உக்ரைன் போர் ஒரு வீடியோ கேம் அல்ல !

0
56

உக்ரைன் போரை உலகெங்கும் கவனித்த பலர் அடுத்தடுத்து வேறு உலகச் செய்திகளுக்குப் போயிருப்பார்கள்.ரசியா–உக்ரைன் இருதரப்பிலும் நடப்பது மனித அழிவு. இதையே ஊடகங்கள் மூலம்  ‘ தாமஸ் எல். ஃபிரைட்மேன் ‘ போன்ற பொறுப்பற்ற எழுத்தாளர்கள் நுணுக்கமாக ( granular ) ரசிக்கச் சொல்கிற பார்வையைத் தூண்டுகிறார்கள். இதைக் கூர்மையாக விமரிசிக்கிறார் எழுத்தாளர் பென் சிக்ஸ் ஸ்மித்.

உக்ரைன் போர் ஒரு வீடியோ கேம் அல்ல !

“நியூயார்க் டைம்ஸ்” எழுத்தாளரும் வரிசைப் பதிவாளருமான ( Columnist ) தாமஸ் எல். ஃரைட்மேன் ( TLF ) கடந்த ஏப்ரல் 10 ஆம் நாள்  திகைப்பூட்டும் பதிவு ஒன்றைப் போட்டிருந்தார் :

” உக்ரைன் மீதான ரசியப்படையெடுப்பு’ நம் காலத்தில் நடக்க இருக்கும் உண்மையான உலகப்போராக’ அமையலாம் ” என்று எழுதினார். அக்கட்டுரையை  விமரிசித்து  ‘ தி ஸ்பெக்டேட்டர் ‘ ( The Spectator ) என்ற வலைத்தளத்தில் தன் ஆழமான ஆய்வை முன்வைத்திருந்தார் பென் சிக்ஸ் ஸ்மித் ( BSS ) என்ற எழுத்தாளர். TLF  மேற்படி சொன்ன காரணம் : ” இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் இன்று இந்தப் போரை குருணை, துகள்  ( granular ) போன்ற நுண்மையான அளவில் கவனிக்க முடியும் .”   ஊடகத்தின் ரசனை என்ற அம்சத்திலிருந்து அவர்  உலகப் போரைக் கற்பித்திருந்ததைக் கண்டு  BSS  அதிர்ந்து போனார். இந்த ரசனை அபாயமானது என்பது BSS வாதம்.

BSS எழுப்பிய முதல் கேள்வியே இதுதான். இது எவ்வளவு பெரிய அபத்தம்? உலகில் எந்த மூலையிலிருந்தும் போரை நுணுக்கமாகக் கவனிக்கமுடியுமென்ற ரசனை TLFக்கு முக்கியம். பல லட்சம் மக்கள்  பெண்கள், குழந்தைகள் (இரண்டாம் உலகப் போரின் போது  டோக்கியோ  முதல் லிபியாவின் டோப்ரக் வரை உள்ள தடத்தில் மக்கள் ரத்தப்பலிக்குப் படையலிட்டதைப்போல )  கொல்லப்பட்டதைவிட, மனித அழிவைவிட  போரை நுணுக்கமாக ரசிக்கலாம் என்று சொல்வது கேவலமல்லவா ? தார்மீகப் பொறுப்பற்ற நசிவு அல்லவா ?– இது BSS ன் விமரிசனம்.

” ஒருவிதத்தில் இந்தப்போர் பற்றி ஏராளமாக ஊடகங்களில்  விவாதித்தார்கள். பல ஆண்டுகளாகத் தொடரும் பல சண்டைகளைவிட ரசிய- உக்ரைன் போரில்   உலக சமூக வலைத்தளங்களின் மூலம்  மக்கள் அழிவைக் கவனிக்குமாறு செய்யப்பட்டார்கள். இதில் அமெரிக்கா – ஐரோப்பாவின் தந்திரங்கள் பெருமளவு விளையாடின.”


இதையும் படியுங்கள்: அமெரிக்க, ரசிய அரசுகளின் உலக மேலாதிக்க வெறிக்கு உக்ரைன் மக்கள் பலிகிடா!


