தற்போது ஹரியானாவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா போன்றோர் காங்கிரஸில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளனர். இதில் வினேஷ் போகத் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் சார்பாக களமிறக்கப்பட்டுள்ளார். இதை முன்னேற்றமாக பார்க்கலாம்.
அதே நேரம் பாஜகவை ஒன்றிய அரசின் தலைமைப் பொறுப்பில் இருந்து, ஆட்சி அதிகாரத்திலிருந்து இருந்து இறக்க வேண்டும் என்ற விருப்பத்தை கொண்ட ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரஸுடன் இணையாமல் தனித்து தேர்தலை எதிர்கொள்கிறது. அடுத்தடுத்து வரவுள்ள பிற மாநிலங்கள், டெல்லி உள்ளிட்ட தேர்தல்களிலும் இது தொடரவும் வாய்ப்பு உள்ளது.
எதிரிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டியவர்கள் பிரிந்து நிற்கிறார்கள். இதை முன்னேற்றமாகவா பார்க்க முடியும்?
மோடி தலைமையிலான காவி கும்பல் நாடு முழுவதும் தமது பாசிச அடக்குமுறைகளை செலுத்தி வரும் சூழலில், அதனால் ஆத்திரமடையும், வெறுப்படையும், கோபமடையும் ஒவ்வொருவரும் பிஜேபியை வீழ்த்த என்ன செய்யலாம் என சிந்திக்கின்றனர்.
அப்படி சிந்திப்பவர்களில் சிலர் தற்போது பிஜேபிக்கு மாற்றாக காங்கிரஸ் இருப்பதாக மதிப்பிட்டு அக்கட்சியுடன் தம்மை இணைத்துக் கொள்ளவும் தொடங்கியுள்ளனர். ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக செயல்பட்டு, அப்பதவியை துறந்து, 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சசிகாந்த் செந்தில் இப்போக்கிற்கான ஒரு வகை மாதிரியாகும்.
காங்கிரஸ் கட்சியை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்?
இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் ஊக்கமாக செயல்படும் பலரும் கார்ப்பரேட் காவி பாசிஸ்ட்டுகளின் நெருக்குதலால் ஆத்திரமடைந்து வருகின்றனர்.
தற்போது விளையாட்டுத் துறையில் முழு நேரமாக மல்யுத்த வீரர்களாக இருந்த வினேஷ் போகட்டும் பஜ்ரங் புனியாவும் காங்கிரஸுக்குள் வந்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் முன் முயற்சியுடன் செய்த வேலைகள் காரணமா? அல்லது, மோடி கும்பல் விளையாட்டு வீரர்களை தவறாக கையாண்டது காரணமா? இரண்டாவது சொன்னதாகத்தான் பார்க்க வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விளையாட்டு வீரர்களை கார்ப்பரேட் காவி பாசிஸ்டுகளுக்கு எதிராக நிறுத்த வேண்டும் என்றால் ராகுலும் காங்கிரசும் செய்ய வேண்டியது என்ன?
தாம் பதவிக்கு வந்தால் விளையாட்டுத் துறையில் எத்தகைய மாற்றங்களை செய்ய உள்ளோம் என்ற குறிப்பான திட்டத்தை முன்வைத்து பிரச்சாரத்தில் இறங்க வேண்டும்.
இதேபோன்றுதான் நீதித்துறையில் மோடி கும்பலால் எத்தகைய கேடுகள் புகுத்தப்பட்டுள்ளனவோ அதை சரி செய்தாக வேண்டும். அதை எப்படி சரி செய்ய உள்ளோம் என்ற குறித்த திட்டத்தை முன்வைக்க வேண்டும்.
தொழில்துறையில் அம்பானி அதானி உள்ளிட்ட ஒரு சில தேசங்கடந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்காக மட்டுமே ஒட்டுமொத்த நிதியையும் வாரி வழங்கி, சட்டங்களை திருத்தி, மோடி அரசு செய்துள்ள தவறுகள் சரி செய்யப்பட வேண்டும். நாட்டு மக்களின் வளர்ச்சிக்கான தொழிற்கொள்கையை தாங்கள் எப்படி முன்னெடுக்கப் போகிறோம் என்று குறிப்பான திட்டத்தை அறிவிக்கவும் வேண்டும். இதுதான் மோடி கும்பலால் சீராட்டப்பட்ட வெகு சில கார்ப்பரேட்டுகளை தவிர்த்த பிற அனைவரையும் ஈர்க்கும்.
