தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. இதில், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் ஏற்கனவே ஆட்சியில் இருந்த பாஜக தனது கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன் மேற்கு வங்கத்தில் முதன் முறையாகத் தனிப்பெரும் பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. கேரளாவில் சிபிஎம் கட்சியின் 10 ஆண்டு கால ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, காங்கிரசு ஆட்சியைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் பாஜகவின் B – டீமான தவெக 107 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை வேண்டும் என்பதால் தேர்தலுக்கு பிறகான கூட்டணி பேரத்தை தொடங்கி, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரசு, விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை தனது பக்கம் இழுத்துக் கொண்டு கூட்டணி ஆட்சியை அமைந்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சிக்கு சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளது. மொத்தத்தில் கேரளா தவிர்த்து மூன்று மாநிலங்களில் பாஜகவின் நேரடி ஆட்சியும், தமிழகத்தில் காங்கிரசு – விசிக ஆதரவுடன் பாசிச கோமாளியான விஜய்யின் ஆட்சியும் அமைந்துள்ளது.
05 மாநில தேர்தல் முடிவுகள் இண்டியா கூட்டணியின் நிலைமையை மோசமாக்கியுள்ளது. அதாவது, இண்டியா கூட்டணி உருவானது முதல் ஒவ்வொரு தேர்தலின் போதும், தங்களது கட்சியின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள, தங்களது சொந்த கட்சி தலைவர்களின் நலன்களுக்காக, ஆட்சியை பிடிக்க, பதவியை பாதுகாக்க மாநிலத்திற்கு உள்ளேயே எதிரெதிராக நின்றனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாசிச பாஜக எளிமையாக வெற்றி பெற்றது. சில இடங்களில் மாற்று என புதிய கட்சிகள் மூலம் பினாமி ஆட்சியை அமைத்துள்ளது.
கீழிருந்து தலைமை வரை ‘ஒரே சித்தாந்தம்’ மூலமாக பாசிச சிந்தனையோடு கட்டியமைக்கப்பட்ட பாசிச கட்சியான பாஜகவை தேர்தல் அரங்கில் தோற்கடிப்பதற்கு இண்டியா கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரசு, திரிணமுல் காங்கிரசு மற்றும் சிபிஎம் ஒன்றிணைந்து பாசிசத்தை வீழ்த்துகின்ற வகையிலான குறைந்தபட்ச செயல் திட்டத்துடன் கூடிய பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை உருவாக்கவில்லை. பாசிச எதிர்ப்பிற்கு அழைப்பு விடுத்த புரட்சிகர கட்சிகளின் கோரிக்கையையும் அலட்சியம் செய்தன. இதற்கு கட்சிகளின் வர்க்க தன்மையும், பாசிச எதிர்ப்பில் ஊசலாடும் சமரச போக்குமே காரணம்.
பாசிசத்திற்கு அவசியமான மாநிலத் தேர்தலும்!
இண்டியா கூட்டணி செய்யும் வரலாற்று பிழையும்!
பாசிசமாகி வரும் போலி ஜனநாயக கட்டமைப்பை பயன்படுத்தி ஒவ்வொரு மாநில தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் அல்லது குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்றவும் குதிரை பேரங்கள், வருமான வரி ரெய்டுகள், பொய் வழக்குகள், தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து மோசடி செய்வது உள்ளிட்ட அனைத்து விதமான தகிடுதத்தங்களையும் கையாள்கிறது பாசிச பாஜக. இதிலிருந்து, மாநில தேர்தல்களில் வெற்றிகளையும் ஆட்சி அதிகாரத்தையும் எவ்வளவு முக்கியமானதாக பாசிஸ்டுகள் கருதுகிறார்கள் என்பதை புரிந்துக் கொள்ள முடியும்.
அதாவது, பாசிச பாஜகவின் பார்ப்பன சித்தாந்தம் முன் வைக்கும் பார்ப்பனிய தேசியம் எனும் இந்துராஷ்டிரக் கனவை அடையத் தடையாக இருக்கும் என நினைக்கும் அனைத்து சிந்தாந்தங்களையும் ஒழித்து கட்ட வேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு தடையற்ற சந்தைக்கு தேசியம் பேசும் மாநில மற்றும் பிராந்திய கட்சிகளையும் ஒழித்துக் கட்ட வேண்டும். இதற்கு மாநிலத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதுடன், தேர்தல் வெற்றிகளை தங்களது பாசிச நடவடிக்கைகளுக்கான அங்கீகாரமாக காட்ட முனைகிறது பாசிச கும்பல்.
