2020 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய கொரோனா காலத்தில் மனித குலத்திற்கு தேவையான ஆக்சிஜன் குடுவைகளில் அல்லது உருளைகளில் அடைக்கப்பட்டு அவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டது. ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் துவங்கி அமெரிக்க போன்ற மேல்நிலை வல்லரசுகளில் கூட ஆக்சிஜன் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடியது.

நுரையீரல் சுவாசிக்கும் தன்மையை இழந்து, செயற்கையாக ஆக்சிஜனை செலுத்துவதன் மூலம் உயிர் பிழைக்க வைக்க முடியும் என்ற கொடுமையான சூழலில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது என்று கூறலாம். இது கொரோனாவை உருவாக்கிய வைரஸ் உடலில் ஏற்படுத்திய மாற்றங்களுக்கு ஈடு செய்வதற்கான தேவையாக இருந்தது.

நாம் வசிக்கும் இந்த கிரகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் நிறைந்த கிடக்கும் ஆக்சிஜன் சுமார் 21 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த ஆக்சிஜன் எல்லா காலங்களிலும் பூமியின் வளிமண்டலத்தில் இருந்தது இல்லை. 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வளிமண்டலத்தில் நிகழ்ந்த சில அறிவியல் விளைவுகளின் காரணமாக கார்பன் டையாக்சைடு, மீத்தேன் மற்றும் நீராவி நிறைந்த கிடந்த வளிமண்டலத்தில் ஆக்சிஜன் உருவாகியது.

மனிதன் இயற்கைக்கு எதிராக பல்வேறு வகைகளில் அழிவுச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் ஆக்சிஜனின் அளவு வீழ்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. பருவநிலை மாற்றங்களை பற்றி பல்வேறு உச்சி மாநாடுகள் நடத்தப்பட்டாலும், பருவநிலைகளை சீரழிப்பதில் முன்னணியாக உள்ள அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் ஆக்ஸிஜனை ஒழித்து கட்டுவதில் பங்கு வகிக்கின்றன.

இயற்கை நமக்கு அளித்துள்ள கொடையான ஆக்சிஜனை ஒழிப்பதற்கு பல்வேறு விதமான பசுமை வாயுக்களை புகுத்துகிறது. ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் அன்றாடம் வீடுகளில் உபயோகிக்கப்படும் ஏசி, பிரிட்ஜ் , குளிர்சாதன வசதியூட்டப்பட்ட ஷாப்பிங் மால்கள், ரயில்கள், கார்கள் வாகனங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் கொடுமையான குளோரோ புளோரோ கார்பன் மற்றும் கார்பன் மோனாக்சைடு இரண்டையும் வெளியேற்றிக் கொண்டே உள்ளது.

மற்றொருபுறம் பிரம்மாண்டமான தொழிற்சாலைகளில் எந்தவிதமான சூழலியல் கட்டுப்பாடும் இன்றி அன்றாடம் நூற்றுக்கணக்கான டன்களில் கரியமில வாயு, கார்பன் டை ஆக்சைடு தொடர்ச்சியாக வெளியிடப்படுகிறது. இவை அனைத்தும் ஆக்ஸிஜனின் இருப்பில் கடுமையான தாக்கத்தை உருவாக்குகிறது என்று சூழலியல் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர்.  2021 ஆம் ஆண்டிலேயே அறிவியல் இதழான நேச்சர் இந்த செய்தியை வெளியிட்டு இருந்தாலும், இந்த மாற்றம் இன்றோ அல்லது வெகு சீக்கிரமோ நடக்கப்போவதில்லை. சில ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்றாலும் தற்போது புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றால் இச்செய்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த கிரகத்தில் இருந்து தப்பி ஓடுவதற்காக உலக பணக்காரர்கள், உலகை சூறையாடிக் கொழிக்கும் கார்ப்பரேட் பயங்கரவாதிகள் வேற்று கிரகங்களில் கிடைக்கும் வசதிகளை பற்றி தொடர்ச்சியாக பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து ஆய்வு செய்து வருகின்றனர். உலகின் முதல் பணக்காரனான எலன் மாஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமும், பல்வேறு வானியல் ஆராய்ச்சி நிறுவனங்களின் மூலமும் நமது பூமிக்கு வெளியில் மனிதர்கள் வாசிப்பதற்கு பொருத்தமான இடம் இருக்கிறதா என்று வெறித்தனமாக அலைந்து கொண்டிருக்கின்றனர்.