இதே போல் சிறுகுறு தொழில்களையும், சில்லறை வணிகத்தையும் நாசப்படுத்தி வரும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்டவற்றை தாங்கள் எப்படி கையாள போகிறோம் என்று மாற்றுத்திட்டத்தை முன் வைக்க வேண்டும்.
இதுபோல் அனைத்து துறைகளுக்குமான தமது மாற்று என்ன என்பதை பகிரங்கமாக முன்வைத்து விவாதிக்க வேண்டும்.
தேவை பாசிசத்தை வீழ்த்த மாற்றுத் திட்டம்!
காங்கிரஸ் கட்சி தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கூட்டணியை அமைத்தோ அல்லது தனித்தோ தேர்தலை எதிர்கொள்கிறது. அதாவது ஒரு மாநிலக் கட்சியைப் போலவே செயல்பட்டு வருகிறது.
ஆனால் பாஜகவோ நாடு தழுவிய கட்சியாக இந்தியா முழுமைக்கும் ஆன தனது திட்டத்தை வீச்சாக பிரச்சாரம் செய்கிறது. அது இந்துராஷ்டிரம் அமைப்பதாக இருக்கலாம், புதிய கல்விக் கொள்கையாக இருக்கலாம், குடியுரிமை திருத்தச் சட்டமாக இருக்கலாம், சமஸ்கிருத திணிப்பாக இருக்கலாம், மனுதர்மத்தின் ஆட்சியை மீட்டெடுப்பதாகவும் இருக்கலாம்; கார்ப்பரேட் சுரண்டலுக்கும் கொள்ளைக்கும் தடையாக இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களை கிரிமினல் சட்டங்களை ஒழித்துக் கட்டுவதாக இருக்கலாம், ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பதாக இருக்கலாம் இவை அனைத்தும் ஒரு தேசிய கட்சிக்கு உரிய தேசிய செயல் திட்டமாக முன்வைக்கப்படுகிறது.
தனக்கென்று பார்ப்பன சித்தாந்தத்தை கொண்ட, ஆர் எஸ் எஸ் வானரப் படையை கொண்ட, அகண்ட பாரத கனவுடன் கார்ப்பரேட்டுகளின் அடியாளாக வெறிபிடித்து கலவரங்களை நடத்தி வரும் பாஜகவை வீழ்த்தும் வகையில் காங்கிரஸ் தன்னை தகவமைத்துக் கொள்கிறதா?
படிக்க:
♦ மூன்று வட இந்திய மாநிலங்களில் தோல்வி: பாடம் கற்றுக்கொள்ளுமா காங்கிரஸ்?
♦ ஐந்து மாநில தேர்தல்கள்: தேவை கவர்ச்சி திட்டமா? குறைந்தபட்ச செயல்திட்டமா?
காவிக்கும்பலின் சித்தாந்த பொருளாதார ஆயுதங்களை தவிடு பொடியாக்கும் வகையில் காங்கிரஸ் தனக்கான ஆயுதங்களை தேடி சேகரித்து களத்தில் இறங்குகிறதா?
ஒரு பாசிச கட்சியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கக்கூட பொருத்தமான மாற்று திட்டத்தை முன்வைத்து பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் உள்ளிட்டவற்றை அணி திரட்ட வேண்டிய வரலாற்றுக் கடமை ஆர்.எஸ்.எஸ்- பாஜகவை எதிர்ப்பவர்கள் ஒவ்வொருவர் மீதும் இருக்கிறது. தற்போதைய நிலையில் காந்தியும் காங்கிரசும் தங்களை ஆர்.எஸ்.எஸ்- பாஜகவிற்கு எதிரானவர்கள் என்றே முன்னிறுத்திக் கொள்கிறார்கள்.
பாஜகவுக்கு எதிராக தேவை தேர்தல் கணக்கு மட்டுமல்ல; மாற்று சித்தாந்தம் – மாற்றுக் கொள்கை – மாற்று செயல் திட்டம்- காங்கிரசும், ராகுலும் உணர வேண்டும். அதற்கு ஏற்ப தங்களை தகவமைக்கவும் வேண்டும்.
– இளமாறன்.