முந்தைய பதிவு:

விடுதலைப் போரின் வீரமரபு – 16

முதல் சுதந்திரப் போரின் இறுதி மூச்சு

1806 வேலூர் சிப்பாய் புரட்சி

“ஈனமான அந்நியன் கீழ் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்குகள், சிப்பாய்கள் மற்றும் போர்க்கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் கீழ்க்கண்டவாறு தங்களது வீரத்தை வெளிப்படுத்த வேண்டும். ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்.”

1801-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட
சின்ன மருதுவின் திருச்சி அறிக்கையில் இருந்து.

சின்ன மருது விடுத்த அறைகூவலை ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தான் தம் சொந்த அனுபவத்தில் உணர்ந்தார்கள், தென்னகத்தின் சிப்பாய்கள்.1800-1801 ஆம் ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் மருது சகோதரர்கள், தூந்தாஜி வாக், கோபால் நாயக்கர், கானி ஜ கான் முதலியோர் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி தியாகிகளானார்கள். “இனி எதிர்ப்பவர்கள் எவருமில்லை”. என்று ஆங்கிலேயர்கள் இறுமாந்திருந்த நேரம். அந்த இறுமாப்பை மின்னெலென தோன்றிய ஒரு வாளினால் கிழித்துச் சென்றது 1806இல் வெடித்த வேலூர் சிப்பாய் கிளர்ச்சி.

“மீசையைக் குறைக்க வேண்டும், புதிய தலைப்பாகையொன்றை அணிய வேண்டும், கடுக்கன், காப்பு முதலான அணிகலன்கள் அணியக் கூடாது” என்றெல்லாம் சிப்பாய்கள் மீது வெள்ளையர்கள் விதித்த நடை, உடை, பாவனை குறித்த கட்டுப்பாடுகளே வேலூர் கிளர்ச்சிக்குக் காரணமென்று கருதுவது அறிவீனம். ஒரு இராணுவத்தில் வீரர்கள் கலகம் செய்வதென்பது வெறும் இராணுவ கட்டுப்பாட்டை மீறிய ஒழுங்கீனம் குறித்த பிரச்சினையல்ல. பாரிய சமூக காரணிகளின்றி, ஆளும் வர்க்கத்தின் படைப் பிரிவுக்குள்ளேயே ஒரு கலகம் தோன்றிவிடுவதில்லை. 1946 பம்பாய் கடற்படை வீரர்களின் எழுச்சி, சீக்கிய மக்கள் மீதான அரச பயங்கரவாதம் மற்றும் பொற்கோயிலில் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து சீக்கிய ரெஜிமண்டில் நடந்த கலகம், வியட்நாம் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக அமெரிக்க வீரர்களிடையே எழுந்த எதிர்ப்புணர்வு முதலிய ‘சிப்பாய்க் கலகங்கள்’ இராணுவத்திற்குள் எழுந்த பிரச்சினைகளால் உருவானவை அல்ல; இராணுவத்திற்கு வெளியே சமூகத்தில் நிலவும் அரசியல் முரண்பாடுகளும் போராட்டங்களும் தோற்றுவிக்கும் உணர்வுதான் கலகம் செய்வதற்குரிய தார்மீக பலத்தையும் தைரியத்தையும் ஒரு சிப்பாய்க்கு வழங்குகின்றன.

1800-1801 முதல் இந்தியச் சுதந்திரப் போருக்குப் பின் தென்னிந்தியாவின் கணிசமான பகுதிகள் கம்பெனியின் பிடிக்குள் வந்து விட்டன. அப்போது கம்பெனியின் இராணுவத்தில் சுமார் 50,000 இந்தியச் சிப்பாய்கள் இருந்தனர். இவர்களுக்கெல்லாம் வெள்ளையர்களை விட சம்பளம் குறைவு, சுபேதார் பதவிக்கு மேல் பதவி உயர்வும் இல்லை என்பதுடன் சிறு தவறுகளுக்குக் கூட மிகக் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். இத்தகைய பாகுபாடு குறித்த வெறுப்பு படைவீரர்களிடம் இருந்தது. வெற்றிகள் தந்த இறுமாப்பு வெள்ளையனிடம். சிப்பாய்களிடமோ அடிமைத்தனம் சுமத்திய அவமான உணர்ச்சி. இதுதான் கம்பெனியின் இந்திய இராணுவம். அதிலொரு பிரிவுதான் வேலூர் கோட்டை.