” குண்டுகள் வீசப்பட்டுக்கொண்டே இருந்தன, அதைக் காட்டிவிட்டு பிறகு என்னென்ன நடந்தது என்பதையும் காட்டினார்கள்  நாம் பார்த்தோம்; தெருக்களில் மனித உடல்கள் சிதறிக் கிடந்தன. வன்முறைகள் நேருக்குநேர் காட்டப்பட்டன – இவற்றை நாம் பார்த்தோம். ஆனால் எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. உலக நடப்புக்களைக் கவனித்துவரும் என் சிந்தனையை பல காட்சிகள் பயமுறுத்தின. அப்படி ஒரு காட்சி பலநாட்களுக்கு வட்டமிட்டுத் தரத்தியது. உக்ரைன் போரில் ஒரு முதியவர் நடுத்தெருவில் சிக்கிக் கொண்டார். அடுத்து அங்கே  குண்டு ஒன்று திடீரென்று வெடித்தது. உடனே திரை இருண்டுவிட்டது. என்ன நடந்தது என்று பார்வையாளர் சிந்தித்துக்கொண்டே இருக்கும்படி செய்துவிட்டார்கள். இதையே நான் அதிர்ச்சி என்று சொன்னேன்…..”

BSS தொடர்கிறார் : ” உக்ரைனில் நடந்த பல சண்டைகள் ஆகாயத்திலிருந்து கவனிக்கப்பட்டன.பொம்மென்று இரைச்சல் போட்டுக்கொண்டு டிரோன்கள் படம் எடுத்தன. வரிசைவரிசையாக டாங்கிகள் ( கவசவண்டிகள் ) துடைத்து அழிக்கப்படுவதைக் காட்டியன. நம்மால் மறக்கவேமுடியாத மற்றொரு காட்சி. ரசியப் படை ஆள் ஒருவர் தாக்குதலிலிருந்து தப்பிக்க, தனது குழுவுக்குத் திரும்பி ஓடுகிறார்.சில நிமிடங்களில் உக்ரைன் பீரங்கிப்படையால் அவரது குழு அழிக்கப்படுகிறது.”

ரசியப் படைஆள் இனி உயிரோடு இருக்கமாட்டார் என்ற கற்பனைக்குள் உங்களை இழுக்கிறது காட்சி. எதற்காக? ஒரு வீடியோகேமின் த்ரில்லை, நீங்களே ஒரு போரைச்செய்து அனுபவிக்கும் த்ரில்லை உங்களுக்குக் கொடுப்பதற்காக.


இதையும் படியுங்கள்: ரஷ்யா உக்ரைன் மோதல் 2014-ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது!


நடக்கின்ற போர் பார்வையாளருக்காக சொல்லிவைத்தா நடத்தப்படுகிறது ? போர்கள் என்பது பெரிய மனித அவலம். மிகப் பெரிய உலகக் கம்பெனிகளுக்காக/கார்ப்பரேட் கொள்ளைக்காக மனிதக்கறி விருந்து படைப்பது, அதை உலகெங்கும் மக்கள்  ரசிக்கச் சொல்லிக்கொடுப்பது, இது மனிதமா? BSS பதறுகிறார்;  TLF புதிய பொழுதுபோக்கு ரசனையைப் பழக்கப்படுத்துகிறார் என்று BSS குறிவைத்து விமர்சிக்கிறார். அது முற்றிலும் நியாயமே!

மீண்டும் BSS வாதங்களுக்குப் போவோம் : ” இதோ இன்னொரு போர்க்காட்சி. ரசியப்படைகள் சைக்கிள் ஓட்டுபவர் ஒருவரைச் சுடுகின்றன. எதார்த்தம் என்று சொல்லி கதைபோல சுவாரசியப்படுத்தி அதைக் காட்டுகிறார்கள். எடுத்தபிறகும் எடிட் செய்யாமல்  அப்படியே காட்டியிருக்கிறார்கள். எல்லா செய்தியையும் விமர்சிப்பது சரியல்ல என்று எதிர்க்கேள்வி போட்டு மடக்குபவர்கள் முன்னே ஒரு ஆய்வை வைக்கிறேன். சுவாரசியப் படுத்துகிறவர்களை நான் விமரிசிக்கிறேன் ; ஆனால் போர்க்காட்சிகளைத் தொகுப்பாகக் காட்டினாலும் அது ஒன்றும்  போரின் உண்மை நிலவரத்தைச் சொல்லிவிடாது. அதாவது, போருக்கான காரணம், அரசியல் பின்னணி, ஆளுகின்றவர்கள், சுரண்டி ஆதாயம் அடைகிறவர்கள் அனைத்தையும் ஒன்றுசேர முழுமையான போர்க்  காட்சிகளோடு சேர்த்துப் பார்க்கும் போதுதான் உண்மை புரியும். இதுதான் நேர்மையான படத்தொகுப்பாளருக்கு  நான் சொல்லும் இலக்கணம். வீடியோ கேம் போல நினத்துக் கொண்டு படத்தைத் துல்லியமாக எடுத்துக் காட்டப்பட்டால், மக்கள் கதையாகப் பார்ப்பார்கள், அடுத்து என்ன என்று கற்பனையில் ” இன்பம் ” அடைவார்கள். இதுதான் வக்கிர ரசனை.”

