ஈரோடு தர்மலிங்கம்

 

ஈரோட்டில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சில காங்கிரஸ்வாதிகள் – தாங்கள்தான் அசல் தேசபக்தர்களென்று எண்ணி அதை ஊராரனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்பும் காங்கிரஸ்வாதிகள் – எழுந்து நின்று தோழர் ஜீவாவைக் கேள்வி கேட்டார்கள். “எங்களை நீங்கள் திருப்பூர் கூட்டத்தில் தாக்கிப் பேசவில்லையா. கள்ள மார்க்கெட் வியாபாரம் செய்ததாகக் கூறவில்லையா’ என்று கேட்டனர். தோழர் ஜீவானந்தம் பதிலளிக்கையில் “உங்களை பிளாக் மார்க்கெட்டுக்காரர்கள் என்று கூறவில்லை. திருப்பூரில் நான் கூறியது என்னவென்றால். எங்களைத் துரோகிகள் என்கிறார்கள். ஈரோடு தர்மலிங்கத்தை நீங்கள்அறிவீர்கள். ஆகஸ்டு கலவரத்தில் கசையடிப்பட்டவர், இன்று அவர் எங்கள் கட்சியில் முழு நேர வேலை செய்து. ஜனங்களுக்காக உழைக்கிறார். ஆனால் தேசபக்தர்களென்று சொல்லிக்கொள்ளும் சிலர் இன்று வியாபாரம் செய்து லாபம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறினேன்’ என்றார். அந்தத் தர்மலிங்கம் யார், என்ன வேலை செய்கிறார். எப்படிக் கட்சிக்கு வந்தார் என்பதை அவரே கூறுகிறார்.

பதிப்பாசிரியர்

என் சொந்த ஊர் ஈரோடு. பிறந்த வருஷம் 1-7-1921. தகப்பனார் கலெக்டர் ஆபீஸில் டபேதார் வேலை பார்த்துவந்தார். 1943-ல்தான் ரிடையர் ஆனார். 3-வது பாரம் வரை படித்தேன். படிக்கும்போது M.L.A., ஜில்லா போர்ட்  எலெக்ஷன்களில் காங்கிரஸ் வாலண்டியராக வேலை செய்துள்ளேன். பள்ளிக்கூடத்தில் அபராதமும், ஜஸ்டிஸ் கட்சியாரிடம் அடியும் பட்டுள்ளேன். படிப்புக்குப் பின் நிர்மாண திட்டத்தின் கீழ் 38, 39, 40-ல் ஆசிரியராகவும். மானேஜராகவும் பக்கத்திலுள்ள கிராமத்தில் வேலை செய்துள்ளேன். ரோடு போடவும். குடிதண்ணீர் வசதிக்கு கிணறு வெட்டவும் பொதுஜனக் கிளர்ச்சி செய்தேன். 1940-42 வரை வியாபாரத்தில் இருந்தேன்; இம்மத்திய காலத்தில் எங்கள் குடும்ப நிலை உயர்ந்தது.

