதானியின் குழுமத்தில் மட்டுமே முதலீடு செய்யப்படுகின்றன. பெரும்பாலான உடனடியாக மாற்றத்தக்க பங்குகள் அனைத்தும் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே இருந்தன” என்றது. “பயனாளர்கள் பற்றிய தகவல்களை போதுமான அளவு வெளிப்படுத்தாததால்” NSDL இந்த முதலீட்டு நிதிகளின் கணக்குகளை முடக்கியது. இந்த நிதிகள் அதானியின் பங்கு விலைகளை உயர்த்த பயன்படுத்தப்பட்டதாகவும் அல்லது பின்னர் அதானி குழுமத்தால் வங்கிக் கடனுக்கான அடமானமாகக் காட்டப்படலாம் என்றும் ஊகங்கள் வளர்ந்தன என்று எகனாமிக் டைம்ஸ் (Economic Times) எழுதியது.
- ஹிண்டன்பர்க் அறிக்கை: தனது நிறுவனம் இந்த முதலீட்டு நிதிகளில் கணிசமான கவனம் செலுத்தியதாகவும், அதனூடே அதானியின் இந்த மோசடியைக் கண்டறிந்ததாகவும் ஹிண்டன்பர்க் தெரிவித்தது. இக்குற்றச்சாட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அதானியின் குழுமம் மறுப்பு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை காலை ஹிண்டன்பர்க் தனது விரிவான அறிக்கையை வெளியிட்டது. அதானி எண்டர்பிரைசஸ் மிகைமதிப்புடையது என்று ஹிண்டன்பர்க் மட்டும் கூறவில்லை. இந்து பிசினஸ்லைன் (Hindu Businessline) பத்திரிக்கையும் ஹிண்டன்பர்க்கின் அறிக்கையை உறுதிப்படுத்துகிறது.
- பங்குப்பத்திரங்கள் வெளியீட்டுக்குப் பின்: இந்தக் கட்டுரை எழுதப்படும்பொழுது அதானி குழுமத்தின் பங்குப்பத்திரங்கள் வெளியீடு வெற்றியடைந்துள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் வெளியேறினர், ஆனால் ஒரு சில பெரிய தொழில்துறையினர் நுழைந்தனர். இருப்பினும், பிப்ரவரி 1 அன்று சந்தைகள் திறந்தவுடன் அதானி பங்குகள் வீழ்ச்சியடையத் தொடங்கின, தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றன. கௌதம் அதானி குழும நிறுவனங்களின் பத்திரங்களை அடமானமாக கிரெடிட் சூயிஸ் ஏற்காது என்ற செய்தியும் வந்தது. அடுத்து என்ன நடக்கும் என்று ஒருவர் ஆச்சரியப்படுகிறார். வரலாற்றாசிரியர் ஆடம் டூஸ், ஹிண்டன்பர்க் அறிக்கையால் சரியும் சாம்ராஜ்யத்தை தூக்கி நிறுத்த மோடியும் அதானியும் என்ன செய்யப்போகிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.
Rajshekhar