இதனை ஒரு உதாரணத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். இண்டியா கூட்டணி உருவான பிறகு மொத்தம் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் ஜார்க்கண்ட், இமாச்சல பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்களை தவிர மற்ற 13 மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன. இதனை “கங்கோத்ரி முதல் கங்கா சாகர் வரை எல்லா இடங்களிலும் தாமரை மலர்ந்துள்ளது” என்று மோடி பெருமை பீற்றிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும், நாட்டின் பிரதமராக உள்ள நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷாவும் ‘ஒரு தேர்தல் பிரச்சாரகன்’ என்ற அளவுக்கு இறங்கி பல கூட்டங்களில் பங்கேற்பது, பொய் மூட்டைகளை, விஷமப் பிரச்சாரங்களை அவிழ்த்து விடுவதுடன் மத, இன வெறிகளை தூண்டும் விதமாக வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். இதன் விளைவே, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா தெலுங்கானா, பஞ்சாப், ஜார்க்கண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர பெரும்பாலான மாநிலங்களில் பாசிச பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
படிக்க:
♦ தவெகவின் தேர்தல் வெற்றிக்கு அடிப்படை காட்சி போதைக்கு அடிமையாகியுள்ள தமிழ் சமூகத்தின் தோல்வியே!
♦ 2026 தமிழ்நாடு & புதுவை சட்டமன்றத் தேர்தல்கள் | பொதுக்கூட்டம்
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவை பொருத்தவரை இந்திய அரசியலமைப்பு சட்டம், நாடாளுமன்ற- சட்டமன்ற அமைப்பு ஆகியவற்றின் மீது நம்பிக்கையோ மதிப்போ கொண்ட கட்சியல்ல. எனினும், தனது பிற்போக்கு பாசிச கொள்கைகளை அமல்படுத்த கிடைக்கும் அனைத்து வழிவகைகளையும் பின்பற்றுகிறது. இந்த போலி ஜனநாயக அரசமைப்பும், பாசிச உள்ளடக்கம் கொண்ட நாடாளுமன்ற சட்டமன்றங்களும் ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்யக்கூடியவை என்ற பொதுத்தன்மையாக இருக்கும் போதே, தற்போது பாசிச ஆட்சியை நிறுவும் கேடான நோக்கத்திற்கு சட்டமன்றத் தேர்தலையும் பயன்படுத்தி வருகிறது பார்ப்பன பாசிச சக்திகளான ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல்.
இப்படி பாசிச ஆட்சி அதிகாரத்தை நிறுவும் நோக்கத்துடன், தனது சட்ட விரோத குண்டர் படைகளை வளர்த்து வருவதையும் சிறுபான்மை மக்களை குறிவைத்து தாக்குவது பாசிச மனநிலையை மக்கள் மத்தியில் இயல்பு நிலையாக மாற்றுவது என்பதை உருவாக்க சட்டபூர்வமான வழிமுறைகளை தங்களுக்கு ஏற்ற வகையில் கையாள்வது என்ற முறையிலே பாசிஸ்டுகள் நாடாளுமன்ற – சட்டமன்ற தேர்தலை அணுகுகின்றனர்.
இதற்கு எதிராக வினையாற்ற வேண்டிய இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் பெயரளவில் பாசிச எதிர்ப்பை பேசியதை தாண்டி எதையும் செய்யவில்லை. மாறாக, மாநிலங்களில் சிபிஎம் – காங்கிரசு கட்சிகள் கேரளாவிலும்; காங்கிரசு – திரிணாமுல் காங்கிரசு மேற்கு வங்கத்திலும்; திமுக- காங்கிரசு புதுச்சேரியிலும் தனித்தே போட்டியிட்டன. இந்த கட்சிகள், மாறி மாறி தங்களை மிக மோசமாக விமர்சனம் செய்து கொண்டனர்.
பாசிச கும்பலை ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கு மாநில அரசியலில் உள்ள முரண்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பாசிசம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றாமல் தடுத்து நிறுத்துவதே முக்கியமானது என இண்டியா கூட்டணி கட்சிகள் அணுகவில்லை. சந்தர்ப்பவாத, பிழைப்புவாத அணுகுமுறைகள் மூலம் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ளவே இண்டியா கூட்டணி கட்சிகள் தங்களுக்குள் பொது விதியை வகுத்துக் கொள்ளாமல் எதிர் எதிர் கட்சிகளாக போட்டியிட்டு வரலாற்று பிழையை தொடர்ந்து செய்து வருகிறது. இதனை ஒவ்வொரு மாநில தேர்தலின் போதும் சுட்டிக் காட்டி எழுதி வருகிறோம்.
