ந்தியாவின் நக்சல்பாரி பாதை அரசியலை ஏற்றுக் கொண்டு, ஆயுதப் போராட்டத்தை முதன்மை வடிவமாக கொண்டு செயல்படுகின்ற மாவோயிஸ்ட் அமைப்புகளை ஒழித்துக் கட்டுவதில் மோடியின் கிரிமினல் போலீஸ் மற்றும் ராணுவம் வெறித்தனமாக இறங்கியுள்ளது.

ஆபரேஷன் ககர் என்ற நடவடிக்கையின் பெயரில் கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்ட் அமைப்புகளின் முன்னணியாளர்களை ஒழித்துக் கட்டுவதிலும், சுட்டுப்படுகொலை செய்வதிலும், போலி மோதல் கொலைகள் செய்வதிலும் களமிறங்கி பல உயிர்களைப் பறித்துள்ளது.

“2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் மாவோயிஸ்டுகளை இந்தியாவில் முற்றிலுமாக துடைத்தெறிய போவதாக” அறிவித்துள்ள இந்தியா ஒன்றியத்தின் உள்துறை அமைச்சரான திருவாளர் அமித்ஷா அறிவிப்பின்படி இந்த கொடூரமான தாக்குதல்கள் முன்னிலைக்கு வந்துள்ளன.

இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு மூன்று பெண் தோழர்கள் உள்ளிட்டு 9 மாவோயிஸ்டுகளும், இரண்டு தினங்களுக்கு முன்பு ஆறு மாவோயிஸ்டுகளும் தேடுதல் வேட்டை என்ற பெயரில் கொல்லப்பட்டுள்ளனர், உளவுத்துறை தகவலின் பெயரில் அவர்களை தேடுகின்ற போது எதிர்த்து தாக்குதலை நடத்தினர் என்றும், அப்போது ஏற்பட்ட மோதலின் காரணமாக கொல்லப்பட்டதாகவும் கூறுகின்றது  DRG சிறப்பு அதிரடிப்படை.  ஆந்திர போலீஸ் மற்றும் துணை ராணுவம் உள்ளடக்கிய கூட்டுப்படை.

மாவோயிச அமைப்பு மற்றும் தோழர்களின் மீது சட்டவிரோதமாக செயல்படுவதாக பல்வேறு பொய்யான காரணங்களை முன்வைத்து எந்த விசாரணையும் இன்றி சுட்டுப் பொசுக்கி வருகிறது பாசிச மோடியின் குண்டர் படை.

“இந்தச் மோதலில் உயிரிழந்தவர்களில் சில உயர்மட்டத் தளபதிகளும் இருந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று செய்திகளை கசிய விடுகிறது. “மேற்கு பஸ்தார் பிரிவு, தர்பா பிரிவு, மக்கள் விடுதலை கொரில்லா இராணுவத்தின் (PLGA) நிறுவன எண் இரண்டு மற்றும் இரண்டு படைப்பிரிவுகள் உட்பட கிட்டத்தட்ட 40-50 உறுப்பினர்கள் இருப்பது குறித்து எங்களுக்கு ஒரு உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது” என்று சத்தீஸ்கர் காவல்துறையின் மூத்த அதிகாரி ThePrint க்கு தெரிவித்தார். இந்த தகவல் வெளியாகி ஒரு சில தினங்களுக்குள் அவர்களை சுற்றி வளைத்து தாக்கிய போது முன்னணி தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கின்றனர்.

இவ்வாறு தாக்குதல் நடத்தியதில் மாவோயிஸ்ட் கொரில்லா படையினரின் முக்கிய கமாண்டர்கள் பலியாகி உள்ளனர் என்றும், குறிப்பாக மாவோயிஸ்ட் அமைப்பின் ராணுவ தளபதிகளில் ஒருவராகவும், சத்தீஸ்கர் மகாராஷ்டிரா எல்லை பிரிவில் செயலாளராகவும், தண்டோவாடா சிறப்பு குழுவில் உறுப்பினராகவும் செயல்பட்டு வந்த தோழர் ரந்தீர் தலைமையிலான படைப்பிரிவு கடுமையாக பாதிப்படைந்துள்ளது என்றும் ஊடகங்களின் வழியாக போலீசு கொக்கரிக்கின்றது.

காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, “ஆழமான அடர்ந்த காடுகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் பற்றிய உளவுத்துறை உள்ளீடுகளை சேகரிப்பதில் முன்னேற்றம் மற்றும் DRG போன்ற படைகளின் தகவமைப்பு ஆகியவை கடந்த சில ஆண்டுகளில் நடவடிக்கைகளின் செயல்திறனை மேம்படுத்தியுள்ளன.” என்றும் பெருமையடித்து கொள்கின்றனர்.