வேலூர் கோட்டையில் 1800 சிப்பாய்களும் 400 வெள்ளையர்களும் இருந்தனர். வேலூரில் இருந்த 23ஆவது ரெஜிமண்ட்டின் 2-ஆவது பட்டாலியன் முழுவதிலும், முதல் பட்டாலியனின் 6 கம்பெனிகளிலும் திருநெல்வேலிச் சீமையிலிருந்து 1801-ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட வீரர்கள் நிறைய இருந்தனர். மற்ற பிரிவுகளில், தமது மன்னனின் தியாகத்தை இன்னமும் மறக்க இயலாத திப்புவின் இராணுவத்தைச் சேர்ந்த வீரர்களும் விரவியிருந்தனர். இந்த வீரர்கள் எவரும் கம்பெனி இராணுவத்தில் விரும்பிச் சேர்ந்தவர்கள் அல்லர். தெற்கத்திப் பாளையங்கள் கம்பெனியின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தவுடனேயே நிலவரி 100 சதம் உயர்த்தப்பட்டதால், விவசாயம் அழிந்து பஞ்சங்கள் தொடர்கதையாகி மக்களைத் துயரத்திலாழ்த்தின. இந்நிலையில் மக்கள் பலருக்கு அன்று கிடைத்த ஒரே வேலை வாய்ப்பு கம்பெனி ராணுவம்.

1801-ஆம் ஆண்டுதான் மருது சகோதரர்களும், ஊமைத்துரையும், சிவத்தையாவும் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டனர். அந்த மாபெரும் வீரர்களின் தியாகத்தையும், வெள்ளையர்களின் பயங்கரவாதத்துக்கு இலக்கான தங்களது உற்றார் உறவினர்களின் துயரத்தையும், நெல்லைச் சீமையிலிருந்து வந்த வீரர்கள் எப்படி மறந்திருக்க முடியும்? ‘மீசையை எடு’ என்ற உத்தரவு எஞ்சியிருக்கும் அவர்களுடைய தன்மானத்தின் மீது தொடுக்கப்பட்ட இறுதித் தாக்குதல்.

திப்புவின் ஆறு மகன்களையும், எட்டு மகள்களையும் நூற்றுக்கணக்கான அவரது உறவினர்களையும் வேலூர் கோட்டையின் அரண்மனைகளில் சிறை வைத்திருந்தது கம்பெனி அரசு. சிறைப்பட்டிருந்த போதிலும் அரண்மனை வாழ்வு அவர்களைச் சுகபோகிகளாகவும், மந்தபுத்தி உடையவர்களாகவும் மாற்றி விடும் என்று எதிர்பார்த்தார்கள் வெள்ளையர்கள். ஆனால், திப்புவின் மூத்தமகன் ஃபத்தே ஹைதரும், மூன்றாவது மகன் மொஹியுதீனும், நான்காவது மகன் மொய்சுதீனும் சிறையிலிருந்தபடியே சிப்பாய்களின் ஆங்கிலேய எதிர்ப்புணர்ச்சியை அரசியல் ரீதியாக பட்டைதீட்டிக் கொண்டிருந்தனர். சிறை வைக்கப்பட்ட நாளிலிருந்தே தூந்தாஜி வாக்குடனும், மைசூரில் கிருஷ்ணப்பா நாயக் தலைமையில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பாளையக்காரர்களுடனும் தொடர்பு வைத்துக்கொண்டு, அவர்களது போராட்டத்தை ஊக்கப்படுத்தி வந்தார் ஃபத்தே ஹைதர்.

இதுபோக மைசூர்ப் பகுதியில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய 3000 மக்கள் வேலூர் கோட்டையின் சுற்றுவட்டாரத்தில் குடியேறியிருந்தார்கள். திப்புவின் மைசூரைச் சேர்ந்த ஃபக்கீர்கள் எனப்படும் ஏழை இசுலாமிய சாமியார்கள், வேலூர் வட்டாரங்களில் வெள்ளையர்களை எதிர்த்து ‘மீண்டும் திப்புவின் அரசை நிறுவுவோம்’ என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தும், பாடியும், பொம்மலாட்டம் நடத்தியும் வந்தனர். வேலூர் கோட்டை கிளர்ச்சியின் கொதிகலனாக மாறிக் கொண்டிருந்தது.

