செப்டம்பர் 9: தோழர் மாவோ நினைவு தினத்தில் உறுதி ஏற்போம்!

மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை ஓங்குக!

காதிபத்தியமும் பாட்டாளி வர்க்க புரட்சியும் என்ற இந்த லெனினிச சகாப்தத்தில் காலனி, அரைக் காலனி மற்றும் மறுகாலனிய நாடுகளில் சமூக மாற்றத்தையும் புரட்சியையும் முன்னுக்கு கொண்டு செல்வதில் சோசலிசத்திற்கு முந்திய இடைக்கட்டமாக புதிய ஜனநாயகம் என்ற புரட்சிப் பாதையை முன்வைத்த தோழர் மாவோவின் நினைவு உலகம் முழுவதும் மீண்டும், மீண்டும் எதிரொலிக்க வேண்டிய காலகட்டம் இதுதான்.

மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்படுகின்ற ஆசிய, ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளில் புரட்சி ஒன்றை நடத்தி முடிப்பதற்கு பொருத்தமான அரசியல் மற்றும் ராணுவ பாதையை முன்வைத்த மகத்தான மக்கள் தலைவர் தான் தோழர் மாவோ.

ஏற்றத்தாழ்வான அரசியல், பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சி கொண்ட காலனிய நாடுகளில் மக்களின் அரசியல் உணர்வு மற்றும் பொருளாதார வாழ்க்கை, பண்பாட்டு நெறிமுறைகள் போன்ற அனைத்தும் நாடு முழுவதும் ஒரே சீரான வளர்ச்சியில் இருப்பதில்லை. அதே போல ஒரே சீரான அலைவரிசையிலும் இருப்பதில்லை.

இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தில் புரட்சியை நடத்துவது மிகவும் கடினமான செங்குத்தான பாதை என்பதை முன்னறிந்து அதற்கு பொருத்தமான புரட்சிகர வழிமுறையை கண்டறிந்தவர் என்ற முறையில் இன்றளவும் மாவோ வின் தேவை உலகிற்கு அவசியமாக உள்ளது.

ஏனென்றால், “கடினமான பாதை ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு பாட்டாளி வர்க்கத்தின் தலைமை தன்னை அர்ப்பணித்துக் கொள்ள முடியாத போது அல்லது சமூகத்தின் புற நிலைமையில் கோருகின்ற தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை தன்னிடத்தில் இருந்து துவங்க முடியாத போது, சந்தர்ப்பவாத வழிமுறை ஒன்றை தேர்வு செய்து இதுதான் இந்த காலகட்டத்திற்கு பொருத்தமானது என்ற மாய்மாலங்களை நடத்துவது” உலகம் முழுவதும் உள்ள கம்யூனிச இயக்கங்களில் பொது போக்காகவே மாறியுள்ளது.

தோழர் லெனின் வரையறை செய்த ஏகாதிபத்திய நிதிமூலதனம் உருவாகி ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு கடந்த நிலையில் அது பன்மடங்காக பல்கிப் பெருகி ஏகபோகத்தின் அனைத்து பரிமாணங்களையும் உலகிற்கு காட்டியுள்ளது.

நிதி மூலதனத்தை ஏற்றுமதி செய்வதன் மூலம் காலனிய, அரைக்காலனிய, நவீன காலனிய நாடுகளில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி போக்குக்கு மறைமுகமாக உதவி புரிகின்றது என்பதை முன்வைத்து இதனை எவ்வாறு பாட்டாளி வர்க்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தினார் தோழர் லெனின்.

இந்த மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் காலனிய நாடுகளில் நடைபெறுகின்ற முதலாளித்துவ வளர்ச்சி போக்கானது புதிய வகையிலான அணுகுமுறையை கோருகின்றது என்பதை கண்டறிந்த மாவோ முன்வைத்த பாதை தான் புதிய ஜனநாயகம் என்ற புரட்சிகரமான பாதை ஆகும்.

அதுமட்டுமின்றி திடீர் புரட்சி என்ற சாகச வழிமுறைகள், புரட்சியை கைவிட்ட பாராளுமன்ற ஜனநாயகத்தை போற்றும் சந்தர்ப்பவாத வழிமுறைகள் போன்ற எதிர் புரட்சிகர கருத்துகள், நடைமுறைகள் அனைத்திற்கும் பொருத்தமான மாற்று புதிய ஜனநாயகம் தான் என்பதை நிரூபித்துக் காட்டியது அவரது பாதை.