ஆனால், “தொடர்ந்து தேடுதல் வேட்டை என்ற பெயரில் காடுகளிலும், மலைகளிலும் உள்ள பழங்குடி மக்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்துவதும் அவர்களின் சிலரை கருங்காலிகளாகவும் போலீசின் ஏஜெண்டுகளாகவும் மாற்றுவதன் மூலம் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை அறிந்துக் கொண்டு கொடூரமான தாக்குதலை நடத்துகின்றனர் என்பது தான் உண்மையாகும்”. என்று மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து போலீசு மற்றும் ராணுவத்தின் இத்தகைய நடவடிக்கைகளின் மீது விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.

இந்த ஆண்டு, சத்தீஸ்கர் காவல்துறை மோதலில் ஒரு பெரிய திருப்புமுனையைச் செய்ததாகக் உள்ளூர் போலீஸ் மற்றும் சிறப்பு அதிரடி படை துணை ராணுவ படை அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூறுகிறது, கிட்டத்தட்ட 40 என்கவுன்டர்களில் 153 மாவோயிஸ்டுகளைக்  கொன்றுள்ளதாகவும், 669 பேரை சரணடைய வைத்துள்ளதாகவும், 658 பேர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் கூறிக் கொள்கின்றனர்.,

இது கடந்த 2009 ஆண்டு நடந்த மாவோயிஸ்ட் வேட்டை காலத்தில் நடந்ததை விட எண்ணிக்கையில் அதிகம் என்றும் ஆந்திர மாநில ஊடகங்களின் வழியாக செய்திகளை வெளியிடுகின்றனர்.

படிக்க:

♦ உள்நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் மாவோயிஸ்டுகளை கொன்று குவிக்கும் பாசிச மோடி அரசு.
♦ மாவோயிஸ்டுகளின் போராட்டங்கள் பொருத்தமானவை தானா?

இடதுசாரி தீவிரவாதம் என்ற பெயர் சூட்டப்பட்டு நக்சல்பாரி அரசியலை ஏற்றுக் கொண்டு செயல்படுகின்ற மாவோயிஸ்ட் அமைப்புகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதன் பின்னணி என்ன என்பதைப் பற்றி ஏற்கனவே புதிய ஜனநாயகம் தினசரியில் எழுதி இருந்தோம்.

மாவோயிஸ்ட் என்ற பெயரை சூட்டிக்கொண்டாலும் மாவோயிசத்திற்கு பொருத்தமில்லாத தென் அமெரிக்கா கண்டத்தின் நகர்ப்புற கொரில்லா யுத்த முறையை கையாண்டு வந்த சேகுவாரா மற்றும் பூக்கோயிச வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர்.

இதன் மூலம் தொடர்ச்சியான பின்னடைவுகளை சந்தித்தாலும் அதிலிருந்து அனுபவமோ படிப்பினைகளை பெற்றுக் கொள்ளாமல் மீண்டும், மீண்டும் ஒரே பாதையில் செயல்பட்டு வருகின்றனர்.

நக்சல்பாரி இயக்கம் துவங்கிய காலத்தில் இருந்து ஆயுதங்களை முன்னிறுத்தி குழு சாகச வழிமுறைகளை கையாளுகின்ற குழுக்களில் ஒன்றாக முன்னணி வகிக்கின்ற மாவோயிச அமைப்பு தனது ராணுவ போர் தந்திரங்கள் மற்றும் செயல் தந்திரங்களை பற்றி மறுபரிசீலனை செய்யாத வரை இது போன்ற இழப்புகளை தவிர்க்க முடியாது.

தமிழகத்தில் நடைபெற்ற இது போன்ற போலி மோதல்கள் முன்னணி தோழர்களை களப்பலி கொடுத்துள்ளது என்பதை முன்வைத்து, “நக்சல்பாரி அரசியல்! எதிரிகளை அச்சுறுத்துவது அரசியலா ஆயுதமா?” என்று கட்டுரை எழுதியபோது அதனை விமர்சித்து பல அவதூறுகளை பரப்பினர் மாவோயிச அமைப்பினர் என்று கூறிக் கொள்பவர்கள்.

இன்றளவும் இது போன்ற நடவடிக்கைகளை ஆதரித்தும், புதிய ஜனநாயகம் இதழின் தோழமை அமைப்புகளின் மீது வாய் வழி அவதூறுகளை செய்கின்ற மாவோயிச அமைப்புகளுடன் நடைமுறையில் எமக்கு கருத்து வேறுபாடுகள் உள்ள போதிலும் கார்ப்பரேட் காவி பாசிச கொலைகார குண்டர் படையினரான ஆர் எஸ் எஸ் பாஜக கும்பலின் அரசு பயங்கரவாதத்தின் தாக்குதலுக்கு பலியாவதை கண்டும் காணாமல் கடந்து போக முடியாது.

  • மாசாணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here