டாஸ்மாக்கை மூடு!
பொருளாதாரத்திற்கு மாற்று வழிகளைத் தேடு!

மிழகத்தில் பொங்கலையொட்டி மாநிலம் முழுவதும் ஜனவரி 12 ஆம் தேதி 155.06 கோடி அளவுக்கும், 13 ஆம் தேதி 203.05 கோடிக்கும், 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று ஒரே நாளில் 317.08 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 3 நாட்களில் மட்டும் 675.19 கோடிக்கு மதுபான விற்பனை நடந்துள்ளது.

அதிலும் குறிப்பாக மதுரை மண்டலத்தில் 144.74 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் 137.88 கோடிக்கும், சேலத்தில் 133.96 கோடிக்கும், சென்னையில் 129.82 கோடிக்கும், கோவை மண்டலத்தில் 128.79 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி புதிய தலைமுறை

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தில் எழுதியுள்ளார் ஏனென்றால் அப்போதே தமிழர்கள் மத்தியில் கண் குடிக்கின்ற போதைப் பழக்கம் இருந்துள்ளது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. ஆரிய பார்ப்பனர்கள் தனது வேள்விகள், சடங்குகளின் போது சோமபானம், சுராபானம் என்ற பெயரில் போதையை ஏற்றிக் கொள்வதற்காக பல்வேறு போதை பானங்களை பயன்படுத்தி உள்ளனர் என்பதை நாம் அறிகிறோம்.

மக்களை போதையில் ஆழ்த்தி அதன்மூலம் அவர்களின் சிந்தனையை மழுங்கடிப்பதற்கு குடிவெறி ஒரு முக்கிய ஆயுதமாக உள்ளது. டாஸ்மாக் மூலம் கிடைக்கின்ற வருமானம் தமிழக அரசுக்கு தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கும் பிற நல திட்டங்களுக்கு தேவையான வருவாயை எட்டுவதற்கும் பயன்படுகிறது என்ற காரணத்தினால் டாஸ்மாக் மூலமாக வருவாய் ஈட்டுவது எந்த வகையிலும் நியாயமான நடவடிக்கை இல்லை. “கண்ணை விற்று சித்திரம் வரைவது” என்பதைப்போல, மகாபாரதத்தில் மனைவியை அடகு வைத்து சூதாடிய பஞ்ச பாண்டவர்களைப் போல அரசுக் கட்டமைப்பு பெரும்பான்மை உழைக்கும் மக்களின் தாலியறுத்து வருவாயை ஈட்டுவது சரியான செயல் அல்ல.

தமிழகத்தில் 34,000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் ஆரம்பத்தில் 35,000 ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். இவர்களில் 10,000 பேர் குடியால் இறந்து போயுள்ளனர் என்கிறார் டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சரவணன். தமிழகத்தின் டாஸ்மாக் ஆண்டு வருமானம் 35,000 கோடியாகும். தமிழகத்தின் வருவாய் ஆதாரங்களில் டாஸ்மாக் முன்னிலையிலிருப்பது வெட்கக்கேடு ஆகும். உற்பத்தி சார்ந்த தொழில்களான விவசாயம், நெசவு, தொழில்துறைகளின் மூலம் வரும் வருவாயை விட போதையின் மூலம் வரும் வருமானம் அதிகம் என்பது பொருளியல் ரீதியில் சரியானது அல்ல என்கிறார். பொருளியல் அறிஞர் கலையரசன்.

அதே சமயம் தமிழகத்தின் மொத்த உற்பத்தி ரூபாய் 20,91,927 கோடி ஆகும். இந்த வருவாயில் தமிழகத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது 2020-க்கு முன்னர் இருந்த வரி 36% ஆகும். இந்த வரியானது 2020 ஆம் ஆண்டு முதல் 25% மாக குறைக்கப்பட்டது. இந்த கார்ப்பரேட்களின் மீது வரியை உயர்த்துவதின் மூலம் தமிழகத்தின் நிதி வருவாயை அதிகரிக்க செய்வதற்கு வாய்ப்புள்ளது.

அதுமட்டுமின்றி சிறு-குறு தொழில்களை ஊக்குவிப்பது, விவசாய பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பது, மத்திய அரசு தமிழகத்தில் இருந்து பறித்துக் கொண்டுள்ள ஜிஎஸ்டி வரி வருவாய் தொகையான 20,033 கோடியை (ஆகஸ்டு-2021 வரையானது) போராடிப் பெறுவது, இயற்கை பேரிடர் காலங்களில் அதற்கு உரிய நிவாரணத் தொகையை போராடிப் பெறுவது போன்ற வகையில் தனது வருவாயை உயர்த்துவதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உடைமைகளை ஒழித்துக்கட்டும் வகையில் அவர்களை தாலியறுக்கும் வகையில் குடி போதைக்கு ஆளாக்குவது மோசமான செயலாகும்.

தமிழக அரசின் செயல்பாடுகளை கண்கொத்தி பாம்புகளாக கண்காணித்து வரும் ஆரியப் பார்ப்பனக் கூட்டமும், அவர்களின் அடிவருடிகளான சூத்திர சங்கிகளும் திமுக ஆட்சியை கவிழ்பதற்கு எப்போதும் தருணம் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த தருணத்தில் திமுக ஆட்சியை விமர்சிப்பது சரியா என்ற கேள்வி சிலருக்கு உருவாகிவிடுகிறது. ஆனால் ஆரிய-பார்ப்பனக் கூட்டத்தின் கெடுமதியும், நமது விமர்சனமும் ஒன்றல்ல!

ஒரு பொருளுக்குள் இரண்டு எதிர் எதிரான தன்மை கொண்டுள்ளது என்ற முரண்பாடே அந்த பொருளின் இயக்கத்திற்கு பயன்படுகிறது. திமுக மத்திய பாஜக அரசுடன் எதிர்த்து நின்று போராடுவதற்கு உரிய திராவிட சித்தாந்தத்தை பெற்றுள்ளது என்றுள்ள போதே, அதன் வர்க்கத் தன்மை காரணமாக கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்கு தயங்காது என்பது மட்டுமின்றி, டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்கின்ற மதுபான ஆலைகளை பெற்றிருக்கின்ற முதலாளிகளில் திமுகவைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பதும் மறுக்க முடியாது உண்மை.

இதனால் டாஸ்மாக் விவகாரத்தில் தேர்தல் வாக்குறுதி, மக்களின் மீது நல்லெண்ணம் போன்ற அம்சங்களை திமுகவிடம் தேடுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். மக்களின் நலனுக்கான கோரிக்கைகளை முன் வைத்து போராடுவதன் மூலமே திமுக அரசை நிர்பந்திக்க முடியும்.

எனவே டாஸ்மாக்கை மூடு! பொருளாதாரத் தேவைக்கு புதிய வழிகளை தேடு! உழைக்கும் மக்களின் தாலியறுக்காதே! என்ற முழக்கங்களுடன் வீதியில் இறங்கி போராடுவோம்! குடிவெறியில் இருந்து மக்களை விடுவிக்கும் போதே பிற அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக போராடும் உணர்வை உருவாக்க முடியும்.

  • பா.மதிவதனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here