மனிதர்களின் இரத்தத்தில் முதல் முறையாக பிளாஸ்டிக் நுண்
துகள்கள்  கண்டுபிடிப்பு!


முதலாளித்துவ லாப வெளியானது இந்த மண்ணையும், நீரையும், காற்றையும் மிக மோசமாக மாசுபடுத்தியுள்ளது. போதாக்குறைக்கு அது ஊட்டிய நுகர்வு வெறியால் கடந்த 20,30 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு பெருமளவு அதிகரித்து அதன் கொடிய விளைவுகளை இன்று மனிதகுலம் எதிர்கொண்டுள்ளது. குழந்தைகளுக்கான பால் புட்டியில் தொடங்கி தேநீர், சாம்பார் பார்சல் வரை அனைத்தும் பிளாஸ்டிக் மயமாகி உள்ள இச்சூழலில், இதனால் மனிதர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படப் போகின்றன என்பது குறித்தான அவசர மற்றும் அவசிய ஆய்வுகளின் தேவையை வலியுறுத்துகிறது இந்த கட்டுரை.

 *****

மனித இரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் எனும் நுண் மாசுக்கள் முதன்முறையாக கண்டறியப் பட்டுள்ளன. இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 80 சதவீத பேருக்கு இந்த நுண்துகள்கள் இரத்தத்தில் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை உடலைச் சுற்றி பயணிக்கலாம் மற்றும் உள் உறுப்புகளில் தங்கலாம் எனவும் ஆய்வு காட்டுகிறது. நமது  ஆரோக்கியத்தில் எத்தகைய விளைவுகளை உண்டாக்கும் என இன்னும் அறியப்படவில்லை. எனினும் இந்த நுண்துகள்கள் ஆய்வகத்தில் உள்ள மனித உயிர் அணுக்களுக்கு சேதத்தை விளைவிக்கிறது என்பது நிரூபணமாகி உள்ளது.

பிளாஸ்டிக் நுண்துகள்கள்

ஏற்கனவே காற்று மாசு துகள்கள் உடலுக்குள் நுழைந்து இலட்சக்கணக்கான முன்கூட்டிய மரணங்களை (Early deaths) ஏற்படுத்தி வருவதால், ஆராய்ச்சியாளர்கள் இவ்விஷயத்தில் பெரும் கவலை அடைந்துள்ளனர். பெரிய அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலில் கொட்டப் படுகின்றன. அதிலிருந்து பிளாஸ்டிக் நுண் துகள்கள் முழு கிரகத்தையும் மாசு படுத்தியுள்ளன. எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி முதல் கடலின் ஆழம் வரை இவை வியாபித்து உள்ளன. மக்கள் ஏற்கனவே உணவு மற்றும் நீர் மூலம் நுண் துகள்களை உட்கொள்வதுடன் அதை சுவாசிக்கவும் செய்கின்றனர். இதன் வெளிப்பாடுகள் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மலங்களில்  காணப்படுகின்றன.

ஆரோக்கியமான 22 நபர்களின் இரத்தத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்ததில் அதில் 17 பேரின் இரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருந்தன. அதில் பாதி பேரின் மாதிரிகளில் பெட் (PET) பிளாஸ்டிக் துகள்கள் (தண்ணீர் அருந்த பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் வந்துள்ளவை) இருந்தன. மூன்றில் ஒருவரிடம் பாலிஸ்டிரின் (உணவு மற்றும்  வேறு பொருட்களை பேக்கேஜ் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக்)  துகள்களும், நான்கில் ஒரு பங்கு நபர்களிடம் பாலி எத்திலீன் (இது பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் உள்ள இரசாயனம்) துகள்களும் காணப்பட்டன.

நெதர்லாந்தில் உள்ள கல்வி மற்றும் ஆய்வுக்காக இயங்கும் Vrije யுனிவர்சிட்டியின் சுற்றுச்சூழல் நச்சுயியல் ( Ecotoxicologist) அறிஞரான Prof. டிக் வேதாக் ( Dick Vethaak) கூறுகையில், நமது ரத்தத்தில் பாலிமர் துகள்கள் இருப்பதற்கான முதல் அறிகுறியை எங்களது ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆனாலும் இந்த ஆய்வை தொடர வேண்டும். மாதிரிகளின் அளவுகளையும் அதிகரிக்கவேண்டும் என்றார்.

Prof. டிக் வேதாக்

மேலும்,”பல குழுக்கள் இது தொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகின்றன. இதுகுறித்து கவலை கொள்வது நியாயமானதுதான், பிளாஸ்டிக் துகள்கள் உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன. முந்தைய ஆய்வுகள், குழந்தைகளின் மலத்தில் தான் பெரியவர்களை விட பத்துமடங்கு பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக காட்டின. பிளாஸ்டிக் புட்டிகளில் பால் அருந்துவதால் ஒருநாளில் மில்லியன் கணக்கான மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உட்செல்வதாக அந்த ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. குழந்தைகள் மற்றும் இளம் சிறார்கள்தான் இரசாயனத்தால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளவர்கள் என்பதை நாம் அறிவோம் இதுதான் எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது” என்கிறார் அவர்.

