இந்தியாவில் ஆர்எஸ்எஸ் பாஜக நேரடியாக ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டு முதல் உயர் கல்வி நிறுவனங்களில் பார்ப்பன மற்றும் மேல் சாதி மாணவர்கள் நடத்துகின்ற சாதி வெறியாட்டங்கள் உச்ச நிலைக்கு சென்றுள்ளது.. பார்ப்பன மற்றும் மேல் சாதி அல்லாத பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடி மாணவர்கள் மீதும், மதச் சிறுபான்மையினரான இஸ்லாமிய, கிறிஸ்தவ மாணவர்களின் மீதும் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சென்னை ஐஐடியில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் 29 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த ஐஐடியில் படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். பல நூற்றாண்டுகளாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடி மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ஒன்று, இரண்டு தலைமுறைகளாக படித்து முடிப்பதற்குள் அவர்களின் மீது மீண்டும் சாதி ஆதிக்க வெறியாட்டம் கொடூரமாக நிகழ்த்தப்படுகிறது. இதன் காரணமாக ஐஐடி வளாகத்திற்குள்ளேயே தற்கொலைகள் அதிகரித்துள்ளது.

படிக்க: குடுமிகளிடமிருந்து ஐஐடிக்களை பாதுகாப்போம்!

“சூத்திரனும், பஞ்சமனும், பழங்குடியினனும் படித்து என்ன செய்யப் போகின்றனர். ஏற்கனவே வர்ணாசிரம முறைப்படி பிற சாதியினருக்கு சேவை செய்து வாழ்க்கை நடத்தியதைப் போலவே இனியும் வாழ்க்கையை நடத்த வேண்டியதுதான் என்பதை வெவ்வேறு கோணங்களில் பகிரங்கமாகவே முன்வைக்கின்றது ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் அதன் மாணவர் அமைப்பான ஏபிவிபி குண்டர் படை.

மும்பை ஐஐடியில் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி இரண்டாம் ஆண்டு பி.டெக் படித்து வந்த சாகில் ரவீந்திர வகோடே  தற்கொலை செய்து கொண்டார் இந்த தற்கொலைக்கு அடிப்படையான காரணம் சாதி ரீதியாக அவர் இழிவுபடுத்தப்பட்டது தான் என்று அவரது பெற்றோர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஐஐடிக்கு வெளியில் பந்தலை போட்டுக்கொண்டு அமர்ந்த நீதி கேட்டு போராடி வருகிறார்கள். மாணவர் வகோடே மரணத்திற்கு நீதி கேட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு மாணவர் அமைப்புகளின் போராட்டங்கள் தொடர்ந்து வந்தது.

அக்டோபர் 18, 2026 அன்று ஐஐடி வளாக வாயிலில் அமைக்கப்பட்டிருந்த போராட்டப் பந்தலை மும்பை காவல்துறை அப்புறப்படுத்தியதுடன், போராட்டத்தில் ஈடுபட்ட சாஹிலின் பெற்றோர் மற்றும் பல மாணவர்களைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்

படிக்க: மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லும் ஐஐடி இயக்குநர்!

ஜனநாயக விரோதமாக போலீசு கும்பல் போராட்டப் பந்தலை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் தற்போது வளாகத்திற்குள் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகில் “ஜஸ்டிஸ் கார்னர் 2.0” என்ற புதிய தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.அவர்கள் 18 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை தொடர்கிறார்கள்.

இந்த மாணவர்களின் போராட்டத்தை நசுக்குகின்ற வகையில் மகாராஷ்டிரத்தை ஆளுகின்ற தேவேந்திர பத்னாவிசு (Devendra Fadnavis)  அரசாங்கமானது நேற்று  மீண்டும் போராட்டத்தில் கலந்துகொண்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகளை கைது செய்து கொடூரமான துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கி உள்ளது.

அவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கும், மாநில முதல்வருக்கும் இந்த ஜனநாயக விரோத அடக்குமுறைகளை கண்டித்து கடிதத்தை அனுப்பி இருக்கிறார்கள். என்பது ஒருபுறமிருக்க இதே வரிசையில் தற்போது கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான சித்தேஷ் பட்டேல் என்ற மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சாதாரண ஏழை, எளிய குடும்பப் பின்னணியில் இருந்து பிறக்கக்கூடிய மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கக்கூடிய வாய்ப்பு என்பது குதிரைக்கொம்பாக இருக்கின்ற இந்த காலகட்டத்தில் அவ்வாறு தப்பி தவறி பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று பல்கலைக்கழகங்களில், ஐஐடியில் நுழைகின்ற பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்கள் மற்றும் மதச் சிறுபான்மையினர் சாதி ரீதியாக, மதரீதியாக பல்வேறு வகைகளில் இழிவுபடுத்தப்படுகிறார்கள்; அவமானப்படுத்தப்படுகிறார்கள். இந்த அவமானங்களை தாங்க முடியாமல் சுயமரியாதையுடன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் எமது இளம் தலைமுறையினர்.

படிக்க: பூணூல்களின் ஆதிக்கத்தில் இருந்து ஐஐடிகளை விடுவிப்பது எப்போது?

பார்ப்பன மற்றும் மேல் சாதி அல்லாத சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக பல்வேறு நெருக்கடிகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் இழிவுபடுத்தல்களுக்கும் ஆளாகின்றனர். இத்தனைக்கும் மத்தியில் முன்னேறி விடலாம் என்ற ஏக்கத்துடனும், கனவுகளுடனும் இத்தகைய பல்கலைக்கழகங்களுக்கும், உயர் கல்வி நிறுவனங்களுக்கும் செல்கின்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது கொடூரமான சமூக அமைப்பின் மீது தனது கடும் எதிர்ப்பை காட்டுகின்ற வழிமுறைதான். இத்தகைய வழிமுறைகளை நாம் ஏற்கவில்லை என்றாலும், சாதி வெறியாட்டங்களுக்கு தனது தற்கொலை மூலம் எதிர்ப்புகளை காட்டுகின்றனர்.

2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில், இந்திய ஒன்றிய அரசு முன்வைத்த அறிக்கையின்படி 2018 முதல் 2023 வரையிலான ஐந்தாண்டுகளில் ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து சுமார் 13,500 மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து விலகியுள்ளனர்.  இவர்கள் அனைவரும் பட்டியலின மற்றும் பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்திய ஒன்றிய ஆர்எஸ்எஸ் பாஜக அரசாங்கமானது வெட்கங்கெட்ட முறையில் தெரிவித்துள்ளது.

மற்றொரு புள்ளி விவரத்தின் அடிப்படையில் 2012 முதல் 2024 வரை 12 ஆண்டுகளில் 18,600 மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். இவ்வாறு வெளியேறுகின்ற மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது என்பது ஒரு புறமிருக்க ஐஐடி வளாகத்திலேயே தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்வது ஆதிக்க சாதி வெறியாட்டங்களை வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்துகிறது.

படிக்க: பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் ஐஐடி நிர்வாகம்!

மும்பையில் ஐஐடி மாணவர்கள் இந்த கொடுமைகளுக்கு எதிராக போராடி வருகின்ற சூழலில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதலைக்காக நாடு முழுவதும் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஓங்கி குரல் எழுப்ப வேண்டும்.

கல்வித்துறை பாசிசமயமாவது மட்டுமின்றி நாடு முழுவதும் அனைத்து துறைகளும் படிப்படியாக பாசிசமயமாக்கப்பட்டு வருகின்ற சூழலில் அவற்றை எதிர்த்து வீதியில் இறங்கி போராடுவதும், ஐஐடி, ஐ எம் மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரி வளாகங்களை போராட்ட களங்களாக மாற்றுவது தான் உடனடி தீர்வு. இந்த அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 53 மாணவர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் ஒன்றிணைந்து போராட தயாராகி வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களில் தொடர்ச்சியாக பாசிச எதிர்ப்பு புரட்சிகர ஜனநாயக சக்திகள் மற்றும் பாசிச எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஓர் அணியின் கீழ் திரண்டு ஜனநாயகக் கூட்டரசு ஒன்றை நிறுவ வேண்டும். அந்தக் கூட்டரசு மட்டும்தான் கல்வி உரிமைகளை பாதுகாப்பது மட்டுமின்றி, பட்டியலின, பழங்குடி மாணவர்கள் மற்றும் சிறுபான்மை மதத்தவரான இஸ்லாமியர்கள் கிறித்தவ மாணவர்களின் உயிரையும் பாதுகாக்க முடியும்.

  • இரா.கபிலன்.

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here