1942-ல் மறுபடியும் டிரெயினிங் படிக்கச் சென்றேன். ஆகஸ்ட் 9-ம் தேதி தலைவர்களை அரஸ்ட் செய்தவுடனே ரேடியோவில் அறிவிக்கப்பட்டதைக் கேட்டதும் பைத்தியம் பிடித்த மாதிரி இருந்தது. அன்றைய பிரேயர் பிரீடிலேயே ஓர் கண்டனத் தீர்மானம் நிறைவேறியது. 12-ம் தேதி ஒருநாள் ஸ்ட்ரைக் செய்தோம். என்ன செய்வதென்றே தெரியவில்லை. பின் டவுனில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அன்று இரவு ரகசியக் கூட்டம் ஒன்று நடப்பதாகத் தெரிந்து அங்கு சென்றேன். அங்கு 16 திட்டம் கொண்ட நோட்டீஸ் கிடைத்தது. இத்திட்டத்தை காந்திஜியினுடையது என்று நான் நம்பவில்லை. இதைக் கேட்டேன். அதற்கு காரியக் கமிட்டி அரஸ்டு செய்யுமுன் அரசு 8-ம் தேதி அவனாசிலிங்கம் செட்டியாருக்குக் கிடைத்ததாகவும். இதுதான் காங்கிரஸ் திட்டமென்றும் அவனாசிலிங்கம் செட்டியாரே வரும் வழியில் ஈரோடில் இறங்கிச் சொன்னதாக சொல்லப்பட்டது. என் நண்பர்களைக் கேட்டேன். செட்டியார் சொன்னதைக் கேட்டேன் என்று சொன்னார் ஒருவர்: (அவர் இன்று பார்ட்டி மெம்பர்) இதன்மேல்தான் நம்பினேன். பின்னர் தந்திக் கம்பிகள், பல பக்கம் வெட்டப்பட்டது. பாஸ்பரஸைக்கொண்டு தனிமையில் போஸ்ட் ஆபீஸில் இருந்த தபால் பெட்டியில் போட்டேன். 31-ம் தேதி பள்ளிக்கூடத்திற்கு ராஜினாமா செய்துவிட்டு இரவு 8 மணித் தனிமையில், பாஸ்பரஸைக் கொண்டு கலெக்டர் ஆபீஸில் உள்ள ரிகார்ட்டு ரூமில் கொளுத்த முயற்சி செய்யும்போது ஆட்கள் வந்துவிட்டார்கள். ஆகவே அவ்விடமிருந்து அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டேன். இதற்கு மத்தியில் 7 வித நோட்டீஸ் வெளியிடப்பட்டது. 31-8-45 அரசு 11-25க்கு அரஸ்ட் செய்யப்பட்டு வீட்டிற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும் உள்ள 1 மைல் தூரமும் லட்டியால் அடிக்கப்பட்டு மயக்கத்துடன் போலீஸ் ஸ்டேஷனுக்குள் போய்ச்சேர்ந்தேன். ராகிப்படியுடன் தனிமையில் ரிமாண்டில் வைக்கப்பட்டேன். அதே சமயத்தில் மற்ற காங்கிரஸ்காரர்களுக்கு தனிக் கிச்சன் அனுமதிக்கப்பட்டது. உண்ணாவிரதத்தின் பேரில் பல வசதிகள் பெற்றேன். ஒரு மாதத்திற்குப்பின் மற்ற நாசவேலை இயக்கத்தினர் 21 பேர் அரஸ்ட் செய்யப்பட்டனர். அவர்கள் எல்லாம் வழிதவறி “தருமலிங்கம் சொன்னார்’” என்ற முறையில் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார்கள். அதிலிருந்து இன்னும் கடுமையான அடக்குமுறைக்கு ஆளானேன். உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் 3 பேர் பாதுகாப்பில் அரஸ்ட் செய்துகொண்டுவந்தார்கள். அவர்கள் என்னைப் பார்த்ததும் கட்டித் தழுவி உன் பெயர் ‘பொன் எழுத்து’க்களால் பொறிக்கப்படும். நாங்கள் நீ அரஸ்ட் செய்யப்பட்டவுடன் பயந்தோம். எங்கே சொல்லிவிடப் போகிறாயோ என்று என்றனர். (அவர்கள் இன்று துரோகிகள் என்கின்றனர்) நோட்டீஸ் அடித்து வெளியிட்டதற்கு 2 வருஷம், தந்தி கம்பி வெட்டியதாக 1 வருஷம் 30 கசையடி, கலெக்டர் ஆபீஸுக்கு நெருப்பு வைத்ததற்கு 10 வருஷம் ஆக 15 வருஷம் கடின காவல் 30 கசையடியுடன் ‘ஸி’ கிளாஸ் கொடுக்கப்பட்டு அலிப்புரம் கொண்டுபோகப்பட்டேன். இதற்கு முன் செஷன்ஸ் கோர்டுக்கு கோயமுத்தூருக்கு கொண்டுபோகப்பட்டபோது ஜெயிலில், ரமணி, கிஸன் முதலியோர்களைச் சந்தித்தேன். அவர்கள் ‘நாசவேலை’ பாதுகாப்பை குந்தகப்படுத்துமே; ஜப்பான் வந்தால் “என்ன செய்வது” என்றனர். ‘கௌரவ ஒப்பந்தம்” என்றேன். நான் “கௌரவ ஒப்பந்தம் என்றால் என்ன, எப்படி இருக்கும்” காங்கிரஸ் சரித்திரம் சொன்னார்கள். ஆனால் அப்பொழுது ஒப்புக்கொள்ளவில்லை. அலிப்புரம் சென்றவுடன் கம்யூனிஸ்ட் என்றாலே வெறுப்பு எனக்கு. கம்யூனிஸ்ட் என்று சொல்வதே பாவம் என்ற எண்ணம். ஆகவே கம்மநாட்டிகள் என்பேன். ஆரம்பத்தில் தோழர்கள் என்னை அணுகவில்லை. மகாத்மாஜி உண்ணாவிரதம் ஆரம்பிக்குமுன் C & B கிளாஸ்காரர்களுக்கு சோமயாஜுலு என்பவரைக்கொண்டு கிளாஸ் நடத்தப்பட்டது. அதில் நான் ஒரு கன்வீனர். மகாத்மா உண்ணாவிரதம் ஆரம்பிக்குமுன் அவர் விட்ட அறிக்கையைப் பார்த்தேன். நாசவேலையை கண்டித்ததையும் போராட்டம் காங்கிரஸ் ஆரம்பிக்கவில்லை என்றும் இருந்தது. அங்குள்ள காங்கிரஸ்காரர்களைச் சந்தித்தேன். அவர்கள் அது அரசியல் தந்திரம் என்றனர். என் மனது மிகவும் வேதனைப்பட்டது. ஏனெனில் மகாத்மாஜியை பொய்யர் என்பது, உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவது மகாத்மாஜியா என்று எண்ணினேன்.