இயற்கை அளித்த கொடையை நாசப்படுத்தி ஒழித்துக் கட்டிய ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் மற்றும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு தான் செய்த கிரிமினல் குற்ற நடவடிக்கைகளை மறைத்து விட்டு உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் அதாவது ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள ஏழைகள், வாழ வசதி இல்லாத பராரிகள் முதல் செயற்கையாக இயற்கையை சீரழிக்கும் கிரிமினல்கள் பணக்காரர்கள் வரை அனைவரும் சுற்றுச்சூழலை நாசமாக்கி வருவதாக சமப்படுத்தி குற்றம் சுமத்துகின்றனர். உண்மையில் ஒரு சிறு கும்பலின் நலனுக்காக உலகின் இயற்கை வளம் சூறையாடப்படுகிறது.

இதன் காரணமாக பாதிப்படைபவர்கள் தான் வசிப்பிடத்திலிருந்து வேலை தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்ற புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் இனப்படுகொலைகள், மதப்படுகொலைகள் போன்றவற்றின் மூலம் அகதிகளாக்கப்பட்டு நாடுகளை விட்டு நாடு செல்லும் அகதிகள், போர்களின் மூலம் இருப்பிடங்களை இழந்து அகதிகளாக வெளியேறும் உழைக்கும் மக்கள் தான்.

இதையும் படியுங்கள்: ஜேம்ஸ் வெப்: பிரபஞ்சவியலில் புதிய பரிமாணம்! அறிவியல் கட்டுரை!

பணக்காரர்களுக்கும், அவர்களது குல கொழுந்துகளுக்கும் அடைவதற்கு வேறொரு புதிய உலகம் இருப்பது அவர்களுக்கு நம்பிக்கையூட்டி கொண்டிருக்கிறது. ஆனால் நாம் இழப்பதற்கு இந்த பொன் உலகத்தை விட்டால் வேறு ஏதுமில்லை. மதங்கள் முன்வைத்து பிரச்சாரம் செய்யும் சொர்க்கம், நரகம் போன்றவை எதுவும் சாத்தியமானதே இல்லை. ஆனால் பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக மனித குலம் பாதுகாத்து வந்த இயற்கை செல்வங்களை இந்த தலைமுறையில் நாம் பாதுகாக்காவிட்டால் ஆக்சிஜன் பற்றாக்குறை மட்டுமின்றி படிப்படியாக பூவுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் தனது உயிரை இழந்து இறுதியில் பொட்டல்காடாக பூவுலகம் மாறுவது உறுதி.

நமக்கு இரண்டே இரண்டு தெரிவுகள் தான் உள்ளது ஒன்று ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை முற்றாக ஒழித்துக் கட்டி பூவுலகை பாதுகாக்க போகிறோமா அல்லது கோழைத்தனத்துடன், அச்சத்துடன் வாழ்க்கை நடத்திக் கொண்டே எதிரிகளை எதிர்த்து போராடாமல் “வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்” என்று வாழ்ந்து சாகப் போகிறோமா என்பதே நம் அனைவரின் முன் உள்ள கேள்வி.

கேடுகெட்ட முதலாளித்துவ சமூக அமைப்பால் மனித குலத்தை மட்டுமின்றி, சுற்றுச்சூழலையும், பூமியின் அழிவையும் தடுக்கவே முடியாது. எனவே ஒட்டுமொத்த மனித குலத்தையும் பூமியையும் பாதுகாப்பதற்கு சோசலிசம் சமூக அமைப்பை கட்டியமைப்பதற்கான வேலையை துரிதப்படுத்துவது ஒன்றே நம் முன் உள்ள தீர்வு.

  • இரா.கபிலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here