இண்டியா கூட்டணி எனும் சமரச சக்தியும்!
பாசிச எதிர்ப்பில் அதன் ஊசலாட்டமும்!
இண்டியா கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரசு உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், தனிவுடைமையையும், தனியார்மயம், தாராளமயம், உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக் கும் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டு கார்ப்பரேட் நலன் சார்ந்த திட்டங்களை நேரடியாக ஆதரித்து சேவை செய்பவைதான். இலஞ்சம், ஊழல், அதிகார முறைகேடுகளில் ஊறிப்போன கட்சிகள் என்பதிலும், அந்தந்த மாநில / மாவட்டத்திற்கு ஏற்ப ஓட்டரசியலுக்காக சாதியை தாங்கிப்பிடிக்கின்றன என்பதிலும் ஐயமில்லை. இதனை இண்டியா கூட்டணி உருவானதிலிருந்தே புதிய ஜனநாயகம் மா-லெ இதழில் பல கட்டுரைகள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளோம்.
படிக்க
♦ தமிழக சட்டமன்றத் தேர்தல்: பாசிச பாஜக முன் வைக்கும் அரசியலை முறியடிப்பது எப்படி?
♦ தேர்தல் ஆணையத்தின் மற்றும் ஓர் தேர்தல் மோசடி அறிவிப்பு!
எனினும், இப்படிப்பட்ட கட்சிகள் மட்டுமே பாசிசத்திற்கு எதிராக தற்போது தேர்தல் முறையில் உள்ளனர். மக்களும் நிலவுகின்ற தேர்தல் முறையில் நம்பிக்கை கொண்டு உள்ளனர். எனவே, இண்டியா கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் பாசிச எதிர்ப்பில் ஊசலாட்டமான, பலவீனமான, தற்காலிக தன்மை கொண்ட கட்சிகளாக இருந்தாலும், தேர்தல் களத்தில் பாசிச பாஜக அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுக்க இத்தகைய கட்சியை, கூட்டணியை ஆதரிப்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
போலி ஜனநாயக வடிவமும், பாசிச உள்ளடக்கமும் கொண்ட நாடாளுமன்ற – சட்டமன்றங் களின் மீது மக்கள் மாயையில் உள்ள நிலையில், இந்த கட்டமைப்பிற்குள்ளேயே மாற்றை தேடுகின்றனர். இந்த சூழலில் பாசிசம் அதிகாரத்திற்கு வருவதை தடுப்பது; போலி ஜனநாயக நாடாளுமன்றம் மூலம் கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்த முடியாது என மக்களுக்கு அதன் வரம்பை அனுபவபூர்வமாக உணர்த்துவது; கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு மாற்றாக முன்வைக்கப்படும் ஜனநாயக கூட்டரசை மக்களுக்கு விளக்கி பிரச்சாரம் செய்வது. மக்களுக்கு சொந்த அனுபவத்தை (நிலவுகின்ற அரசு எந்திரம் தூக்கியெறியப்பட வேண்டும் என்ற அனுபவத்தை) ஏற்படுத்துவதன் மூலம் இந்த ஆட்சிமுறை இனி நீடிக்க கூடாது. நீடிக்கவும் விடக்கூடாது என்ற அரசியல் உணர்வைப் பெற வைப்பது என்ற கண்ணோட்டத்தில் பாசிச எதிர்ப்பில் ஊசலாட்டமான, பலவீனமான, தற்காலிக தன்மை கொண்ட கட்சிகளை பாசிச எதிர்ப்பு சக்திகள் ஆதரித்தனர்.
எளிமையாக சொன்னால், தி.மு.க, காங்கிரசு, வி.சி.க உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் பாசிச எதிர்ப்பில் ஊசலாடும் சமரச சக்திகள் மட்டுமே. பாசிச எதிர்ப்பின் தலைமை மற்றும் முதன்மை சக்திகள் இல்லை. அதாவது, திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் பாசிச கட்சிகளாக இல்லாத காரணத்தினாலும், கார்ப்பரேட் காவி பாசிசத்தை அதிகாரத்திற்கு கொண்டு வரும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலோடு தேர்தல் அரங்கில் முரண்படுவதாலும் பாசிச எதிர்ப்பு பக்கம் வரும் சமரச ஊசலாடும் சக்திகள் மட்டுமே.