ஏற்றத்தாழ்வான வளர்ச்சி கொண்ட நாடுகளில் மக்களின் அரசியல் உணர்வு மட்டத்திற்கும், அவர்களின் வாழ்க்கை நடைமுறைக்கும் பொருத்தமான புரட்சிகர பாதை என்பது நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை தான் என்பதை வரையறுத்து அவர் முன் வைத்த போது அதுவரை உலகம் கண்டிருந்த ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி என்ற வழிமுறைக்கு மாற்றை கொண்டாடியது. காலனிய நாடுகளில் செயல்படுகின்ற கம்யூனிச இயக்கங்கள் மாவோவின் வழிமுறையை ஏற்றுக் கொண்டனர்.

படிக்க:

♦ மக்களுக்கு தொண்டு செய்க! தோழர் மாவோ.

♦ தோழர்.மாவோ பற்றி கொழுப்பெடுத்த பழ. கருப்பையாவின் அவதூறுகளுக்கு பதிலடி!

சீனாவில் உள்நாட்டில் ஏற்பட்ட விவசாய எழுச்சி முதல் ஜப்பான் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு காலகட்டம் வரையிலான பல்வேறு காலகட்டங்களில் புதிய ஜனநாயகம் என்ற போர்தந்திர அரசியலை நோக்கி மக்களை புரட்சிக்கு அணிதிரட்டுகின்ற போதே அவ்வப்போது நிகழ்கின்ற அரசியல், பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு பொருத்தமான செயல் தந்திர அரசியலை முன்வைத்து கட்சிக்கு வெளியில் உள்ள கோடிக்கணக்கான மக்களை அணி திரட்டுவதற்கு செயல்தந்திர அரசியல் வழியை பயன்படுத்தி முன்னேற்றத்தை சாதித்துக் காட்டியவர் தான் தோழர் மாசேதுங்.

கோட்பாடுகளை வரட்டுத்தனமாக கடைபிடிப்பதை காட்டிலும் நடைமுறைக்கு வழிகாட்டும் செயலூக்கமிக்க வழிகாட்டியாக கொள்வதற்கு அவர் முன்வைத்த கீழ்க்கண்ட மேற்கோள் இன்றளவும் நமக்கு வழிகாட்டி நிற்கிறது.

“உண்மைக்கு அருகில் செல்வதற்கும், முடிவுகளை தீர்மானிக்கவும் இதுதான் ஒரே வழி. உண்மை அறியும் கூட்டங்கள் நடத்தி, விவாதங்கள் மூலம் பரிசீலனை செய்யாமல், ஒரு தனி மனிதர் தனது அனுபவங்களில் கூறுவதை நம்பினால், எளிதாக தவறு இழைக்கப்படும். விவாதத்தில் முக்கிய கேள்விகளை எழுப்புவதற்குப் பதிலாக, அத்தகைய கூட்டங்களில் அலட்சியமான கேள்விகளைக் கேட்டால், நீங்கள் ஏறக்குறைய சரியான முடிவுகளை எடுப்பது சாத்தியமில்லை”

கோட்பாடுகளில் மட்டுமல்ல, கட்சிக்குள் எழுகின்ற பல்வேறு விதமான போக்குகளை கையாள்வதற்கும் மேற்கண்ட அணுகுமுறை மிக மிக அவசியமானது என்பதை தான் மாவோவின் வழிமுறைகள் நமக்கு உணர்த்துகின்றன.

இன்று உலகம் முழுவதும் ஏகாதிபத்திய முதலாளித்துவம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதர்களின் சிந்தனை, ஆற்றல், படைப்பூக்கம் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்ற கொடூரமான வழிமுறைகளை கண்டறிந்து உள்ளது.

மனித குலத்தின் அடிப்படை விழுமியங்கள் பண்புகள் ஏதுமற்ற நவீன கொத்தடிமைகளை உருவாக்குகின்ற, எளிமையாக சொல்வதென்றால் கட்டளைகளை ஏற்று நடக்கின்ற ரோபோக்களை போன்ற மனிதர்களை உருவாக்குகின்ற சமுதாயத்தை கட்டமைக்க முயல்கின்றது ஏகாதிபத்திய முதலாளித்துவம்.

இந்த காலகட்டத்தில் சக மனிதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது முதல் மிகவும் கேடாக ஒடுக்கப்படுகின்ற மக்களின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகளை பாதுகாப்பது, வளர்த்தெடுப்பது, புதிய வகையில் மாற்றியமைப்பது அனைத்திற்கும் பொருத்தமான வழிமுறையை தோழர் மாவோ வின் சிந்தனையில் இருந்துபெறுவோம்.

  • கணேசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here