தோழர் ரத்தினசபாபதி

தோழர் ரத்தினசபாபதி கட்சி மூலம் கிஸான் இயக்கத்தில் பாடுபட்டுழைத்த ரத்தினம். நெல்லை ஜில்லா கடையநல்லூரில் ஒரு டாக்டருடைய புதல்வர் அவர். 1924-ல் பிறந்தார். குடும்பமும் தேசியப்பற்றுதலுடையது. மகனும் ஆர்வத்துடன் தேசிய இயக்கத்தில் உழைத்து வந்ததில் என்ன ஆச்சரியம்!

தோழர் ரத்தினசபாபதி பள்ளிக்கூடத்தில் படித்துவரும் பொழுதே அந்நியத் துணி பகிஷ்காரம் செய்ய முடிவு கொண்டார்.  ஒரு தீபாவளி தினம் வீட்டிலே சொல்லிவிட்டார். கதரைத் தவிர வேறு எந்தக் கோடி வேட்டியையும் கட்டமாட்டேனென்னு கூறினார். அப்பொழுது அவர் அசல் காந்தியவாதி.

1937-ம் வருஷம்; அவருடைய தமையன் டவுன் காங்கிரஸ் கமிட்டி காரியதரிசி. தேர்தல் வந்த சமயம். தமையனுக்கு மிஞ்சிவிட்டார் தம்பி. அவ்வருடம் செய்த தேர்தல் வேலையிலே தேசிய அனுதாபங் கொண்ட குடும்பத்திலுதித்த திலகம் என்று பெயரெடுத்தார்.

1940-ல் தனிப்பட்ட சத்தியாக்கிரகம் வந்தது. ரத்தின சபாபதிக்குக் காங்கிரஸ் உத்தரவுப்படி சிறை சென்று போராட்டத்தை நடத்த ஆசை. ஆனால் அதுதான் சரியான வழியா என்றொரு சந்தேகம். ஏனெனில் அந்தச் சமயத்தில் அவர் கம்யூனிஸ்டுக் கட்சியின் திட்டத்தைப் பற்றியும் கேட்டுவிட்டார்.இரண்டுக்குமிடையே ஊசலாடிக்கொண்டு நின்றார்.

1942-ம் வருஷம் வந்தது ஆகஸ்டு போராட்டம். அவருடன் படித்துக்கொண்டிருந்த பெருமாள்சாமி, சக்கைய்யா, சாமிநாதன் ஆகிய மூவரும் அதில் கலந்து கொண்டனர். தோழர் ரத்தின சபாபதிக்கும் மற்றவர்களைப் போல் மீண்டும் மனக்கலக்கம் ஏற்பட்டது. போர்டு உயர்தரப் பள்ளிக்கூடத்தில், மாணவர் ஸ்டிரைக் நடத்தினார். தலைவர்களின் விடுதலையைக் கோரி கிளர்ச்சி செய்தார்.

‘ஜனசக்தி’ பத்திரிகை வந்த நாள்முதல் அதை ஊன்றிப் படிக்க ஆரம்பித்தார். ஆழ்ந்து சிந்தித்தார். தன் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள வழி தேடினார். முடிவில் ஆகஸ்டு போராட்டம் விடுதலைக்கு வழியாகாது என்ற முடிவுக்கு வந்தார். தென்காசியில் சென்று தோழர் எஸ்.வி. ராமகிருஷ்ணனுடன் வேலை செய்தார். வீட்டார் அனுமதிக்கவில்லை. எனினும் இந்த வேலையை விட்டுவிடவில்லை.

1943-ல் அவருடைய ஊர்த் தோழர்கள் மூவரும் பெருமாள்சாமி, சாமிநாதன் ஆகிய மூவரும் சிறையிலிருந்து வெளிவந்தனர். சபாபதி வெளியே கம்யூனிஸ்டுக் கட்சி அங்கத்தினரானார். அவருடைய தோழர்கள் சிறையிலே கம்யூனிஸ்டு கட்சி காட்டும் பாதை சரியானதென்று உணர்ந்தனர்.

கடையநல்லூர் தென்காசி போன்ற பிரதேசத்தில் கம்யூனிஸ்டு செய்யும் வேலை என்ன? தொழிலாளர்கள் அதிகம் கிடையாது. ஆதலால் சபாபதி விவசாயிகளுக்குச் சங்கம் அமைக்கப்பட்டார். தாலுக்காவில் பல கிஸான் சங்கங்களை ஏற்படுத்தினார். இரட்டைக்குளம், காசிராஜ மோஜாபுரம் முதலிய கிராமங்களில் கிஸான் சபைகளை அமைத்தார். கிஸான் சபை கள்ளமார்க்கெட்டை எதிர்க்கும் பொது ஸ்தாபனம் என்பதை நிரூபித்தார். பல சந்தர்ப்பங்களில் கண்ட்ரோல் விலைக்கு நெல் ஜனங்களுக்குக் கிடைக்கும்படி செய்தார்.

தன்னுடைய சேவையின் பலனாக கட்சியின் ஜில்லா ஆர்க்னைசிங் கமிட்டி அங்கத்தினரானார். அவருடைய வேலையின் மூலம் புதிய நம்பிக்கை பிறந்தது. சகோதர காங்கிரஸ்காரர்களுடன் திறமையாக வாசிக்க முடிந்தது.