பாசிச எதிர்ப்பில் ஊசலாடும் சமரசக் கட்சிகளை பொறுத்தவரை, அக்கட்சிகள் தங்களது இருப்பை தக்க வைக்க பாசிசத்தின் பக்கம் போகலாம் அல்லது பாசிச எதிர்ப்பு பக்கமும் வரலாம். இந்த இரண்டும் இல்லாமல் நடுநிலை என்ற பெயரில் மறைமுகமாக பாசிசத்தை எதிர்த்தும் நிற்கலாம். இந்த ஊசலாடும் தன்மையானது அந்தந்த கட்சிகளின் வர்க்க பின்புலத்தில் இருந்தே வருகின்றது. இப்படிப்பட்ட ஊசலாடும் சக்திகளை, பாசிசத்தின் பக்கம் சென்று விடும் அனைத்து முயற்சிகளையும் தடுக்க வேண்டும், குறைந்தபட்சம் நடுநிலையாக வைத்திருக்கப் போராட வேண்டும். இந்த கண்ணோட்டத்திலே தேர்தல் அரங்கில் இந்த ஊசலாடும் சமரச சக்திகளை அணுக வேண்டும் என்பதே சரியானது.
ஊசலாடும் சமரச சக்திகளின் நிலையும்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய – மக்கள் முன்னணியின் அவசியமும்!
பாசிச எதிர்ப்பில் ஊசலாடும் சமரச சக்திகளின், ஊசலாட்டம் தற்போது நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அப்பட்டமாக வெளிப்பட்டது. குறிப்பாக, தவெக பெரும்பான்மை இல்லாமல் பல கட்சிகளுடன் கூட்டணி பேரம் நடத்தியது. இதனால் தேர்தலுக்குப் பிறகு உருவான கூட்டணிக்கான எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்தது.
படிக்க
♦ ஹரியானா தேர்தல் முடிவுகள்: இந்தியா கூட்டணி படிப்பினை எடுக்குமா?
மதவாத சக்திகள் அதிகாரத்துக்கு வருவதைத் தடுப்பது என்ற பெயரில் காங்கிரசு, விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணி வைத்து அமைச்சர் பதவிகளை பெற்றன. மறுபுறம் தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள திமுக- அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்கள் என்ற செய்தி வெளிவந்து அம்பலமாகின. இதன் மூலம் ஓட்டரசியல் அதிகார போட்டியில் திமுக கூட்டணி கட்சிகளின் பாசிச எதிர்ப்பு சமரசமாகி போனது.
பாஜகவின் B- டீமான தவெக கட்சியுடன் கூட்டணி அரசில் பங்கேற்றுள்ள விசிக, முஸ்லிம் லீக் கட்சிகளும், ஆதரவளித்துள்ள சிபிஐ, சிபிஎம் கட்சிகளும் தவெகவின் பாசிச கோமாளி நடவடிக்கைகளுக்கு முட்டு கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இங்கு தவெகவை பாஜகவின் B- டீம் என்றவுடன் பலர் அவ்வாறு இல்லை என வாதிடுகின்றனர். இது பாஜகவால் வளர்க்கப்படும் கட்சிகளை மட்டும் குறிப்பதல்ல. பாஜகவின் இந்து ராஷ்டிரத்திற்கு பாதையமைத்து கொடுக்கும், பாசிச பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச திட்டங்களை எதிர்ப்பின்றி அமல்படுத்தும், மக்களுக்கு அரசியல் தெளிவு பெற கூடாது என நினைப்பது, தேசியம், திராவிடம் உட்பட எந்த சித்தாந்தமும் இல்லாத கட்சிகள் அனைத்தும் B- டீம்களே.
உதாரணமாக பாசிச பாஜக, தனக்கு எதிராக எந்த சித்தாந்தமும் இருக்கக் கூடாது என்றும் திராவிடம் இல்லா தமிழகம் வேண்டும் என்றும் சொல்கிறது. இதனுடன் ஒத்துப் போகிறது தவெக. அதேபோல், மக்களிடம் அரசியல் பேசாமல், அரசியலற்ற அரசியலை விதைப்பது போன்றவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆகவே தவெக பாசிசத்திற்கு பாதை அமைக்கும் பாஜகவின் B- டீம் தான். இதனை பாசிச எதிர்ப்பில் ஊசலாடும் சமரச கட்சிகள் தங்களது சொந்த அனுபவத்தில் உணர்வார்கள்.
பாசிச உள்ளடக்கம் கொண்ட போலி ஜனநாயக கட்டமைப்பில், பாசிச எதிர்ப்பில் ஊசலாடும் சமரச கட்சிகள் கூட்டணி மாறுவது யதார்த்தமான ஒன்றே. இவ்வாறு ஊசலாடும் சமரச சக்திகளை அம்பலப்படுத்தி, அதன் கீழ் உள்ள அணிகளை பாசிச எதிர்ப்பு சக்தியாக மாற்ற வேண்டும். எதிரி பக்கம் சென்று விடாமல் தொடர்ந்து போராட வேண்டும். இதற்கு குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி மற்றும் மக்கள் முன்னணி கட்டியமைக்கப்பட வேண்டும்.