BSS வேறொரு போர்க்காட்சியையும் ஆராய்கிறார் :  ” தங்கள் டாங்கிகள் பற்றி எரியும் கட்டத்தில் பீதிகொண்ட படையாட்கள் அதிலிருந்து தப்பி உயிரோடிருக்கப் போராடுகிறார்கள். அந்தப் படையாட்கள் உடல் திருகியபடி கதறியபடியே ஓடுவதோ, முன்சொன்ன ரசியப் பகையாள் ஓடுவதோ ஜோக்கர்போல நகைச்சுவை  கலந்த நடை நடப்பதுபோல இருக்கிறது. படக்காட்சியா, அல்லது டிஜிட்டல் நடிப்புப் பாத்திரங்கள் வரும் காட்சியா அல்லது இரண்டும் கலந்த காட்சியா என்று நீங்கள் பிரித்தே பார்க்கமுடியாது. கட்டமைக்கப்படும் எல்லாக்காட்சிகள் மூலமும்  ‘ அவர்கள் ‘ சாவை மட்டும் காட்டவில்லை; சாவதென்பது என்ன என்பதையும் காட்டுகிறார்கள்.விளக்கமாக, அலசலாக, விவாதமாக அல்ல; ஒரு சிறிய (  மூட்டைப் ) பூச்சி நசுக்கப்படுவதுபோலவே சட்டென்று காட்டி எடுக்கப்பட்டுவிடுகிறது.  பொருட்படுத்த வேண்டாத மலிவான ரசனை நிரம்பிய சினிமாக்காட்சிகள் போல பார்த்தபிறகு அடுத்ததற்குத் தாவிவிடவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். எந்த உணர்வு அதிர்வுகளையும் அதில் சேர்க்கவில்லை. அதன் தாக்கம் பார்வையாளர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை நிதானமாக நான் சிந்தித்துப் பார்த்தே உணர்ந்துகொண்டேன். ”

BSS  உங்களை அடுத்து இரண்டு நாட்டு மக்கள் சார்பாகப் போரில் இழுத்து இறக்கப்படும் படையாட்கள் யார் என்ற விவரத்துக்குள் நம்மை இட்டுச்சென்று விவாதிக்கிறார் :

” ஒரு நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சண்டை போடுபவனின் சாவும்  தாய் நாட்டுக்காகப் போரிட்டு மடியும் ஒருவனின் சாவு தரும் துயரமும் ஒன்றல்ல. ஆனால் எல்லா இளம் படையாட்களுக்கும் போரைப்பற்றி பொய்க்காரணங்கள் சொல்லப்படுகின்றன; அனைத்தும் தெரிந்துகொண்டே  யார் யார் திட்டமிட்டுச் சுரண்டுகிறார்களோ  அவர்களே பொய்களை ஊட்டுகிறார்கள்.  இந்தப் பின்னணியில்  பெரியவலி தரும் அப்படையாட்களின் சாவுகளை நேருக்குநேர் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்வதற்குப் பதிலாக,  TLF சொல்லிக்கொடுக்கும் பார்வை, பதற்றங்கள் எதுவுமே இல்லாத  சொரணையற்றவர்களாக நம்மை  உருமாற்றிவிடும் என்று நான் அஞ்சுகிறேன். உக்ரைன் குடிமக்களை ரசியப்படைகள் கொன்றன என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் அவை ரசித்து, கொண்டாடி பிறகு மறந்துவிடுகிற விசயங்கள் அல்லவே. இந்த இளம் வீரர்கள் அனைவருமே வீட்டில் தாய் மற்றும் குடும்பத்தோடு அன்றாடம் உழைத்து அனுபவித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டியவர்கள்தானே? ”

TLF குருணை ( granular ) பார்வைகளை வாரி வழங்குகிறார் என்றால்,  BSS எதார்த்தமான ஒரு ஆய்வுப் பார்வையை , ஒரு ஜனநாயகப் பார்வையை முன்வைத்து குருணைக்கு எதிரான விமரிசனப் பார்வையைக் கற்றுத் தருகிறார் என்று சொல்லலாமா ? சொல்லலாம். உலகமக்களை ஏதாவதொரு மூலையில் கொன்று குவிப்பவர்கள் யார் ? போரில் உயிர் இழப்பவர்களின் ஆருயிர்களை அற்பமாகவும் அவர்கள் உயிர் இழப்பதை ரசிக்கத்தக்க செய்தியாகவும் மாற்றும் பாசிச மனோபாவத்தைப் பரப்புகிறவர்கள் யார் ?  இவற்றை அம்பலப்படுத்தி எதிர்க்கிறார் BSS.

