முதலாளிகளிடமும் – கார்ப்பரேட்டுகளிடமும் நேர்மையையோ, வெளிப்படைத் தன்மையையோ, தங்களுக்கிடையில் ஆரோக்கியமான போட்டியையோ யாரும் எதிர்பார்க்கக் கூடாது. ராஜநாகம், தான் வாழ பிற பாம்புகளை தேடிப் பிடித்து விழுங்கும்.  ஏகபோக, மேலாதிக்க வெறிபிடித்து அலையும் கார்ப்பரேட்டுகளும் கூட  அப்படித்தான்.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் (Reliance Consumer Products Ltd) நிறுவனம், கேம்பா ஷ்யூர் (Campa Sure) என்ற பெயரில் குறைந்த விலையிலான பாட்டில் குடிநீரை அறிமுகப்படுத்தியுள்ளது.

சந்தையில் உள்ள பிஸ்லெரி (Bisleri), கின்லே (Kinley) மற்றும் அக்வாஃபினா (Aquafina) ஆகிய முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டியாக, சுமார் 20% முதல் 30% வரை குறைவான விலையில் இது விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

விலை விவரங்கள் மற்றும் அளவுகள்!

அம்பானியின் குடிநீர் பாட்டிலானது கீழ் குறிப்பிட்ட விலைகளுக்கு விற்பனையாகிறது.

  • 250 மி.லி (ml): ₹5
  • 500 மி.லி (ml): ₹8
  • 1 லிட்டர் (Litre): ₹15 (மற்ற நிறுவனங்கள் பொதுவாக ₹20-க்கு விற்கின்றன)
  • 2 லிட்டர் (Litres): ₹25 (மற்ற நிறுவனங்கள் ₹30 – ₹35 வரை விற்கின்றன)

ரிலையன்ஸ் ஃபிரெஷ் (Reliance Fresh), ஸ்மார்ட் பஜார், ஜியோமார்ட் (JioMart) மற்றும் உள்ளூர் மளிகைக் கடைகள் மூலமாகவும் ,இது நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இதை முன்னணி பிராண்டாக்குவதற்கு பல்வேறு சதி வேலைகளிலும் அம்பானி ஈடுபட்டு உள்ளார் என கருதும்படியான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

அம்பானியின் பார்வையில் பிற முதலாளிகள் அனைவரும் ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்கள்தான். தன்னால் தொழிலில் இருந்து விரட்டப்பட வேண்டியவர்கள்தான்.

தான் விழுங்குவதற்காகவே அவர்கள் அந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள், என்ற நினைப்பில் இருப்பவர்தான். அதன்படியே செயல்பட்டும் வருபவர்தான், என்பதற்கு சில உதாரணங்களை பார்ப்போம்.

படிக்க: தனியார் மயமாக்கப்படும் தண்ணீர்! கோவை மாநகராட்சியில் முன்னோட்டம் பார்க்கிறதா அரசு?

அம்பானி தற்போது இந்தியாவின் பாட்டில் தண்ணீர் சந்தையில் முன்னணியில் இருக்கும் பிஸ்லரியை ஒழித்துக் கட்டிவிட்டு, தனது பாட்டிலை முதன்மையாக்க பல்வேறு சதிகளில் இறங்கியுள்ளார். அம்பானியின் சதிகளுக்கு முன்பு வாஜ்பாய் எப்படி உறுதுணையாக இருந்தாரோ அதேபோல் பாசிச மோடியும் தற்போது செயல்படுகிறார்.

அம்பானியின் கையாளான வாஜ்பாய்!

முதலில் வாஜ்பாய் என்ன செய்தார் என்பதை பார்த்துவிட்டு பின்னர் மோடிக்கு வருவோம். வாஜ்பாயின் ஆட்சி காலத்தில் செல்போன்கள் மக்களிடம் அறிமுகமாகத் தொடங்கி இருந்தது. செல்போனுக்கான இணைப்பு பெறுவதற்கு ஆயிரக்கணக்கில் ஏர்செல், ஏர்டெல், BSNL போன்ற நிறுவனங்களிடம் பணம் கட்ட வேண்டி இருந்தது. செல்போன் வாங்குவதற்கு என்று தனியாக ஐந்தாயிரம், பத்தாயிரம் என செலவிட வேண்டிய சூழலும் இருந்தது. இந்தச் சூழலில் தான் அம்பானி இத்துறைக்குள் நுழைந்தார்.