அதுசமயம் K. முருகேசன், M.S.S. மணி, M.R.S. மணி முதலிய கம்யூனிஸ்டுகள் 17-ம் நெ. பிளாக்கில் இருப்பது தெரிந்து அங்கு சென்றேன். சென்றபோது என்னை வெறுப்பார்கள் என்று எண்ணினேன். ஆனால் நான் எண்ணியபடி இல்லை. அவர்கள் என்னை வரவேற்றனர். பின் அவர்களுடன் 8 நாள் இரவு பகல் விவாதம் செய்தேன். தேச விடுதலைக்கு உண்மையான நேரான பாதை கம்யூனிஸ்ட் காட்டும் காங்கிரஸ்-லீக் ஒற்றுமைப் பாதை என்று உணர்ந்தேன். நாட்டில் 99% பேரான சுரண்டப்படும் மக்களான தொழிலாளி – விவசாயி வர்க்கத்தினிடம் அவர்கள் செய்யும் வேலையையும் கண்டேன். பின் நான் அறியாமலேயே கட்சிக்குள் வந்தேன். பின் செல் செகரெடிரியானேன். அதற்குள் என் திரேகம் மிக மோசமானது. ஆஸ்த்மாவில் மிகவும் கஷ்டப்பட்டேன். 8 மாதம் ஆஸ்பத்திரியில் இருந்து 2 வருஷம் கடந்தவுடன் 1944 மார்ச்சு 18-ம் தேதி ரிலீஸ் ஆனேன். வந்த 22-ம் நாள் வீட்டைவிட்டு வெளியேற்றினர் என் வீட்டார். அது முதல் விவசாய சங்க ஊழியராக இருக்கிறேன். இப்பொழுது பல்லடம் தாலுக்காவில் வேலை செய்கிறேன். சென்னை மாகாணத்திலேயே முதன் முதல் அதிக தண்டனையும் 30 கசையடியும் பெற்றது நான் ஒருவன்தான்.