இந்நிலையில்தான் ஆங்கிலேய தளபதிகள் கிராடோக், அக்னியூ முதலியோர் ‘தலைப்பாகை, மீசை’ குறித்த கட்டுப்பாடுகளைக் கொண்டு வருகின்றனர். இவை தம்மை ஐரோப்பிய அடிமைகளாக்கும். சதித்திட்டம் என சிப்பாய்கள் குமுறுகின்றனர். இந்த கர்னல் அக்னியூ என்பவன்தான் மருது சகோதரர்களையும், ஊமைத்துரையையும் நரவேட்டையாடியவன் என்பதால் இவன் மேல் சிப்பாய்கள் கூடுதலாக வெறுப்புக்கொண்டிருந்தனர். வேலூரிலும், வாலாஜாவிலும் இருந்த சிப்பாய்கள் வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய தலைப்பாகைகளை அணிய மறுத்துக் கலகம் செய்கின்றனர். இதைத் தூண்டிவிட்ட சுபேதார் வேங்கடநாயர் (ஏற்கெனவே திப்புவிடம் பணிபுரிந்தவர்) கைது செய்யப்படுகிறார். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இரண்டு ஹவில்தார்களுக்கு 900 கசையடிகள் தரப்படுகின்றன. ஒரு தலைப்பாகை பற்றிய பிரச்சினைக்கு வெள்ளையர்கள் அளித்த இந்தக் கொடூர தண்டனைகள் சிப்பாய்களின் தன்மான உணர்ச்சியை மேலும் தூண்டி விடுகின்றன.

அந்தத் தன்மான உணர்ச்சி அரசியல் போராட்டமாக மாறுகிறது. இனி, மீசையும் தலைப்பாகையும் பிரச்சினையல்ல, கம்பெனி ஆட்சிக்கு முடிவு கட்டுவதுதான் பிரச்சினை’ என்று மாறுகிறது சிப்பாய்களின் போராட்டம். ‘வேலூர்க் கோட்டையைக் கைப்பற்றி எட்டு நாட்கள் வைத்திருந்தால் போதும், மீண்டும் திப்புவின் ஆட்சியை நிலைநாட்டலாம்” என்று சிப்பாய்களும், திப்புவின் வாரிசுகளும் முடிவெடுக்கின்றனர். அதன்பின் சிப்பாய்களின் இரகசியக் கூட்டங்கள் நடக்கின்றன. சிப்பாய்கள் வாள் மற்றும் குர்ஆன் மீது சத்தியம் எடுத்துக்கொண்டு சபதத்தை நிறைவேற்றுவதாய் உறுதி எடுக்கின்றனர். இந்தச் செய்தி வேலூரில் மட்டுமல்ல, வாலாஜா, ஆற்காடு, சென்னை, ஐதராபாத் முதலிய இராணுவ முகாம்களில் இருக்கும் வீரர்களுக்கும் ரகசியமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஏனைய முகாம்களில் இருக்கும் வீரர்கள் வேலூர் கோட்டையின் வெற்றியைத் தெரிந்து கொண்டதும் கிளர்ச்சி செய்ய வேண்டும் என முடிவு செய்யப்படுகிறது.

சுபேதார் ஷேக் ஆதமும், ஜமேதார் ஷேக் ஹுசைனும் சிப்பாய்களின் தலைவர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். 1806 ஜூன் 17 அன்று எழுச்சியைத் தொடங்க வேண்டும் என நாள் முடிவு செய்யப்படுகிறது.ஆனால் இந்தத் திட்டம் முஸ்தபா எனும் துரோகிச் சிப்பாயின் மூலம் வெள்ளையர்களுக்குக் கசிந்து விடுகிறது. வெள்ளையர்கள் அதை நம்பவில்லை. என்றாலும் பாதுகாப்பு கருதி கிளர்ச்சிச் தலைவர்கள் திட்டத்தை ஜூலை 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறார்கள். இந்தத் தள்ளிவைப்பு ஏனைய முகாம்களிலிருந்த வீரர்களுக்குத் தெரியாததால் ஜூன் 17 அன்று திட்டமிட்டபடி எழுச்சி தொடங்காதது அவர்களிடம் விரக்தியையும் ஏற்படுத்தியிருந்தது.

தொடரும்…

முந்தைய பதிவு:
விடுதலைப் போரின் வீரமரபு – 16

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here