சர்வதேச சுற்றுச்சூழல் ( Environment International) இதழில் சமீபத்திய புதிய ஆராய்ச்சி குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது. இது இப்போது நடைமுறையில் இருக்கும் துகள் பகுப்பாய்வு கண்டறியும் தொழில்நுட்ப அடிப்படையில் (அதாவது 0.007mm அளவுள்ள துகள்கள்) அமைந்தது.

சில ரத்த மாதிரிகளில் இரண்டு அல்லது மூன்று வகையான பிளாஸ்டிக் துகள்கள் இருந்தன. இந்த ஆய்வுக்குழு, மாதிரிகள் மாசுபடுவதை தவிர்ப்பதற்காக கண்ணாடி குழாய்களையும், ஸ்டீல் சிரஞ்சுகளையும் பயன்படுத்தியது. ரத்த மாதிரிகளுக்கு இடையே பிளாஸ்டிக்கின் அளவும் வகையும் கணிசமாக வேறுபடுவதை வேதக் ஒப்புக்கொண்டார். ஆனால் இது ஒரு புதுவகை முன்னோடியான ஆய்வாகும் எனக் கூறினர்.

மேற்கூறிய மாறுபாடுகள் பிளாஸ்டிக் பூச்சு உள்ள தேநீர் கோப்பைகள் அல்லது பிளாஸ்டிக் முகக் கவசங்கள் போன்ற குறுகிய கால பயன்பாட்டின் விளைவாகவும் இருக்கலாம். மனித உடலில் இதன் மூலம் என்ன நிகழ்கிறது என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இந்தத் துகள்கள் உடலில் தக்க வைக்கப்படுகிறதா அல்லது ரத்தம் மற்றும் மூளையின் தடையைத் தாண்டி உள் உறுப்புகளுக்கும் செல்கின்றனவா? மேலும் இத்தகைய நுண்துகள்கள் ஏதேனும் நோயை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளதா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்க போதுமான நிதி ஒதுக்கி அவசரமான ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது.

Here's How at Least 74,000 Microplastic Particles End Up in Your Diet in a Single Year

இப்போது பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைப்பதற்காக செயல்படும் சமூக நிறுவனமான டச்சு தேசிய நிறுவனம் (Dutch National Organisation) இத்தகைய புதிய ஆராய்ச்சிக்கு நிதி அளித்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஜோ ராய்ல் (Jo Royle), “பிளாஸ்டிக் உற்பத்தியானது 2040 ஆம் ஆண்டில் இரு மடங்காகும். இந்த பிளாஸ்டிக் துகள்கள் உடலில் என்னென்ன செய்கிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை நமக்கு உள்ளது” என்கிறார். இந்நிறுவனம் உட்பட 80க்கும் மேற்பட்ட தன்னார்வ நிறுவனங்கள், விஞ்ஞானிகள் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மனித ஆரோக்கியத்தில் இத்தகைய பிளாஸ்டிக் துகள்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சிக்காக 15 மில்லியன் யூரோவை ஒதுக்குமாறு இங்கிலாந்து அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளன.

படிக்க:

உலக அழகிகளும்,உள்ளூர் அழகு பொருட்கள் சந்தையும்!

கார்பனை வெளியேற்றும் அமேசான் காடுகள் உலகின் நுரையீரல் திணறுகிறது!

ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே இந்த நுண்துகள்கள் கருவிலும், குழந்தைகளிடமும், நோயெதிர்ப்பு மண்டலத்திலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற ஆராய்ச்சிக்காக நிதி ஒதுக்கியுள்ளது. சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்த நுண்துகள்கள் இரத்த சிவப்பணுக்களின் வெளிப்புற சுவர்களில் ஒட்டிக் கொண்டு, அதன் ஆக்சிஜன் கடத்தும் திறனை கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கிறது. மேலும் கருவுற்ற பெண்களின் தொப்புள் கொடிகளிலும் கண்டறியப் பட்டுள்ள இந்த துகள்கள் குழந்தையின் நுரையீரல் வழியாக இதயம், மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு வேகமாக சென்றடைவதை  காட்டுகிறது.

வீட்டில் உள்ள குப்பைகளில் காணப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்

சமீபத்தில் வேதாக் வேறு ஒருவருடன் இணைந்து எழுதிய ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியானது. அதில் புற்றுநோய் அபாயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நுண் மற்றும் நேனோ (Micro and Nano) பிளாஸ்டிக் துகள்கள் மனித உடலின் கட்டமைப்பு மற்றும் செயல்முறைகளை எப்படி பாதிக்கிறது என்பதையும் மேலும் அவை புற்றுநோய்க்கான தூண்டுதலை செல்களில் எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றியும் விரிவான ஆராய்ச்சி அவசரத் தேவையாக உள்ளது.  பிளாஸ்டிக் உற்பத்தி அதிவேகமாக உயர்கிறது என்பதால் ஒவ்வொரு நாளும் பிரச்சனை மிகவும் தீவிரமாகி வருகிறது.

டாமியன் கேரிங்டன், சூழலியல் ஆசிரியர், கார்டியன் இதழ்.

செய்தி மூலம்:

https://www.theguardian.com/environment/2022/mar/24/microplastics-found-in-human-blood-for-first-time

தமிழில் : குரு

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here