இதோ மேலும் வாதங்களை முன்வைத்து சளைக்காமல் போராடுகிறார் BSS. ” எனக்குக் கவலையாகவும் இருக்கிறது. வருங்காலத்தில் நாடுகளுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டு, தலையீடுகள் உருவாகி, போரும் நடந்து , அது வேடிக்கை விளையாட்டாகவே உருமாறலாம் ; இலக்குகள் சடுதியில் குறிக்கப்பட்டு அவை வெகு சுத்தமாக, துல்லியமாக அழிக்கப்பட்டதாகக் காட்டப்படலாம்.  ராணுவப் படையாட்களின் சாவுகளை, வலிகளை நாம் சிரமப்பட்டுச் செரித்துக் கொள்வதாக இருந்தாலும் நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது– மேலே பறக்கும் டிரோன்  தன் இலக்கைத் தாக்கிஅழிக்கும்போது கீழே செத்துவிழும் ராணுவப் படையாட்களோடு  ‘ வேற்றுநாட்டுக் குடிமக்களும்’ சேர்ந்தே செத்துப்போகலாம். ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன் கேளுங்கள். சென்ற ஆண்டு ஆஃப்கன் ’பயங்கரவாதி’களுக்கு  எதிராக அமெரிக்கா, ‘ நியாயமான தாக்குதல் ‘ என்ற நாடகம் அரங்கேற்றி தாக்குதலை நடத்தியபோது, நிவாரண ஊழியர் ஒருவரைக் கொன்று, அருகே ஒரு வண்டி நிறையக் குழந்தைகளையும் கொன்று ரத்தக் களறியாக்கிவிட்டது. உயரே இருந்து அத்தாக்குதல் நடத்தப்பட்டது; அது அமெரிக்காவுக்கு வேண்டுமானால் திருப்திகரமாகத் தோற்றம் கொடுத்திருக்கலாம் !…. “பென் சிக்ஸ் ஸ்மித் ( BSS )தன்பதிவை முடிக்கும் இடத்தில், ” நினைவில் கொள்ளுங்கள். அப்படி ஒரு டிரோனின் கீழே இருப்பது  ஒருநாள் நாமாகக்கூட இருக்கலாம்….” என்று எழுதுகிறார். மறுபடி சளைக்காமல் மறக்காமல் அவர் கொடுப்பது  ஒரு எச்சரிக்கை !

“…… நவீனகாலப் போர், சண்டை என்பதையேகூட ” ஒரு மரியாதைமிக்க உயர்வான தேடல் ” என்ற தத்துவக் கருத்தாக முத்திரையிட்டு இவர்கள் வரலாற்றின் கரங்களில் ஒப்படைத்துவிடக்கூடும்.  இது ஒரு மோசடி ! முன்னொரு காலத்தில் இப்படித்தானே மக்கள் இரும்பில்  கச்சாவாகச் செய்த வாள்களை எடுத்துக்கொண்டு  குதிரை மீதேறி ஒரு சண்டைக்குப் புறப்பட்டிருப்பார்கள் ? அதையும் அன்று காட்டுக்கூச்சலிடையே  அங்கீகரித்திருப்போம் , அறிவு வளர்ச்சி குறைந்த  குடிமக்களாக….இன்று நாம் எப்படிப்பட்ட  தார்மீகச்சிக்கல் நிரம்பிய  போரில் சிக்கியிருக்கிறோம் ? கொஞ்சம் சிந்திப்போமா ?….”

நீண்ட விவாதங்களுக்குப் பிறகு BSS முத்தாய்ப்பான கேள்விக்கு வருகிறார் :  ” ஒருக்கால் உங்கள் இளம்பருவம் பூராவும் பயிற்சிபெற்று பிறகொரு கணத்தில் கேட்டேயிராத, பார்த்தேயிராத ஒரு உணர்ச்சியற்ற கருவியால் நீங்கள் அழிக்கப்படலாம் !

மூலம் : பென் சிக்ஸ் ஸ்மித்.

” தி ஸ்பெக்டேட்டர் ” வலைத்தளம்.

மொழி ஆக்கம், விளக்க உரையுடன் :  இராசவேல்.

எழுத்தாளர் பென் சிக்ஸ் ஸ்மித் ( BSS ) பற்றிய குறிப்பு :

தற்போது போலந்தில் வாழும் BSS  இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர். இலக்கியம், அரசியல் கட்டுரைகளையும் பதிவுகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார். மேலோட்டமான குப்பைப் பதிவுகள் மத்தியில் உலக  மக்கள் மீதான அக்கறை கொண்ட இந்த இளைஞரது  அரசியல் பதிவுகள் ஆய்வுப் பார்வை நிரம்பியவை.

https://www.spectator.co.uk/article/the-ukraine-war-is-not-a-video-game

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here