2003-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரிலையன்ஸ் அறிவித்த ‘மான்சூன் ஹங்காமா’ சலுகை இந்தியத் தொலைத்தொடர்புத் துறையையே புரட்டிப் போட்டது. ரூ.501-க்கு போன். வெறும் 501 ரூபாய் முன்பணம் செலுத்தினால், ஒரு புதிய சி.டி.எம்.ஏ செல்போன் மற்றும் இணைப்பை ரிலையன்ஸ் வழங்கியது.

ரிலையன்ஸ் நிறுவனத்திடம் “அலைபேசி இணைப்புக்கான கட்டணத்தை மட்டும் கட்டினால் போதும்; செல்போன் இலவசம்!”  என்று நாடு முழுக்க விளம்பரம் செய்து பணத்தையும் முன்கூட்டியே வசூலித்தும் விட்டார் அம்பானி. 500 ரூபாய்க்கு செல்பேசி இணைப்புடன் போன் தருவது சாத்தியமே இல்லை என்று பிற நிறுவனங்கள் வாயை பிளந்து பார்த்தபோது, அம்பானி போன் தருவதாக அறிவித்த தேதி நெருங்கியவுடன், ஒரு திடீர் அறிவிப்பு ஒன்றிய அரசிடமிருந்து வந்தது.

படிக்க: கோவையில் இனி காசுக்கே தண்ணீர்! வானதி சீனிவாசன் முன்னெடுக்கும் தண்ணீர் விற்பனை ATM!

வாஜ்பாய் அரசு வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக சீனா போன்ற கிழக்கு ஆசிய  நாடுகளில் இருந்து மிகவும் மலிவாக செல்போன்களை இறக்குமதி செய்து கொள்வதற்கு அனுமதி அளித்து விட்டது. அம்பானியோ போன் வருவதற்கு முன்னரே இந்தியர்களில் கணிசமானவர்களிடம் விற்று தீர்த்து விட்டார். எனவே பிற நிறுவனங்கள் வாஜ்பாய் அரசின் அறிவிப்பை தொடர்ந்து களத்தில் குதிப்பதற்கு அவகாசமே இல்லாமல் போனது.

ரிலையன்ஸ் நிறுவனம் இணைய வசதியை அறிமுகப்படுத்தும் போது அதற்கு போட்டியாளராக பிஎஸ்என்எல் வந்து விடக்கூடாது என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் தனி கவனம் செலுத்தினார்கள். அலைக்கற்றையை ஒதுக்கும்போது ரிலையன்ஸ்க்கு முன்னுரிமை தந்து BSNL – ஐ கடைசி பெஞ்சுக்கு தள்ளினார்கள். இந்தியா முழுவதும் தொலைபேசி கோபுரங்களை அமைத்து முழுமையான வலைப்பின்னலுடன் செயல்பட்டு வந்த bsnl க்கு அலைக்கற்றை மறுக்கப்பட்டு, பிஎஸ்என்எல் கோபுரங்கள் ரிலையன்ஸ்க்கு உள் வாடகைக்கு விடப்பட்டது.

ரிலையன்ஸ் ஜியோ வணிகப் போட்டித் தடை காலம் முடிந்த பிறகு, 2016-ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மூலம் 4G சேவையுடன் மீண்டும் தொலைத்தொடர்புத் துறையில் நுழைந்து, இலவச அழைப்புகள் மற்றும் மலிவு விலை இணையச் சேவை மூலம் ‘இரண்டாவது புரட்சியை’  ஏற்படுத்தினார்.

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம், 2010-ஆம் ஆண்டு ஒரு சிறிய நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலமும், அதன்பின் இந்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) நடத்திய அலைக்கற்றை ஏலங்களில் பெருமளவு முதலீடு செய்ததன் மூலமும், தனது அலைக்கற்றைகளைப் (Spectrum) பெற்றது.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ, உருவெடுக்கக் காரணமாக இருந்த முக்கிய அலைக்கற்றை கொள்முதல் படிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

இன்போடெல் கையகப்படுத்தல் (2010)!

இன்போடெல் பிராட்பேண்ட் (IBSL). 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற 4G (BWA – Broadband Wireless Access) அலைக்கற்றை ஏலத்தில், இந்தியாவின் அனைத்து 22 தொலைத்தொடர்பு வட்டங்களிலும் (Circles) அலைக்கற்றை வென்ற ஒரே நிறுவனமாக ‘இன்போடெல் பிராட்பேண்ட் சர்வீசஸ் லிமிடெட்’ (Infotel Broadband Services Limited) இருந்தது.