05 மாநில சட்டமன்றத் தேர்தலில் பாசிச பாஜகவிற்கு தேர்தல் அரசியலில் பெரும் சிக்கலை கொடுத்து வந்த மேற்குவங்கத்தின் திரிணமுல் காங்கிரசு, தமிழகத்தின் திமுக மற்றும் கேரளாவின் சிபிஎம் என மூன்று கட்சிகளும் தேர்தலில் பெரிய தோல்வியை சந்தித்துள்ளன. இது மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, உரிமைகளற்ற அடிமை மாகாணங்களாக மாற்றும் பாஜகவின் இந்துராஷ்டிர, அகண்ட பாரதக் கனவை நோக்கி நகர்வதற்கு உதவியாகவே இருக்கும். கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வேகமாக முன் தள்ளும்.
அதே நேரத்தில்,தேர்தல் அரங்கில் மட்டுமே பாசிசத்தை வீழ்த்த முடியும் என நினைக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் திமுக தோற்றுவிட்டது, இண்டியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்ன செய்வது என புலம்புகின்றனர். நம்பிக்கையிழந்து நிற்கின்றனர். இதற்கு நேர்மாறாக மக்களின் மீதும் தான் தேர்வு செய்து கடைபிடித்துவரும் கம்யூனிச சித்தாந்தத்தின் மீதும் நம்பிக்கையுடன் புரட்சிகர சக்திகள் மா- லெ கண்ணோட்டத்தில் பாசிச எதிர்ப்பு தொடர்பாக தெளிவாக முடிவெடுத்து செயல்படுகின்றனர். அதாவது, தேர்தல் மூலம் பாசிசம் அதிகாரத்திற்கு வருவதை தடுக்க மட்டுமே முடியும். பாசிசத்தை தேர்தல் வழியில் நிரந்தரமாக வீழ்த்த முடியாது. கீழிருந்து கட்டியமைக்கப்படும் எழுச்சி மூலம் மட்டுமே பாசிசத்தை வீழ்த்த முடியும்.
படிக்க
♦ மாற்றை முன்வைத்து திமுக கூட்டணியை நிர்பந்திப்போம்! ஆதரிப்போம்! என்பது ஏன்?
அவ்வாறு கீழிருந்து மக்கள் எழுச்சியை உருவாக்க பாசிச எதிர்ப்புக் கண்ணோட்டமுள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மக்கள் முன்னணி கட்டியமைத்து மக்கள் மத்தியில் பாசிச எதிர்ப்பு திட்டங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கின்றனர் ம.க.இ.க, புமா.இ.மு, புஜதொமு, விவிமு போன்ற புரட்சிகர அமைப்புகள். இதனை எமது புதிய ஜனநாயகம்(மா.லெ) இதழில் ஏற்கனவே எழுதியுள்ளோம். எனவே பாசிச எதிர்ப்பில் களமாடும் ஜனநாயக சக்திகள் பாசிச உள்ளடக்கம் கொண்ட போலி ஜனநாயக தேர்தல் அரசியலுக்குள் மட்டுமே சிந்திக்காமல் பாசிசத்திற்கு எதிரான மாற்று கட்டமைப்பை உருவாக்க கீழிருந்து மக்கள் எழுச்சியை உருவாக்க புரட்சிகர சக்திகளுடன் இணைந்து செயல்பட வேண்டிய தருணமிது.
இந்தக் கண்ணோட்டத்தில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து மக்கள் முன்னணி கட்டுவதும், அதன் மூலம் பாசிச எதிர்ப்பு திட்டங்களை கீழிருந்து அமுல்படுத்தவும் போராட வேண்டும். மாற்றுத் திட்டங்களை; குறைந்தபட்ச செயல்திட்டம் முன் வைக்கும் திட்டங்களை விவசாயிகள், தொழிலாளர்கள், அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் அமல்படுத்த வேண்டும். இதனை தேர்தல் அரசியலுக்கு வெளியில் மக்கள் எழுச்சியின் மூலமே அமுலாக்க முடியும். இதற்கான வேலைகளை முன்னெடுப்பதே தற்போதைய உடனடித் தேவை.
◾விஜயன்
புதிய ஜனநாயகம்
மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்
2026 ஜூன் இதழ்