கோவில்பட்டி தாலுக்காவில் வாகைத்தாவூர், இடைச்சேவல் போன்ற கிராமங்களில் கிஸான் சபைகளை ஆரம்பித்தார். இந்த வேலையின் மூலம் தமிழ்நாடு கா.க. அங்கத்தினராயிருந்து உ.க.கிருஷ்ணசாமி நாயக்கரையும் தொடர்ந்து பொதுஜனத் தொண்டாற்றத் தூண்ட முடிந்தது.

மகன் செய்யும் சேவையைக் கண்ட அவர் குடும்பத்தினரும் கட்சியிடம் நம்பிக்கை கொண்டனர். 1943-ல் அவ்வேலை செய்வதற்கு அனுமதி மறுத்தவர்கள் மகன் பணியைப் போற்றலானார்கள். ரூ.200 கட்சிக்கு உதவினார். படித்ததும் அவர் தம்பியும் கட்சி வேலையே செய்வதாக முடிவு செய்திருக்கிறார்.

1944-45 அவர் ஜில்லா விவசாயிகள் சங்கத்தின் உதவிக் காரியதரிசியானார். ஆனால் 24-வது வயதில் 8-8-45-ல் அவர் உயிர் நீத்தார். கம்யூனிஸ்டு கட்சியின் பெருமைப் புதல்வர்களில் ஒருவனை கட்சி இழந்தது. கடையநல்லூர் வாசிகளும் சுற்றுவட்டாரங்களிலுள்ளவர்களும் தங்கள் அருமைப் புதல்வனை இழந்தனர். அவர் மரணக்கிரியைக்குக் குழுமிய இந்துக்களும் முஸ்லிம்களுமே இதற்குச் சான்று. அலாதியான மதிப்பைப் பொது ஜனங்களிடம் பெற்ற வீரப் புதல்வனின் தாயும் இன்று கட்சிக்கு இன்னொரு ரூ.100 அளித்து உதவினார். கட்சியின் பெருமையைத் தன் புதல்வன் மூலம் உணர்ந்ததால்.

தோழர் ரத்தின சபாபதியின் உடன் பிறந்த சகோதரியின் மகள் பெயர் ரத்தினம். இவர் தொலைத் தொடர்புத்துறை (பி.எஸ்.என்.எல்) ஊழியர் சம்மேளனத்தில் செயல்பட்டுவருகிறார்.

முற்றும்.

இந்தியா ஒரு விவசாய நாடு இன்னமும் இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் கிராமப்புறங்களில் தான் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயம் மற்றும் விவசாயத்தின் துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை சார்ந்தே தமது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

எழுபதுகளில் வெடித்தெழுந்த நக்சல்பாரி உழவர் புரட்சி! விவசாயிகளின் விவசாய புரட்சியே நாட்டின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் என்று முழங்கியது.
நகர்ப்புறங்களில் இருந்து மாணவர்கள், இளம் தொழிலாளர்கள் அலையலையாக கிராமப் பகுதிகளுக்கு சென்று விவசாய மக்களுடன் தங்கி வேலை செய்தனர். உழுபவனுக்கே நிலம்! உழைப்பவனுக்கு அதிகாரம்! என்ற போர் முழக்கம் நாடு முழுவதும் எதிரொலித்தது.

ஏகாதிபத்தியங்கள், தரகு முதலாளிகள், பெரும் நிலப்பிரபுக்களின் அடியாள் படையான இந்திய ஆளும் வர்க்கம் நக்சல்பாரிகளின் உழவர் எழுச்சியை கடுமையாக ஒடுக்கியது. ஆனால் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நக்சல்பாரி இயக்கம் தொடர்ந்து நாடெங்கிலும் முன்னேறி வருகிறது. விவசாயிகளின் விவசாயப் புரட்சியை முன்னெடுத்துச் செல்லாமல் நாட்டு மக்களுக்கு விடுதலை கிடையாது என்பதில் எந்த ஐயமும் இல்லை. நகர்ப்புறத்தில் அலுங்காமல், குலுங்காமல், சொகுசான வாழ்க்கையில் திளைத்துக் கொண்டு புரட்சி பற்றிப் பேசுவதன் மூலம் எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவர முடியாது. இந்தியாவில் முதலில் தோன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பல தோழர்கள் சொந்த வாழ்க்கையை மக்கள் நலனுக்காக தியாகம் செய்துவிட்டு உண்மையான பற்றுடன் இறங்கி விவசாயிகள் மத்தியில் வேலை செய்தனர். அந்த அனுபவங்கள், அர்ப்பணிப்பு, தியாக மனப்பான்மை இன்னமும் நமக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது என்பதையே கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளும் என்ற இந்த வெளியீடு நமக்கு விளக்குகிறது. எனவே இந்த தோழர்களின் அனுபவத்தை நமது வாழ்க்கையின் நடைமுறையாக ஏற்று செயல்படுவோம். கீழிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் மக்கள் அதிகாரத்தை நிறுவுகின்ற பாதையில் முன்னேறிச் செல்வோம்..

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

முந்தைய பதிவு:

கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளும் – ஈரோடு தர்மலிங்கம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here