படிக்க: இனி தண்ணீர் காசுக்கு!!!

ஏலம் முடிந்த சில மணி நேரங்களிலேயே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) ₹4,800 கோடி முதலீடு செய்து இன்போடெல் நிறுவனத்தின் 95% பங்குகளை வாங்கியது. பின்னர் 2013-இல் இன்போடெல் நிறுவனத்தின் பெயர் ‘ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட்’ (RJIL) என மாற்றப்பட்டது. பாம்பானது தனது இனத்தைச் சேர்ந்த குட்டி பாம்புகளை விழுங்கி வாழ்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கும் குறிப்பாக தேசம் கடந்த ஏக போக கார்ப்பரேட்டுகளுக்கும் இதுவே பொருந்தும்.

இப்படி முகேஷ் அம்பானி தனது தொழில் சாம்ராஜ்யத்தை விரிவாக்கியதன் பின்னே சகப் போட்டியாளர்களை குறுக்கு வழிகளில், அதாவது அரசாங்கத்தை கையில் போட்டுக்கொண்டு அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் தலையிட்டு, தான் விரும்பியதையே அரசின் திட்டமாக எடுக்க வைத்துக்கொண்டு, ஒவ்வொரு துறையிலும் ஏகபோகமாக மாறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதை வாசகர்கள் அறியலாம்.தற்போது முகேஷ் அம்பானி பிஸ்லரி என்ற பாம்பை விழுங்க பார்க்கிறார்.

மோடியின் எஜமானனாக அம்பானி!

தற்போது மோடியின் ஆட்சியிலும் இதுவே நடக்கிறது. பாட்டில் தண்ணீர் விற்பனைக்கு நுழையும் போது மற்ற நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாட்டிலுக்கு 20 ரூபாய் விலை வைத்து விற்று வந்தன. அம்பானியும் 15 ரூபாய் என்று அறிவித்து தனது சரக்கை அறிமுகப்படுத்தினார். சரியாக அவரது சரக்கு சந்தைக்கு வரும் பொழுது மோடி அரசு தண்ணீர் பாட்டலுக்கான ஜிஎஸ்டியை தடாலடியாக குறைத்தது. பிற நிறுவனங்கள் சுதாரிப்பதற்கு முன்னரே ரிலையன்சின் 15 ரூபாய் Campa குடிநீர் இந்தியாவின் கடைகளில் நிரப்பப்பட்டது.

தனது சரக்கு, விலை மலிவானது, உயர்தரமானது என்பதை மக்களை நம்பச் செய்ய கோலிவுட் நடிகர்  அமிதாபச்சனை campa பிராண்டின் தூதுவராக விளம்பரப்படுத்தினார்,அம்பானி. பாட்டில் தண்ணீர் சந்தையில் செல்வாக்கு செலுத்தி வந்த பிஸ்லரியை ஒழித்து கட்டவும் சதிகளில் இறங்கியது,அம்பானியின் campa நிறுவனம்.  அம்பானியின் குடிநீர் பாட்டில்கள் சந்தையில் இறக்கப்பட்டவுடன்,  பிஸ்லரியின் கோவா ஆலையில் தரப்பரிசோதனையை ஒன்றிய அரசு நிறுவனம் (இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) மேற்கொண்டது. அதில் ஒரு பாட்டிலில் உள்ள குடிதண்ணீர் தரமற்றது புற்றுநோய் உருவாக்கக்கூடிய அடிப்படையை கொண்டிருக்கிறது என்று  கண்டறியப்பட்டது.

கோவாவில் நடத்திய நாடகம்!

கோவாவில் உள்ள பிஸ்லரி ஆலையில் இருந்து 6 குடிநீர் மாதிரிகள் (Packaged Drinking Water) பரிசோதனைக்காக எடுக்கப்பட்டன. இதில் 5 மாதிரிகள் தர நிர்ணயங்களைப் பூர்த்தி செய்த நிலையில், ஒரு மாதிரி மட்டும் தோல்வியடைந்தது. அதே மாதிரியை தமது சார்பில் வேறு ஒரு ஆய்வுக் கூடத்தில் சோதித்து “அப்படி இல்லை” என்று மறுத்து பிஸ்லரி விளக்கமும் தந்துவிட்டது.