“ஈரோடு நகரில் உள்ள கைக்கோளன் தோட்டம் என்ற பகுதியில் கே. சின்னப்ப முதலியார். முத்தாயம்மாள் தம்பதியர்க்கு நான்காவது குழந்தையாக 01-07-1922 அன்று பிறந்தவர் தியாகி கே.சி. தர்மலிங்கம். இவருக்கு நேர்மூத்த சகோதரர்கள் மூன்றுபேர்: சீரங்கமுதலியார். முருகேச முதலியார்.கே.சி.சாம்பசிவம். இளையவர் கே.சி. நடராஜன்.

கே.சி. தர்மலிங்கத்தின் தந்தையார் கே. சின்னப்ப முதலியாரும். சித்தப்பா (தந்தையாரின் உடன்பிறந்த தம்பி) கே. மாரிமுத்து முதலியாரும் ஈரோடு சார் ஆட்சியர் (Sub Collector) அலுவலகத்தில் டஃபேதாரர்களாகப் பணிபுரிந்து வந்தனர்.

கே.சி. தர்மலிங்கம் ஈரோட்டில் போர்டு ஸ்கூலில் 3-வது பாரம் முடித்து, லண்டன் மிஷின் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம், தேச விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு எழுச்சி பெற்ற காலகட்டம். 1942 ஆகஸ்டு 9. வெள்ளையனே வெளியேறு என்ற புரட்சி முழக்கம் நாடெங்கும் எதிரொலித்து தீவிரமடைந்து வந்த நேரம்.

தேச விடுதலை உணர்வில் தீவிர மனப்பான்மையும். கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர்களுடன் தொடர்பும் கொண்டிருந்த கே.சி. தர்மலிங்கம் ஆங்கிலேய அரசுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். முற்றுப்பெறாமல் பாதியில் நின்றுவிடுகிறது, ஆசிரியர் பயிற்சி.

ஈரோடு சார்ஆட்சியர் அலுவலகத்தை தகர்க்க திட்டமிடப்படுகிறது. யுத்த எதிர்ப்பு செய்தது, அஞ்சல் நிலையத்திலிருந்த அஞ்சல் பெட்டிகளில் பாஸ்பரஸ் போட்டு எரித்தது. தந்தி கம்பிகள் வெட்டப்பட்டது, இறுதியில் சார் ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீ வைத்தது என 4 குற்றச்சாட்டுகளில் கே.சி. தர்மலிங்கம் 31-08-1942-ல் கைது செய்யப்பட்டார்.

முதல் இரண்டு வழக்குகளுக்குத் தலா 2 வருடக் கடுங்காவல் தண்டனை ஈரோடு துணைக்கோட்ட நடுவர் நீதிமன்றம் வழங்கியது. மூன்றாவது வழக்கில் ஒரு வருடக்கடுங்காவலும், 30 கசையடிகளும் தண்டனையானது. சார் ஆட்சியர் அலுவலக தீவைப்பு வழக்கு கோவை செசன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. இதில் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. தண்டனைகள் அனைத்தும் ஏககாலத்தில் ஒருசேர அனுபவிக்க வேண்டும் என்பது ஆங்கிலேயர் கால நீதிமன்ற உத்தரவானது.