படிக்க: “உலகத்தரத்தில் குழாயில் குடிநீர்!” தண்ணீர் கார்ப்பரேட்டுகளின் பிடிக்குள் சிக்குகிறதா ஒடிசாவின் பூரி!

பிஸ்லரி நிறுவனத்தின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மறுபரிசோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவு கட்டுக்குள் இருந்தபோதிலும், புற்றுநோயை உண்டாக்கக்கூடிய பாலிநியூக்ளியர் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) எனப்படும் நச்சு ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது. குடிநீரில் இந்த ரசாயனம் சிறிதளவு கூட இருக்கக் கூடாது என்பதால் FSSAI இதைப் பாதுகாப்பற்றது என அறிவித்தது. இதுவெல்லாம் நடந்து ஓராண்டான பின்னர் தற்போது பிஸ்லரி குடிக்க தகுதியற்றது! புற்றுநோய் பரப்பக்கூடியது !என்று சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அதிரடியாக பிரச்சாரம் செய்யப்பட்டு மக்களின் மனதில் பிஸ்லரி பெற்றிருந்த இடமானது தகர்த்து நொறுக்கப்பட்டது.

அதாவது தனது போட்டியாளரான நிறுவனத்தை, நிறுவனத்தின் தயாரிப்பை, தரமற்றது என்று மதிப்பிழக்கச் செய்வதன் மூலம், தனது பொருள் சந்தையில் முதலிடத்தை பெறுவதை உறுதிப்படுத்தியது ரிலையன்ஸ் நிறுவனம்.  அம்பானி இத்தகைய கேடான வழிகளில் மோடி அரசை இறக்கி விட்டுள்ளார் .

இயற்கையின் கொடையான தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பனை சரக்காக்குவதை நம்மில் யாரும் ஏற்கப் போவதில்லை. அதை பிஸ்லரி செய்தாலும் குற்றம்தான்; அம்பானியின் Campa செய்தாலும் கிரி மினல்தனம்தான். நாம் இதில் கவனிக்க வேண்டியது, உலகையே சூறையாடக் கூடிய, லாப  வெறிபிடித்த, குறிப்பிட்ட துறையில் ஏக போகமாக மேலாதிக்கம் செலுத்தும்  நிறுவனமாக தம்மை வளர்க்கத் துடிக்கும் கார்ப்பரேட்டுகள், தமக்குள் கூட ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொள்வது கிடையாது; தன்னலம் மட்டுமே முக்கியம் என்று சக முதலாளிகளின் நிறுவனங்களையே ஒழித்துக்கட்ட துடிக்கிறார்கள். இதற்காகத்தான் பாஜக போன்ற கட்சிகளுக்கு பல்லாயிரம் கோடிகளை தேர்தல் பத்திரங்களாக வாரி வழங்கி தமது கையாள்களைப் போல் ஏவுகின்றனர்.

தொழில் போட்டியால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்ற, அல்லது திட்டமிட்டு சந்தையில் இருந்து விரட்டப்படுகின்ற கார்ப்பரேட் முதலாளிகள் இத்தகைய ஏகபோகத்துக்கு எதிராக வரம்பிற்குட்பட்டு போராட முன்வருவர். அல்லது போராடும் சக்திகளை ஆதரிக்க முன் வருவர். நானும் தானே பாஜகவிற்கு நன்கொடை தந்துள்ளேன்! எனக்கு ஏன் இப்படி துரோகம் செய்கிறார்கள்? என்ற அறச்சீற்றமும் கூட ஒருவேளை இருக்கக்கூடும். அந்த அளவிற்கு தான் அவர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே நேரம், தாமும் அத்தகைய ஏகபோக நிறுவனமாக வளர வேண்டும் என்ற கனவிலேயே இருப்பார்கள் என்பதை உழைக்கும் வர்க்கம் மறந்துவிடக்கூடாது.

அந்த வகையில் கார்ப்பரேட்டுகளுடன், சமாதான சகவாழ்வு வாழ்வதற்கு, உழைக்கும் மக்களுக்கு எதுவும் இல்லை என்பது தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய படிப்பினை ஆகும். அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளையும் அவர்களை ஏகபோகமாக, உலக பணக்காரர்களாக வளர்த்தெடுக்க விசுவாசமாக தொண்டூழியம் செய்யும் பாசிச பாஜக போன்ற கட்சிகளையும் முறியடிக்க வேண்டியது நாட்டு மக்களின் கடமையாக உள்ளது. நம் கடமையாக உள்ளது.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here