இதற்கிடையில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் டஃபேதாரர்களாகப் பணிபுரிந்துவந்த தந்தையாரும். சித்தப்பாவும் பணி மாற்றப்பட்டு ஈரோடு கிளைச்சிறை பொறுப்பதிகாரிகளாக பணியாற்றுகிறார்கள். இங்கு நடந்த நிகழ்வு நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

ஆங்கிலேயக் காவல்துறை கே.சி. தர்மலிங்கத்தை கைது செய்து ஈரோடு கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைத்தது. இங்கு ஒருவருட காலம் வைக்கப்பட்டிருந்தார். அப்போது நீதிமன்ற விசாரணைக்காக தர்மலிங்கம் அடிக்கடி அழைத்துச் செல்லப்பட்டார்.

காலையில் சித்தப்பா சிறைக் கதவைத் திறந்து – மகன் தர்மலிங்கத்தை நீதிமன்றத்திற்கு காவலர்களுடன் அனுப்பி வைப்பார். நீதிமன்றம் சென்று மாலையில் சிறைக்குத் திரும்பும்போது சித்தப்பாவின் பணிநேரம் முடிந்து, தந்தையார் பணியில் இருப்பார். பெற்ற தந்தை மகனைச் சிறையில் வைத்து பூட்டி காவலுக்கு மேற்பார்வை பார்ப்பார். இந்தக் காலகட்டத்தில் இவர்களுக்குள் நடந்த பாசஉணர்வுப் போராட்டம் காவியங்களுக்கு நிகரானதாகும்.

சிறுவயது முதலே தர்மலிங்கம் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறையில் அடைக்கப்பட்டபோது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. உயிராபத்து ஏற்படும் கடுமையான நிலையில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர் 16-03-1944 அன்று விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்தபோது எம். பக்தவச்சலம், சி. சுப்பிரமணியம்,மருத்துவர் எல்.கே. முத்துசாமி ஆகியோருடன் சக சிறைவாசியாக இருந்து அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும், நீடித்த நட்பும் கிடைத்தது. விடுதலை பெற்று திரும்பிய பின்னர் விவசாயிகள் இயக்கத்தில் கவனம் செலுத்தியுள்ளார். ஈரோடு – கொடுமுடி சாலையில் உள்ள வெள்ளோட்டம் பரப்பு என்ற ஊரில் பொது மக்களிடமிருந்த முரண்பாடுகளையும், வேறுபாடுகளையும் நீக்கி அனைவரும் கூட்டு முயற்சியில் ஈடுபட்டு சாலை அமைப்புப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். இதுபோல் சுற்றுவட்டார விவசாயிகளின் நன்மதிப்பை பெற்றுவந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமாக்கப்பட்டபோது தலைமறைவு கட்சி வாழ்க்கையை வால்பாறை பகுதியில் மேற்கொண்டுள்ளார். பொதுவாழ்வு ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அமைந்துள்ளது. பின்னர் காங்கிரஸ் இயக்கத்திலுமாக 1951-52 ஆண்டுகளில் பெரியநாயகி என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கை மேற்கொண்டார். விஜயேந்திரன் என்ற மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.

நாடு விடுதலையடைந்த பின்னர் கிராம சேவகர் (Village Guide) பணியில் சேர்ந்தும், சர்வோதய இயக்கத்தில் இணைந்தும் பொதுமக்களுக்குத் தொடர்ந்து பணியாற்றி வந்தார். 1975-76-ம் வருடங்களில் மத்திய அரசு குடும்பக் கட்டுப்பாட்டை வலுக்கட்டாயமாக அமலாக்கியதை எதிர்த்து விருப்ப ஓய்வு எடுத்துவிட்டார். 1987 ஜனவரி 3-ஆம் தேதியன்று காலமாகியுள்ளார். தியாகி கே.சி. தர்மலிங்கம் அவர்களின் துணைவியார் திருமதி. பெரியநாயகியும், மகன் விஜயேந்திரனும் ஈரோடு நகரில் வசித்து வருகிறார்கள். த.விஜயேந்திரன் ஜவுளி வியாபாரம் செய்துவருகிறார்.

முந்தயை பதிவை படிக்க கீழே சொடுக்கவும்:

கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளும் – சி.ராமச்சந்திரன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here